செங்கோல்

இரா.கோபிநாத்
Gopinath@go-past.com

மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி

சென்ற இதழில் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதற்குச் சில தலைவர்கள் அஞ்சுவது ஏன் என்று அலசினோம். அந்தப் பயத்தின் ஒரு காரணமென்னவென்றால் ஒருவேளை அவர்கள் இந்தப் பொறுப்பை மிகவும் சிறப்பாகச் செய்துகாட்டிப் பெயர் தட்டிக்கொண்டு போய்விட்டால், நமது நிலைக்கே ஆபத்து வந்துவிடுமோ என்பது.

இந்தப் பயம் தேவையற்றது. வளர்ந்து வரும் நிறுவன வாழ்க்கையில் புதிய பொறுப்புக்களையும் உயர்ந்த பதவிகளையும் கையாள வேண்டுமென்றால் அதற்கு நாம் ஆயத்தப்படவேண்டும். அதன் முயற்சிதான் நமது குழுவில் பணியாற்றும் திறமை மிகுந்தவர், ஈடுபாட்டோடு சிறப்பாக வேலை செய்பவர்களை, நமது இன்றைய பொறுப்புகளைக் கையாளும் வகையில் தயார் செய்வது.

அதெப்படி நிறுவனங்களில் புது பொறுப்புக்களும் உயர்ந்த பதவிகளும் உருவாகும் என்று சொல்ல முடியும்? எப்படி இதை நடக்கும் என்று சொல்கிறேன் என்றால்:

ஒரு நிறுவனம் என்பது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். உலகத்தில் மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலையில்லாது மாறிக்கொண்டே இருக்கும் உலகில் மாற்றங்கள் மட்டும்தான் நிலையானது என்று சொல்வார்கள். இந்த மாற்றங்களின் காரணமாக நிறுவனங்களும் மாறியாக வேண்டும்.

1. பொதுவாகவே மனித இயல்பு முன்னேற்றத்தை நாடுவது என்பதுதான். இன்னும் அதிக வசதிகளுடன் வாழ வேண்டும் என்னும் நாட்டம் மனிதனைப் புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டெடுக்கத்தூண்டுகிறது.

உதாரணத்திற்கு காந்த அலைகள் மூலமாக ஒலியைப் பரப்ப முடியும் என்று கண்டெடுத்த பிறகு, தொலைபேசி தயாரிக்கப்பட்டது. நேரில் சென்று பார்த்துப் பேச வேண்டிய விடையங்களை ஒரு கம்பி இணைப்பின் மூலம் இருக்கும் இடத்திருந்தே பேச முடிந்தது. இது ஒரு பெரிய வசதியாயிற்று. ஆனால், நிலையாக ஒரே இடத்தில் அந்த இயந்திரம் இருந்து மனிதர்கள் அதற்கு அருகில் சென்று பேச வேண்டியிருந்தது. மனிதன் போகும் இடத்திற்கெல்லாம் அதை எடுத்துச் செல்ல முடியும் என்றால் சிறப்பாக இருக்கும் என்ற தேவை பிறந்தது. செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய வசதியாக ஆயிற்று. ஆனாலும் கையில் பிடித்துக் கொண்டே பேச வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தில் இருந்து விடுதலை வேண்டியிருந்தது. ஆகமஉபஞஞபஏ ஏஉஅஈநஉப கண்டெடுக்கப்பட்டு, இன்னும் வசதியாயிற்று.

2. மேலும் எல்லாத்துறைகளிலும் போட்டி என்பதைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை ஆரம்பத்தில் போட்டியே இல்லாத இராஜாவாக நாம் தொழில் துவக்கலாம். ஆனால் துவங்கின சிறிது காலத்திற்குள்ளாகவே நமது வெற்றியைப் பார்த்து இன்னும் வேறு பலர் இந்தத் துறையில் முனைவார்கள். போட்டியைத் தவிர்க்க முடியாது. இந்தப் போட்டியைச் சந்திக்க நமது நிறுவனமும் பல புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுத்துறை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தனிப்பட்ட உரிமையாக இருந்து வந்தது. அரசாங்கம் இன்னும் வேறு நிறுவனங்களுக்கும் இந்த உரிமம் வழங்கிய பிறகு பல போட்டி நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் யுக்திகளைச் சந்திக்க வேண்டி, காப்பீட்டுக் கழகத்தின் பணிகளிலும் பல மாற்றங்களை நிறுவனம் தருவித்துக் கொண்டது.

3. ஆரம்பத்தில் ஒரு பொருள் புதிதாக அறிமுகமாகும் வேளையில், அதற்கு ஒரு பெரிய வரவேற்பு இல்லாது போகலாம். ஆனால் நாளடைவில் அந்தப் பொருள் பிரபலமானவுடன், அதை வாங்குபவர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள். அப்போது நிறுவனத்தை அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

மேலே கூறிய இந்த மூன்று காரணங்களுமே நிறுவனத்தில் பணி செய்யும் நிர்வாகிகளுக்கும் தலைவர்களுக்கும் அபரிதமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த வளர்ச்சி வாய்ப்புகளைத் தாங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். புது வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் பணிக்குழுவையும் அடுத்த நிலைக்குத் (உயர்ந்த) தயார்படுத்த வேண்டும். இவை அனைத்தும் நடைபெற வேண்டுமானால் இன்று இவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகளைத் திறமையாக மற்றவர் செய்யும்படி அவர்களைத் தயார் செய்தால்தானே முடியும். இந்தத் தலைவர்கள் பயந்து கொண்டு மற்றவர்களைத் தயார்ப் படுத்தவில்லையென்றால் இவர்களால் புதுவிடையங்களுக்கு எப்படித் தயாராக முடியும்? இவர்கள் அடுத்த நிலைக்குத் தயாராகவில்லையென்றால் நிறுவனம் எப்படித் தயாராக முடியும்? இவர்கள் அடுத்த நிலைக்குத் தயாராகவில்லையென்றால் நிறுவனம் அந்தப் புதிய பொறுப்பைக் கையாள்வதற்கு வெளியே இருந்து ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதற்குள்ளாக இன்று இவர் செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கு இன்னொருவரைத் தயார் செய்தால் அந்தப் புதிய, உயர்ந்த பொறுப்பைக் கையாள்வதற்கு இவருக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

அதனால் தான் உறுதியாகச் சொல்கிறேன் நிர்வாகிகளே! உங்களுடன் வேலை செய்பவர்களை நீங்கள் வளர்த்தால், அவர்கள் வளர்ச்சியோடு உங்கள் வளர்ச்சியும் ஏற்படும். உங்களுக்கு நேரமும் மிச்சமாகும். நீங்கள் கவனிக்க வேண்டியதை உன்னிப்பாகக் கவனிக்க உங்களால் முடியும்.

இந்தச் செங்கோல் என்ற தொடரின் துவக்கத்தில் ஒரு தலைவரின் உன்னதச் செயல்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கும் நான்கு தூண்கள் 1. CARE 2. COURAGE 3. COMMUNICATION and 4. CHANGE குறித்துப் பேசினோம்.

பின் வந்த தொடர்களில் இவை ஒன்றொன்றாக விவரமாக ஆராய்ந்து பார்த்தோம். நேர்மை என்பது தலைமைப் பண்பின் இலக்கணம் என்றும் அதனால் இலக்குகளைவிடவும் நோக்கம்தான் பிரதானமானது என்றும் உணர்த்தினோம். ஒரு மனிதனின் மனவமை இந்த உலகத்திலுள்ள அனைத்து ஆற்றனும் மிகவும் கடினமானது, அதனால் ஒருவரை ஊக்கப்படுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் எப்படி இருந்தால் சிறந்தது என்பதை அலசிப்பார்த்தோம்.

இறுதியாக ஒரு தலைவரின் பணியைப் பலரும் சார்ந்திருப்பதால் அவர் தனது நேரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும், நேர நிர்வாகத்திற்கு வேண்டிய சில அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். இதற்கு முத்தாய்ப்பாகப் பொறுப்புகளை மற்றவருடன் பங்களிக்கும் விதானத்தை விபரமாக விளக்கினோம்.

ஒரு தலைவர் உருவானதே அவரது குழுவிற்காகத்தான் என்றுதான் இந்தச் செங்கோல் என்ற தொடரைத் துவக்கியிருந்தேன். இந்தத் தொடரின் முடிவிலும் அதை நினைவுபடுத்தி முடித்துக் கொள்ள விரும்புகிறேன். குழுவில் உறுப்பினர்கள் இல்லை என்றால் அவருக்குத் தலைமைப் பதவியே கிடைத்திருக்காது, அந்த அங்கத்தினருக்காகத்தான் தலைவரே என்பதை உணரவேண்டும். நமக்கு தலைமைப் பதவி கிடைத்ததே நமது குழுவினரை முன்னேற்றுவதற்கு, நாம்தான் குழுவிற்காகப் பிறந்தோம், குழு நமக்காகப் பிறக்கவில்லை. எப்போதும் அவர் நலன் நாம் கோரினால் அவர் நம் நலன் கோருவர். ஏதோ குழுவில் உள்ளவர் எல்லாம் நமது சேவகர் என்றும் நமக்குச் சேவை செய்வதுதான் அவர் கடமை என்றும் இன்று பலர் கருதுகிறார்கள். இவர்களால் எந்த வெற்றியையும் சாதிக்க முடியாது.

தமிழக வரலாற்றில் இராஜ இராஜ சோழரின் காலம் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இவர் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம். நாடே தமது மன்னரின் பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஊர்வலமும், நாடகங்களும், கூத்தும், பாட்டும் என்று விமரிசையாக சதய விழா என்ற பெயரில் எல்லோரும் வியக்கும் வண்ணம் ஊர் மக்கள் பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இவை அனைத்திலும் கலந்து கொள்ளாமல், கடமையே கண்ணாகத் தஞ்சைப் பெரிய கோவின் தலைமைச் சிற்பி கோயில் சிலைகளைச் செதுக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சிறுவன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு ஓடிப் போய்விடுகிறான். சிற்பி அதைக்கூடக் கவனிக்காமல் தன்து செயல் ஈடுபட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு இராஜ இராஜ சோழனே வந்து வெற்றிலை மடித்து கொடுத்ததோடில்லாமல் அந்தச் சிற்பிக்கு எச்சிலை படிக்கத்தைச் சுமந்து நின்றார். வேலையில் ஈடுபட்டிருந்த சிற்பி திடீரென்று நிமிர்ந்து பார்த்து அரசரே வெற்றிலைப் படிக்கத்தைச் சுமந்து நிற்பதைப் பார்த்துப் பதறிப்போய் மன்னிக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். சோழன் அவரை ஆறுதல்படுத்தித் தான் தனது கடமையைத்தான் செய்ததாக வேலையில் ஈடுபட்டிருப்பவருக்குச் சேவை செய்வதுதான் தனது முதல் கடமை என்று விளக்குகிறார்.

அபய குலசேகரர், அழகிய சோழர், ரணமுக பீமர், ரவிகுல மாணிக்கம், ராஜ சர்வக்ஞர், சோழேந்திர சிம்மர், உய்யக்கொண்டர், கேரளந்தகர், சண்ட பராக்கிரமர், சிங்களந்தகர், நித்த வினோதர், நிகரில்லா சோழர், பண்டித சோழர், பெரிய பெருமாள், மும்முடிச் சோழர், மூர்த்திவிக்கிரமாபரணர், ஜன நாதர். ஜயம் கொண்ட சோழர், கீர்த்தி பராக்கிரமர், சோழ நாராயணார், சிவபாதசேகிரர், ராஜ கேசரி வர்மர். என்று உலகமே போற்றி வழங்கிய பல பட்டங்களைச் சுமந்து நின்ற மன்னன் எச்சிலைப் படிக்கத்தை சுமந்து நின்றார்.

தலைமை என்பது ஒரு பதவியோ, பட்டமோ அல்ல பொறுப்பு என்பது உணரவேண்டும். தலைவர்கள் குழுவிற்காக உருவானவர்கள் அப்படியென்றால் குழுவின் நலன் தான் இவரது நலன். குழுவின் முன்னேற்றம்தான் இவரின் முன்னேற்றம்.

இந்தத் தொடரில் விசேடமாகத் தலைமைப் பண்பினைச் செம்மைப் படுத்தும் உத்தேசத்தில் நிறுவனங்களில் நிகழும் நிகழ்வுகளை உதாரணங்களாக அதிக இடங்களில் குறிப்பிட்டிருப்பேன். பொதுவாழ்வில் தலைமைப் பொறுப்பில் உள்ளவருக்கும் இந்தக் கருத்துக்கள் பொருந்தும். வீட்டில் தலைமை ஏற்று நடத்தும் குடும்பத் தலைவருக்கும் (தலைவிகளுக்கும்) பெற்றோருக்கும் கூட இந்தத் தொடரில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் பொருந்தும்.

இத்தொடரின் நோக்கமே நமது மக்கள் தலைமைப் பண்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான். ஏனென்றால் நல்ல தலைவர்கள் உயர்ந்தால் இந்த உலகமே உயரும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
என்ற வள்ளுவரின் வாக்கு சத்தியமானது. வாருங்கள் நல்ல ஆளுமை செய்து நல்லுலகம் காண்போம்.
நிறைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *