– தே. சௌந்தர்ராஜன்
அழகான உருவங்களைக் கண்டு மயங்காதீர்கள் (ஏங்காதீர்கள்) – அங்கே
ஆணவம் தலை தூக்கி நிற்கிறது.
அழகற்ற உருவங்களை ஒதுக்காதீர்கள்.
அதற்குள்ளே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.
-கண்ணதாசன்
தலையை பிடித்தால் வாலும் கூட சேர்ந்தே வரும். இதில் இது வேண்டும் அது வேண்டாம் என்று நாம் விரும்பும் போது நாம் இயற்கையோடு முரண்படுகிறோம்
தந்தை தன் மகனுக்கு விளையாடுவதற்காக ஒரு காந்தத் துண்டை கொடுக்கிறார். அந்த காந்தத்துண்டில் ஒரு பாதி வடதுருவமாகவும் மறுபாதி தென் துருவமாகவும் காணப்படுகிறது. சிறுவன் போதும் இந்த வடதுருவம், வேண்டாம் அந்த தென் துருவம் என்று இரண்டு துண்டாக்குகிறான். அந்த பாதியிலும் வடதுருவமும் தென்துருவமும் சேர்ந்தே காணப்படுகிறது. சிறுவன் மீண்டும் அந்த துண்டை இரண்டு கூறாக்குகிறான். அப்போதும் அந்த ஒவ்வொரு கூறிலும் இரு துருவமும் காணப்படுகிறது.
ஓடி வருகிறான் தந்தையிடம், “இது என்ன வித்தை!” என்கிறான். தந்தை விளக்குகிறார். “காந்தத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் அத்தனை துண்டுகளிலும் இரு துருவமும் இணைந்தே காணப்படும். இரு துருவங்கள் இல்லாவிட்டால் அது காந்தமும் அல்ல. அதுவே காந்தத்தின் சிறப்பு.”
நாமும் இந்தச் சிறுவனைப் போல ஒன்றிலிருந்து மற்றதை பிரித்து விடலாம், நல்லதையும் கெட்டதையும் பிரித்துவிடலாம், தோல்வியே இல்லாமல் தவிர்த்துவிடலாம். எதிரிகளை நிரந்தரமாக ஒழித்துவிடலாம் என்று நப்பாசை கொள்கிறோம்.
நாட்டை பிரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். கூட்டுக் குடும்பங்கள் என்ற கூட்டை கலைத்துவிட்டால் தொல்லைகள் தொடராது என கனவு காண்கிறோம். பிரித்த பின்னும் அதில் பல மனப் பிளவுகள். அதனால் பல பிரச்சனைகள் என முடிவில்லாமல் தொடர்கின்றன.
ஒவ்வொரு ஆணிலும் பெண் தன்மையும், ஒவ்வொரு பெண்ணிலும் ஆண் தன்மையும் உண்டு. இரண்டு எதிர் தன்மைகளை ஒன்றாக பெற்றவனே இறைவன். இரண்டு மாறுபட்ட தன்மைகளை கொண்டதே இயற்கை.
இரவும் பகலும் சேர்ந்தே ஒரு நாள். கோடையும் வசந்தமும் சேர்ந்தே ஒரு ஆண்டு. உயர்ந்த மலையும் அழகான கடலும் சேர்ந்தே உலகம். எழில் கொஞ்சும் அழகும் அவலட்சணமும் சேர்ந்தே இயற்கை. உலகம் போற்றும் உத்தமனும் ஊர் தூற்றும் கெட்டவனும் சேர்ந்தே இறை தன்மை.
அழகான ரோஜா செடியை எது படைத்ததோ அதே சக்திதான் முட்செடிகளையும், விஷச் செடிகளையும் படைத்தது.
இராவணன் இல்லாது இராமாயணம் இல்லை. வில்லன் இல்லாது துன்பங்கள் இல்லை, சோதனைகள் இல்லாது கதைகள் இல்லை. இப்படி முரண்பட்ட இரு துருவங்கள் இணைந்ததே இயற்கை. தலையை பிடித்தால் வாலும் கூட சேர்ந்தே வரும். இதில் இது வேண்டும் அது வேண்டாம் என்று நாம் விரும்பும் போது நாம் இயற்கையோடு முரண்படுகிறோம்.
நாமோ பார்ப்பவற்றில் அழகானவை என சிலவற்றில் மயங்குகிறோம், அவலட்சணமென்று சிலவற்றை வெறுக்கிறோம். உண்பவற்றில் சுவையுள்ளன என்று சில உணவுகளை ரசிக்கிறோம். சுவையில்லை என்று மற்றவற்றை ஒதுக்குகிறோம். அன்பானவர்கள் என்று சிலரை நேசிக்கிறோம். பண்பற்றவன் என்று சிலரை வெறுத்து ஒதுக்குகிறோம். நல்லோர், தீயோர் யாவர் மேலும் கதிரவன் தன் வெளிச்சத்தை பரப்பவில்லையா? வேற்றுமை பாராமல் மழை யாவர் மேலும் கொட்டுவதில்லையா?
நம் வாழ்க்கை பயணத்தை பயணிக்கும் வேளையில் மரத்தின் நிழல்களும் வரும் வெட்ட வெளியும் வெயில் அடிக்கும் பாதைகளும் வரும். இந்த இரண்டிலும் விருப்பு வெறுப்புணர்வின்றி, இரண்டிலும் விழிப்புணர்வோடு அதை கடந்து செல்ல வேண்டும்.
நம் மனமோ இடையறாது நல்லது கெட்டது என்றும், வேண்டியது வேண்டாதது என்றும் தரம் பிரித்துக் கொண்டிருக்கிறது. மனதால் இப்படி பகுத்து பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இப்படி பிரித்து பார்ப்பதால் இப்படி விருப்பு வெறுப்பு, வேண்டுதல் வேண்டாமை என்ற இரு வேறு உணர்வுகளால் சமஸ்காரம் என்று சொல்லக்கூடிய பதிவுகள், கீறல்கள் நம் உள்ளத்தில் ஆழமாக தடங்களை பதிக்கின்றன.
நம் மனத்தில் விழும் இந்த கீறல்கள் நமக்கு மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. இந்த விருப்பு, வெறுப்பு என்ற உணர்வுகள் நம் ஆனந்தத்தை பிணைக்கும் சங்கிலிகள். இந்த சங்கிலிகளால் நாம் யாவரும் கட்டுண்டு கிடக்கிறோம்.
கீறல்கள் விழுந்த இசைத்தட்டில் இருந்து மோசமான (அலங்கோலமான) ராகம் வருவதுபோல இந்த கீறல்கள் நிறைந்த மனதில் இருந்து ஒருவித சோக ராகம் எழுந்து அது எப்போதும் நம்மை சூழ்ந்து, நம்முள் துயரம் நிறைந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் உண்டாக்குகின்றன.
இந்த உண்மையை நாம் ஆழமாக புரிந்துகொள்ளும்போது, மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும்போது, நம் வாழ்வில் நம்மை எதிர்கொள்பவற்றை விழிப்புணர்வோடு விருப்பு வெறுப்பின்றி நாம் எதிர் கொள்ளும்போது நம் மனத்தின் கட்டுகள் அவிழ்க்கப்படுகின்றன. நாம் மனமற்ற நிலையை அடைகிறோம். அப்போது ஆனந்தத்தின் கதவு திறந்துகொள்கிறது.
Leave a Reply