ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே. பராசரன்

நிறைவுப் பகுதி..

நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.


1) அணுகுமுறை
2) உரையாடல்
3) எழுத்துவழியான தொடர்புகள்

இவற்றில், முதல் விஷயமாகவும் முக்கிய விஷயமாகவும் இருப்பது அணுகுமுறை. உங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்களிடம் உங்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது? நிறுவனத்தைத் தொடர்பு கொள்பவர்கள் என்றால் வாடிக்கையாளராகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை, உங்கள் நிறுவனத்திற்குக் கூரியர் கொண்டு வருகிற இளைஞனில் தொடங்கி, இலட்சக்கணக்கில் வியாபாரம் தருகிற வாடிக்கையாளர்கள் வரை, அனைவரையும் நீங்கள் அணுகும்முறை எப்படியிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.
மனிதர்களை என்னவிதமாக உங்கள் நிறுவனம் நடத்துகிறது என்கிற கேள்விதான் இதற்கெல்லாம் அடிப்படை.

எந்தத் தரப்பினராக இருந்தாலும் அவர்களுக்குத் தருகின்ற அடிப்படை மரியாதை, கனிவு, அவர்களுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய பொறுப்புணர்வு போன்றவையே இந்த அடிப்படை அணுகுமுறையை நிர்ணயிக்கின்றன.

இந்த அணுகுமுறைதான் நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கை. “வாடிக்கையாளர்களை மதித்தல்” என்பது பொதுவாக எல்லாரும் சொல்வதுதான். ஆனால், நமக்குத் தேவைப்படும் அணுகுமுறை “மனிதர்களை மதித்தல்” என்பதுதான்.

யஅகமஉ ஊஞத இமநபஞஙஉதந என்கிற சராசரிப் பார்வையைக் கடந்து யஅகமஉ ஊஞத டஉஞடகஉ என்கிற கோட்பாடு நோக்கி நகர வேண்டும்.
இது வெறும் கோட்பாடாக மட்டுமின்றி நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடிப்படைப் பயிற்சியாக வழங்கப்பட வேண்டும்.

மனிதர்களை மதித்தல் (யஅகமஉ ஊஞத டஉஞடகஉ) என்கிற கோட்பாடு, உரையாடல், எழுத்து வழியான தொடர்புகள் அனைத்திலும் பின்பற்றப்பட வேண்டும்.

இதையும் பொதுவான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நிறுவனத்தின் சார்பாக யார் யார், யாருடன் உரையாடுகிறார்கள் என்கிற பட்டியலை முதலில் எடுங்கள்.

1. தொலைபேசிவழித் தொடர்புகள்
– ஆபரேட்டர் – விற்பனையாளர் – நிர்வாகப் பிரிவு

2. வாடிக்கையளருடனான தொடர்புகள்
– ஆபரேட்டர் – விற்பனையாளர்

3. பொருள் வழங்குவோருடனான தொடர்புகள்
– ஆபரேட்டர் – நிர்வாகப் பிரிவு – நிதிப்பிரிவு

இதில் கவனமாகப் பார்த்தால் ஒன்று புரியும். நிறுவனத்தின் குரலாக ஒலிப்பவர் டெலிபோன் ஆபரேட்டர். அவரது குரலில், தொனியில், மொழிப்பிரயோகத்தில் கனிவும் மென்மையும் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

தொலைபேசி ஒலித்தால் எடுத்து “ஹலோ” சொல்வதும், உரிய மேசைக்கு இணைப்புத் தருவதும் மட்டுமே ஆபரேட்டரின் வேலையல்ல.

வெளியிலிருந்து அழைப்பவர், தான் மதிக்கப்படுகிறோம் என்கிற உணர்வை முதல் நிமிடத்திலேயே பெற்றாக வேண்டும்.

அடுத்து, குறைகேட்கும் அலுவலரோ விற்பனைப் பிரதிநிதியோ பேசுகிறார் என்றால் அவருடைய அணுகுமுறையிலும் இந்தப் பொறுப்புணர்வு வெளிப்பட வேண்டும்.

அதேபோல் நமக்குப் பொருட்களை வழங்குபவர் – நம்மிடம் வணிக வாய்ப்புகளைப் பெறுபவர் என்றே வைத்துக் கொள்ளுங்கள், நம் வாடிக்கையாளருக்குத் தருகிற மதிப்பை அவருக்கும் வழங்க வேண்டும்.

அடுத்து, எழுத்து மூலமான தொடர்புகள், தெரிவிக்க விரும்பும் விஷயங்களை மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அஞ்சலிலோ மின் அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.

பல கடிதங்கள் பணிவாகவும் பரிவாகவும் எழுதப்படும். ஆனால், அதிலிருக்கும் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் கவனிக்கப்படாமலேயே கையெழுத்தாகி அஞ்சலில் சேர்க்கப்பட்டிருக்கும்.

எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் அலட்சியத்தின் அடையாளங்கள். கடிதம் அனுப்பிய நிறுவனம் நம்மை மதிக்கவில்லை என்கிற உணர்வு, அத்தகைய கடிதங்களைப் பெறுபவர்களுக்கு அவசியம் ஏற்படும்.

எல்லா வெற்றிகளும், ஒழுங்குபடுத்தப்பட்ட உறவுகளில் இருந்துதான் ஆரம்பமாகின்றன. தகவல் தொடர்பில் இருக்கிற துல்லியமும் தெளிவும், உங்களைப் பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

நீங்கள் மற்றவர்களுக்குத் தருகிற மரியாதை பலமடங்கு பெருகி, உங்களுக்கும் ஊழியர்களுக்கும் திரும்ப செலுத்தப்படும்.

தமக்கு மரியாதை கிடைக்கிறது என்கிற உணர்வே ஊழியர்கள் மனதில் ஒரு பெரிய பரவசத்தை ஏற்படுத்தி, தங்களைப் பற்றிய பெருமிதமான உணர்வை ஏற்படுத்தும்.

கூடுதல் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் அவர்களால் செயல்பட முடியும்.
தொழில்நுட்பம், நிர்வாகவியல் என்று எத்தனையோ உத்திகளையும் புதுமைகளையும் நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும் மகத்தான வெற்றிகள், மேம்பட்ட மனித உறவுகள் மூலமாகத்தான் சாத்தியமாகின்றன.

இத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றுங்கள்.
வெற்றிப்பாதையில் விரைந்து முன்னேறுங்கள்.

(நிறைவு பெறுகிறது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *