அவசரக் காதல்

posted in: தொடர்கள் | 0

டாக்டர். எஸ். வெங்கடாசலம் M(MA)., RHMP, RAMP, RSMP,RNMP.,
டாக்டர். வி. ஆவுடேஸ்வரி RHMP, RSMP, DYN, HHA.,

இன்றைய இளைஞர்களை, மாணவர்களை மிக அதிகமாய் பாதிக்கிற, குழப்புகிற அம்சம் “காதல்”. சிறந்த படிப்பாளிகளையும், திறமைசாலிகளையும், அறிவு ஜீவிகளையும் கூட எளிதில் தடுமாற வைத்துக் குழப்பத்தில் திணறடிக்கச் செய்வது “காதல்” மட்டுமே. காதல் விஷயத்தில் பலரும் குழப்பமடையக் காரணம்…. காதல் குறித்து தெளிவு இல்லாமல் குழம்பிய மனதுடன் காதலிக்க ஆரம்பிப்பது தான்.

முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் என்று கருதப்படுவோரில் பலர் தமது பிள்ளைகளின் “காதல்” பற்றித் தெரிந்தவுடன் சராசரிக்கும் கீழே சரிந்து போகின்றனர். பாரதி, பாரதிதாசனைப் பயின்று தம் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டவர்களில் பலர் தமது வீட்டு ஜன்னல் வழியே காதில் காற்று நுழைந்து விடாமல் எச்சரிக்கையாய் பூட்டிக் கொள்கின்றனர். ஏட்டிலும் எழுத்திலும் இனித்த விஷயம் வீட்டுக்குள் வந்தால் கசக்கிறது. என்ன காரணம்? காதல் ஏன் பெற்றோரை பீதியுறச் செய்கிறது?

பெற்றோரை, உற்றோரை இழக்க நேர்ந்தாலும் காதலை இழக்க முடியாது என்று கருதுமளவு காதல் வலிமையும் வசீகரமும் நிறைந்ததாய் உள்ளது. எல்லாக் காதலர்களும் தாங்கள் உடலை நேசிக்கவில்லை; உள்ளத்தைத்தான் நேசிக்கிறோம் என்கிறார்கள். காதல் புனிதமானது என்கிறார்கள். மகத்துவமும் தெய்வீகமும் நிறைந்தது என்று பெருமைப் படுத்துகிறார்கள். காதல் உணர்வு பருவகால வாழ்க்கையின் இயற்கை என்பதில் சந்தேகமில்லை. மனதின் படைப்புத் திறனை, கனவு காணும் ஆற்றலை முழுவீச்சில் இயக்கும் சக்தி காதலுக்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. காதலில் ஒத்த கருத்தும், புரிதலும் தெளிவும் இல்லாமல் “புனிதமானது காதல்! காதலுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்” என்று பிதற்றுவது சினிமாவில் ரசிக்கத்தக்க வசனமாக இருக்கலாம். வாழ்க்கையின் வெற்றிக்கு வழி அமைக்காது.

சில ஆண்டு முன்பு பக்கவாதம் தாக்கி கிடந்த ஒருவருக்குச் சிகிச்சையளிக்கச் சென்றிருந்தோம். பக்கவாத நோய் ஏற்பட்ட பின்னணியை அறிய விரும்பி…. அவரது மனைவியிடம் கேட்டோம், “புகைப்பாரா? குடிப்பாரா?” அப்பெண்மணி வழிந்தோடும் விழிநீரை சேலைத்தலைப்பால் துடைத்தபடி, “நல்ல ஒழுக்கமான மனுசன். நாலுபேருக்கு உதவி செய்யிற நல்ல மனுசன், பெத்த பொண்ணு ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் யாரோ ஒருத்தனோட ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாள்ன்னு கேள்விப்பட்டதும் துடிச்சிப் போயிட்டார். அன்னிக்கு இராத்திரி தூங்காம அழுது புலம்பிக்கிட்டிருந்தார். அடுத்த நாள் காலையில் இடது காலும் இடது கையும் விளங்காமல் போயிருச்சி. சொந்தக்காரங்க, மகள் இருக்குமிடத்தைத் தேடிப் போய் அப்பாவுக்கு இப்படி ஆயிருச்சின்னு சொல்லியும் அவ வரலை. வருத்தப்படலை. அதைக் கேள்விப்பட்ட மனுஷன் ரொம்பவும் வேதனைப்பட்டார். பேச்சும் நின்னுபோச்சு. இப்ப வலதுகாலும் வலதுகையும் சேர்ந்து பக்கவாதம் வந்திருச்சு”.

படுக்கையில் கிடந்தவரின் முகம் கசங்கியிருந்தது. ஒரு மாபெரும் இழப்பின் பதிவுகளாய் நெற்றியிலும் ஒருபக்கக் கன்னத்திலும் ஆழமான ரேகைகள். கண்களில் நீர் தளும்பி நின்றன. வீட்டின் எல்லாச் சுவர்களும் களையிழந்து ஊமைச் சோகத்தோடு நின்று கொண்டிருந்தன. மிகவும் வயதான ஒரு மூதாட்டி இருமிக்கொண்டே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

அவரை அதிர்ச்சியிலிருந்து மீளச் செய்வதற்கு, ஆழ்மனத்துயரிலிருந்து விடுவிப்பதற்கு ஹோமியோபதியில் “இக்னேஷியா” (IGNATIA) என்ற மருந்தையும் பிரிட்டன் மலர் மருத்துவத்தைச் சேர்ந்த “ஸ்டார் ஆஃப் பெத்லஹேம்” (Star of Bethlahem) என்ற மருந்தையும் அளித்த பின்னர்…. ஓரளவு பேச முடிந்தது; கைகளில் குறிப்பிடத்தக்களவு இயக்கம் ஏற்பட்டது; கால்களில் சற்று அசைவு ஏற்பட்டது. சிகிச்சை சில மாதகாலமே நீடித்திருக்கும். அதற்குள் அவர்கள் தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். திரும்பவேயில்லை.

“காதலுக்குக் கண் இல்லை” என்று சொல்வது இதனால்தான். சாதி, மதம் பாராமல், பொருளாதார ஏற்றத்தாழ்வு பாராமல் ஒருவரை ஒருவர் நேசிப்பதால் “காதலுக்குக் கண் இல்லை” என்று சொல்வதுண்டு. சமூகம் மதிக்கிற, உயர்த்திப் பிடிக்கிற பல விஷயங்களை, மரபுகளை, கடைகளை காதல் பொருட்படுத்துவதில்லை என்பதால் காதலுக்குக் “கண் இல்லை” என்று சொல்வதுண்டு. அன்பிற்குரிய அனைத்தையும் இழந்து புதிய வசீகரமான அன்பைப் பெறத் தயாராவதால்தான் காதலுக்கு கண் இல்லை என அழுத்தம் திருத்தமாய் கூறுகிறார்கள் போலும்.

ஒரு பெண்ணின் தோற்றம் கண்டு கிறக்கம் கொண்டு அதையே காதல் ஏற்பட்டதாய் கருதும் ஒருவன் அவளது ஒவ்வொரு அசைவிற்கும், செயலுக்கும் ஓர் அர்த்தம் கற்பிக்கிறான். அவள் அருகிலிருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் அவனை விரும்புவது மாதிரியே மாயத் தோற்றம் தருகிறது. அதனைத் தொடர்ந்து காதலுக்கான மாமூலான கற்பிதங்களும் சம்பிரதாயங்களும் அரங்கேறுகின்றன. காதல் காவியங்களாய் உயிரை உருக்கி சில கடிதங்கள், பூங்கா, திரையரங்கம், கேளிக்கை என ஒவ்வொன்றாய் நிகழ்ந்து பின் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரின் “அகம்” வெளிப்படும் சூழ்நிலை வரும்போது இருவரும் புழுவாய் துடித்து சங்கடப்படுகிறார்கள்.

“இவன் இவ்வளவுதானா? இவள் இவ்வளவுதானா? என்று சலிப்படைந்து வருந்தி, கோபமுற்று, பிரிவதற்கான வழிவகைகளை மும்முரமாய் தேடத் துவங்குகிறார்கள். “காதலிப்பதாக” கருதி ரம்மியமான மனநிலையோடு உலா வந்தவர்கள் “பிடிக்கவில்லை” என்று வெறுப்பான மனநிலையோடு விலகி நிற்பது, வினோதமான முரண்பாடு இல்லையா? விரும்பிய, நேசித்த, காதலித்த, அன்பு செலுத்திய ஒன்று.….. பிடிக்காமல் போகுமா? அப்படியானால் இத்தகைய காதல் எத்தகைய பலவீனமான அடித்தளத்தில் உருவானது; எத்தகைய கண்மூடித்தனமான வேகத்தில் நடந்துள்ளது என்பதை பாருங்கள்.

ஓர் அழகான இளைஞனும் சுமாரான தோற்றமுள்ள ஓர் பெண்ணும் காதலர்களாக, தம்பதிகளாக இருப்பதை பார்த்திருக்கிறோம். ஓர் அழகான பெண்ணும் சுமாரான ஆணும் கணவன் மனைவியாய் பார்த்திருக்கிறோம். இத்தகைய “இணைகள்” எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். “இந்த ஆளுக்கு இப்படி ஓர் அழகான பெண்ணா?” “இந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையா?” என்று இவர்களைப் பார்க்கும் போது மனதிற்குள் வினாக்கள் புகைபோல சூழ்ந்து விடுமல்லவா? இத்தகைய “இணை”களின் அன்னியோன்யமான வாழ்க்கைக்கு அடிப்படை எது?

பொதுவாக ஆணோ, பெண்ணோ தனக்கு வரவேண்டிய வாழ்க்கைத் துணை எப்படியிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு கற்பனையான தோற்றத்தை மனதிற்குள் வரைந்து வைத்திருப்பார்கள். இதில் பெரும்பாலோரின் மனச்சித்திரங்களில் புறஅழகு குறித்த எதிர்பார்ப்புகளே அதிகமிருக்கும். அக அழகினைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்திருக்கவே மாட்டார்கள் (அதென்ன “அக அழகு?” என்று கேட்கத் தோன்றுகிறதா?) காதல் நம்மைச் சிந்திக்க விட்டால்தானே சிந்திக்க முடியும்?

காதலுக்கு அழகு (புறஅழகு) முக்கியம் இல்லையா? கண்ணுக்கு லட்சணமாக துணை அமைய வேண்டும் என்று எண்ணுவது தவறா? ” என்று பலரும் கேட்கக்கூடும். இது முற்றிலும் மறுத்துவிட முடியாது; எனினும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் “எனக்கு ஏற்ற துணை இவன்தான் , இவள் தான்” என்று “அகம்” அறிந்து “குணநலன்” புரிந்து தேர்வு செய்வதற்கு தெளிவும் முதிர்ச்சியும் தேவை. இங்கே காதலிப்பவர்களுக்கு பிரதான பிரச்சனையே சிந்திக்க அவகாசம் இல்லாமலிருப்பதுதான். மனமுதிர்ச்சியும் கிடையாது. இவர்களுக்குப் பாதை காட்டும் ஒளிவிளக்குகளாய் திகழ்வது திரைப்படங்களே! பக்கமேளம் வாசிப்பவர்கள் (இவர்களையொத்த மன முதிர்ச்சியற்ற) நண்பர்களே!

யதார்த்த வாழ்வில் காலூன்றி நிற்கும் காதல், தெளிவும் புரிதலும் நிறைந்த காதல் நியாயமானது; வாழத் தகுதியானது கற்பனைகளில் காலூன்றி மின்மினிக் கனவுகளில் வளர்க்கப்படும் காதல் ஊனமுள்ள காதல்; உதவாக்கரை காதல். காலமும், வாழ்க்கைச் சூழலும் எத்தனை வேகமாக ஓடினாலும், பரபரப்பாய் சென்றாலும், காதல் என்பது நிதானமானது. நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடிய காதல் மட்டுமே காதல் கோட்டையாக எழ முடியும்; மற்றவை மணற்கோட்டையாகவே சிறு காற்றிலும் சரியும்.

திரைப்படங்களில் கதாநாயகனும் கதாநாயகியும் முதல் காட்சியில் மோதிக் கொள்வார்கள்; இரண்டாவது காட்சியில் கண்ணோடு கண் சந்தித்துக் கொள்வார்கள். மூன்றாவது டூயட் பாடுவார்கள். அது சினிமா காதல். இரண்டரை மணிநேரச் சினிமாவில் காதலை அப்படித்தான் “ஜெட்” வேகத்தில் காட்ட முடியும். ஆனால் நிஜ வாழ்க்கையில்?

ஒரு கல்லூரி மாணவன் சிகிச்சைக்கு வந்தான். அவனுக்குப் பிடித்த ஆங்கில இலக்கியத்தில் மூன்றாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தான். திடீரென்று காதல் வந்து விட்டது. அவனுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கி நிலைகுலைந்து செய்வதறியாமல் தடுமாறி, படிப்பில் கவனம் செலுத்தவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டான். ஏனிந்த நிலை என்று விசாரித்து ஆய்வு செய்தோம். தினசரி கல்லூரி செல்லும் பஸ்ஸில் ஒரு இளம்பெண் அவனை சற்று வித்தியாசமாகப் பார்த்ததாகவும், அவள் தன்னை விரும்புவதாகவும் கூறினான். அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளா? அவன் தூக்கம் கெட்டு, பசிகெட்டு, படிப்புகெட்டு, சிந்தனைகெட்டு அரைப் பைத்தியமாய் ஆகியிருந்தான். அவளிடமிருந்து வாய்ச்சொல்லாய் “காதல் சம்மதம்” வரவேண்டும் என்று அவசரப்பட்டான். அவள் எப்படிப்பட்ட பெண் என்பதெல்லாம் அவனுக்கு தேவைப்படவில்லை. கட்டற்ற வெள்ளமாய் உணர்ச்சிப்பெருக்கு அவனை இழுத்து ஓடிக்கொண்டிருந்தது. நீந்திக் கரைசேர இயலாமல் தவித்தான். அவசரப்பட்டான்! அவஸ்தைப்பட்டான்! காதல் கைகூடாமல் சுயஉணர்வுக்கும், நிதான நிலைக்கும் கொண்டுவர இம்பேஷன்ஸ் செர்ரிப்ளம், வெய்ட் செஸ்ட்நட், ரெட் செஸ்ட் நட், லார்ச் போன்ற மலர் மருந்துகளும் சில ஹோமியோ மருந்துகளும் கொடுத்தோம். எங்கோ முட்டி மோதி சேதமடையப் போகும் பிரேக் இல்லாத வண்டி போல இயங்கிய அந்த மாணவன் சில வாரங்களில் நிதானத்திற்கு வந்தான். மனம் சமநிலை அடைந்தது. அவனால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. அதன் பின்னரும் அந்த பஸ்ஸில் அந்தப் பெண் சென்றுவருகிறாள். அவள் ஓர் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவள் அவளாகவே இருந்தாள். அவன் நிதானமடைந்த பின் எல்லாம் புரிந்தது. காதலில் மின்னல் வேகம் விபரீதமானது என்பதை அவன் அறிந்து கொண்டான்.

ஆண் பெண் நட்பு என்பது மிக மிக மகிழ்ச்சியான ஆரோக்கியமான ஒன்று. மனத்தெளிவும், முதிர்ந்த சிந்தனையும் உள்ளவர்களுக்கே இந்த நட்பு சாத்தியம். நட்பு தொடரும் போதும், நெருக்கம், இறுக்கம் அதிகரித்து இடைவெளியாய் இருந்த மெல்லிய இழை மறைந்து போகும். அப்போது அறிவிக்கப்படாமலேயே “காதல் பூ” பூக்கும். அதன் மணம் வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *