தொழிலில் வெல்ல வழிமுறைகள்! திருபாய் அம்பானியை முன்வைத்து

– சினேகலதா

ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் அங்கமான “முத்ரா” விளம்பர நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகத் திகழ்ந்தவர், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. 1980களிலிருந்தே திருபாய் அம்பானியுடன் நெருங்கிப் பழகிய அவர், அம்பானியின் அணுகுமுறைகளை உன்னிப்பாய் கவனித்ததன் மூலம் தான் உணர்ந்த வெற்றி ரகசியங்களை “திருபாயிஸம்” என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்:

1. கணப்பொழுதும் தயங்காமல் களத்தில் இறங்குங்கள்:

புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் “விமல்” ஆடை ரகங்களின் அறிமுகத்திற்காக “ஃபேஷன் ஷோ” ஒன்றினை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அரங்கம் நிரம்பி வழிந்ததில் அதிகம் பேர் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பொறுமையிழந்த வாடிக்கையாளர்கள் பெருங்கூச்சல் எழுப்ப குழப்பம் ஏற்பட்டது. மேலாளர்களும் இரண்டாம் நிலை நிர்வாகிகளும் வாசலுக்கு விரைந்தபோது, திருபாய் அம்பானி முதல் ஆளாகக் களமிறங்கி, கூட்டத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

முதல் அதிருப்திக் குரல் எழுந்ததுமே நாசூக்காக நகர்ந்து காரில் கிளம்பிவிடும் முதலாளிகள் மத்தியில், களமிறங்கிப் பணியாற்றும் தலைவரைக் கண்டதும் அந்த நிறுவன ஊழியர்கள் உத்வேகம் பெற்றனர்.

2. உறுதுணையாய் நிற்க உத்திரவாதம் அளியுங்கள்:

முத்ரா நிறுவனத்திற்கெதிராக வதந்திகள் கிளம்பிய நேரமது. அதன் தலைமை நிர்வாகி ஏ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, தானே முயன்று சிக்கல்களைத் தீர்க்க முயன்று கொண்டிருந்தார். குழு நிறுவனங்களின் தலைவர் அம்பானியிடம் அதுகுறித்துப் பேசவில்லை. அவரும் கேட்கவில்லை. பிரச்சினைகள் உச்சத்தில் இருந்த பொழுதுகளில், அம்பானியே அவரை அழைத்து தான் தலையிட வேண்டியிருக்குமா என்று மென்மையாக விசாரித்தார்.

தேவைப்பட்டால் உதவத் தலைமை தயாராக இருக்கிறது என்ற உணர்வே கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்தது. பிரச்சினைகள் எழும் நேரங்களில் பணியாளர்களைக் குற்றம்சுமத்துவது, அவர்களின் முயற்சிகளை சிதறடிக்கும். உறுதுணையாய் நிற்பதே வரமளிக்கும்.

3. வெளியே தெரியாமல் உதவுங்கள்:

நிறுவன ஊழியர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி, தான் செய்த உதவிகள் வெளியே தெரியக்கூடாது என்பதில் திருபாய் அம்பானி கவனமாயிருப்பார். சில நேரங்களில் உதவி பெற்ற மூன்றாம் மனிதருக்குக்கூட, தனக்கு உதவியவர்கள் யாரென்று தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அறப்பணிகளை வெளியே தெரியாமல் செய்தார் என்பது, அம்பானி பற்றி அவருடன் இருந்தவர்கள் நினைவுகூர்கிற நல்ல அம்சம்.

4. கண்களைத் திறந்து கனவு காணுங்கள்:

“முடியாது” “சாத்தியமில்லை” என்பதெல்லாம் மனத்தடைகளே தவிர நிஜத்தடைகள் அல்ல என்பார் அம்பானி. பெரிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு முன் வைக்கப் பட்டபோது, “இது சிரமம்தானே தவிர, செய்துமுடிக்க முடியாததெல்லாம் இல்லை” என்றார். 1980களில் தொழில் துறைகளில் நம்ப முடியாத கனவுகளைக் கண்டு அவற்றை நிதர்சனமாக்கினார். ஒன்று சிரமம் என்று தெரிந்துவிட்டால் இரவும் பகலும் அதுகுறித்தே சிந்தித்து தீவிரமாய் உழைத்து அவற்றை நனவாக்கினார் அம்பானி.

முன் முடிவுகளை மனதில் வைத்துக் கொண்டு எதிலும் யாரும் இறங்க அவர் அனுமதித்ததில்லை. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவுமே பகல் கனவு இல்லை – எல்லாமே பலிக்கும் கனவுதான் என்பது அம்பானியின் சித்தாந்தம்.

5. சரியானவரை நியமியுங்கள்; சுதந்திரம் கொடுங்கள்:

தலைசிறந்த நிபுணர்களை நியமிக்கும் நிறுவனங்கள் பலவும் அந்த நிபுணர்களின் தனித்தன்மையை அனுமதிப்பதில்லை. தங்கள் சிந்தனைப் போக்கின் நீட்சியாகத்தான் வந்தவரும் இயங்க வேண்மென்று விரும்புகின்றனர். ஒருவரை நம்பி நியமித்துவிட்டால் அவரது போக்கில் முடிவுகள் எடுக்கவும் செயல்படுத்தவும் அனுமதித்தது அம்பானியின் தனித்தன்மைகளில் ஒன்று.

6. கூடுகளைத் தாண்டிக் கொண்டேயிருங்கள்:

திருபாய் அம்பானிக்குப் பிடித்தமான கோட்பாடு “கூடுதாண்டுதல்”. “ஒவ்வொரு மனிதரும் ஒரு கூட்டுக்குள்தான் பிறக்கிறார், வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு கூட்டையும் உடைத்துக் கொண்டு போக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது” என்பாராம் அவர்.

அடுத்த கட்டம் நோக்கி நகரும்போது நமக்கு மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களுக்கும் நிறைய நன்மைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாறுதலிலும் சில உரசல்கள் ஏற்படும்போதும், புதிய புதிய எல்லைகளைத் தொடுபவர்களைப் பகைவர்களால் தொட முடியாது என்பது அம்பானியின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.

7. தோள்களை அணைக்கும் தோழமை:

பென்னம் பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். தனக்குக் கீழே உள்ளவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டே நடந்து போகவேண்டிய நேரங்களில், அவர்களின் தோளில் கைபோட்டுத் தோழமையுடன் அரவணைத்துச் செல்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். தங்கள் நிறுவனத்தின் தலைவர் தம்மைச் சமமாக நடத்துகிறார், நிஜமாகவே நேசிக்கிறார் எனும் உணர்வை பணியாளர்கள் பெற்றனர்.

இயல்பாகவும், அதே நேரம் முழு மனதோடும் அவர் தந்த இந்த அரவணைப்பு பணிபுரிபவர்களைப் பெருமளவு உற்சாகப் படுத்தியது.

8. தேவைகள் உணரும் தொலைநோக்கு:

தான் ஈடுபட்டிருக்கும் தொழிலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நன்றாக ஆராய்ந்து யாரும் செய்யத் துணியாத அளவு மிக விரிவான உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைகளைப் பல்லாண்டுகள் முன்னரே அம்பானி உருவாக்கினார். யார்ன் உற்பத்தியில், இந்தியாவின் மொத்தத் தேவையே 1980-ல் ஏறக்குறைய 6000 டன்கள் தாம் – ஆனால் 10000 டன்கள் உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்சாலைகளை குறைந்த செலவில் கூடுதல் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யும் அளவு அந்த நிறுவனம் வளர்ந்தது.

தன்னுடைய துறை எதிர்காலத்தில் எப்படி வளரும் என்ற துல்லியமான மதிப்பீடு அம்பானியின் அரிய திறமைகளில் ஒன்று.

9. பணம் என்பது பக்க விளைவு:

வாழ்வின் இறுதிவரை இதை அம்பானி நம்பினார், என்கிறார் ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. முத்ரா விளம்பர நிறுவனத்தை உருவாக்கியபோதுகூட, “தேசத்தின் மிகச்சிறந்த ஜவுளி விளம்பரத்தை உருவாக்குங்கள்” என்றாரே தவிர நிறுவனத்தின் லாப நோக்கங்கள் குறித்துப் பேசவில்லை.

ஆதாயங்களைத் தாண்டிய இலட்சியங்களை நோக்கி செயல்படும்போது பணம் குவிவது ஒரு பக்க விளைவு என்பாராம் அவர்.

திருபாயிஸம் (ஆங்கிலம்)
– ஏ. ஜி. கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: Tata Mc Graw – Hill
விலை ரூ. 145/-

zp8497586rq

2 Responses

  1. Guru

    Please any one Translate this book in TAMIL.

    Guru

  2. ashok kumar

    Yes………..I Like this kind of encouragement…………News