கை விளக்கு

இசைக்கவி ரமணன் எழுதும் புதிய தொடர்

முட்டையை விட்டு வரும் மூர்க்கம் இல்லையேல் இந்த சட்டைதான் என்றும் சதம்

அந்தக் குளியலறையில் ஒரே சத்தம். மனிதர்களின் கூச்சல் அல்ல. சென்று பார்த்தால், ஒரு காக்கை குருவிக்கூட்டுக்குள் புகுந்து ஒரு குருவிக் குஞ்சைக் களவாடிக் கொண்டிருந்தது. பெற்றோர் குருவிகள் அதை மூர்க்கமாகத் தாக்கின. பறக்கக் பறக்கக் கூச்சலிட்டபடியே அந்தக் காக்கையைத் துரத்தின.

வாய்திறந்தபடியே கிடந்த அந்த நாதியற்ற ஜீவன் இந்த அமளியில் செத்துத்தான் போனது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் வலிமையின் குட்டு உடைந்து போனது! ஆமாம். குருவியின் அள வென்ன, காக்கையின் அளவென்ன? இரண்டின் வலிமையில் தான் எத்தனை வேறுபாடு? இதைக் குருவிகள் கவனித்ததாகவே தெரியவில்லை!

கூட்டைக் காக்க வேண்டும். களவாணியைக் கண்டிக்க வேண்டும். அதற்கும் மேலாக தான் பெற்ற செல்வத்தைத் தன்னுயிரைத் தந்தாவது காப்பாற்ற வேண்டும் என்னும் உணர்வு. அந்தச் சிட்டுக் குருவிகளின் வரம்புகளை உடைத்து, ஆவேசமே வலிமையாக அவற்றைச் செலுத்தியது.

பம்பிள் பீ என்றொரு வண்டு இருக்கிறது. ஏரோ டைனமிக்ஸ் கூறுகளுக்கு ஒவ்வாத சிறகமைப்பு, உடற்கூறு இவற்றைக் கொண்டது. ஆக, நியாயப்படி அதனால் பறக்கமுடியாது. இந்த சங்கதி அந்த வண்டுக்குத் தெரியாது. இன்றும் பறந்து கொண்டுதான் இருக்கிறது.

மலை எலி என்று மராட்டிய மன்னன் சிவாஜியை ஆத்திரத்துடன் வர்ணித்தான் மொகலாய மன்னர் மன்னனான ஔரங்கசீப். இந்திய நாட்டையே ஆண்ட அவனால் இந்த எலியை ஒன்றுமே செய்யமுடியவில்லை. அந்த எலிதான் திடீர்த் தாக்குதல் எனப்படும் கொரில்லா போர்முறைக்கு முன்னோடி. வாழ்ந்த வரை, அந்த எலி புலியின் வெற்றிகளையே பெற்று வந்தது.

வரம்பு என்பது ஓர் உணர்வு. வரம்பின்மை என்பதும் ஓர் உணர்வுதான். வரம்புகள் உடைக்கப் பட்டே வரம்பின்மை புரிகிறது! அடையாளங் களில் சிக்கி அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் ஆனந்த வானில் விடுதலையாகி மிதப்பதற்கும் காரணம் மனம்தான்! மனம், மனது வைக்குமா? நாம்தான் மனதை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும். எனவே மனம் என்பது வரம்பு. அதை நாம் கையாள வேண்டும் என்னும் நினைப்பே வரம்பற்ற வலிமையின் வாயில்.

உணர்வு என்பது வேறு. உணர்ச்சி என்பது வேறு. எந்த உயிரினத்திற்கும் உணர்வு உண்டு. மனிதனுக்கு மட்டுமே உணர்ச்சிகள் உண்டு. விலங்கினங்களிடம் உணர்ச்சிகள் இருப்பது போலத் தென்பட்டாலும், அவை உணர்வுகளின் தொகுப்பே அன்றி உணர்ச்சிகளாக மாட்டா.

சிம்பன்சி கணக்குப் போட்டாலும் அதற்கு மனம் கிடையாது. பாசமுடன் பால் கொடுத்தாலும் பசுவுக்கு மனம் கிடையாது. பசுவுக்குத் தான் பசு என்பது தெரியாது. மனிதனுக்கு, தான் மனிதன் என்பதுதான் நன்றாகத் தெரியுமே!

மிருகங்களுக்கும் மரணபயம் கிடையாது. வலி உண்டு. மனிதனோ, மரணத்தைக் காட்டிலும் வாழவே அஞ்சுகிறான்! விழாத அடியில் வலியால் துடிக்கின்ற அவலமும் மனிதனுக்குத்தான் உண்டு.

சுருங்கச் சொன்னால், மனம்தான் மனிதனின் சிறப்பு. மனம்தான் மனிதனின் பிரச்சினை. மனதைத் தாண்டுவதன் மூலமே அவன் தனது வரம்பற்ற வலிமையை உணர்கிறான்.
நம்பிக்கை என்பதன் ஆதி, அந்தம் இரண்டும் இதுதான்!

இதை நன்கு அறிந்தவர்களையே மாமனிதர்கள் என்று கொண்டாடுகிறோம். அவர்களால் செய்ய முடியாதன என்று எதுவும் இருந்ததில்லை. அவர்கள் செய்ய விழையாதன நிறையவே இருந்தன!

அவர்களுடைய வரம்பற்ற ஆற்றலுக்கு, அவர்கள் அறம் என்னும் வரம்பை வலிந்து விரும்பிக் கட்டிக்கொண்டார்கள்! இதை மட்டும் நாம் செவ்வனே புரிந்து கொண்டால், சாத்தியங் களும் சாத்தியமற்றவையும் நமக்கு விளங்கும். எங்கே வரம்பு மதிக்கப்பட வேண்டும். எங்கே அது தூக்கி எறியப்பட வேண்டும் என்பது தெரிந்து விடும். அப்போது விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம். விண்ணிலே பயிர் வளர்ப்போம்!

நம்பிக்கை என்பது – இதை விட்டு, இதைத் தவிர்த்து, இதைத் துறந்து என்ற ரீதியில் செயல் படுவதல்ல. நாம் ஒவ்வொருவரும் இப்போது இருக்கும் நிலை ஆரம்பமல்ல. முடிவுமல்ல.

ஆனால் ச ரி க ம ப த நி என்னும் ஸ்வரங்களில் எந்த ஸ்வரத்தை வேண்டுமானாலும் ஆரம்ப ஸ்வரமாக வைத்துக் கொண்டு ஆலாபனை நடத்தலாம். அது போல நாம் இப்போது இருக்கும் நிலைமை ஒரு பரிமாணம்.

இந்தப் பரிமாணத்திலிருந்து இன்னும் மேம்பட்ட பரிமாணத்திற்குப் பயணிப்பதே நம்பிக்கை. ஆக, ஒரே வாரத்தில் கோடீஸ்வர னாவது எப்படி, ஆடு மேய்க்கும் சிறுவன் ஆறே மாதங்களில் எம்.பி.ஏ. பட்டதாரியாவது எப்படி என்பதெல்லாம் நம்பிக்கைக்கான பாடங்கள் அல்ல. இந்தப் பம்மாத்து வேலைகளுக்கும் நாம் மேலே குறிப்பிட்ட நம்பிக்கைக்கும் தொடர்பே இல்லை.

வினாக்குறியோடுதான் விதையும் முளைக்கிறது…
தெய்வமும், வாழத் தலைப்படும் வல்லவர்க்குத் தானிரங்கும்…
இதைவிட நலமாக நம்மால் நிச்சயமாக இருக்க முடியும்…
முயற்சியின் பிடியில்தான் முக்தியும் இருக்கிறது…

ஆனந்தத்தை இலக்காக வைத்து மேற்கொண்ட பயணமும் ஆனந்தமயமாக இருப்பதே அறிவுடைமை.

இவைபோன்ற தெளிவுகளே நாம் நம்பிக்கையைப் புரிந்து கொள்ள உதவும்.
ஒரு ஞானியின் உடம்பு, வரம்புதான். அவனுக்கில்லை, நமக்கு! ஒரு சிற்றெறும்பு மிக எளிய ஜீவனாகக் காட்சியளிக்கிறது. நமக்குத் தான், இன்னோர் எறும்புக்கு அப்படியில்லை!

ஒப்பிட்டுப் பார்த்தோமானால், ஓர் எறும்பு தன் சக்திக்கு ஏற்பச் சுமக்கும் எடை, நாம் நமது சக்திக்கு ஏற்பச் சுமக்கும் எடையைவிடப் பன்மடங்கு அதிகம்!

நம்பிக்கை என்பது உணர்வோடு நம் ஆற்றலை, அறிவை, அன்பைப் பெருக்கிக் கொள்வதிலும், மனிதப் பண்புகளை வளர்த்துக் கொண்டு செம்மைப்படுத்துவதிலும்தான் வளர்கிறது.

இருட்டில் நடந்து, ஒளிமயமான நமது வீட்டை அடையவேண்டும் என்றால், அதற்கும் ஒளிசிந்தும் கைவிளக்கு ஒன்று வேண்டுமல்லவா? இதுதான் அந்தக் கைவிளக்கு. இதைக் கையிலேந்திக் கடலைக் கடக்கலாம். காடு மலைமேடுகளைத் தாண்டலாம். கடைசியில் இலக்கையும் அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *