வாழ்க்கைக்கும் உண்டு பாலன்ஸ் ஷீட்

– பிரதாபன்

பெரிய பெரிய நிறுவனங்கள் பாலன்ஸ் ஷீட் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவை, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம், அதன் தற்போதைய நிலை என்று பல விஷயங்களையும் வெளிப்படுத்துகின்றன. நிறுவனத்தின் பொருளாதாரத் தரத்திற்கு மட்டுமின்றி, தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிப்பதற்கும்கூட, ஒவ்வொருவரும் தங்களுக்கான பாலன்ஸ் ஷீட் உருவாக்குவது அவசியம்.
வாழ்வில் வளர்கிறோமா? தேய்கிறோமா? என்று விசாரித்துணர இவை நமக்குக் கைகொடுக்கும்.

முதலில், வாழ்க்கையின் விரயக் கணக்கில் இடம்பெறவேண்டியவை:

க்ஷி நம் உற்சாகத்தை, செல்வத்தை உறிஞ்சுகிற உறவுகள்

க்ஷி தொடர்ந்து புகார் சொல்கிற, புலம்புகிற மனநிலை

க்ஷி முடியாத விஷயங்களை முடியாது என்று சொல்ல முடியாமல் மென்று விழுங்கி, குழப்பங்களைக் கொள்முதல் செய்தல்

க்ஷி எதற்கெடுத்தாலும் தீமையே நடக்குமென எதிர்பார்த்தல்

க்ஷி நன்றி மறத்தல், நன்றி மறப்பவர்களை நட்பாகக்கொண்டிருத்தல்

க்ஷி பிறர் சொல்வதை கவனமாகக் கேட்கும் பொறுமை இல்லாதிருத்தல்

க்ஷி உங்கள் செயல்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தல்

இவையெல்லாம் உங்கள் நேரத்தை மட்டுமன்றி செயலாக்கத்தை, சிந்திக்கும் ஆற்றலை, உற்சாகத்தையும் விரயம் செய்து வளர்ச்சிகள் ஏற்படத் தடைகளை உருவாக்கும். இந்த அம்சங்கள் உங்கள் வாழ்வில் எப்போதாவது தலைகாட்டுகிறதா என்ற பட்டியலைப்போட்டு, அவற்றை வாழ்விலிருந்து மெல்ல அகற்றுவதே புத்திசாலித்தனம்.

இனி, உங்கள் வாழ்வில் வரவில் இருக்க வேண்டிய அம்சங்களைப் பார்ப்போம்.

புன்னகை – அறிந்தவர்கள் அறிமுகமில்லாதவர்கள் அனைவருக்கும் இதனை அளிக்கும்போது அதன் மூலம் விலைமதிப்பில்லாத நல்லெண்ணத்தை வரவு வைக்கிறீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும்போது அதன் மூலம் மற்றவர்களின் நல்லெண்ணங்களையும், உங்களையும் அறியாமல் பல நன்மைகளையும் வரவு வைக்கிறீர்கள்.

உங்கள் வழக்கமான செயல் முறைகளிலிருந்து வெளியே வந்து சில செயல்பாடுகளை மேற்கொள்கிறபோது, உங்கள் வாழ்வின் தரத்தை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்.

நன்றாகச் செயல்படும் பணியாளரை நெஞ்சாரப் பாராட்டுவதன் மூலம் அவரது மேலும் சிறந்த உழைப்பை உங்களுக்கு வரவு வைக்கிறீர்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்பதை நன்குணர்ந்து, அவற்றை செய்வதன் மூலம் வளங்களையும் மனநிறைவையும் வரவு வைக்கிறீர்கள்.

புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வதன் மூலம் வளர்ச்சியை வரவு வைக்கிறீர்கள்.

இந்தப் பட்டியலில் விரயக் கணக்கைவிட வரவுக் கணக்கு அதிகமிருப்பதை கவனித்திருப்பீர்கள். வாழ்வில் நன்மையான அம்சங்களை அதிகரித்துக்கொள்ள எல்லோருக்கும் எப்போதும் வாய்ப்புகள் உண்டு.

நம் விருப்பத்தையும் மீறி, சோம்பலாலோ, சேர்க்கைத் தவறுகளாலோ நம் சக்தியையும் வெற்றியையும் சிலசமயம் விரயம் செய்கிறோம். குறைந்த பட்ச விழிப்புணர்வு இருந்தால்கூட விரயங்களைத் தவிர்க்கவும் வரவுகளை வளர்க்கவும் நம் ஒவ்வொருவருக்குமே நல்ல வாய்ப்புகள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *