திரைகடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம்

கடந்த ஜுலை மாத இறுதியில் ‘ஷாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பஞ்சாலைத் தொழில் வர்த்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட நவீன “புடாங்” நகரத்தில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொருட்காட்சி மைதானமும், அரங்கங்களும் உலகத் தரத்தில் அமைந்திருந்தன.

ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா – போன்ற பல நாடுகளிலிருந்தும் பஞ்சாலை இயந்திரங்கள், உதிரிபாகங்கள், துணை இயந்திரங்களும், பின்னலாடை நெசவு இயந்திரங்கள் – எனப் பல நவீன இயந்திரங்களும், சைனாவில் தயாராகும் எல்லா இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

முதல் நாளன்று காலை 9 மணிக்கு வளாகத்தில் சரியான கூட்டம். கிட்டத்தட்ட “ரஜினிகாந்தின் புதுப்படத்துக்கு முதல்காட்சிக்கு நிற்பதுபோல் இருந்தது. “தள்ளுமுள்ளு”ப் படலம் முடிந்து உள்ளே செல்ல சுமார் முக்கால்மணி நேரம் பிடித்தது. இந்தியப் பஞ்சாலைத் தொழில் மிகவும் மோசமாக இருக்கின்ற இந்தக் கால கட்டத்தில், இங்கே இப்படி ஒரு கூட்டமா, என மலைத்துப் போய் நின்றேன், சரி, “இந்தியாவிலும் சீக்கிரம் நல்ல காலம் இந்தத் தொழிலுக்குப் பிறக்கும்” என்ற மகா நம்பிக்கையோடு அரங்குக்குள் நுழைந்து எங்கள் “ஸ்டாலில்” நின்றேன். என்ன ஏமாற்றம்!

சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையாளர்களாக வருவார்கள். அதில் 25 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பொருட்காட்சிக்கு, ஐந்து நாளும் சேர்ந்து மொத்தமாக வந்ததே, சுமார் முப்பதாயிரம் பேர். வெளிநாட்டினர் மீறிப் போனால் ஒரு நான்காயிரம் பேர். இந்தியாவிலிருந்து சுமார் நானூறு பார்வையாளர்கள் வந்திருக்கலாம். பஞ்சாலைத் தொழில் உலகின் எல்லா பாகங்களிலும் மோசமாக இருக்கிறது. சைனாவிலும் அப்படியே என்பது நன்றாகவே புரிந்தது.

எல்லாவற்றையும்விட, பீஜிங் நகரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் அந்த அரசாங்கத்தின் மொத்தக் கவனமும் இருந்ததால், எங்கே “பயங்கரவாதிகளால்” ஆபத்து வேறு ரூபத்தில் வந்து இறங்கிவிடுமோ என்று பயந்து நிறைய வெளிநாட்டினருக்கு “விசா” அனுமதி மறுக்கப்பட்டதாலும் – பொருட்காட்சிக்குத் தேவையான பார்வையாளர்கள் வரவில்லை. ஆனாலும், இந்தப் பொருட்காட்சி நிறைவுபெற்ற அன்று சைனா அரசு, பஞ்சாலைத் தொழில் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளுக்கும் உடனே சுமார் 3 சதவிகித வரிச்சலுகை அளித்தது. இது அந்த அரசாங்கத்தின் “தொழில் முன்னேற்றக் கொள்கையையும், அதன் வளர்ச்சிக்கான அதிவேக முடிவெடுக்கும்” தன்மையையும் காட்டியது. நமது பாரத தேச அரசாங்கமோ….வேண்டாம். அதைப் பற்றித் தனி இராமாயணம் எழுதவேண்டியிருக்கும்.

இந்த நிகழ்வினை எதற்காக இங்கே சொல்ல வந்தேன் என்றால், “திரை கடலோடித் திரவியம் தேட” நினைப்பவர்களுக்கு, இந்தத் “தொழில் வர்த்தகக் கண்காட்சிகள்” – மிக முக்கியமான தேவை என்பதோடு, இவை தவிர்த்து ஒரு தொழிலில் வெற்றி பெறுவது என்பது இயலாத செயல். இயந்திரங்கள் – உற்பத்தித் தொழில் சம்பந்தப்பட்டவை, வேலை, சுற்றுலா, கணினி, மென்பொருள், உணவு, விவசாயம் – என பூமியில் என்னென்ன உண்டோ, அத்தனையும் பொருட்காட்சிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு உலகளாவிய தொழில் தொடர்புக்கு வழிகாட்டியாகவும், சந்தையாகவும் அமைகின்றன.

புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் தங்களைப் பற்றிப் பெரிய அளவில் அறிமுகம் செய்யவும், தொழிலில் வளர்ந்தவர்கள் தங்களது தொழில்நுட்ப மேம்பாட்டையும், பலவிதமான மாற்றங்களையும், அதனால் கிடைக்கும் பல நல்ல ஆதாயங்களைச் சுட்டி வலியுறுத்திக் காட்டவும், சந்தையிலுள்ள மற்ற போட்டியாளர்களோடு தங்களது பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், மற்ற முறைகளில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில் நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் இவை உதவுகின்றன. தொழில் முனைவோர், ஏற்றுமதி இறக்குமதி செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள், தொழில்நுட்பம் மேம்பட கூட்டு முயற்சி செய்பவர்கள், என அனைவருமே, உலகின் பல முக்கிய நகரங்களில் நடக்கும் வர்த்தகக் கண்காட்சிகளைப் பற்றிய விவரங்களை உள்ளுரில் உள்ள வர்த்தக சபைகள் மூலமாகவோ, வலைத்தளங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். பின்னர் அந்த வர்த்தகக் கண்காட்சி பற்றிய அத்தனை செய்திகளையும் அவர்களது வலைத்தளத்தில் சென்று பார்த்தால், பங்கேற்பவர்களுடைய நிறுவனங்கள் பற்றிய குறிப்புகளும், விவரங்களும் பார்க்கலாம். இன்னின்ன பிரிவின் கீழ் என்று ஒரே தொழில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் இருக்கும்.

உதாரணமாக, பஞ்சாலைத் தொழில் வர்த்தகக் கண்காட்சி என்றால், ஸ்பின்னிங், வீவிங், நிட்டிங் (பின்னலாடை), நான்-வோவன் எனப்படும் நெசவு, பிராஸஸிங், பிரிண்டிங், தையல் மெஷின்கள் – இவற்றின் உட்பிரிவுகள் – ஸ்பின்னிங் என்றால், ப்ளோரூம், கார்டிங், சிம்ப்ளக்ஸ், கோம்பர், அவை சம்பந்தப்பட்ட பல்வேறு உதிரிபாகங்கள் எனப் பெரிய அட்டவணையே இருக்கும். ஒரு வர்த்தகக் காட்சியில் ஆயிரம் நிறுவனங்களுக்கு மேல் பங்கு பெறுவர். அவை அனைத்தையும் சென்று ஒன்றொன்றாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எனவே முன்கூட்டியே நமக்கு ஒத்து வருகிற நிறுவனங்களின் பெயர்களைத் தெரிவு செய்து அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் நல்ல வழி என்னவென்றால், அந்த நிறுவனத்தின் மின் அஞ்சல் விலாசத்துக்கு தொடர்பு கொண்டு, உங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை அனுப்பி வைத்து அவர்களுக்கு உங்களோடு ஈடுபாடு உண்டா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இருந்தால் நீங்கள் வருகின்ற செய்தியைக் குறிப்பிட்டு முன்கூட்டியே நேரம் நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

எதுவுமே இல்லாவிட்டாலும், அங்கேயே நேரில் சென்று சந்தித்தும் உடன்பாடாகத் தெரிந்தால், பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடலாம். இன்று உலகமெங்கும் சென்று வருவது மிகவும் சுலபமாக இருப்பதால், வர்த்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வருவது ஏதோ சென்னை, பெங்களூர் சென்று வருவது போலத்தான். சிலபேருக்கு, இதெல்லாம் சாத்தியமா என்ற சந்தேகம் எழலாம். எங்கள் நிறுவனம் ஆரம்பித்தது 1987-ல். உற்பத்தி தொடங்கி விற்பனை ஆரம்பித்து 1988-ல். அதே வருடம் டிசம்பர் மாதம் மும்பையில் நடந்த பஞ்சாலை இயந்திர வர்த்தகக் கண்காட்சியில், எங்கள் முகவருடைய ஸ்டாலில் ஒரே ஒரு மேஜையில் எங்கள் ஸ்பிண்டில் டேப்புகளையும், அதைப்பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு குறிப்புப் புத்தகத்தையும் வைத்து, பங்கேற்றோம். நிறைய வாடிக்கையாளர்கள் எங்கள் பொருட்களையும், அதன் சிறப்பையும் அறிந்துகொள்ள அது உதவியது. இந்தியாவின் பல பாகங்களிலும்இருந்து விற்பனை உரிமை கேட்டு நிறையபேர் எங்களை அணுகினார்கள்.

மீண்டும் 1992-ல் மும்பையில், நாங்கள் தனியாகவே ஒரு “ஸ்டால்” எடுத்துப் பங்கேற்றபோது, எங்கள் நிறுவனமும், “பிராண்ட்” பெயரும் ஓரளவு பிரபலமாயிருந்து, இன்னும் நிறையப் பேரை எங்கள் ஸ்டாலுக்கு வரவழைத்தது. 1996, 2000, 2004 என மும்பையில் பஞ்சாலை வர்த்தக்கக் கண்காட்சிகளில் பங்கேற்றதோடு, வருகின்ற நவம்பர் 2008-ல் பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலும் பங்கு பெற இருக்கின்றோம்.

இது தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, இன்னும் புதிய வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்த உதவி செய்கின்றது. இது உள்நாட்டில்.

வெளிநாட்டுத் தொடர்புக்காக 1991-ல் ஜெர்மனியிலுள்ள “ஹாம்பெர்க்” நகரில் நடைபெற்ற வர்த்தகக் காட்சிக்கு ஒரு பார்வையாளனாகச் சென்று வந்தேன். 1995-ல் பாரீஸில் நடைபெற்ற வர்த்தகக் காட்சியில் நாங்களே “ஸ்டால்” அமைத்துப் பங்கு பெற்றோம். அங்குதான் நாங்கள் சார்ந்த தொழிலில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் சுவிட்ஜர்லாந்து நிறுவனமான “ஹெபாஸிட்” நிறுவனத்தோடு “கூட்டுத் தொழில்” செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது.

அதன்பின்னர், பஞ்சாலை தவிர பேப்பர் பேக்கேஜிங், உணவுப் பொருள் உற்பத்தி, பிரிண்டிங் இயந்திரங்கள் என எல்லா வர்த்தகக் காட்சிகளிலும் “ஹெபாஸிட் நிறுவனத்தின் பெயரில் இந்தியா, பங்களாதேசிலும் நடைபெறும் வர்த்தகக் காட்சிகளிலும் பங்கு பெறுகின்றோம். எங்களுடைய நிறுவனத்தின் தொடர்பு முன்னேற்றத்துக்கும், வாடிக்கையாளர்களின் தொடர்புக்கும், அந்தத்தத் துறைகளின் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்து எங்கள் உற்பத்தியில், தரத்தில் மாற்றங்கள் செய்யவும், இந்த வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது மிகப்பெரிய பயனை அளித்துள்ளது. இதுமட்டுமல்ல, வர்த்தகக் காட்சிகளில் பங்கு பெற்ற பல சிறிய நிறுவனங்கள், இன்று மிகவும் வளர்ந்து பெரிய அளவில் வியாபாரம் செய்வதையும் கண்கூடாகப் பார்க்கின்றேன்.

கோவை நகரில் சில தொழில் முனைவோர்கள், நல்ல பொருட்களைத் தரமாக உற்பத்தி செய்தபோது., அவர்களை ஊக்குவிக்கச் சில வர்த்ததகக் கண்காட்சிகளில் பங்குகொள்ள ஏற்பாடு செய்தேன். இன்று அவர்களது வளர்ச்சி பலமடங்கு உயர்ந்தது மட்டுமின்றி, அவர்களில் சிலருக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் பன்னாட்டுத் தொழில் தொடர்புகளும் கிடைத்துள்ளன.

வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்கும் போது ஸ்டால் அமைப்பு, மாதிரிப் பொருட்களை அழகுற காட்சிக்கு அமைத்தல், “கேட்லாக்” போன்றவற்றைக் கவர்ச்சிகரமாக வடிவமைத்தல், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உபசரித்து அழகுற எடுத்துரைத்தல், தெளிவான விலை விபரங்கள் – போன்றவை முக்கியமானவை. இவற்றையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால், வெற்றி உங்களைத் தேடிவரும், அடிப்படையாக ஆங்கிலம் தெரிந்தால் போதும். ஆங்கிலம் தெரியாத சைனா போன்ற நாடுகளில் கண்காட்சி அமைப்புகளே மொழி பெயர்ப்புக்குண்டான உதவியாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள். அதற்கு உண்டான நியாயமான கட்டணத்தையும் வசூல் செய்து கொள்வார்கள்.

என்ன, அடுத்த வர்த்தகக் கண்காட்சியைக் காணவும், பங்கேற்கவும் தயாராகிவிட்டீர்களா? இதோ, முன்கூட்டியே எனது வாழ்த்துகளும் வெற்றிக்கான பாராட்டுகளையும் பிடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *