வென்றவர் வாழ்க்கை : தொலைக்காட்சி தந்த பாய்ர்ட்

– திரிலோக சஞ்சாரி

ஒரு தயாரிப்பைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அதன் வசதிகள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. காலப்போக்கில், இன்னும் எளிய அம்சங்கள் அந்தத் தயாரிப்பில் சேரும்போது நமக்கு மேலும் பயனுள்ளதாக அந்தத் தயாரிப்பு மாறுகிறது.


ஆனால், அந்த முதல்நிலை உருவாக்கத்தின் போதும் சரி, தொடர்ந்து அதன் அம்சங்களை மேம்படுத்தும் போதும் சரி, எத்தனை போராட்டங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன! உலகமெங்கும் உள்ள குடும்பங்களில் உறுப்பினராகவே ஆகிவிட்ட இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வளர்ந்த விதம் கூட நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

1888 ஆகஸ்ட் 13ம் தேதி, ஸ்காட்லாந்தில் உள்ள ஹெலன்ஸ்பெர்க் என்கிற பகுதியில் பிறந்தவர் பாய்ர்ட் ஜான் லோகி. அவரது தந்தை ஜான்பாய்ர்ட் ஒரு பாதிரியார்.

மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பாய்ர்ட், இராணுவத்தில் சேரத் தகுதியற்றவர் என்று ஒதுக்கப்பட்டார். கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி. படிப்பில் சேர்ந்தாரே தவிர முடிக்கவில்லை.

க்ளைட் வேலி எலக்ட்ரிகல் பவர் கம்பெனி என்கிற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பாய்ர்ட், வெகு சீக்கிரமே அங்கிருந்து விலகினார். விற்பனைத் துறையில் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்தது. மருத்துவ குணம் கொண்ட காலுறைகள், ஷ?986;ாலீஷ், வாசனைப் பொருட்கள், ஜாம், தேன், சோப் போன்ற பல விஷயங்களை விற்பனை செய்து வந்தார் அவர். அந்தத் துறையில் அவர் வெற்றிகரமாக விளங்கிய போதும் உடல் நலக் குறைவால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார்.

1922ல், மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட பாய்ர்ட், ஹேஸ்டிங்ஸ் என்ற இடத்தில் ஓய்வுக்காகத் தங்கினார். அப்போதுதான் காட்சி பிம்பங்களை அனுப்புவது – பெறுவது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரிடம் இருந்த அடிப்படை வசதிகள் மிகமிகக் குறைவு. முறையான ஆராய்ச்சிக்கான பயிற்சிகளை அவர் பெற்றிருக்கவில்லை. பரிசோதனைக்கூட வசதிகள் கிடையாது. அவர் நிதிநிலை மிகமிக மோசமாக இருந்தது. அவரது ஆராய்ச்சிக்கு இருந்த ஆதரவும் ஓரளவுதான். இந்த நிலையில் இருந்தபடியே தீவிரமாக உழைத்த பாய்ர்ட், 1925 ஏப்ரல் மாதம் பொதுமக்கள் முன்னிலையில், சில பொருட்களின் பிம்பங்களை மிக மங்கலாக ஒளிபரப்பு செய்து காண்பித்தார்.

அதன் பிறகு, 1925 அக்டோபர் 2ம் தேதி சற்றே கூடுதல் தெளிவோடு சில ஒளிபரப்புகளை அவரால் செய்ய முடிந்தது.

1926 ஜனவரி மாதம் 26ம் தேதியன்று ராயல் இன்ஸ்டிட்டுயூஷனின் 40 உறுப்பினர்கள் முன்னிலையில் செயல் விளக்கம் ஒன்றினை நிகழ்த்திக் காட்டினார் பாய்ர்ட்.
உலகின் கண்களுக்கு முதல்முதலாய் அரங்கேறிய தொலைக்காட்சி செயல்விளக்கம் அதுதான். 1878லிருந்தே பலரும் முயன்று கைவிட்ட முயற்சி அது. எந்தப் பின்புலமும் சரியாக அமையாத சூழலிலும் பாய்ர்ட் தன் உழைப்பாலும் தளராத நம்பிக்கையாலும் அதனை சாத்தியமாக்கினார்.
அவரது அடிப்படையான சூத்திரத்தைத் தொலைக்காட்சி ஆராய்ச்சியாளர்களும் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்த நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியது, அடுத்த கட்டமாகத் திகழ்ந்தது
.இதற்கிடையில், தன் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவும், நிறுவனமாக உருவாக்கவும் பாய்ர்ட் முயற்சிகள் மேற்கொள்ளத் தொடங்கினார். 11-6-1925 அன்று, டெலிவிஷன் லிமிடெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1927 ஏப்ரல் மாதத்தில் பாய்ர்ட் டெலிவிஷன் டெவலப்மெண்ட் கம்பெனி லிமிடெட் பதிவு செய்யப்பட்டது. 1928 ஜ?985;் 25ம் தேதி பாய்ர்ட் இண்டர்நேஷனல் டெலிவிஷன் லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்டது.

தொலைக்காட்சியை மேலும் மேலும் மேம்படுத்த என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்று தீவிரமாகத் தேடலைத் துவங்கியிருந்தார் பாய்ர்ட். அவர் கோரியிருந்த காப்புரிமைகள் 178. இவற்றுள் 88 காப்புரிமைகள் 1930ல் அவருக்கு வழக்கப்பட்டன.

1926-1931க்குள் பாய்ர்ட், இன்ஃபராரெட் ஒளிக்கதிர்கள் மூலம் ஒளிபரப்பான லோ டெஃபனிஷன் நோக்டாவிஷன், டே லைட் டெலிவிஷன், கலர் டெலிவிஷன், கிராமபோன் மூலம் ஒலி ஒளி பதிவு செய்யப்பட்ட ஃபோனோவிஷன், பெரிய திரை டெலிவிஷன், ?00;ான் டெலிவிஷன் போன்ற பல புதுமைகளைக் கண்டுபிடித்தார்.

ஆனால், பாய்ர்ட் உடன் இருந்த பங்குதாரர்கள் சிலர், ஆர்வக்கோளாறு காரணமாய் அளவுக்கதிகமான உறுதிமொழிகளை அள்ளிவிடத் தொடங்கினர். அது பாய்ர்ட்டை பாதித்தது.
1929 செப்டம்பர் மாதம் 30ம் தேதி, பாய்ர்ட்டின் 30 லைன் டெலிவிஷன் முறையைப் பின்பற்றி பிபிசி நிறுவனம் தன் முதல் பரிட்சார்த்த தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. பிறகு 1932 ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் அந்த ஒளிபரப்பை முறைப்படுத்தியது. 1935 செப்டம்பர் 15 வரை, பாய்ர்ட் வழங்கிய இந்தத் தொழில்நுட்பம், பிபிசி நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டது.
பாய்ர்ட், 1931ல், மார்கரெட் சிசிலியா என்கிற பியானோ இசைக்கலைஞரை நியூயார்க்கில் மணந்தார். மால்கோம் என்ற மகனும் டயானா என்ற மகளும் பிறந்தனர்.

உயர் அதிர்வு ஒளிபரப்பு, மின் அணுவியல் முறைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை பாய்ர்ட் நீண்ட காலம் புறக்கணித்து வந்தது, ஒரு பெரிய குறையாக இருந்தது.

1936ல், பிபிசி லண்டன் டெலிவிஷன் நிலையத்தைத் தொடங்கியபோது இரண்டு விதமான ஒளிபரப்பு முறைகள் அவர்களுடைய பரிசீலனையில் இருந்தன. ஒன்று, பாய்ர்ட் வழங்கிய 240 லைன் முறை. இன்னொன்று ஐசக் ஷோன்பெர்க் வழங்கிய, மின்அணுவியல் அடிப்படையிலான 405 லைன் முறை. இதில், ஐசக் ஷோன்பெர்க்கின் முறையே கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டது என்பதால், பாய்ரட்டின் முறையை 1937 ஜனவரி 30ல் பிபிசி கைவிட்டது.

ஆனாலும் பாய்ர்ட் மனம் தளரவில்லை. பெரியதிரை, கலர் டெலிவிஷன், ஸ்டீரியோஸ்கோபிக் டெலிவிஷன் என்று பல அம்சங்களைப் புதிது புதிதாக முயன்று கொண்டேயிருந்தார். சொந்தமாக ஒரு பரிசோதனைக் கூடத்தை நிறுவினார். 1936 டிசம்பரில் 2.42 மீட்டர் திரையில் தியேட்டர் டெலிவிஷன் அறிமுகம் செய்தார். 1938ல், பெரிய திரை மற்றும் கலர் டெலிவிஷன் ஆகியவற்றைஅவர் அறிமுகம் செய்தார். இதில் பெரிய திரையின் அளவு 3.65 மீட்டர்கள். கலர் டெலிவிஷன் திரையின் அளவு 2.75 மீட்டர்கள்.

1940 டிசம்பரில் 600லைன் கலர் டெலிவிஷன், 1941 டிசம்பரில் ஸ்டிரியோஸ்கோபிக் கலர் டெலிவிஷன் என்று தொடர்ந்து பல புதுமைகளைச் செய்துகொண்டேயிருந்தார் பாய்ர்ட்.
இளமையிலிருந்தே நோய்வாய்பட்டிருந்த பாய்ர்ட், தன் ஐம்பத்தெட்டாவது வயதில், 1946 ஜ?985;் 14ம் தேதி மறைந்தார்.

உடல் பலவீனம், போதிய பின்புலம் இன்மை போன்ற தடைகளையெல்லாம் தகர்த்துக்கொண்டு கடும் முயற்சியால் சிகரம் தொட்ட பாய்ர்ட்டின் வாழ்க்கை, வலியும் சிரமமும் கொண்டு கட்டமைக்கப்பட்ட வெற்றி வரலாறு!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *