நினைவு நல்லது வேண்டும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்

உண்மையும் இன்மையும்

இலக்கிய மேடைகளில் கலகலப்புக்காகவும் அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் ஒரு கவிதை சொல்லப்படுவதுண்டு. கவிதை என்றும் அதைச் சொல்லி விட முடியாது. அழகாக அடுக்கப்பட்ட நான்கு வரிகள் அவை.

“போலியோ ஒழிப்பு – சொட்டு மருந்து தினம்” என்று நாடு முழுக்க சில நாட்கள் விளம்பரம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று பொதுமக்கள் கூடும் எல்லா இடங்களிலும், குழந்தைகளைத் தேடித்தேடி சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

அப்படி சொட்டு மருந்து கொடுத்தும், ஒரு குழந்தைக்குப் பயனில்லாமல் போய்விட்டதாம். குழந்தை போலியோவினால் பாதிக்கப்பட்டதாம். இந்தக் கற்பனையை பின்னணியாக வைத்து, இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன.

“சின்ன வயசில் உனக்கு வந்த போலியோ,

சொட்டு மருந்து கொடுத்தும் அது போலியோ?

தொண்டைக்குள்ள மருந்து அது போலியோ!

இல்ல, உனக்கு தந்த மருந்து அது போலியோ!”

இதை எழுதியவர் யாரோ, அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும்!

“போலியோ” என்ற ஒரு சொல்லை, நான்கு வரிகளில் பயன்படுத்தி நான்கு வித்தியாசமான பொருட்களைத் தந்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

சரி! செய்திக்கு வருவோம். மருந்திலேயே போலி இருந்தால், மக்கள் என்ன ஆவார்கள்? உணவு, உடை, பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்திலும் போலிகள் உலாவும் ஏமாற்று வாணிகக் காலமானது. இப்போது, ” போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்” என்று போலிகளே தங்களின் படைப்புகளில் அச்சிட்டு ஒட்டிக் கொள்கிறார்கள். மிக எச்சரிக்கை உணர்வுடன் இல்லையெனில், ஏமாறத்தான் வேண்டும்.

படைப்புக்களிலும் பயன்பாட்டுப் பொருட்களிலும் போலிகள் என்பதைத் தாண்டி மனிதர்களிலேயே போலிகள் உலாவினால்…….?

‘மனித வாடையே வேண்டாம்’ என்று காட்டிலேயே தனியாக வசிக்க ஆரம்பித்த ஒருவனின் கதையைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். யார் எப்படி அழைத்தும் நாட்டுக்குள் வர மறுத்துவிட்டான். நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான், “எப்படிடா காட்டிலேயே வாழ்கிறாய்! அங்கு நரி இருக்கும்! ஓநாய் இருக்கும்! கரடி இருக்கும்! பயமாக இருக்குமே……’

காட்டில் வாழப்போனவன், அங்கு பாதுகாப்பு குறைவுதான் என்பதை ஒப்புக் கொண்டான். ‘ஆனால் ஒரு வசதி இருக்கிறது’ என்றான். தொடர்ந்து, ‘என்ன?’ என்றான் நண்பன். ‘மிருகத்தைப் பார்த்த உடனே தெரிந்து விடுகிறது. இது நரி, இது ஓநாய், இது கரடி என்று! தப்பித்து ஓடிவிடலாம். ஆனால் நாட்டில் எல்லா முகமும் மனித முகமாகவே இருக்கிறது ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பழகிய பின்னர்தான். அது ‘நரி’ அல்லது ‘ஓநாய்’ அல்லது ‘கரடி’ என்று தெரிகிறது. தப்பிக்க நேரமே கிடைப்பதில்லை……….’

இதுவும் இலக்கிய மேடைகளில் சொல்லப்படும் ஒரு கதைதான். மனதுக்குள் வஞ்சம் வைத்துக் கொண்டு, வெளியே சிரித்துப் பேசிக் கொள்ளும் மனிதரைக் குறிக்கிறது இது. இப்படிப்பட்ட மனிதர்களின் சாயம் கூட சீக்கிரம் வெளுத்து விடும். இவர்களை விட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடையாளமும் காணவேண்டும், நாம் அப்படி ஆகிவிடாமல் நம்மையே காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

ஒரு புகழ் பெற்ற பெண்மணியை, தின இதழ் ஒன்றில் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள். மிக எளிமையான உடை உடுத்தியிருந்தார் அவர். ‘எப்படி எப்போதும் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘வேறு எப்படி இருப்பதென்று எனக்குத் தெரியவில்லை’ என்று அவர் பதில் சொல்லியிருந்தார்.

இந்த பதில் ‘பளிச்’ என்றிருந்தது. இயல்பாகவும் இருந்தது. ‘நான் ஏன் இவ்வளவு எளிமையாக இருக்கிறேன் தெரியுமா? நம்முடைய பெரியோர்கள் எளிமையைத்தான் வலியுறுத்தி இருக்கிறார்கள். நகையும் பட்டுப்புடவையும் ஆணவத்தைக் காட்டுகின்றன. எனக்கு ஆணவமே பிடிக்காது. நான் அவ்வளவு அடக்கமானவள். எனக்குப் பரிசாக வரும் பட்டுப்புடவைகள் பீரோவில் குவிந்திருக்கின்றன. என் வீட்டில் மற்றவர்கள் கட்டிக் கொள்வார்கள். நான் அவற்றை தொடுவதில்லை! பட்டுப்புடவை கட்டித்தான் எனக்கு அழகு வர வேண்டும் என்பதில்லை. உங்களைப் போன்றவர்கள் தான் பட்டுப்புடவைகளை மதிக்கிறார்கள். நான் இவற்றையெல்லாம் மதிப்பதேயில்லை.” இப்படி ஒரு பதில் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ‘மற்றவரை விட நான் உயர்ந்தவள் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இழையோடிக் கொண்டிருப்பதைத் தானே அது காட்டும். ‘இப்படி பேசுவதற்கு பட்டுப்புடவையே கட்டித் தொலைத்திருக்கலாம்….’ என்றுதானே தோன்றும்? இப்படியெல்லாம் நடந்து கொள்ளாமல் நம்மை நாமேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இயல்பாக இருப்பது, நாம் நாமாகவே இருப்பது என்பதெல்லாம் உயர்ந்த நிலைகள். போலியாக இல்லாத உண்மையான நிலை இது. நல்லவனாக இருப்பதும் நல்லது செய்ய வேண்டியதும் அவசியம்தான். ஆனால் அதிலேயே ஆணவப்பட்டுக் கொள்ளும் எண்ணம் வந்துவிடக்கூடாது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்திருந்த ஒரு செய்தி. சில நாட்கள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருந்தது. வட இந்தியாவில் ‘காஸியாபாத்’ என்ற இடத்தில் வசித்து வருபவர் ஷபீர்கான் என்ற இஸ்லாமியர். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லாத குறை இருந்தது. அவர்களுக்கு தெரிந்த ஓர் இந்துக் குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகள் இருந்தன. “சர்மா” என்னும் அந்த நபரின் குடும்ப வறுமையால் தள்ளாடியது.

திருமதி. ஷபீர்கானும் திருமதி. சர்மாவும் ஒரு நாள் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது நிறைய பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தன் குடும்பம் வறுமையில் சிரமப்படுவதை திருமதி. சர்மா தெரிவித்தார். திரு. ஷபீர்கானின் மனைவிக்கு ஏதோ பொறி தட்டியது. கணவனும், மனைவியும் கலந்து பேசி, அந்த இந்துக் குடும்பத்திலிருந்து, தவழும் வயதுடைய பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளச் சம்மதம் கேட்டனர். சர்மா குடும்பத்தினரும் நீண்ட ஆலோசனைக்குப் பின் ஒப்புக் கொண்டனர்.

‘குடியா’ என்ற பெயருடைய அந்த இந்துக் குழந்தை, இஸ்லாமியப் பெற்றோர் வீட்டில் ‘ராக்கி’ என்ற பெயருடன் இந்துக் குழந்தையாகவே வளர்ந்தது. குழந்தையின் வரவில் வளர்ச்சியும் அன்பில் மகிழ்ச்சியும் கண்ட ஷபீர்கான். தனது வீட்டிலேயே ஓர் அறையை ஒதுக்கி, அந்த அறையைச் சிறு கோயிலாக மாற்றி, வழிபடு இந்துக் கடவுளரின் உருவங்களை அதில் அமைத்து, தனது குழந்தை இந்து முறைப்படி வழிபட ஏற்பாடு செய்து தந்தார். இதெல்லாம் நடந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு.

பெண் வளர்ந்து, நல்ல முறையில் பள்ளிப் படிப்பையும் முடித்த பின்னர், திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் முயற்சியில் இறங்கிய ஷபீர்கான், பெண் விருப்பத்தின்படியே, ஓர் இந்து மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தார். தில்லியில், ‘ரஞ்சித் சர்மா’ என்னும் பெயருடைய ஒரு வரனைக் கண்டுபிடித்து குடியாவிடம் சொன்னார். அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடும் செய்தார்.

பேசிக் கொண்ட இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் திருமணமும் நல்ல முறையில் நடந்தது. “மகளைப் பிரிவது தான் வேதனையாக இருக்கிறது. ஆனால் ‘அல்லா’ விரும்பினால் அவள் திருமணத்தின் மூலம் எங்களுக்கு வேறு புதிய மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று கூறிய ஷபீர்கான், “நான் ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை. மனதுக்கு நல்லது என்று தோன்றியதை ‘அல்லாவுக்கு’ நன்றி சொல்லியவாறு செய்தேன்” என்றும், தன்னை வியப்புடன் பார்த்தவர்களிடம் கூறினார்.

எவ்வளவு இயல்பாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி! உண்மையாகவே உண்மையாகவும், நல்லவராகவும், இறைஉணர்வோடும் அந்த இஸ்லாமியச் சகோதரர் இருந்திருக்கிறார்! ஒரு நாள் இப்படி இருப்பது பெரிய செய்தியல்ல. 20 வருடங்கள்! அடுத்தவர் பாராட்ட வேண்டுமென்றோ, தன்னை ‘நல்லவன்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டுமென்றோ, இந்த நிகழ்ச்சி நிகழ்ந்ததல்ல. மிக இயல்பாக நடந்தது. அதனால் தான் அந்தச் செய்தியே அழகானதாக இருக்கிறது. ‘நல்லவனாக இருக்கிறேன்’ என்று ஆணவப்பட்டுக் கொள்வது, நம்முடைய போலித்தன்மையின் வெளிப்பாடுதான். தீய குணத்துக்கும் இதற்கும் பெரிய இடைவெளி ஒன்றுமில்லை.

“தவறுகள் செய்வதற்கும், கெட்டுப் போவதற்கும் எனக்கு எவ்வளவோ வாய்ப்புக்கள் வந்தன. ஆனால், நான் இன்றுவரை நேர்மை தவறவில்லை தெரியுமா!” என்று பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும், அதை விட்டொழிக்க வேண்டும். காரணம் ஆழ்மனத்தில் சலனம் இருப்பதன் அடையாளமாகவோ, அல்லது நம்மையறியாமல் வளர்ந்துவிட்ட ஆணவத்தின் குறியீடாகவோ அது இருக்கலாம்.

“நீங்கள் இரண்டு ஆண்டுகள் வெளிநாடு போயிருந்த போது, நான் எவ்வளவு ஒழுக்கமாக வாழ்ந்தேன் தெரியுமா! எவ்வளவோ பேர் என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசினார்கள்……. நெருங்க முயற்சித்தார்கள்! நான் ஒருவரையும் படுக்கை அறைக்குள் விட்டதில்லை தெரியுமா?” என்று ஒரு பெண் கணவனிடம் சொல்வாளா? ஓர் ஆண் வேண்டுமானால் இதைப் பெருமை என்று எண்ணித் தன் மனைவியிடம் இப்படிப் பேசி தான் அறிவிலி என்பதைக் காட்டிவிடுவான். ஆனால் எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள். ஏனெனில், அப்படி இருப்பதுதான் வாழ்க்கை. அதில் பெருமை பேச ஒன்றுமில்லை. ‘அறன் ஒன்றோ! ஆன்ற ஒழுக்கு’ என்று பிறன் மனை நயவா தன்மை பற்றி வள்ளுவன் இதைத்தான் கூறுகிறான்.

உலகெங்கும் வாழும் தமிழர் எவரும் தன்னை மறந்து சிரிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று, உங்களுக்கும் தெரிந்திருக்கும். உடம்பு முழுக்க பட்ட அடியில் முனகிக் கொண்டே, எப்படி தன்னை அடித்தார்கள் என்று விவரித்தபடி, “அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்” என்பார் நடிகர் வடிவேலு. வேலைக்காரப் பெண் அடிபட்ட அவர் உடம்புக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டே, “அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டீங்களா? ஏன் திருப்பி அடிக்கலே?” என்று கேட்பாள். கை நகத்தைப் பார்த்துக் கொண்டே, “அடிக்கும் போதே ஒருத்தன், ‘இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்டான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா” என்று கதறி அழுவார் வடிவேலு ‘நல்லவன்’ என்று பெயர் எடுப்பதற்காக சிரமப்பட்டு அப்படிக் காட்டிக் கொள்வது தங்காது. இயல்பாகவே அப்படி இருந்து பழகிக் கொள்ள வேண்டும்.

அடுத்தவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக, அடிமையாகக் கிடந்து அவமானப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ‘இவன் மாதிரி உண்டா?’ என்று நான்கு பேரிடம் நல்ல பேர் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பதே பலவீனம் அல்லவா? ‘நான் நல்லவன்! பண்பாளன், ஆணவம் இல்லாதவன்’ என்று பறை சாற்றிக் கொள்வது அதைவிட பலவீனம் அல்லவா?

‘அடக்கம்’ என்பதே ஒரு விநோதமான பொருள். எப்போது அது நம்மிடம் இருக்கிறது என்று நினைக்கிறோமோ அப்போதே அது இல்லாமல் போகிறது!

நம்மிடம் உள்ள தீய பழக்கங்கள் நம்மைக் கெடுக்கின்றன, நம்மிடம் உள்ள தீய குணங்கள், நம்மைச் சார்ந்தவர்களையும் கெடுக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திச் செல்வதுதான் நிறைவான வாழ்க்கை. ‘என்னிடம் தீய குணங்களே இல்லை’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் நல்ல குணங்களுடன் வாழ்வதுதான் உண்மையிலேயே உயர்வான வாழ்க்கை. நம் பயணம் அந்த பக்குவத்தை நோக்கித் தான் இருக்க வேண்டும்.

இன்னும் சொல்வதென்றால் தவறுவது தவறல்ல, அது மனித இயல்பு. செய்த தவற்றை ஒப்புக்கொள்ளாமல் வீம்பு பிடிப்பதுதான் பெருந்தவறு. அறியாமல் செய்த தவற்றை ஒப்புக் கொள்வதும் மீண்டும் அதே தவற்றைச் செய்யாமல் இருப்பதும் தான் உயர்ந்தோர் இயல்பு.

‘மனத்துக்கண் மாசுஇலன்’ என்று வள்ளுவன் தெளிவாகவே வரையறுத்து விடுகிறான். திட்டமிட்டு தவறு செய்தால் அது குற்றமாகி விடுகிறது. மனத்தில் வஞ்சமின்றி இயல்பாய் செய்யும் தவறுகள் மனித இயல்பு. தவறு செய்யாமல், நல்ல குணங்களுடன் வாழ முயற்சித்துக் கொண்டே இருப்பது தான் அறம்! மற்ற பேச்செல்லாம் வெற்று ஆரவாரம்தான் என்கிறான் வள்ளுவன். ஆகுல நீரபிற.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *