– தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
எது ஆன்மீகம்? மனிதனுக்குள் மறைந்து இருக்கிற மனிதத்தை தெய்வீகமாக மாற்றுகின்ற செய்களம் எதுவோ அதுவே ஆன்மீகம். ஆனால், அதை விட்டுவிட்டு, ஆன்மீகம் என்பது இன்றைக்கு புரோகிதத்தின் கூடாரமாக ஆகிவிட்டது. கடவுளே எதிரே வந்தாலும் சற்று தள்ளி நில், நான் சடங்குகளை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்கிற பூசாரியைக் கடவுளாக வழிபடுகிற நிலைக்கு ஆன்மீகம் தள்ளப் பட்டிருக்கிறது.
வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் ஆன்மீகமாக இல்லாமல் யாசகங்களும், நம்முடைய ஆசைகளும் பிரார்த்தனைக் கூடத்தின் பலி பீடத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
நம் நாட்டின் மனிதத்தை வெளிக்கொணர வேண்டிய கல்வியும், ஆன்மீகமும் தோற்றுப்போய் மருத்துவமனைகளும், சிறைச் சாலைகளும் ஆட்களை வெகுவாக நிரப்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில்தான் மிகவும் கவலையோடு, அரவணைப்பை, ஆறுதல் கரத்தை எந்த மக்களுக்கு நீட்ட வேண்டுமென்ற அருமையான, அறிவிப்பினை சாந்தி ஆசிரமம் உலகிற்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
நம்முடைய சமய நூல்கள் காலம் காலமாக இதைத்தான் அறிவுறுத்துகின்றன. மனிதன் எப்படி வாழ வேண்டும்? நம்மில் பலருக்கும் வாழத் தெரியவில்லை, வாழ்க்கையே புரியவில்லை. வாழ்க்கை என்பது சிலருக்கு கோடிகளில், சிலருக்கு பதவிகளில், சிலருக்கு வாழ்வதில் இருக்கிறது என்பதை எவருமே புரிந்து கொள்வதில்லை.
அதைத்தான் நமது சமய நூல்களில் அப்பர் பெருமாள் அருமையாகச் சொல்வார், “உலையை ஏற்றித் தழல் எரிமடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் திளைத்து நின்றாடுகின்றேன்” என்று!
ஓர் ஆமையை நீர் நிறைந்த பாத்திரத்தில் இடுகிறார்கள். அதற்குக் கீழே நெருப்பை மூட்டுகிறார்கள். ஆமை நீண்ட நாட்களாக கடல் நீரில் வசித்து வசித்து அதன் உடல் மரத்துப் போயிருக்கிறது. இப்பொழுது நீர் இருக்கிற பாத்திரத்தின் கீழே நெருப்பு மூட்டப்பட்டவுடன், நெருப்பால் நீர் நிறைந்த பாத்திரம் சூடாக ஆரம்பிக்கிறது. நீருக்குத் தொடக்க நிலையில் இதமான வெப்பம் உண்டாகிறது. அந்த வெப்பம் ஆமைக்கு மிகுந்த இன்பத்தை தருகிறது. நின்றால் இன்பம் என்று நிற்கிறது. ஓடினால் இன்பம் என்று ஓடுகிறது. அந்தப் பாத்திரத்து நீரின் இளவெப்பத்தில் ஆமைக்கு நிற்பதா? ஓடுவதா? என்று தெரியவில்லை, மிகப்பெரிய சுகம் அதில் இருப்பதாக மயங்கிக் கிடக்கிறது. இதுதான் தன்னுடைய சொர்க்கம் என்று நம்பிக் கொண்டிருக்கிறது.
சிறிது நேரத்தில் நீரினுடைய வெப்பநிலை கூடி கொதிநிலையை அடைகிறது. கொதிநிலை ஆரம்பித்த பிறகுதான் ஆமைக்கு அந்த வெப்பத்தின் தீமையைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை வருகிறது. ஆனால், என்ன பயன்? ஆமையால் வெளியேற முடியவில்லை. அந்த நீரின் வெப்பத்திலேயே அழிந்து கொண்டிருக்கிறது. எந்த வெப்பம் ஆமைக்குச் சுகத்தைத் தந்ததோ, இன்பத்தைத் தந்ததோ, அந்த வெப்பம் கூடுகிற போது ஆமைக்குக் கூற்றுவனாக மாறி அதன் உயிரை அழித்துவிடுகிறது.
இதுபோலத்தான் மனித வாழ்க்கையிலும், நமக்கு எது இன்பமென்று புரியவில்லை. எது துன்பம் என்று தெரியவில்லை. இன்பத்திற்கும், துன்பத்திற்குமிடையே மதிமயங்கிப் போய் ஐம்புலன்களுக்கும் இரையாகி நம்மை அழித்துக் கொண்டு விடுகிறோம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானே! நம்முடைய சமயம் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது. வாழ்க்கையை வெறுத்துவிட்டுக் காட்டுக்கு சென்று தவம் செய் என்று வலியுறுத்தவில்லை. வாழ வேண்டும். ஆனால் எப்படி வாழவேண்டும்? என்பதுதான் கேள்வி! எல்லாவற்றையும் நுகர்ந்துதான் வாழ வேண்டும். ஆனால், அந்த வாழ்க்கை வரையறைகளுக்கு உட்பட்ட, நியதிகளுக்கு உட்பட்ட, அறத்திற்கு உட்பட்ட வாழ்க்கையாக அமைய வேண்டும்.
ஒரு விலைமாதை கல்லால் அடிப்பதற்கு எல்லோரும் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பார்த்து ஏசு பெருமான் கேட்பார், அவர்கள் ஆன்மாவோடு பேசுவார். உங்களில் யாரேனும் ஒரு பாவமும் செய்யாதவர்கள் இருப்பீர்களாயின் அவர்கள் முதலில் கல்லைக் கொண்டு இவள் மீது எறியுங்கள் என்று சொன்னார். உடனே அனைவர் கரங்களும் தளர்ந்து போகின்றன.
சமுதாயத்தில் தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் தவறு செய்யவே ஆசைப்படுகிறார்கள், சட்டம் தங்களைப் பிடிக்காதவரை! எந்தச் சமுதாயத்தில் சட்டத்திற்கு பயந்து வாழ்கிற போக்கை விட்டு அறத்திற்காகவே வாழ்கிற போக்கு வருகிறதோ அங்கேதான் உயிர்கொல்லி நோய்களுக்கு இடமில்லாத நிலை மலர முடியும். நீதி மன்றங்களுக்கு வேலையில்லாத, காவல் மன்றங்களுக்கு வேலையில்லாத, மருத்துவமனைகளுக்கு வேலையில்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க முடியும். இதைத்தான் எல்லா அருளாளர்களும் வலியுறுத்துகிறார்கள்.
நபிகள் பெருமான் சொல்வார் “நாவாலும், கரத்தாலும் எவர்க்கும் தீங்கிழைக்காமல் யார் இருக்கிறாரோ அவர்தான் இஸ்லாமியர்” என்று. அந்த நிலையை நோக்கி இன்றைய சமூகம் பயணம் செய்ய வேண்டும்.
இன்றைக்குச் சமூகத்தின் போக்கில் குடும்பங்களில் கூட அன்பு குறைந்துவிட்டது. எந்தச் சமூகத்தில் குழந்தைகளும், முதியோர்களும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறார்களோ அந்தச் சமூகத்தில் அன்பின் ஆணிவேர் அற்றுப் போய்விட்டது என்று பொருள்.
ஒரு தாய் கலங்கிக் கண்ணீர் வடித்துக் கடிதம் எழுதுகின்றாள், “மகனே! நீ குடியிருக்க என் வயிற்றில் இடமிருந்தது, நான் குடியிருக்க ஒரு அறைகூடவா இல்லை உன் வீட்டில்!” என்று!. இவ்வாறு கேட்கிற தாயின் புலம்பலில் குடும்பத்தின் அன்பு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான அன்புணர்வு குடும்பங்களில் குறைந்து போய்விட்டது. இதற்கு என்ன காரணம்?
இன்றைக்கு, நம்முடைய தாய்மார்களுக்கு மாலை நேரத்தில் தொலைகாட்சித் தொடரில் வரும் நாடகத்தின் நீண்ட நெடிய குடும்ப நிகழ்வுகளைப் பார்த்து அழுது வடிவதற்கே நேரம் போதவில்லை. சமையல் அறையில் வெங்காயம் நறுக்குவதற்கு அழுவதைவிட தங்கள் வீட்டில் உண்மையான சோகங்களுக்கு அழுவதைவிட அந்த நாடகங்களின் செயற்கைச் சோகங்களுக்கு அழுது வடிந்தே மரத்துப்போய் விடுகிறது. உண்மையான சமூக வேட்கை குடும்பத்திலிருந்து புறப்பட வேண்டும்.
இரண்டு நண்பர்கள் வணிக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அத்தோடு வாழ்நாளில் என்றைக்கும் நாம் பிரிவதில்லை என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆனால், ஒப்பந்தத்தின் விளைவு என்ன? சில நாட்களிலேயே ஒரு நண்பன் மரணப்படுக்கையில் விழுந்துவிட்டான். மரணப் படுக்கையில் விழுந்த நண்பனைக் கூட்டாளி பார்க்கச் செல்கிறான்.
மரணப்படுக்கையில் இருப்பவன் தன் நண்பன் வந்தவுடன் ஓ! என்று அழத்தொடங்கி விட்டான். “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “உனக்கு தெரியாமல் நான் நிறைய சொத்தை ஒதுக்கி வைத்துவிட்டேன். தொழிலில் வணிகத்தில் உனக்குத் தெரியாமல் நிறைய பணம் என்னிடம் தனியாக இருக்கிறது. அதை எண்ணி வருத்தப்படுகிறேன்” என்று சொன்னான். வந்த கூட்டாளி சொன்னான் “இதற்குப்போய் ஏன் கவலைப்படுகிறாய்? நீ மரணப்படுக்கையில் கிடப்பதற்குக் காரணமே நான்தானே. எப்பொழுதோ நான் உனக்கு நகஞர டஞஐநஞச கொடுத்துவிட்டேன். அதனால் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று. நட்பின் ஆழமும், அன்பின் ஆழமும் சமூகத்தின் பண மதிப்பீட்டுக்கே இரையாகிப்போனதின் விளைவுதான் இன்றைக்குச் சமூகத்தின் இந்த நச்சுச் சூழலுக்கு ஒரு காரணம்.
நம்முடைய உடலைப் பற்றிய, நமக்கு வருகிற நோய்களைப் பற்றிய கல்வி குறிப்பாக இளைய தலைமுறைக்குப் பாலியல் கல்வி என்பது ஒரு சமூக விஞ்ஞானம் என்ற அளவிலேயே போதிக்கப்பட வேண்டும். இன்னமும் பாலியல் கல்வியை ஏதோ தீண்டத்தகாதது என்று ஒதுக்கி வைப்பதின் விளைவால் அதைப் பற்றிய தவறான கருத்துக்களால் இளைஞர்கள் நச்சுச் சுழலுக்கு இரையாகிப் போகிறார்கள்.
எந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ அந்த வயதில் அதைக் கற்றாக வேண்டும். அதைக் கற்றுத்தர வேண்டியது இன்றைய கல்வித் திட்டத்தின் அவசியமாகும். இவற்றையெல்லாம் விடச் சிறப்பாக அருளாளர்கள் காலம் முழுவதும் உபதேசித்துள்ள அறநூல்கள் எடுத்துரைக்கும் செய்திகள் இருக்கின்றன. இவ்வளவு எடுத்துரைத்தும்கூட அவற்றைப் பின்பற்றாதவர்கள் இல்லாததும் ஒரு காரணம்.
இந்தச் சமூகத்தில் குறிப்பாகச் சட்டத்திற்கு அஞ்சி தவறு செய்யாமல் இருப்பவர்கள்தான் அதிகம். அறத்திற்கு அஞ்சி தவறு செய்யாமல் இருப்பவர்கள் குறைவு. சமூகத்தை சட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சட்டம் காக்கிற சமூகம், சட்டத்திற்கு அஞ்சி வாழ்கிற சமூகம், சட்டத்தின் வழியில் எப்பொழுதெல்லாம் தப்பித்துக் கொள்ள முடியுமோ அப்பொழுதெல்லாம் தவறு செய்வதற்கு அஞ்சாது.
ஆனால், ஒரு குற்றத்தை இது பாவம், சமூகத் தீமை என்பதை இளம் மழலை மனதிலேயே விதைத்து நாளும் நாளும் வளர்த்து நல்ல குடிமகனாக உருவாக்கித் தருகிற போதுதான் அறத்திற்கு அஞ்சி வாழ்கிற சமூகம் உருவாகும். அந்த நிலையை நோக்கி ஆன்மீகம் சிந்திக்க வேண்டும். அந்த நிலையை நோக்கி கல்வி உலகம் சிந்திக்க வேண்டும். அந்த நிலைக்கு தொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.
ஆக, நம்முடைய அரவணைப்புக் கரத்தை, நேசக் கரத்தை அன்புக் கரத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீட்டுவதோடு, நியாயமான வாழ்க்கை எது, உண்மையான வாழ்க்கை எது என்பதை இளைய தலைமுறைக்கு போதிக்கிற வகையில் நம்முடைய கல்வி உலகமும் ஆன்மீக உலகமும் அமைய வேண்டும்.
Leave a Reply