– மகேஸ்வரி சற்குரு
“நம்பிக்கையே வீரத்தின் சாரம்!” என்ற எமர்சனின் வார்த்தைகள், உடல் பலத்தால்தான் ஒருவன் வீரன் என்பதை நிரூபிப்பான் என்றில்லை, நம்பிக்கைதான் அவனை வழிநடத்திச் செல்கின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்ற உண்மை பாருங்களேன். அதனால்தான் நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பாக இருக்கிறது.
நம்முடைய எதிரிகளை முட்டித் தள்ளினால் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டது மாடு. பகைவனை முட்டுவது போன்று பாவனை செய்து செய்து இறுதியாக பரிணாம வளர்ச்சியில் கொம்புகளே இல்லாமல் இருந்த மாட்டுக்கு கொம்பு வளர்ந்தது. ஐந்தறிவுள்ள மிருகத்தில் அதனுடைய நம்பிக்கையே பரிணாம வளர்ச்சி பெற்றது என்றால் நாம் பிறர் அடையாளம் காணும் வண்ணம் வளர்ச்சி பெறவேண்டும். நம்முடைய பலங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்த வேண்டும். கம்ப்யூட்டரில் நம்முடைய பாஸ்வேர்ட் எந்த அளவு ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள http:// www. microsoft.com/protect/yourself/password/checker.mspx என்ற இணைய தளம் இருக்கிறது. இன்றைய இளைஞனின் இந்த புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது. நமக்கான Password-ஐ பரிசீலிக்கிறோம். அப்படியே நிகழ்காலத்தில் நம் மீதான நமது நம்பிக்கையையும் செயல்திறனையும், உறுதிப்பாட்டையும் செய்து கொண்டால், வெற்றிகள் எப்பொழுதும் நம் நிரந்தரச் சொத்துதான். உள்ளத்தை உற்சாகப் படுத்துங்களேன்! நீங்கள் சாதனையாளனாக மாறிவிடலாம். இது ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.
உள்ளத்தை உற்சாகப்படுத்திக் கொண்டால் கனவுகள் நிஜமாகும். என்னுடைய உறவினரின் மகன் செல்லமாக வளர்ந்தவன். சமீபத்தில் மேற்படிப்புக்காக (உயிரியல் துறை) வெளிநாடு சென்றுள்ளான். வெளிநாட்டின் கலாச்சாரம், தட்பவெட்ப நிலை, வீட்டின் நினைவு (ஹோம்சிக்) புரியாத புதிர்களாக இருக்க, சிரமப்பட்டு போனான். இந்தியா திரும்பி விடுவானோ என்று உறவினர் பயப்பட்டுக் கொண்டிருக்க, மகன் சாதித்தான். அந்த மாணவனின் ‘Project’ குளோனிங்கில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உதவியாளர்கள் குழுவில் அந்த மாணவனைச் சேர்த்துக் கொண்டார். அவன் தன் மனதை உற்சாகப்படுத்தச் செய்தவை இரண்டு. ஒன்று தன்னுடைய கணினித் திரையில் (Wall paper) மஹாபாரதத்தில் அர்ஜுனன் கிளிக்கு குறிவைக்கும் படம். மற்றொன்று; “நான் பீனிக்ஸ் பறவை எப்படிப்பட்ட நிலையிலும் எழுந்துவிடுவேன்” என்ற பொருள்படும்படியான ஆங்கில வாசகம். இதுதான்! சார்! இன்றைய இளைஞன்!
காண்கின்ற கனவுகள் மெய்ப்படத் தேவை உறுதி. உலகத்தின் இரும்பு மனிதனாக நான் மாறுவேன் என்பது ஓர் இளைஞனின் உறுதிப்பாடாக இருந்தது. உலகின் 80% இரும்பு உற்பத்தி இன்று அவர் கையில். வெளிநாடுகள்தான் தனது சந்தை என்ற திட்டமிடல். 18 மணி நேர உழைப்பு. வென்றுவிடுவோம் என்ற உறுதி. லட்சுமி மிட்டல்! உலகின் ஐந்தாவது பணக்காரர். லட்சுமி மிட்டல் என்று சொல்வதைவிட லட்சுமி மெட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். சாதனையின் காரணம் என்ன என்று நிருபர்கள் கேட்டபொழுது, நான் இந்தியன் என்பதுதான் என்று பெருமையாகச் சொன்னார். கையாண்ட வழிமுறைகள் என்ன என்றவுடன், “ரொம்ப சுலபம் நான் எப்பொழுதும் என் வாழ்க்கையில் கடந்து போன நிமிடங்களை மறந்துவிடுவேன். எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பேன். இன்றைய நம்பிக்கையும், நாளைய கனவும்தான் உண்மை” என்றார்.
சதா உள்ளேயே ஒரு இலட்சியத்தை வைத்துக் கொண்டு இருக்கவேண்டும். அந்த இலட்சியம் நம்மை அரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நின்றாலும், இருந்தாலும், உறங்கினாலும் எழுகின்ற அந்த சிந்தனைதான் நம்மை வெற்றியடையச் செய்யும். குழந்தையாக இருந்த போதே அரிக்க ஆரம்பித்த ஓர் இலக்கு, வாலிபனாக மாறும்போது அடைந்துவிடுவான். விம்பிள்டனில் சாதித்த நடால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சுக்கு கிடைத்த கோப்பையின் கதாநாயகனை தன்னுடைய குழந்தைப் பருவத்து இலட்சியக் கனவு நிறைவேறியதில் ஆனந்தம். முழு உடலும் மனமும் இணைந்து ஆடும் டென்னிஸில் சாதிக்க தீவிரமான பயிற்சியும், முயற்சியும் மட்டுமல்ல நம்பிக்கையும்தான்.
எல்லா விமர்சனங்களுக்கும் சுருக்கமான பதில், செய்து முடிப்பதுதான். 69 வயதான லூயின்ஸ் அரகோன்ஸ் என்பவரை, ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக நியமித்தபோது எழுந்த விமர்சனங்கள் ஏராளம். ஆனால் அந்த அனுபவம் ஏற்படுத்திய வியூகத்தினால் மூன்று முறை யூரோ கால்பந்து கோப்பையை வென்ற “சாம்பியன் ஜெர்மனை” 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் வென்றது. ஒவ்வொரு இந்திய இளைஞனிடம் இந்த உத்வேகம் உண்டு என்பதால்தான் வெளிநாட்டில் இந்தியனுக்கு வாய்ப்புக்கள் உருவாகின்றது.
எந்த நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல ஒரு நிகழ்வை இங்கே சொல்லியே ஆக வேண்டும். சமீபத்தில் மே 2008ல் நடந்த சீன பூகம்பம் உலகையே உலுக்கியது. மீட்புப் பணியின்போது 13 வயது பள்ளி மாணவியை மீட்டார்கள். எடை குறைவாக தெரிகிறாளே என்று பார்த்தபோது இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இடிபாடுகளில் வெட்டுப்பட்டு இல்லாமலிருந்தன. அந்த மாணவியை வெளியே எடுத்தபோது சொன்ன வார்த்தைகள், “தைரியமாக இருங்கள்”!
Leave a Reply