நம்பிக்கை மிக்க இளைஞர்களை உருவாக்குவோம்

டாக்டர் வினு அறம்
இயக்குநர் – சாந்தி ஆசிரமம்

டாக்டர் கேசவினு அறம், சாந்தி ஆசிரமத்தின் நலவாழ்வுத் துறை இயக்குநர், இந்தியாவில் படிக்கிற இளைஞர்கள் அதிக வருமானம் தேடி, அயல் நாடுகளுக்குப் பறக்கும் இந்தக் காலத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் தலைசிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, இந்திய கிராமங்களில் பணிபுரிகிற இமாலய இலட்சியத்தோடு, தாயகம் திரும்பியிருக்கிறார்.

சாந்தி ஆசிரமம் தத்தெடுக்கும் 26 கிராமங்களில் மருத்துவ சேவை, கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர் பணி இவற்றிற்கிடையே ஆய்வுப்பணி ஆகியவற்றை மேற்கொண்டிருக்கும் இவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் அழைக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும் பெறுகிறார். தன் சமுதாயப் பணிகளுக்கு மத்தியில் அயல்நாடு செல்ல இவர் விரும்பாததால், ஹார்வர்டு பல்கலைக்கழகம் தனது மாணவர்களை இவரிடம் தொடர்ந்து அனுப்ப இருக்கிறது. சாந்தி ஆசிரமத்தின் நிறுவனரும், காந்தி கிராம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான, அமரர் டாக்டர் அறம் – மினோத்தி அறம் ஆகியோரின் புதல்வியாகிய டாக்டர் வினு அறம். இத்தனை சாதனைகளையும் செய்திருப்பது இந்த 30 வயதிற்குள். இன்று சர்வதேச அளவில் இயங்கிவரும் இந்த இளம் மங்கை, தான் கடந்து வந்த பாதைகளை, அனுபவங்களை, எதிர்காலம் பற்றிய இலட்சியக் கனவுகளை எல்லாம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சமூகம் பற்றிய விழிப்புணர்வோடு, இத்தனை இளம் வயதிலேயே நீங்கள் இயங்கத் தொடங்கியதற்கு, உங்கள் குடும்பச் சூழல் ஒரு காரணம் என்று சொல்லலாமா?

குடும்பம், நான் வளர்ந்த சூழல், எனக்குள் இருந்த, இருக்கிற இலட்சியங்கள், இவற்றின் கலவைதான் இந்தப் பணி என்று சொல்லலாம். மிக முக்கியமாக என் பெற்றோர்கள், இந்த விதத்தில் வளர்த்திருக்கிறார்கள். என் தந்தை டாக்டர் மு. அறம், அறுபதுகளின் ஆரம்பத்தில், தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அப்போதைய அசாமிய முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நாகாலாந்து மலைகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டார். நாகாலாந்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன்.

அப்போது என் தாயும் தந்தையும் எனக்கு ஆதர்சனமாக விளங்கினார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அவர்களை நான் பார்க்கிறேன். என் தந்தை ஒரு கல்வியாளர். முழு அர்ப்பணிப்புணர்வு, தீவிரமான செயலாற்றல் இவற்றின் வடிவங்களாய் இவர்கள் வாழ்ந்து காட்டியதுதான் என்னை இந்த அளவில் உருவாக்கியிருக்க வேண்டும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் பழக நேர்ந்தவர்கள் அத்தனை பேருமே இந்த சமூகத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

என் தந்தை குமரி மாவட்டத்திற்கு அருகே ஒரு சிறிய கிராமத்திலே பிறந்து கடும் உழைப்பின் காரணமாக உயர்ந்தவர். எனவே குடும்பச் சூழல், தமிழ்ச் சூழல் எங்கள் ஆச்சி எங்களுடன் இருந்தார்கள். தமிழகப் பெண்மையின் ஒரு பிரதிநிதியாக, அசாம் மொழி தெரியாமலேயே அங்கு வாழ்ந்தார்கள். இதன் காரணமாக வெவ்வேறு விதமான பண்பாட்டுச் சூழல்களை ஏற்கிற அளவு என் இதயம் திறந்திருந்தது.

அசாமின் வாழ்க்கை முறை, தமிழ்நாட்டுக்குரிய ஒரு குடும்பச் சூழல், இவை தவிர உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணப்படுகிறபோது அந்தந்த வாழ்க்கைச் சூழலை உள்வாங்கிக் கொள்கிற பக்குவம் இருந்தது.

நாகாலாந்திலிருந்து எப்போது தமிழகம் வந்தீர்கள்?

எனக்கு 10 வயது இருக்கும்போது, காந்தி கிராம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, என் தந்தையார் பொறுப்பேற்றார். அப்போது எங்கள் ஆச்சிக்கும் 81 வயது ஆகியிருந்ததால். அவருக்குரிய சூழலை அமைத்துத்தர நாங்கள் விரும்பினோம். எனவே தமிழகம் வந்தோம். தென்னகத்தினுடைய பாரம் பரியங்கள் எனக்கு வித்தியாசமாக இருந்தன. ஆடைகள் தொடங்கி பல விஷயங்கள். குறிப்பாக ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்தது எனக்குள் விதம்விதமான கேள்விகளை எழுப்பின. எப்போதுமே பெண், ஆண் என்கிற பேதங்களை நான் உணர்ந்ததில்லை. சிறிய வயதில்கூட விருந்தினர்கள் வருகிற போது, அவர்களுக்கு தேனீர் எடுத்துப்போகிற பணி எனக்கும் என் தம்பிக்கும் என் பெற்றோர் தருவார்கள்.

எனக்கு இசையில் நாட்டம் அதிகம். இசை பயின்ற பொழுது தமிழ் பாடல்களையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு பாடுவேன், அதில், “ல, ள, ழ” போன்ற எழுத்துக்களில் சந்தேகம் வருகிறபோது, அப்பாவைக் கேட்பேன். அவர் “ஆங்கிலத்தில் எழுதிவைத்துக் கொண்டால் உன்னால் பாட முடியாது. முதலில் தமிழைப்படி, பிறகு தமிழில் பாடு” என்றார். எனவே தமிழ் படித்தேன். என் தந்தையார் ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் 86ல் கோவைக்கு வந்தோம். இங்கு மருத்துவம் பயின்றேன். அதற்குள் என் தந்தை தேசியக் கல்வித் திட்ட ஆலோசகராக பல்வேறு பொறுப்புக்களை ஏற்றிருந்தார்.

சாந்தி ஆசிரமம் ஏற்படுத்தியது எப்படி?

அப்போது பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள் என் தந்தையை அழைத்து “கிராம மக்கள் மேம்பாட்டுக்காக சில மாதிரி அமைப்புகளை நாடு முழுவதும் ஏற்படுத்தவேண்டும். அதற்கு முன்திட்ட அறிக்கை ஒன்று நீங்கள் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அப்படி உருவானது தான் சாந்தி ஆசிரமம். பேரூர் பகுதிக்கு உட்பட்ட 26 கிராமங்களில் 18 ஆண்டுகளாக சாந்தி ஆசிரமம் பணிபுரிந்து வருகிறது. ஒவ்வொருமுறை அந்த கிராமங்களுக்கு போகிற போதும், இத்தனை ஆண்டுகள் ஆயினும்கூட இந்திய கிராமங் களுக்கு நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

என் தந்தை அதற்கொரு நல்ல திட்டத்தை வகுத்தார். அவர் சொன்னார், “நாம் கிராமப் பிரச்சினைகளைக் கையாளுவோம். அவற்றிற்கான தீர்வுகள் பொதுத் தன்மையுடை யனவாக இருக்குமேயானால் அவற்றை தேசிய அளவில் அறிமுகம் செய்யலாம்” என்று. அதன்படி 15 முதல் 35 வயதுக்குட்பட்ட பாமர மனிதர்களை அழைத்து அவர்களுக்கு கல்விப் பயிற்சி கொடுப்பதாக, எங்கள் திட்டம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பதைவிட, குழந்தைப் பருவத்திலேயே கல்விக்கான சூழலை கிராம மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக ‘பாலசாந்தி’ திட்டத்தை ஏற்படுத்தினோம்.

இதில் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு போதனை தருதல், அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான கல்விச் சூழலை அமைத்துத் தருதல் ஆகியவற்றை மேற்கொண்டோம். ‘பாலசாந்தி’ திட்டத்தை ஒரு முன் மாதிரி திட்டமாக, யுனஸ்கோ, யுனிசெப் ஆகியவை அங்கீகரித்திருக்கின்றன.

இந்தியக் குழந்தைகளுக்கு முக்கியமாக 3 விஷயங்கள் தேவை. உடல் நலம், ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி. இவற்றைத்தான் என்னுடைய திட்டங்களாக ஏற்று செயல் படுத்தி வருகிறேன். குழந்தைகளுக்காக என்று பெற்றோரை அணுகிப்பேசுவது இன்னும் எளிதாய் இருக்கிறது. அவர்கள் நன்மைக்காக திட்டங்களையும் தீட்டித்தர முடிகிறது.

மருத்துவக் கல்விக்குப் பிறகு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தீர்கள் அல்லவா?

ஆமாம். உலகளாவிய பார்வைக்கு அந்த அனுபவம் எனக்குத் துணைபுரிந்தது. இதற்கிடையில் உலக அமைதி நிறுவனத்தின் இளைஞர்களுக்கான சர்வதேச இயக்குனராகவும் பலமுறை பணி புரிந்ததால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் எனது சமூக உணர்வை மேலும் கூர்மைப்படுத்தியது.

அதில் தலைசிறந்த மாணவியாகத் தேறி அந்தப் பல்கலைக் கழகத்தின் மிகுந்த கௌரவம் மிக்க ஆல்பர்ட் சுவிட்சர் விருது, டாக்டர் ஃபான்சின் நினைவு விருது ஆகியவற்றைப் பெற்றேன். சாந்தி ஆசிரமத்தின் கிராமங்களுக்காக பணிபுரிகிற கடமை இருப்பதனால் இந்தியா திரும்பினேன்.

ஹார்வர்டிலிருந்து வந்த உங்களுக்கு இந்திய கிராமங்கள் எப்படியிருந்தன?

முதலில் நான் கிராமங்களைப் படித்தேன். கிராமங்களில் பணியாற்றுவதற்கு சேவையுள்ளமும், கல்வியும் மட்டும் போதாது, களப்பணி முதலில் தேவை. கிராமப் பணிகள் குறித்து நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படவும், நம்மீது பிறருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், அங்கே களப்பணி ஆற்ற வேண்டும்.

எப்பொழுதும் புகழ்பெற்றவர்களின் வாரிசாக உள்ளே வருகிறபோது, அந்தப் பெயரை வைத்துக்கொண்டே, நமக்கு பெருமைகள் வந்துவிடாது. நம்முடைய உழைப்பு, படைப்பாற்றல் தனித்தன்மை, இவைதான் நமக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும்.

அப்பா போல, அம்மா போல என்பதை வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாலும் கூட, அதனைத் தாண்டி நம் கனவும், உழைப்பும் நம்மை கொண்டு செல்ல வேண்டும். எந்தவொரு முத்திரையும், பின்புலமும் இல்லாத ஒரு கிராமத்திலிருந்து என் தந்தை வந்தபோது, இத்தனை பின்புலங்களோடு வந்த நான், இன்னும் தனித்தன்மையோடு திகழவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.

இளைஞர்கள் தனித்தன்மைக்கு என்ன வழி என்று கருதுகிறீர்கள்?

ஒவ்வொரு இளைஞனும் தனக்குள் இருக்கிற குரலைக் கேட்க வேண்டும். தனது ஆற்றல் என்ன? வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். சில விஷயங்களை என் அப்பாவைப் போல, என் அம்மாவைப் போல என்னால் செய்ய முடியாது. ஆனால் ஒரு சில விஷயங்களில் அவர்களைவிட நன்றாக செய்யமுடியும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய “சுயம்” எதுவென்று பார்த்து அந்த சுயத்தின் குரலைக் கேட்டுப் பழகவேண்டும்.

இப்படிச் செய்கிறபோது, நம் திறமையைப் பற்றிய ஒரு எதார்த்தமான புரிதல் நமக்குக் கிடைக்கும். எட்ட முடியாத கனவுகளை இலட்சியங்கள் என்று சொல்லிக்கொண்டு திண்டாடுகிற சூழ்நிலை ஏற்படாது.

அப்படியானால் உங்கள் வாழ்க்கை பற்றி அங்குல அங்குலமாகத் திட்டமிட்டிருக்கிறீர்களா?

ஓரளவிற்கு நான் கல்வியில் வெற்றி பெற்றபிறகு என்னையே கேட்டேன். “நீ என்ன செய்ய வேண்டும்” என்று என் உள்மனம் சொல்லிற்று. எனவே இந்தியா திரும்பினேன். மருத்துவப் பணியை ஒரு தொழிலாகச் செய்யாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதை நோக்கி நான் நகர்ந்தேன். என் பணி இந்த உலகம் இரண்டுக்குமான தொடர்ச்சி என்ன? அவற்றை எப்படி விரிவு செய்துகொண்டே போக முடியும் என்றும் பார்க்கிறேன்.

எனவே இளைஞர்களுக்கு இதயம் என்பது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து சிந்தனைகளைப் பெறுவது, வெளி உலகிற்கு சில நன்மைகள் தருவது என்பதாக வாழ்க்கை அமைந்தால் நல்லது.

நீங்கள் பார்த்தவரையில் இன்றைக்கு இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது?

நம் தேசத்தில் மட்டுமல்ல பொதுவாகவே இளைய தலைமுறைக்கு என்றிருக்கிற இலட்சியங்கள் அடிப்படையில் மிகவும் வலிமையானது. தங்கள் ஆற்றலை அவர்கள் உணர்ந்தவர் களாக, தலைமைப் பண்புமிக்கவர்களாக இளைஞர்கள் உருவாகிறார்கள்.

இன்னொருபுறம் இந்தியச் சிறுவர்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாக இருக்கிறது. ஏனென்றால் 10, 11 வயதிலேயே ஒருவிதமான மன அழுத்தம், விரக்தி போன்றவை இந்தக் குழந்தைகளுக்கு வருகிறது.

தங்கள் தோற்றத்தை மற்றவர்களோடு ஒப்பிடுவது, மதிப்பெண்கள் வாங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிற கல்விச் சூழ்நிலைகள் எல்லாம் இந்தக் குழந்தைகளை மிகவும் சிரமப்படுத்துவதாகக் கருதுகிறேன். இதையெல்லாம் தாண்டி நல்ல தலைமைப் பண்போடு இளைஞர்கள் உருவாகி வருவதையும் உணரமுடிகிறது.

கிராம இளைஞர்களுக்கு இன்று என்ன தேவை என்று கருதுகிறீர்கள்?

கிராம இளைஞர்களைப் பொறுத்தவரை முதலில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றும்படி அவர்களுக்கு சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணை புரியவேண்டும். உறுதுணை புரிவதென்றால் அவர்களுக்கு உற்சாகமாக உந்து சக்தியாக நின்று வார்த்தைகளைச் சொல்லி துணை நிற்பது. இதே துறையில் பெரியவர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வது. அரசாங்கமோ பிற நிறுவனங்களோ தங்களால் இயன்ற அடிப்படை வளங்களை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது, நான்காவதாக தானாக எதுவும் செய்வதற்கு வாய்ப்புகளை வழங்குவது.

இளைஞர்களை பொறுப்புக்கு அமர்த்தும் இடங்களில் கூட முதியவர்கள் “எதைச் செய்தாலும் என்னைக் கேட்டுச்செய்” என்று சொல்கிறார்கள். இது இளைஞர்கள் வளர வழிவகுக்காது. எனவே, உறுதுணை செய்தல், அனுபவங்களைப் பகிர்தல், வளங்களைத் தருதல், வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல், இதுதான் நம்பிக்கைமிக்க இளைஞர்களை உருவாக்கும் என்று கருதுகிறேன்.

இதையெல்லாம் யார் செய்வது? எப்படிச் செய்வது?

இதை அரசாங்கமோ, தொண்டு நிறுவனங்களோ, பத்திரிகைகளோ, தனியாக செய்துவிட முடியாது. இவர்களெல்லாம் சேர்ந்து, ஒரு கூட்டணி அமைக்க வேண்டும். அரசியல் கூட்டணி மாதிரி அல்ல. ஒரு ஆக்கப்பூர்வமான கூட்டணியாக அமைக்க வேண்டும். குறிப்பாக “சிவிக்சொசைட்டி” என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை. சமூக பொறுப்புள்ள சமுதாயம் என்று அதற்குப் பொருள் கொள்ளலாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் என்று எல்லோருமாக இணைந்து, சில மதிப்பியல்களை ஏற்படுத்த வேண்டும்.

சமயத்தலைவர்கள் என்று சொல்கிறீர்கள்? இன்றைக்கு சமயம் மக்களை பெரிதும் பிரித்து வைக்கிற கருவியாக அல்லவா பயன்படுகிறது?

சமயம் எப்பொழுதுமே எதிர்மறையானதல்ல. சமயம் என்பது ஓரு வாழ்க்கைமுறை. அவரவருக்கான வாழ்க்கை முறை. உதாரணத்திற்கு இந்து சமயம் “அனைவரையும் சமம். எல்லா உயிர்களிலும் தெய்வம் இருக்கிறது” என்று சொல்கிறது. கிறிஸ்துவ மதம் “உன்னைப் போலவே பிறரையும் நேசி” என்று பேசுகிறது.

உலகில் உள்ள அத்தனை மதங்களும் இதைத்தான் சொல்கின்றன. சமயங்களால் நமக்கு பிரச்சனை இல்லை. சமய அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டு, அந்த அடையாளங் களை பெரிதாகப் பற்றிக் கொள்கிறபோதுதான், நமக்கு சிக்கல்கள் வருகின்றன.

சமூகப் பணியாளர்களுக்கு நீங்கள் வரையறுக்கும் அடிப்படைத் தகுதி என்ன?

சமூகப் பணியாளர்கள் என்பவர்கள் எவ்விதத்திலும், சமூகத்தைவிட உயர்ந்தவர்களோ, தனித்து நிற்பவர்களோ இல்லை. அந்த பிரமையை முதலில் நாம் உடைக்க வேண்டும்.

ஆண், பெண் என்ற வேறுபாட்டை படித்தவர்கள், பாமரர்கள் என்கிற வேறுபாட்டை எல்லாம் நாம் நீக்க வேண்டும். சில விஷயங்களை சிலரால்தான் செய்ய முடியும் என்பது போல இந்த நாட்டில் ஒரு எண்ணம் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 1/3 பங்கு இளைஞர்கள். இளைஞர்களை நோக்கி, சமூகப் பொறுப்புள்ள சமுதாயம் தன் கவனத்தை மேலும் வலிமையாகக் குவிக்கவேண்டும்.

அப்படியே இயக்கங்கள் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். அவை அதிகபட்சம் எத்தனை பேரை மாற்றி விடமுடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இதற்கு திருமதி.ரூஸ்வெல்ட், “சர்க்கிள் ஆப் இன்புளூயன்ஸ்” என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார். உங்கள் செல்வாக்கு வட்டம் என்று அதற்குப் பொருள். உதாரணத்திற்கு நான் இருக்கிறேன். நான் தனி மனித அளவில் நான் எட்டுவதற்கென்று, சாந்தி ஆசிரமத்தின் அரவணைப்புக்கு உள்ள 26 கிராமங்கள் 1 இலட்சம் மக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே இப்பொழுது நான் எட்டக்கூடிய மக்கள் தொகை ஒரு லட்சம். அதை நான் மேலும் விரிவாக்க விரும்பினால் அந்த வட்டம் மேலும் விரிவடைகிறது. இது ஒரு தனி இயக்கமோ, சில இயக்கங்களோ சேர்ந்து செய்வது அல்ல. சமூகத்தின் அத்தனை அங்கங்களும் வலிமையாக கைகோர்த்து ஒன்றாக ஈடுபட வேண்டும். ஒத்த கருத்துள்ளவர்கள் உலகம் முழுவதும் இணைந்தால், பல மகத்தான மாற்றங்களை நிச்சயமாக செய்ய முடியும்.

நீங்கள் பார்த்தவரையில் இந்தியாவில் நகர இளைஞர்கள், கிராம இளைஞர்கள் இருவரின் வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரத்திற்கும் இடையே இருக்கிற இடை வெளியைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

மிகப்பெரிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இந்த இடைவெளி இணையும் என்று சொல்வதெல்லாம் வீண் கற்பனை. கிராமத்திலிருந்தாலும், நகரத்திலிருந்தாலும் இளைஞர்களை அவர்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்ய நாம் அனுமதிக்கவேண்டும். பொறியியல், மருத்துவம் மட்டும் தான் பட்டப்படிப்பு என்று கருதிக்கொண்டு மாணவர்களை பொருத்தம் இல்லாத துறைகளில் திணிக்கிற போது அவர்களால் செயல்பட இயல்வதில்லை. இன்று சிறந்த மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள் குறைந்த கல்வித்தரம் உள்ளவர்களாக வெளிவருகிறார்கள்.

எல்லோரும் மருத்துவராக, பொறியாளராக வரவேண்டும் என்று கருதுவதால் சில இளைஞர்களுக்குள் இருக்கிற நல்ல ஆசிரியர்களை, நல்ல இசைக் கலைஞர்களை, சிறந்த ஓவியர்களை இந்த நாடு இழந்துவிடுகிறது.

இரண்டாவதாக, கிராம இளைஞர்களைப் பொறுத்த வரையில், கல்வித்தரம் அவ்வளவு சரியாக இல்லை. போதிய அளவு பயிற்சி பெறாத ஆசிரியர்கள், சில கிராமங்களில் பணியாற்றுகின்றனர். போதிய வசதி இல்லாத கட்டிடங்களை நாம் கிராம மக்களுக்காக கட்டிக்கொடுக்கிறோம். இதெல்லாம் அடிப்படை மனித உரிமை மீறல். நகர இளைஞர்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கிருக்கிற ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் தனிமை. பெற்றோர்கள் கவனம் இல்லை.

இளைஞர்கள் தவறான வழியில் போக தனிமையே காரணம். தவறு என்று கருதப்படுகிற விஷயங்களைப் பற்றி, அவர்களிடம் மனம் விட்டுபேசத் தயங்குகிறோம். நகர இளைஞர்களுக்கு அறியாமை, வறுமை, இவற்றைப் போக்குவது தான் இளைஞர்களை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுப்பதற்கான வழி.

சமூகப் பணியாளர்கள், எப்படியிருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

சமூகப் பணியாளர்கள் தங்களை கடவுளின் தூதர்கள் என்றோ, தாங்கள் ஏதோ சேவை செய்வதாகவோ கருதும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் சிறந்த மாணவியாக நான் விருதுகள் பெற்று வெளிவருகிற நாளில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அப்போது ஆல்பர்ட் எவிங்க்ஸ் “வினு சமூகப் பார்வையுள்ள தன்னலம் கருதாத மருத்துவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பணியைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இந்திய கிராமங்களுக்கு பணியாற்ற திரும்புகிறார்” என்று பாராட்டிப் பேசினார்.

நான் மேடை ஏறிச்சொன்னேன், “இல்லை, நான் தான் மிகவும் தன்னலம் உள்ளவள், நான் இந்தியா திரும்புவது சுயநலம். ஏனென்றால் இந்திய கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்கிற என் கனவு மெய்ப்படவேண்டும். அதில் எனக்கு மகிழ்ச்சியிருக்கிறது, மன நிறைவு இருக்கிறது. இது எப்படி தன்னலமற்ற பணியாகும்?” என்றேன்.

தன்னலம் என்பது தவறில்லை. அதனுடைய பலன் பொது நலனாக இருக்கிற வரையில்! பகுதி நேரப்பணியாகவோ, பொழுதுபோக்காகவோ, சமூகப் பணியை யாரும் செய்வது சரியல்ல. அதில் முழூ நேரப் பணிக்கான அத்தனை தேவையும் இருக்கிறது.

இப்பொழுது நீங்கள் என்னென்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

எங்கள் சாந்தி ஆசிரமம் உள்ளடக்கிய அந்த 26 கிராமங்களில் இரண்டே இரண்டு சுகாதார மையங்கள்தான் இருக்கின்றன. எனவே 16 மையங்களை ஏற்படுத்தி அதன் வழி மருத்துவப் பணியை கிராம மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறேன்.

நான் பணிபுரிகிற பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மாணவர்களை இந்த சமூக மேம்பாட்டுப்பணிகளில் ஈடுபடுத்துகிறேன். விரைவில் என்னிடம் வரவுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களும், இந்தப் பணியில் ஈடுபடுவார்கள். அடுத்து இந்த துறை குறித்து மேலும், மேலும் ஆய்வு செய்து வருகிறேன்.

தங்களைப் போல் சமூக உணர்வுள்ளவர்களை அடையாளம் கண்டு, கைகோர்த்து பணிபுரிய வேண்டும். அதன் மூலம் சமூக மாற்றம் என்பது நிச்சயம் சாத்தியம்.

  1. ரமணன்

    அழகான பேட்டி. அளவான கேள்விகள். அறம் வளர்க்கும் அறத்திற்கு என் நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *