அன்பும் கனிவும் வெற்றிக்கு வழி

திரு. எஸ். கே. மயிலானந்தம்
தலைவர் – எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள்

முதலில் செய்த முதலீடு என்னவோ 3000 ரூபாய் தான். இன்று உலக மயமாகும் நிறுவனமாய் உயர்ந்திருக்கின்றன எஸ்.கே.எம். குழு நிறுவனங்கள். முதலில் உரம் வியாபாரம், அப்புறம் கோழித்தீவன விற்பனை – கூடவே முட்டைக் கொள்முதல் – கோழிகளுக்கு மருத்துவ சேவை என்று தொடங்கி, இப்போது தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமாகிய ‘டிட்கோ’வுடன் சேர்ந்து முட்டைப்பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.

திரு. எஸ்.கே. மயிலானந்தன் முன்னுதாரணமாய்க் காட்டக் கூடிய மனிதநேயர், பண்பாளர். உலக சேவா சங்கத் தலைவர். இந்தியாவில் அதிக வருமானவரி கட்டியதற்காக விருதுகள் பெற்ற வித்தியாசமான தொழிலதிபர், தேசிய உணர்வு, இளைஞர் மேம்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளை உற்சாகமாய் ஏற்பாடு செய்து பங்கேற்பார். அறப்பணியாளராய், ஆற்றல்மிக்க தொழிலதிபராய், இன்முகம் கொண்ட இனிய மனிதராய்த் திகழும் திரு. எஸ்.கே. மயிலானந்தன்.

உங்கள் ஆரம்பகால வாழ்க்கைப் பற்றி?

ஈரோடு அருகிலுள்ள சாமிநாதபுரம் என்கிற சின்னஞ்சிறு கிராமம் தான் என் சொந்த ஊர். எஸ்.எஸ்.எல்.சி. யில், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாகத் தேறினேன், தொடர்ந்து படிக்கக்கூடிய சூழல் இல்லை. அதே வருடத்தில் ஒரு மளிகைக் கடைக்கு நிர்வாகப் பொறுப்பினை ஏற்றேன். 1972-ல் பெரிய நிறுவனத்தில் மாட்டுத் தீவனம் முகவர் ஆனேன்.

அப்போது பஸ் நிலையம் அருகில் அவர்கள் அலுவலகம் இருக்கும். அங்கிருந்த மண்டல மேலாளர் திரு.வெங்கட்ராம அய்யர் மிகவும் பண்பான மனிதர். 27 வயது நிரம்பிய என்னை எழுந்து நின்று வரவேற்றார். அந்த பண்பு என்னைக் கவர்ந்தது. மற்றவர்களிடம் நாமும் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொண்டால் நம்மையும் பிறர் விரும்புவார்கள் என்று தெரிந்து கொண்டேன். என் உரக்கடைக்கு வரும் விவசாயிகளை மிகுந்த அன்போடும், மரியாதையோடும் நடத்தத் தொடங்கினேன். நான் காட்டிய மதிப்பு பல மடங்கு பெருகி என்னிடம் திரும்பியதோடு பல விதங்களில் பயன்படவும் செய்துள்ளேன்.

அந்த ஆரம்பத் தொழில் விரிவானது எப்படி?

நம்பிக்கையும் வாடிக்கையாளர்களின் அபிமானமும் அதற்கு முக்கியக் காரணம். விவசாயிகளை பிரியமுடன் வரவேற்று அவர்கள் நலம் குறித்து விசாரித்து அன்பாக பழகுவேன். இரண்டு மூட்டை உரம் தானே வாங்குகிறார்கள் என்று அலட்சியம் காட்டாமல் அவர்களை மதித்து நடத்தும் போது நம்மிடத்தே விரும்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்து வந்தேன். அதனால் நிறுவனத்திலும் நல்ல பெயர்.

விவசாயிகள் நெல் அறுவடை முடிந்து நெல் விற்றுப் பணத்தை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி என்னிடம் தாங்களாகவே கொண்டுவந்து கொடுப்பார்கள். வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள், தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்பார்கள். எளிய வட்டி போட்டு கொடுத்தாலும் கூட வாங்கமாட்டார்கள். இதனால் என் தொழிலில் பணப் புழக்கத்திற்கு தட்டுப்பாடே இருந்தது கிடையாது.

அடுத்தக்கட்ட விரிவாக்கங்கள் மளமள என வந்து விட்டனவா?

பிறகு கோழித்தீவனம் தயாரிப்பு என்று இறங்கியதே வாடிக்கையாளர்கள் தந்த ஆலோசனைப்படிதான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த தொழில்களிலேயே ஈடுபட்டு வருகிறேன்.

சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகவே சொந்த ஊரில் தொழிலைத் தொடங்கினேன். ஈரோட்டில் தொடங்கியிருந்தால் அப்போதே குறைந்த செலவில் தொழில் செய்து இருக்க முடியும். ஆனால் கிராமத்தினருக்காக அங்கேயே தொழில் தொடங்கினேன், இன்று பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக வளர்ந்த பிறகும் கூட வேளாண்மையை மையப்படுத்தி என் இலட்சியங்களும் தொழில் முனைப்பும் உள்ளன.

இன்று தொழில் தொடங்கும் விதமும், பலரும் சிறந்து விளங்க முடிவதில்லையே என்ன காரணம்?

தரம், உண்மையும் இருந்தால் தொழிலில் கண்டிப்பாக நிலைத்து நிற்க முடியும். இன்று திட்டமிட்டால் மட்டுமே வெற்றி பெறமுடியும். பொதுவாக ஒரு மனிதன் மூன்று விதங்களில் தொழில் செய்யலாம்.

1. பொருளை வாங்கி விற்பது

2. ஏதேனும் ஒரு தயாரிப்புக்கு முகவராகத் திகழ்வது.

3. தயாரிப்பில் ஈடுபடுவது

வாங்கி விற்பதில் ஓரளவுதான் சம்பாதிக்க முடியும். முகவராக இருக்கும் நிலையில் விலை, தரம், பேக்கிங், உட்பட அனைத்தையும் உற்பத்தியாளர்தான் முடிவு செய்வார். இன்றும் பல நிறுவனங்கள் நல்ல ஏஜென்ஸிகளாக திகழ்கின்றன.

உலகமயமாகும் தொழில்களுக்கு நடுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை?

உலகமயமாகுதல் குறித்து இந்தியாவில் எத்தனையோ சர்ச்சைகள் இன்றும் உள்ளன. உள்நாட்டு உற்பத்தி என்பது நல்ல திட்டம்தான். ஆனால் கடைப்பிடிக்க முடியவில்லை. இந்தியாவில் தன்னிறைவு வலிமை இல்லாதபோது இந்தியத் தொழில்கள் உலக நீரோட்டத்தில் கலப்பதைத் தவிர்க்க முடியாது. ஏற்றுமதி இல்லாவிட்டால் இந்திய பொருளாதாரம் நிற்காது. இறக்குமதி இருக்கும்போது ஏற்றுமதி தவிர்க்க முடியாது.

உலகமயமாக்கல் தொடங்கிய நேரத்தில் நம்மையும், சீனாவையும் சிங்கப்பூர் முந்திக் கொண்டது. உலகமயமாக்கல் 25 ஆண்டுகளுக்கு முன் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு நமக்கு 10 ஆண்டுகள் முன்புதான் ஏற்பட்டது. அதனால் சற்றே பின் தங்கி இருக்கிறோம்.

நல்ல வருமானம் பெற விரும்புகிறவர்கள் என்ன தொழில் தொடங்கலாம்?

தொழில் செய்வதில் மூன்று வகைகள் உண்டு. பொருளை வாங்கி, லாபம் வைத்து விற்பது முதல் வகை. முகவராக செயல் படுவது இரண்டாவது வகை. உற்பத்தி செய்வது மூன்றாவது வகை.

முதல் வகையில் ஓரளவு வளர்ச்சி உண்டு. முகவராய் இருக்கும்போது விலையை உற்பத்தியாளர் தான் முடிவு செய்வார். கமிஷன், வணிகம் மேற்கொள்வதில் பாதுகாப்பு உண்டு. வாடகை, சம்பளம், மின்சார செலவுகள் போன்ற வற்றைத் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூன்றாவது, முதலீடு செய்து தொழில் தொடங்குவது. பலர் இந்த முதல் இரண்டு நிலைகளைக் கடந்து மூன்றாவது நிலைக்கு வருவதும் உண்டு.

சொந்தத் தொழில் தொடங்குவோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி என்று நிறைய இளைஞர்கள் என்னிடம் கேட்கிறார்கள். அது சாத்தியமே இல்லை. முழுமையான முதலீட்டு தொகைக்கு கடன் வாங்கி தொழில் செய்ய முடியாது. நம் நாட்டின் மிகப்பெரிய சிக்கல் வட்டி.

எனவே ஓரளவு வாங்கும் கடனை தனியாரிடம் வாங்கக் கூடாது. அவர்களின் வட்டி விகிதத்தால் தினமும் டென்ஷன் தான். நரம்புகள் தளர்ந்து போகும். நான் கூட சொல்வதுண்டு. “தனியாரிடம் கடன் வாங்கினால் தினமும் தொழிலைப் பார்க்க முடியாது. தொல்லைதான் பார்க்க வேண்டி வரும்” என்று. தொழில் விரிவுக்கு கடன் வாங்கலாம். முதலீட்டிற்கும் கடன், தொழிலுக்கும் கடன் என்றால் சிக்கல்தான்.

தொழிலில் அடுத்து கவனிக்க வேண்டியது என்ன?

நிதி ஆதாரங்களைத் திசை திருப்பாமல் இருக்க வேண்டும். தொழில் விரிவாக்கத்திற்காக வாங்கிய கடனில் சொத்துக்கள் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.

மாதாமாதம் என்ன வரவு செலவு நடக்கிறது? எல்லாச் செலவும் போக எவ்வளவு லாபம்? சரக்கு கடனாகத் தந்தோமா, பணத்திற்குத் தந்திருந்தால் பணம் தந்த பிறகுதான் லாபத்தில் வைக்க வேண்டும்.

தொழில் கடன் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் அதிகம். திரும்ப செலுத்துபவர்களின் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தால் கூட கடன் கொடுக்கக் கூடாது. மற்றவர்களைப் பார்த்து செலவு செய்வது எல்லாமே தவறு.

தொழிலை திட்டமிட வேண்டும். திட்டமிடுதல் என்றால் பணத்தை திட்டமிடுவது மட்டுமில்லை. தொழில் முயற்சி, விரிவாக்கம் போன்றவற்றை நோக்கித் திட்டமிட வேண்டும். சிறிய பெரிய தோல்விகளிலிருந்து பாடம் கற்கவும் வேண்டும்.

வங்கிக் கடன்களால் என்ன பயன்?

வங்கியில் முடிந்த அளவு வாடிக்கையாளர்களுக்குக் கை கொடுக்கத்தான் பார்ப்பார்கள். சிக்கலான சூழலில் உண்மையைச் சொன்னால் ஏற்கிறார்கள். அவர்களோடு பேரம் பேசவும் முடியும். எந்தவொரு சிக்கலிலும் நிதி ஒழுக்கம் இருந்தால் நிச்சயமாக மீண்டு வர முடியும். வங்கியில் வட்டி விகிதங்கள் குறைவு.

நான் வரவு செலவுகளை முதலில் வாரம் ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது தினமும் பார்க்கிறேன். வளரும் தொழிலதிபர்கள் வாரம் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்.


உங்களைப் பொறுத்தவரை வெற்றிக்கு எது அடிப்படை?

மற்றவர்களை வசப்படுத்துவதுதான் வெற்றி. நம்மை பிறர் விரும்பும்விதமாக நம் மனப்பான்மை, பழக்கவழக்கங்கள் ஆகியவை இருக்க வேண்டும். நம் வாடிக்கையாளர் மட்டுமின்றி, பணியாளர்கள், கார் ஓட்டுநர்கள் அனைவரையும் வசப்படுத்த வேண்டும். அதுமட்டும் போதாது ஈட்டிய பணத்தின் ஒரு பகுதியை சேவைக்கு செலவிட வேண்டும். அப்போதுதான் முழு நிறைவு இருக்கும். சமூகத்திலிருந்து பெற்ற பணத்தில் ஒரு பகுதியை சமூகத்துக்குத் திரும்பத்தரும் கடமை நமக்கு இருக்கிறது. இதை எந்தச் சூழலிலும் மறந்துவிடக்கூடாது.

100% வரி விலக்குள்ள திட்டங்களில் ஈடுபடலாம்.

3 Responses

  1. Suresh

    vanakkam sir. enaku vayathu 27. thirupur banian companyku singer tailoraka velaiku poi kondu irukiren. enaku valkail munnera vendum, adutha kattathitku poka vendum endra aasai veri. thayavu seithu enaku uthavungal. nandri..

  2. ibrahim

    arumaiyana valikatti sir ninga ungala mari ulaipalikal namma nattla irukkum podhu namma nadu chikiram vallarasu ayidum sir ninga niraya perkku roll modela irukkanum sir thanku…

  3. Suresh.S

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
    வெற்றி என்று ஒன்றுதானே இறுக்க முடியும் – வெற்றிகள் என்பதற்கான விளக்கம் என்ன?
    (இது வெற்றிகளின் தலைவாசல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *