அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின்மைந்தன் ம. முத்தையா

சான் வால்டன்

வால்மார்ட் – வரலாற்ற நாயகன்

என் வீட்டிலிருந்த பசுமாட்டைத் தடவிக் கொடுத்துவிட்டு, வேக வேகமாய் பால் கறந்து கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். பாலைப் புட்டிகளில் அடைத்து வாடிக்கையாளர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு வீடு வீடாய் நாளிதழ்கள் விநியோகிக்க வேண்டும். அப்புறம் கிளம்பிப் பள்ளிக்கூடம் போகவேண்டும்.

அந்தச் சிறுவன் பெயர் சாம் வால்டன். இத்தனையும் செய்வதற்கு மட்டுமல்ல. இதற்குமேல் செய்வதற்கும் அவனுக்கு நேரமிருந்தது. அமெரிக்காவில் ஒக்லஹாமா மாநிலத்தில் வசித்த சாம் வால்டன், ”ஒக்லஹாமா வரலாற்றில் முதல் முறையாக” எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஈகிள் ஸ்கவுட் எனும் சேவைப் படைக்கு தேர்வு செய்யப்பட்டான். கால்பந்து மாணவர் அணியில் மாநில அளவில் தலைமை தாங்கினான். ஓட்டப் பந்தய வீரனாய் விளங்கினான். ஹானர்ஸ் மாணவராய்த் தேறினான். மாணவர் தலைவராய் இருந்தான்.

கல்லூரிப் படிப்புக்குக் காசில்லை. பொருளாதாரம் படிக்கும் ஆசை அவனுக்கு இருந்தது. உணவகங்களில் உணவு பரிமாறினான். பள்ளி நீச்சல் குளங்களில் உயிர்காக்கும் சேவகனாய் நின்றான். வீட்டுக்கு வீடு நாளிதழ்கள் விநியோகித்தான். பட்டப்படிப்பை முடித்து மூன்றாவது நாளே விற்பனை அங்காடி ஒன்றில் 75 டாலர்கள் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தான்.

1942ல், இராணுவத்தில் வேலை கிடைத்தது. 1943ல் திருமணமானது. இராணுவத்திலும் கேப்டன் பதவிவரை உயர்ந்த சாம் வால்டன், 1945ல் ஓய்வு பெற்றவுடன் விற்பனை அங்காடி ஒன்றைத் தொடங்கினான். நம்மூர் மாமனார்கள் போலவே சாம் வால்டனின் மாமனார் ராப்சன் உதவி செய்தார். அதாவது 20000 டாலர்கள் கடன் கொடுத்தார். இராணுவத்தில் சேர்த்த பணம் 5000 டாலர்கள் அவன் வசம் இருந்தன.

புகழ்பெற்ற விற்பனை அங்காடி ஒன்றின் விநியோக உரிமை பெற்றார் சாம் வால்டன். ஆறு மாநிலங்களில் அவருடைய விற்பனை அங்காடிகள் ஆதாயத்தில் முதலிடம் பெற்றன. ஏகப்பட்ட ரகங்கள், மலிவான விலை ஆகியவை இந்த விற்பனை அங்காடிகளின் வெற்றி ரகசியங்களாய் விளங்கின.

சாம் வால்டனின் நிறுவனங்கள் பெற்ற வெற்றியை அந்தக் கடையை வாடகைக்கு விட்டவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். குத்தகைக் காலம் முடிவடைந்தபோது, குத்தகையை அவர் புதுப்பிக்கவில்லை. மாறாக, அந்த வியாபாரத்தையே விலை பேசினார். சாம் வால்டன் உற்சாகமாக பேரம் பேசினார். அந்த பேரத்தில் 50,000 டாலர்கள் லாபம் கிடைத்தது.

தான் வைத்திருந்த கடையின் பேரம் 1951ல் முடிந்தது. 1950லேயே இன்னொரு கடையை அவர் வாங்கியிருந்தார். வாங்கிய கடையை புதுப்பிக்க வேண்டியிருந்தது. ”புதுப்பித்தலுக்கு முந்தைய பரபரப்பு தள்ளுபடி விற்பனை” அறிவித்தார். அதன்பின் கோலாகலமாய் விழா நடத்தி கடையைத் திறந்தார். இவையெல்லாம் விற்பனை உலகில் அவர் புகுத்திய புதுமைகள்.

இவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் சுழற்சங்கத் தலைவராய் – வர்த்தக சங்கத் தலைவராய் – மருத்துமனை நிர்வாகக் குழு உறுப்பினராய் – பேஸ்பால் சங்க நிறுவனராய் முழு ஆர்வத்துடன் செயல்பட்டார் சாம் வால்டன்.

வியாபாரத்தை மேம்படுத்த புதிய புதிய விதிமுறைகளை ஆராய்ந்தார் சாம் வால்டன். அப்படி அவர் கண்டறிந்ததுதான் சுயவேலை முறை. வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பியதை ஒரு கூடையில் அள்ளிப்போட்டு பின் பணம் செலுத்தும் முறையின் பிதாமகரே சாம் வால்டன்தான். தொடர்ந்து தன் விற்பனை அங்காடிகளின் கிளைகளை அமெரிக்காவின் பல இடங்களிலும் திறக்கத் தொடங்கினார் சாம் வால்டன். 1962ல் தொடங்கப்பட்டு அமெரிக்காவின் நெ.1 விற்பனை அங்காடியாக வளர்ந்தது வால்மார்ட்.

இன்று ஆறு இலட்சத்திற்கு அதிகமான அமெரிக்கர்கள் வால்மார்ட்டில் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு கிளையிலும் உள்ளூர்க் காரர்களை நியமிப்பார் சாம் வால்டன். வருகிற வாடிக்கையாளர்களை பெயர் சொல்லி அழைக்கும் நெருக்கமுள்ளவர்கள் அலுவலர் களாக நியமிக்கப்படுகிறார்கள்.

தான் வேலை பார்த்துக் கொண்டே படித்ததை நினைவு கூர்கிற விதமாக கல்லூரி மாணவர் ஒருவரை ஒவ்வொரு கிளையும் தேர்ந்தெடுத்து படிக்க வைக்கிறது.

1992ல், அமெரிக்க அதிபரிட மிருந்து பதக்கம் பெற்றபோது வால் மார்ட் நிறுவனத்தின் வெற்றி ரகசியத்தை சாம் வால்டன் பகிர்ந்துகொண்டார். அவர் சொன்னார், ”நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்கிறோம். அதுதான் ரகசியம். சேமிக்கும் வாய்ப்பையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வாய்ப்பையும் ஒவ்வொருவருக்கும் தருகிறோம். நாங்கள் அடைந்திருக்கும் உயரங்கள்பற்றி பெருமிதம் அடைகிறோம்…. ஆனால் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம்!”

எத்தனை உயரம் தொட்டாலும் இப்போது தான் தொடங்கியிருக்கிறோம் என்கிற எண்ணம் தருகிற உத்வேகத்தையே உறுதுணையாய்க் கொண்டு உயர்ந்தவர் சாம் வால்டன். அவருடைய வெற்றி வாசகங்களில் சில:

1. உங்கள் தொழிலுக்கு உண்மையாய் இருங்கள். மற்றவர்கள் எல்லோரையும்விட உங்கள் தொழிலில் நம்பிக்கை வையுங்கள்.

2. லாபத்தை பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் உங்களுக்கு நிகரான ஈடுபாட்டைக் காட்டுவார்கள்.

3.போட்டியாளர்களைப் பொருட் படுத்துங்கள். போட்டியாளர்களை விரும்புங்கள். அவர்களே உங்கள் இலக்குகளை நீங்கள் எட்ட உதவுகிறார்கள்.

4. மனநிறைவடைந்த உங்கள் வாடிக்கை யாளர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். அவை புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத் தருவதுடன் பணியாளர்களையும் ஊக்கப் படுத்தும்.

5. உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள். தோல்விகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். அதேநேரம் அந்தத் தோல்வியில் இருக்கும் பாடத்தையும் படித்துக் கொள்ளுங்கள்.

6.உங்கள் வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்புகளையும் மீறி அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்யுங்கள். அவர்கள் நலனில் நீங்கள் அக்கறை காட்டினால் உங்கள் வளர்ச்சிக்கு அவர்கள் வழிவகுப்பார்கள். ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் உங்களுக்கு அதே ஏமாற்றத்தைத் தந்துவிட்டு காணாமலும் போவார்கள்.

7.போட்டியாளர்களைக் கட்டுப் படுத்துவதைவிட முனைப்பாக உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

8. எதிலும் எப்போதும் தனித்தன்மை களுடன் இயங்குங்கள். கூட்டத்தில் கரைவது உங்களைப் பத்தோடு பதினொன்றாகவே வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *