காலம் உங்கள் காலடியில்

-சோம. வள்ளியப்பன்

நல்லதொரு சந்தர்ப்பம்

ஓட்டப்பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? உலக அளவில் தேசிய அளவில் என்றுதான் இல்லை. அது பள்ளிக்கூடத்தில் நடக்கிற பந்தயமாக கூட இருக்கட்டும். ஓடுபவர் எவ்வளவு வேகமாக ஓடுவார்? கேட்கவும் வேண்டுமா? தலைதெறிக்கத்தான் ஓடுவார். அவர் சாதாரணமாக ஓடுவதற்கும், போட்டியின்போது ஓடுவதற்கும் இடையே தான் எவ்வளவு வேறுபாடு!

“ஏன் அவ்வளவு வேகம்?”

“இதென்ன கேள்வி! அவர் வெற்றி பெறவேண்டுமே!”

“ஓடினால் வெற்றியா?”

“இல்லை. போட்டியில் கலந்து கொள்பவர்களைவிட வேகமாக ஓடி வெற்றிக்கோட்டினை (பினிஷ் லைன்) மிதித்தால் வெற்றி”.

“ஆக, அவர் வெற்றி பெறுவதற்காக கூடுதல் வேகம் காட்டுகிறார்”

“ஆமாம். இது யதார்த்தம் தானே!”.

சரி. இது அப்படியே இருக்கட்டும். அடுத்து இன்னொரு யதார்த்தத்தினையும் பார்த்துவிடுவோம்.

“நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தினை, மிக வேகமாக ஓடினால் எவ்வளவு நேரத்தில் முடிக்கலாம்?”

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 10 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடிவிடுகிறார்கள்.”

“சரி அப்படியே வைத்துக்கொள்வோம். நூறு மீட்டர் தூரத்தினை 10 நொடியில் கடந்தால், வினாடி ஒன்றுக்கு, ஒரு மீட்டர் தூரம் ஓடுகிறார்கள். அதுதான் அவர்களின் வேகம்.

“ஆமாம்”

“அவர்கள் ஓடுகிற ஒவ்வொரு மீட்டர் தூரத்தினையும் ஒரு நொடியில் கடந்துவிடுவார்கள் இல்லையா? அதாவது அனைத்து ஒவ்வொரு மீட்டர் தூரத்தினையும் ஒரே அளவு வேகத்திலா கடப்பார்கள்?”

“இல்லை. தொடக்கத்தில் ஓடுவதைக் காட்டிலும், கடைசி ஒன்றிரண்டு நொடிகள் மிக வேகமாக ஓடுவார்கள். பினிஷ் லைன் எனப்படும், வெற்றிக் கோட்டினை நெருங்க நெருங்க, அவர்களின் வேகமும் அதிகரிக்கும்.”

“உண்மைதான். அது சரி. பினிஷ் லைனில் அப்படி என்ன இருக்கிறது? ஏன் அந்த கூடுதல் வேகம்?”

“அந்தக் கடைசி ஒன்றிரண்டு வினாடிகள் மட்டுமே அவர்களுக்கு மீதமிருக்கும் வாய்ப்பு. அதை அவர்கள் தவறவிட்டால், பந்தயம் முடிந்துவிடும். அதனால் அவர்களால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அத்தனையையும் செய்துவிடுகிறார்கள்.

‘பினிஷ் லைன்’ என்பது கண்ணுக்கு அருகில் இருக்கிறது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. சற்று முயன்றால் போதும் கிடைத்துவிடும் என்பதும் மனதிற்கு தெரிகிறது. இந்த காரணங்களால் வேகம் பன்மடங்காகிறது.”

இதே போன்ற வேகத்தினை கிரிக்கெட் விளையாட்டிலும் பார்க்கிறோம். 50 ஓவர்கள் கொண்ட போட்டி. கடைசி பத்து ஓவர்களை ‘ஸ்லாஃக் ஓவர்’கள் (Slog Overs) என்கிறார்கள். அடித்தாட வேண்டிய ஓவர்கள். அதற்கும் முந்தைய 40 ‘ஓவர்’களைக்காட்டிலும், அந்த 10 ஓவர்களில் வேகமாக ஓட்டங்கள் எடுக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல. அந்தக் கடைசி பத்து ஓவர்களிலும்கூட இன்னொரு கடைசியும் உண்டு. அதுதான் ‘லாஸ்ட் ஓவர்’. அதில் இன்னும் கூட வேகம் அதிகம். இறுதி ஓவரிலும் இறுதி உண்டே. இறுதிப் பந்து. கேட்கவா வேண்டும்! அசுர முயற்சி செய்வார்கள் அதனை பவுண்டரிக்கு அனுப்ப. அதிலும் தரையில் படாமல், ஆறு ஓட்டங்களாக! ஙஹஷ்ண்ம்ன்ம் தங்ள்ன்ப்ற்க்கு முயற்சிப்பார்கள், விளையாடுவது யாராக இருந்தாலும்.

விளையாட்டில் மட்டுமில்லை. தேர்வுக்கு படிக்கிற மாணவர்கள், விற்பனை செய்யும் அதிகாரிகள், உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பொறியாளர்கள் என்று எவருமே, இலக்கை எட்டுவதற்கு கொடுக்கப்படும் அவகாசம் முடியும் நேரம், முன்பைவிட கூடுதல் முயற்சி செய்வார்கள்.

இது இரண்டாவது யதார்த்தம்.

மற்ற நாட்களைவிட, அவகாசம் முடிய இருக்கிற இறுதி நாட்களில், அதிகமான வேகம் காட்டுவார்கள். கவனம் சிதறாமல், அதனையே செய்வார்கள். கூடுதலாக செய்வார்கள். இது இயல்புதான்.

பார்த்த இரண்டு யதார்த்தங்களுக்கும் நேர மேலாண்மைக்கும் என்ன தொடர்பு?

‘ஆகட்டும் பார்க்கலாம்’, ‘அதற்கென்ன இப்ப!’ ‘செய்துவிட்டால் போயிற்று’ என்பன போல சற்று அலட்சியமாக இருக்கும் பலரும், ‘ஒரு போட்டி என்று வந்துவிட்டால் சிங்கம்’ ஆகிவிடுகிறார்கள். வெற்றி பெறத் துடிக்கிறார்கள்.

விளையாட்டுகளில் தான் என்றில்லை. வாழ்க்கையில் போட்டிகள் வைத்துக் கொள்ளலாம். நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் போட்டிகள்.

நான் என் வியாபாரத்தினை இரண்டு மடங்கு ஆக்குவேன்

மிகச்சிறந்த விற்பனையாளர் ஆவேன்

என்பது போன்ற இலக்குகள், திட்டங்கள் இருக்கலாம். நான் என் வியாபாரத்தினை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்கிற திட்டம் வைத்திருப்பவரிடம், “அதற்கு எவ்வளவு காலம் ஆகலாம்? எப்போது அந்த நிலையை அடைவீர்கள்?” என்று கேட்டால், “குறிப்பாக சொல்ல முடியாது” என்கிற பதில் வரலாம்.

இதுதான் பிரச்சனையே. இதனால்தான் பலரிடமும் தங்கள் ஆசைகளை இலக்குகளை அடைகிற வேகம் வருவதில்லை.

இந்தப் பிரச்சனையை, பார்த்த இரண்டு யதார்த்தங்களையும் பயன்படுத்தி தீர்க்கலாம். முதலில்,

  • வெற்றிக்கோடு கண்ணுக்குத் தெரிவதுபோல செய்துகொள்ள வேண்டும். அடுத்தது,
  • அதிக எண்ணிக்கையிலான வெற்றிக் கோடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதை செய்தாலே, முதல் வேலையான வெற்றிக்கோடு கண்ணுக்குத் தெரிவது போல செய்துகொண்டுவிடலாம்.

இரண்டு மடங்கு வியாபாரம் என்பது, சற்று தொலைவானது. அதனை அருகில் கொண்டு வருவது எப்படி? ஒரு மடங்கு என்பது, மாத வியாபாரம் ரூ.60 கோடி என்று வைத்துக் கொண்டால், இரண்டு மடங்கு என்பது மாதம் 120 கோடி வியாபாரம்.

அதனை சுமார் 3 ஆண்டுகளில் செய்ய முடியும் என்பது திட்டமாக இருந்தால், 3ஆம் ஆண்டு இறுதி மாதம், 120 கோடி ரூபாய் வியாபார அளவினை அடைவதுதான் வெற்றிக்கோடு. அதாவது ‘பினிஷ் லைன்’. ஒரே ஒரு ‘பினிஷ் லைன்’.

எதற்காக ஒரே வெற்றிக்கோடு? அதுவும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு என்கிற தொலைவு?

அதனை பல பகுதிகளாக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் தனித்தனி. அதுமட்டுமல்ல ஒவ்வொரு மாதமும் தனித்தனி. மொத்தம் இருப்பது 36 மாதங்கள். இலக்கு, மாதம் 120 கோடி. அப்படியென்றால், அடுத்த 36 மாதங்களுக்குள், மேலும் 60 கோடி ரூபாய் வியாபாரம் அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், அதற்கு முந்தைய மாதத்தினைவிட 1 கோடியே 66 லட்ச ரூபாய் கூடுதல் வியாபாரம் செய்யவேண்டும் என்று இலக்கு வைத்துக் கொள்ளலாம்.

இப்படித்தான் பிரிக்க வேண்டும் என்பதில்லை. எல்லா மாதங்களும் ஒரே அளவு முடியாதென்றால், முதல் மாதம் 25 லட்சம் கூடுதல் அடுத்த மாதம் 35 லட்சம் அதிகம் என்பது போல, போகப் போக கூட்டிக்கொண்டே போகலாம். ஆனால் அதனையும் முன்கூட்டியே முடிவு செய்து விட வேண்டும். அறிவித்தும் விடவேண்டும். (கமிட்மெண்ட் ஆகிவிடும்).

இப்படிச் செய்துவிட்டால் என்ன ஆகும்? ஒவ்வொரு மாதமும் ஒரு பந்தயம் போலாகிவிடும். மாதத்திற்கான தனி இலக்கு. நாம் தான் போட்டியாளர். வென்றே ஆக வேண்டும். இலக்கு கைக்கு எட்டும் தூரம் தான். எந்த இலக்கிணையும் இப்படி பகுதி பிரிக்கலாம். கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவ்வளவுதான்.

அது சரி. இதனை எப்போது ஆரம்பிக்கலாம் என்கிறீர்களா?

இருக்கவே இருக்கிறது புத்தாண்டு, இதைவிட நல்ல சந்தர்ப்பம் ஏது? நம்மை நாமே ஜெயிக்க நிறைய வாய்ப்புகள் (ஒவ்வொரு மாதமும்). நம்மிடம் இருந்து கூடுதல் உழைப்பினை வரவழைக்க நல்ல ஏற்பாடு. இதற்குப் போக மீதமிருந்தால்தான் மற்றவற்றுக்கு நேரம் கொடுப்போம் என்கிற மனப்பான்மையை உருவாக்கிவிடும் என்பதால், நல்ல நேரமேலாண்மை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *