திரு. ஸ்டாலின் குணசேகரன்
திரு. ஸ்டாலின் குணசேகரன் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும், இலட்சிய இளைஞர். “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்கிற ஆய்வு நூலைத் தொகுத்ததன் பலனாக சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரப்பதிவுகளை, புரட்டிப் போட்டிருக்கிறார். பொதுவுடைமை சித்தாந்தம், தேசிய உணர்வு, ஆகிய சிந்தனைகளால் பிள்ளைப் பருவத்தி லேயே ஈர்க்கப்பட்டவர். அவற்றின் வழி இலட்சிய இளைஞராய் வார்க்கப்பட்டவர்.
நம்பிக்கை ததும்பும் இந்த பரபரப்பான மனிதருடன் இதோ நமது நேர்காணல்.
உங்கள் பொதுவாழ்க்கை பள்ளி பருவத்திலேயே தொடங்கி விட்டதாமே?
ஆமாம்! பள்ளி மாணவனாகயிருந்த போது “பாரதி இளைஞர் மன்றம்” என்கிற இளைஞர் அமைப்பைத் தோற்றிவித்தேன். இந்த அமைப்பு இளைஞர் எழுச்சி இயக்கம், மக்கள் சிந்தனை பேரவை போன்ற பொது இளைஞர் அமைப்புகளையும் நிறுவி இவற்றின் வாயிலாக இந்திய இளைஞர்களுக்கு தேசப்பற்றை ஏற்படுத்த பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
1980 – ம் ஆண்டில் ‘சிக்கய நாயக்கர் கல்லூரி மாணவர் பேரவை’த் தலைவனாக தேர்வு செய்யப்பட்டு, அதே ஆண்டில் பெரியார் மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.
1985ம் ஆண்டில், சோவியத் நாட்டின் தலைநகராகிய மாஸ்கோவில் நடைபெற்ற அகில உலக மாணவ இளைஞர் மாநாட்டில், இந்தியாவின் பிரதிநிதிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டேன். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் மாநில தலைவராகவும், பல ஆண்டுகள் பணி புரிந்தேன்.
விடுதலைப் போராட்டதில் தமிழர்கள் பங்கு குறித்து ஆய்வு செய்கிற எண்ணம் எப்படி எழுந்தது?
“ஜீவா முழக்கம்” இதழில், பொன்விழா மலரைத் தயாரிக்கும் பொறுப்பு, எனக்கு தரப்பட்டது. அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்ட போது தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு பற்றி போதிய அளவு தெரிவிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் விடுதலைப் போரே நடக்கவில்லையோ என்று மற்ற மாநிலத்தவர் நினைக்கும் அளவுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில குறிப்புகள் மட்டுமே தென்பட்டன. தமிழ் பாடநூல்கள் கூட, முதன்முதலில் விடுதலைப் போராட்டம் 1897ல் வடநாட்டில் நிகழ்ந்த சிப்பாய்க்கலகம் மூலம் தொடங்கியதாகத்தான் சொல்கின்றன. ஆனால் அது உண்மையில்லை.
அப்படியானால் சுதந்திரப் போராட்டம் எங்கு தொடங்கியது?
முதல் சுதந்திரப் போராட்டம் தமிழகத்தில்தான் துவங்கியது என்கிற வரலாற்று உண்மை, வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. 1755ல் புலித்தேவன் நிகழ்த்திய போராட்டமும், 1797, 1800, 1801, ஆண்டுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார் போன்றவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடும் புரட்சியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அருகிலிருந்த கோபால் நாயக்கர் என்பவர் தென்மாவட்ட குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக் காரர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய புரட்சியொன்றை ஏற்படுத்தினார். அப்போது பலர் தூக்கிலிடப்பட்டனர், அதுபோன்ற உண்மைகள் ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்டன.
‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ எப்படி உருவானது?
வரலாற்றில் ஆய்வாளர்கள், நிபுணர்கள், தேதியச் சிந்தனை மிக்க தலைவர்கள், தியாகிகள் என்று பலரையும் கண்டு அவர்கள் தந்த தகவல்களை வெவ்வேறு அறிஞர்களைக் கொண்டு கட்டுரையாக்கி “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்று இதுவரை 1156 பக்கங்களில் இரண்டு பாகங்களாக வெளியிட்டோம். மூன்றாவது பாகம் வெளிவரவுள்ளது. அதற்கு நானே பதிப்பாளர். என் மகள் பெயரில் ‘நிவேதிதா பதிப்பகம்’ என்று அமைத்து அதன் மூலம் வெளியிட்டோம்.
நூல் விற்பனையில் போதிய வரவேற்பு உள்ளதா?
சமீபத்தில் ஒரு செய்தியாளர் கூடக் கேட்டார், “சரியாக விற்க முடிகிறதா” என்று. ‘விடுதலை வேள்வியில் தமிழகம் ‘ ஒரு புத்தகமல்ல. அது மக்களை ஒருங்கிணைக்கும் இயக்கம். இந்த மண்ணுக்காகத் தன்னைத் தந்த தியாகிகளின் வாழ்க்கை விளக்கம்.
இது ஆதாயம் கருதி வெளியிடப்பட்டதல்ல. அத்தனை பிரதிகளும் விற்றால்கூட, விற்பனைக் கணக்கு நட்டத்தைத்தான் காட்டும். ஏனெனில், அடக்க விலைக்குத்தான் அளித்திருக்கிறோம். நான் அதுபற்றிக் கவலைப்படவில்லை. இந்தப் புத்தகத்தை முன்வைத்து இளைய தலைமுறை தன் தேசம் பற்றிய விழிப்புணர்வு பெறுமென்றால் அதுவே போதுமானது. தியாகிகளின் தியாகத்துக்கு முன்பு இந்த நட்டங்கள் பெரிதல்ல.
உணர்வு ரீதியாக இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஈரோட்டில் பள்ளித் தாளாளர் ஒருவர், 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்காக இந்தப் புத்தகத் தொகுதிகள் இரண்டும் கொண்ட 5 செட் வாங்கி நூலகத்தில் வைத்ததோடு, அதற்காகப் போட்டியும் அறிவித்துள்ளார். முதல் பரிசு 1 பவுன், இரண்டாம் பரிசு 0.75 பவுன், மூன்றாம் பரிசு 0.5 பவுன் என்று விநாடி வினா போட்டியினை அறிவித்துள்ளார்.
அதேபோல், தொழிலதிபர் டாக்டர் நா. மகாலிங்கம் வேறொரு நூல் விழாவிற்கு வந்தவர், இரு தொகுதியிலும் 200 பிரதிகள் எடுத்துக்கொண்டுள்ளார். தொழிலதிபர் திரு. எஸ்.கே. மயிலானந்தம், 200 பிரதிகள் வாங்கி, பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்தப் படைப்பு பற்றிக் கேள்விப்பட்டு நாமக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் மேசை துடைக்கிற சிறுவன் ஒருவன், “எனக்கு மொத்தமாகப் பணம் செலுத்தமுடியாது, கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகிறேன், புத்தகம் அனுப்புங்கள்” என்று கூறி வாங்கியுள்ளான். இப்படி பல தரப்பினரையும் இந்த நூல் எட்டியுள்ளது என்பதே மேலும் நம்பிக்கை தருகிறது.
தியாகிகளைச் சந்திக்கக் களப்பணியில் இறங்கியபோது, நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் எதையாவது எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
கொடி காத்த குமரன் பற்றி தகவல்களைத் திரட்டிய போது, அவரோடு உடனிருந்த 9 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிந்தது. அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தேன். பிறகும், ஒரே ஒருவரைப் பற்றித் தகவல் கிடைக்கவில்லை.
ஈரோட்டில், இந்தப் புத்தகத்துக்கான முன்வெளியீட்டுத் திட்டக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்த நான், “அந்த ஊர்வலத்தில் போன ஒருவரைப் பற்றி மட்டும் தகவல் கிடைக்கவில்லை” என்று சொன்னேன். உடனே முன் வரிசையில் இருந்த ஒரு முதியவர், கைத் தடியைத் தூக்கி வீசிவிட்டு “நான்தான் அது” என்று ஆவேசமாக மேடையில் ஏறி மேசையை ஓங்கித் தட்டினார். உடனே நான் “நீங்கள் அப்புக்குட்டி முதலியாரா? என்றேன். “ஆம்” என்றார். கூட்டமே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது.
அப்புக்குட்டி முதலியார், என்னிடம் “அன்று ஊர்வலத்தில் நிகழ்ந்ததை நேரில் பார்த்தது போலவே வர்ணிக்கிறீர்களே” என்று கேட்டார். “நிறைய கோணங்களில் ஆய்வு செய்து முழுமையான தகவல்களைத் திரட்டியதுதான் காரணம் என்றேன்.
உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
தியாகிகள் வரலாற்றினை கிராமம் கிராமமாகக் கொண்டு சேர்ப்பதன் மூலம் இளைஞர்கள் மனதில் தேச உணர்வை ஏற்படுத்துவது, வெள்ளைக்காரன் போய்விட்டான், ஆனால், இந்த சுதந்திரத்திற்கு தியாகிகள் தந்த விலை இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்காக ஈரோட்டில், “ஆயிரம் மாணவர் திட்டம்” என்று ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
அதன்படி, பலவிதத் திறமையுள்ள மாணவர்களை, அதாவது கல்வி, பேச்சுக்கலை, ஓவியம், சஇஇ, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற பல்துறை சிறப்புள்ள ஆயிரம் மாணவர் களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களிடம், “நீதான் வருங்கால மருத்துவர், பொறியாளர், ஐஅந, ஐடந அதிகாரி. அந்தத் தியாகிகள் வரலாறுகளை உணர்வுப்பூர்வமாக உள்வாங்கி, இந்தத் தியாகிகள் பெயரால் ஆணையிட்டு, எதிர்காலத்தில் நான் பொறுப்புக்கு வரும்போது தவறு செய்யமாட்டேன், லஞ்சம் வாங்கமாட்டேன் என உறுதியெடுத்துக்கொள் என்று ஆற்றுப் படுத்த வேண்டும். இளம் வயதிலேயே இத்தகைய உணர்வை ஏற்படுத்தினால் எதிர்கால இந்தியா நம்பிக்கை தருவதாக இருக்கும்.
நிறைய இலட்சியங்களைக் கொண்டிருக்கும் நீங்கள், இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
சமூகம் சார்ந்தவன்தான் மனிதன். இன்று கல்வி, கம்ப்யூட்டர் போன்ற கருவிகளை சமூக மேம்பாடு சார்ந்து செயல்படுத்த வேண்டும். ஒருவன் அழகான சட்டையை அணிந்து கொள்கிறான் என்றால், அந்தப் பருத்தியை உருவாக்கிய விவசாயி, பஞ்சு நெய்த தொழிலாளி, விதம் விதமான சட்டைகளை எடுத்துக் காட்டும் விற்பனையாளன், படைக்க வேண்டிய வயதிலும், வறுமை காரணமாக சட்டைக்கு காஜா அடிக்கிற சிறுவன் என்று இத்தனை பேர் பங்களிப்பும் இருப்பதை உணர வேண்டும்.
இன்றைய சுதந்திரம், நேற்றைய தியாகங்களின் விளைவு என்ற நன்றியுணர்வோடு, சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டும்.
உங்கள் மனதில் இலட்சிய விதைகளை விதைத்தவர்கள்….
பாரதியும், பகத்சிங்கும் தான். பாரதி வெறும் கவிஞனல்ல. அவன் பாடல்கள், வாஞ்சிநாதன் மீதான ஆஷ் கொலை வழக்கில் ஆவணங்களாக உள்ளன. தன் பாடல்களை மக்கள் இயக்கமாய் ஆக்கிய மகாகவி அவன்.
காந்தியடிகளின் பெரும் ஆதரவுக்குரியவர் பட்டாபி சீதாராமையா, அவரே, “சுதந்திரப் போரில் காந்திக்கு இணையான புகழ் பகத்சிங்குக்குத்தான்” என்று சொல்கிறார். இவர்களை இதயத்தில் பதித்துக் கொண்டாலே இலட்சிய வாழ்க்கை இளைஞர்களுக்கு நிச்சயம் அமையும்.
Leave a Reply