சாகசங்கள் நம் வசமே!

– மகேஸ்வரி சர்குரு

மனதாலும், உடலாலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் சாதனைகளும் சாத்தியம்தான்! சாகசங்கள் நம் வசம்தான்.

அண்மையில் நடந்த ஒலிம்பிக் (2008) நமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் நிறைய! நம் அண்டை நாடு சீனா தங்கங்களாக அள்ளியது, மிகச் சரியாக திட்டமிட்டு போட்டிகளை மிடுக்குடனும் ஆடம்பரத்துடனும் நடத்தியது என பட்டியல் நீளும். ஒலிம்பிக்கில் சாதித்த இரண்டு சாதனையாளர்களை ஒலிம்பிக் வரலாறு தன் ஏட்டில் பதிவு செய்யும். 10 கி.மீ. நீச்சல் போட்டியில் 27 வயதான வீஜ்டென் தங்கம் வென்றது. நீச்சலுக்கு இவர் எடுத்துக் கொண்ட நேரம் 4 மணி 51 நிமிடம் 6 விநாடிகள்.

வெள்ளி வென்றவர் இவரைவிட 2 விநாடிகள் தாமதமாக இலக்கை அடைந்தார். வெற்றி இலக்கை அடைந்த போது வீஜ்டென்னின் சர்க்கரை அளவு குறைந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டார். வீஜ்டென்னின் உடலை விட உள்ளம்தான் வென்றது எனலாம். ஏனெனில் அவர் முன்னாள் புற்றுநோயாளி. தன் சாகசத்திற்கான காரணத்தைச் சொன்ன போது, மருத்துவமனையில் கடும் அவதியில் இருக்கும்போது அடுத்த நாள், அல்லது வாரம் குறித்து சிந்திக்க தோன்றினாலும் அடுத்த மணிநேரம் பற்றிய சிந்தனைதான் இருக்கும். இது எனக்கு பாடமாக இருந்தது. ஒவ்வோர் அடியாக சிந்திக்க புற்றுநோய் எனக்குக் கற்றுத் தந்தது”.

சாகசத்தை தன் வசமே வைத்திருப்பதுதான் வீரனுக்கு அழகு.

மற்றுமொரு சாதனையும் அரங்கேறியது. 10 கி.மீ. நீச்சல் போட்டியில் தென் ஆப்ரிக்க வீராங்கனை நடானி மூடாய்ட் இலக்கை அடைந்தார். தன்னுடைய ஒரு காலுடன். அண்மையில் இடது காலை இழந்தவர் ஆனாலும் நினைத்த இலக்கை எட்டிப் பிடித்தது, எவ்வளவு பெரிய சாதனை. நண்பர்களே! ஆளுமைத்திறன் தோற்றத்திலும், பேச்சிலும், செயலிலும் இருந்ததைவிட ஒருபடி மேலே போய் உள்ளே இருக்கின்ற தன்முனைப்புத்திறனை ஊக்குவிக்கும் சக்தியாக இருந்ததுதான் இந்த ஒலிம்பிக் சாதனை.

வாய்ப்புக்காக காத்திருப்பதைவிட நாம் வாய்ப்புக்களை உருவாக்கும் போதுதான் நம்முள் இருக்கின்ற ஆளுமைத் திறன் வெளிப்படும். மிகப்பெரிய கட்டிடப் பொறியாளரிடம் உதவியாக இருந்த ஒருவர், தொழிலில் உள்ள யுக்திகளைத் தெரிந்துகொண்டு சரியான சமயத்தில் வேறு ஒரு கட்டிடத்தை லாபத்தில் கட்டிக் கொடுத்தார். அவராக ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு, நேர்மையான மிகப்பெரிய கட்டிட நிபுணர் தொழிலதிபர்; சமூகத் தொண்டு செய்து வருபவராக உள்ளார்.

மிகப்பெரிய தத்துவமேதை பெர்னாட்ஷா ஒரே நாளில் தத்துவ மேதை ஆகிவிடவில்லை. அவருடைய காத்திருப்பு ஒன்பது ஆண்டுகள், தினமும் ஐந்து பக்கங்களை எழுதுவது என்று ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டார். எழுது பொருள் அவர் மனதில் கருவாக இருந்தது. ஆனால் எழுதுவதற்கான பொருள்களான தாள், மை, பேனா, எழுதி அனுப்புவதற்கான காகித உறை(கவர்) வாங்குவதற்கு சிரமப்பட்டு போனார். பட்டினி கிடந்த நாட்கள் அதிகம். இவரின் இந்த சிரமமே இவருக்கு உறுதியை அதிகம் ஆக்கியது. இரயிலின் மூன்றாம் பெட்டியில் நெரிசல் இடையிலும்கூட எழுதுவது மிகச் சுலபமாக மாறிப்போனது. கடினமான காரியத்தில் முயற்சியோடு உழைக்கும் எவரும் தன் மரியாதையை இழப்பதில்லை என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் பெர்னாட்ஷா.

ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் ஒன்று கிடைக்கும்போது. பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தாலும் ஒன்றுதானே கிடைக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய நமது கணித மேதை இராமானுஜர் கணிதத்துடனும் காசநோயுடனும் வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றது என்னவோ கணிதம்தான். கணிதத்தில் சாதித்தது நிறைய! வெளிநாட்டில் இந்தியர்கள் கணித மேதைகள் என்று சொல்லச் செய்தவரும் அவர்தான்.

நோக்கம் உயர்ந்த நோக்கமாக இருக்கும்போது சாகசங்கள் நம் வசம்தான். Clarity of Purpose என்று சொல்வார்கள். உயர்ந்த நோக்கம் இருந்ததால்தான் Dr. ராதா கிருஷ்ணனால் 17 டாக்டர் பட்டங்களும், 17 வருட கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியப்பணியும், 1331 தத்துவமேதைப் பட்டங்களும் பெற முடிந்தது.

மனதிற்குள் மட்டுமல்ல உடலாலும் உற்சாகமாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் பட்சத்தில் தேடல்கள் அதிகமாகும். உபநிடதங்களும்கூட சொல்லித்தருவது தேடு என்றுதான். தேடலின் பாதை தெளிவாக இருந்தால் நம்முடைய தன்முனைப்பு அதிகமாக இருக்கும். வெற்றி பெறுதலும் சுலபமாகிவிடும்.

சரியான உழைப்பு; சரியான அணுகு முறை; மிகச் சரியான தேடல் வேண்டும். உறக்கத்தில் கூட உற்சாகமாக இருங்கள் சாகசங்கள் நம் வசமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *