மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின்மைந்தன் ம. முத்தையா

”   மண் நிமிர்ந்தால் மலை உயரும். மனம் நிமிர்ந்தால் நிலை உயரும்” என்ற வரிகள் இந்த அத்தியாயத்தைத் தொடங்கும்போது அடிமனதில் தடைகள் எனும் மலைகளைத் தாண்டியவர்கள் எல்லோரும் மலைபோன்ற மனவுறுதியையே முதலீடாகக் கொண்டவர்கள். சாதாரண வாழ்க்கைதான் தங்களுக்கு

விதிக்கப்பட்டது என்று நம்பியிருந்தால் சாதனைகள் அவர்களுக்கு சாத்தியமாகியிராது.

மலை மீது ஏறும் மனிதனின் கண்களில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே  தெரியும். ஒன்று ஏறவேண்டிய தூரம். இன்னொன்று கடந்து வந்த தொலைவு. இது மலையேறுபவர்களுக்கு மட்டுமல்ல. மகத்தான பணிகளில் ஈடுபட்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் பொருந்தும். சிறந்த இலட்சியமொன்றில் ஈடுபட்டிருக்கும் எல்லோருக்குமே இந்த இரண்டும்தான் உந்துசக்தி. மற்றவர்களின் பார்வையில் இப்போது செய்கிற காரியம் பயனில்லாதது போலத் தோன்றும். ஆனால் தாங்கள் கடந்து வந்த தொலைவும், சென்று சேர வேண்டிய இடமும் எவ்வளவு முக்கியம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்த உலகம், சாதனையாளர்களை அவர்தம் சாதனைகளின் வழியாக மட்டுமே அடையாளம் காண்கிறது. செய்து முடிக்கும் வரையில் அது எத்தனை மகத்தானதாக இருந்தாலும் யாருக்கும் புரியாது. அதே நேரம், உங்களை உலகம் அடையாளம் காண ஒரு சாதனைகூடப் போதுமானது. சில சாதனைகள் செய்யப்பட்ட பிறகு, அது செய்யப்பட்ட விதம் பற்றியும் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. செய்திப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

“அகதிகள் நிறைந்த முகாம் முகங்கள் நிறையப் புன்னகை” என்ற தலைப்பில் எடுக்கப் பட்ட ஆங்கில செய்திப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். பர்மாவிலிருந்து அகதிகளாக தாய்லாந்துக்கு ஆயிரக்கணக்கில் குடிவந்த குடும்பங்கள் பற்றிய படம் அது அவர்களுக்குப் பல்லாண்டுகள் முன்னரே அப்படியோர் அகதியாய் குடியேறி அவமானங்களுக்கு ஆளாகி, கல்விகற்று நல்ல நிலைக்கு வந்த இளம்பெண் ஒருத்தியின் சேவை குறித்த படம் அது. அகதிகளின் குழந்தைகள் யாரும் கல்வியை இழந்து விடக்கூடாது என்று கருதி அவர்களின் கல்விக்கு இந்த இளம்பெண் பொறுப்பேற்றுள்ளாள். குழந்தைகளின் இடம்தேடிச் சென்று அவர்களின் கண்களில் வழியும் மிரட்சி துடைத்து ஆறுதல் சொல்லி பள்ளியில் சேர்க்கிறாள்.

முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடன் துணையாய் செல்கிறாள். முதல்நாள் பிரார்த்தனைக் கூடத்தில் முழங்கால் நடுங்க நிற்கும் குழந்தைகள் அவளையும் உடனிருக்கச் சொல்லி மன்றாடுகின்றன. பள்ளி விட்டு வரும் சிறுவன், சக மாணவர்கள் தன்னை “பர்மாக்காரன்” என்று கேலி செய்வதாய் முறை இடுகிறான். அவன் பர்மாக்காரன் என்று சொல்வதில் பெருமை கொள்ளத் கற்றுத் தருகிறாள். சிறுவன் முகம் மலர்கிறது.

தான் கடந்து வந்த தூரத்தைக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கலங்கரை விளக்கமாய் இருக்கிறாள்.

இந்தப் பெண் அவளுடைய பாதையில் குறுக்கிட்ட மலையை நகர்த்தியதோடு அடுத்த தலைமுறைக்கும் அந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறாள்.

மலையேறும் ஒருவருக்கு அவர் கடந்து வந்த தூரம் களைப்பை மட்டும் கொடுப்பதில்லை மலையின் இயல்புகளை அந்தத் தொலைவுதான் கற்றுக்கொடுக்கிறது. மீதமுள்ள தூரத்தைக் கடக்கிற வலுவைக் கால்களுக்குக் கொடுப்பதும் அந்த அனுபவம்தான்.

மலைப்பைக் கொடுக்கும் எதுவும் பார்த்தால் நம் வெற்றிக்கு கைகொடுக்கும் முயன்று என்பதைத்தான் காலங்காலமாய் சாதனையாளர் களின் வாழ்க்கை சொல்லிக் கொண்டிருக்கிறது.

மலைகளுக்கென்று இன்னொரு சிறப்பும் உண்டு. பரந்த வெளிகளையும் திறந்த நிலங்களையும் கடந்து செல்கிற காற்று.. மலைகளின் மேல் மோதுகிறது. ஆனால் மலைகளை முழுவதுமாக அரவணைத்து மலைகளின்மேல் படர்ந்து மலைகளின் எத்தனையோ அம்சங்களையும் நறுமணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கடந்து போகிறது.

ஒவ்வொரு சவாலையும் கடந்து வரும்போது மனிதன் மேலும் சக்தி மிக்கவன் ஆகிறான். புதிய விஷயங்களை உள்வாங்குகிறான். இன்று பல இல்லங்களில் குழந்தைகளுக்கு தடைகளை சந்திக்கும் சக்தி இல்லாமல் இல்லை என்று பெற்றோர் பயப்படுகின்றனர். குழந்தைகளுக்கு தடைகளை சந்திக்கும் சக்தி இல்லாமல் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

வாழ்வை எதிர்கொள்ளும் வல்லமை பிள்ளைகளுக்கு வாழ்விலிருந்து மட்டுமே கிடைக்கும். எச்சரிக்கை உணர்ச்சியால் பல விஷயங்களைப் பெற்றோர் தடுப்பதுண்டு. அது அவசியமும் கூட. ஆக்ஷ்க்ஷ்னால் அதுவே அளவு கடந்து போகிறபோது வாழ்வின் இனிய பக்கங்களை மட்டுமே குழந்தை அறிகிறது. வாழ்க்கை எப்போதும் கடினமாக இருப்பதில்லை. எப்போதும் சுலபமாகவும் இருந்து கொண்டிருப்பதில்லை.

மலையைப் பனியென்றும் பனியை மலையென்றும் தவறாகப் புரிந்து கொள்வதால் தடுமாற்றங்களே மிஞ்சும். வாழ்க்கையை வாழ்க்கையாகப் பார்க்கும் பயிற்சியைப் பிள்ளைகளுக்கு தருவதெப்படி?

அடுத்த மாதம் அதுபற்றிப் பேசுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *