காலம் உங்கள் கையில்.

– சோம. வள்ளியப்பன்

எல்லா வேலைகளும் ஒன்றல்ல. சிலவற்றை நேரம் சிலவழித்துப் புரிந்துகொள்ளவே தேவையில்லை. அவற்றில் போகும் நேரமெல்லாம் வீண். அதேசமயம், வேறு சில வேலைகள், புரிந்து கொள்ள வேண்டிய வேலைகள். காரணம், அதே வேலைகளை நாம் பின்னால் பலமுறை செய்யவேண்டிவரும்.

அந்த வேலைகளுக்கு அடுத்தவரை நம்பிக் கொண்டிருந்தாலோ, ஒவ்வொருமுறை செய்யும் போதும் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோ தவிர்க்கப் படவேண்டியன. இதைத்தான் சென்ற அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.

ஆக, வேலையினை செய்யத் தொடங்குகிறபோது எப்படி செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதைப் பார்த்தாகிவிட்டது. அடுத்து இந்த அத்தியாயத்தில் பார்க்க இருப்பதும் நேர விரயத்தினைத் தவிர்க்கும் முறைதான். ஆனால் முன்பு பார்த்ததற்கு நேர்மாறானது.

நான் முன்பு பணியாற்றிய ஒரு நிறுவனத்தில் சரத் சக்சேனா என்று ஒரு தொழிலகத் தலைவர் இருந்தார். சிறந்த நிர்வாகி. நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களையும் அவ்வப்போது அழைத்து பேசுவார்.

அது ஒரு ஜனவரி மூன்றாம் தேதி. அந்த ஆண்டு செய்யவேண்டிய வேலைகள் பற்றி பேசினார். அந்த பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டு என்பது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்கள்.

அந்த ஆண்டு, எந்த எந்த துறைகள் எவ்வளவு செய்யவேண்டும் என்பன பற்றி ஏற்கனவே முடிவாகியிருந்தாலும், ஆண்டின் முதல் மாதமான ஜனவரி தொடங்கியிருந்த நேரமாதலால், கொடுக்கப்பட்டிருக்கும் இலக்குகள் பற்றி எங்களுக்கெல்லாம் நினைவூட்டும் விதமாக அமைந்தது அவரது பேச்சு (பிரசெண்டேஷன்). சுமார் 2 மணி நேரம் விளக்கினார்.

முடித்தார். பின் அவரது பைல்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அப்போது அவருக்கு அவருடைய கைபேசியில் அழைப்பு வர, அதே அறையில் ஓரமாக நின்று பேசினார். ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார். முடித்துவிட்டு மீண்டும் கிளம்ப எத்தனிக்கையில்தான், எங்களை பார்த்தார் போலும். அதுவரையிலும்கூட நாங்கள் அங்கேயே அமர்ந்திருப்பதையும், நடந்து முடிந்த அந்த “மீட்டிங்” பற்றியே பேசிக்கொண்டிப்பதையும் கவனித்தார். என்ன நினைத்தாரோ பைல்களை மேசை மீது வைத்துவிட்டு எங்களையே ஊன்றிப் பார்த்தார். அதன்பின், அவர் சொன்னது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

“என்ன நீங்கள் எல்லாம் வேலை செய்ய, உங்கள் இடங்களுக்குப் போகவில்லையா?” “அதற்கு என்ன அவசரம்!” என்பதுபோல சிலர் புன்னகைத்தார்கள். “நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது” என்றார். அதனால் என்ன என்பது போலப் பார்த்தோம்.

கடுமையான இலக்குகள் கொடுக்கப்பட்டும்கூட, எங்களிடம் பரபரப்பு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

“கொடுக்கப்பட்டிருப்பது முழு ஆண்டிற்கான இலக்குதானே!. அதை முடிக்க இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கிறதே” என்பது போல பதில் சொன்னார் எங்களில் ஒருவர்.

நின்றுகொண்டிருந்த சரத் இப்போது அமர்ந்துவிட்டார். சற்று ஆழமாக எங்கள் அனைவரையும் பார்த்தார். பின்பு கேட்டார்,

“அன்றைக்கு என்ன தேதி?”

“ஜனவரி மூன்று”

ஒரு நிமிடம் நிதானித்தார். பின் சொன்னார்,

“உங்களுக்கு இன்னும் ஒரு முழு ஆண்டு இருப்பதாக யார் சொன்னது? உங்களுக்கு இருக்கும் நேரத்தில் 1 சதவீதம் ஏற்கனவே முடிந்துவிட்டது. இன்னும் 99% நேரம்தான் மீதம் உள்ளது. அதற்குள் நீங்கள் உங்கள் இலக்கினை முடித்தாக வேண்டும்”.

தூக்கிவாரிப்போட்டது. “என்ன இது! இப்போதுதான் ஆண்டின் தொடக்கமே! முதல் மாதத்தின் ஆரம்பத்தில்தான் இருக்கிறோம். ஆண்டுக்கான இலக்கினை அடைய அதற்குள் எப்படி 1% நேரம் போய்விட்டிருக்க முடியும்!”

எப்படி என்று கேட்டோம். விளக்கினார். “ஒரு ஆண்டுக்கு மொத்தம் 365 நாட்கள். அதில் 62 ஞாயிற்றுக்கிழமைகள். தவிர 10 பொது விடுமுறை நாட்கள். போக ஒன்றிரெண்டு நாட்களாவது சொந்த விடுப்புகள் எடுப்பீர்கள் இல்லையா? மீதமிருக்கும் வேலைநாட்கள் என்று பார்த்தால், 300 நாட்கள் மட்டுமே. இன்றைக்கு தேதி 3. மூன்றாம் தேதி முடிந்துவிட்டது. 300 நாட்களில் 3 என்பது 1% தானே!”.

அவ்வளவுதான். எங்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த இடத்தினை விட்டு நகர்ந்தோம்.

நேரம் என்பது, ஓடிகொண்டேயிருப்பது. அதனால் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க இருக்கும் அளவு என்பது, தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது. ஆக, செய்வது எதையும் தேவையான அளவு செய்வதுடன், தேவையான அளவு மட்டுமே செய்வதும் முக்கியமாகிறது.

சென்ற அத்தியாயத்தில் பார்த்ததற்கு மாறான வழிமுறை என்றோம். அதேதான் அதில் தொடக்கம் பற்றிய கவனம். சில வேலைகளைத் தொடங்கும்போது, கவனமில்லாமல் செய்ய வேண்டாம் என்பது செய்தி. இங்கே, முடிப்பது பற்றிய கவனம். செய்த வேலையை முடிக்கும்போது இருக்க வேண்டிய கவனம் பற்றியது. வேலைகளை சரியான நேரத்தில் முடித்துக் கொண்டு விடக்கூடியதும் அவசியம்தான்.

சரத் நடத்திய கூட்டம் முடிந்ததும், அந்த இடத்தினை விட்டு கிளம்பாமல் அங்கேயே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தோமே, அது பிரச்சனை.

“அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதை பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம்! அது எப்படி அரட்டை ஆக முடியும்?” என்கிற கேள்வி வருகிறதோ!

அதுவும் அரட்டை போலத்தான். நேர மேலாண்மையில், தேவைக்கு மேல் செய்யப்படுவது எதுவும் வீண்தான். அது நல்ல வேலையாக இருந்தாலும் கூட.

தேர்ந்த தையல்காரர் துணியினை வெட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? துணியின் மீது வெட்ட வேண்டிய அளவுகளை கோடுகளாக போடுவார். பின்பு, கத்திரிக்கோலை வைத்து லாவகமாக வெட்டுவார். கோடுகளை ஒட்டிவெட்ட வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு கோடுகளை ஒட்டி வெட்டுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அவருக்கு துணி மிச்சமாகும். சரியாக வெட்டாவிட்டால், கூடுதல் இடம் (மார்ஜின்) விட்டு வெட்டினால் துணி வீண்.

நேரம் என்பது துணி போல. செய்ய வேண்டிய வேலைகள் தேவைப்படும் துணியின் அளவு போல. துல்லியமாக வெட்ட வேண்டும். வெட்டத்தெரிய வேண்டும்.

வெட்டுதல் என்பது, வேலை முடிந்த பின்னும் அதில் நேரத்தினை போக்கிக் கொண்டிராமல் இருப்பதும்தான்.

அலுவலகத்தில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட நேர விரயங்கள் நடக்கின்றன. காரணம், சிலவற்றை பற்றி கூடுதல் நேரம் நினைக்கிறோம்.

ஒரு விஷயம் தவறாக நடந்துவிட்டால், அல்லது எவராவது அவர்களைக் கோபித்துக் கொண்டு விட்டால், அல்லது மரியாதை குறைவாக நடத்திவிட்டால், சிலர், வெகுநேரம் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

நினைத்த விதம் ஏதாவது நடக்காமல் போய்விட்டால், ஏமாற்றம் ஏற்பட்டால், வேறு சிலர் உட்கார்ந்துவிடுவார்கள்.

நடந்தது நடந்துவிட்டது. அதைப்பற்றி வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? ஒன்று கிடைக்கவில்லையா? அதனால் என்ன? அடுத்ததற்கு முயற்சிக்கும் நேரத்தினை, கிடைக்காதது பற்றியே நினைத்து ஏன் வீணாக்கவேண்டும்?

கசியும் ஊதுபத்தி புகை போல, நடந்து முடிந்து போனதை பற்றி மனது யோசித்துக் கொண்டேயிருப்பதில் போகும் நேரம், சிலருக்கு மிக அதிகம். இதனால் கொஞ்சம் சுகம், அல்லது சுய இரக்கம் வேண்டுமானால் கிடைக்கலாம். அவ்வளவுதான். மற்றபடி, இது நேர விரயமே தான். நினைவுகளில், நீண்ட வால் எதற்கு? தேவையே இல்லை. நறுக்கு தெறித்தாற்போல வெட்டிவிட்டு அடுத்த வேலைக்குப் போகவேண்டும்.

தொடரும் நினைவலைகள் என்பது சிரமம், ஏமாற்றம் தோல்விகளுக்கு பிறகு மட்டுமல்ல. சிலருடைய பிரச்சனை, சரியாக அவர்கள் விரும்பியது போலவே நடந்து முடிந்தன பற்றியும் அசை போட்டுக்கொண்டேயிருக்கும்.

“என்ன நான் நன்றாக செய்தேனா?”

“எப்படி? என் வீட்டு விசேஷத்திற்கு நல்ல கூட்டமில்லையா?”

“அவர் என்னைப் பற்றி சொன்னது நன்றாக இருந்தது இல்லையா?”

இந்த சுகம்கூட சோம்பல்தான்.

முடிந்தது. முடிந்தது. அடுத்ததற்குப் போகும் ஒழுங்கு வேண்டும். ஒரு வேலையை முடித்தால் தான் அடுத்ததற்கு போக முடியும். ஆக வேலையை முடிப்பதில் வேகம் வேண்டும் என்பதுடன், எங்கே வேலை முடிந்துவிட்டது என்று செய்பவருக்கு தெரிய வேண்டும். அங்கே சரியாக முடித்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *