நினைவு நல்லது வேண்டும்

தந்தையில்லா வீடும் தலைவனில்லா நாடும்

ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தனக்குப்பின் அவன் விட்டுச் செல்வதை வைத்தே முடிவு செய்ய வேண்டும் என்கிறது ஒரு குறள். பிள்ளைகளை வைத்துப் பெற்றோரை முடிவு செய்யலாம். பின்பற்றுவர்களை வைத்துத் தலைவனை முடிவு செய்யலாம்.

என்றைக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக விளங்கும் சுவாமி விவேகானந்தரை எண்ணும்போதெல்லாம், அவரது குரு இராமகிருஷ்ணரும் நம் மனதில் தோன்றுவார். நரேந்திரனாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்த இளைஞனின் உள்ளே அழுந்திக் கிடந்த ஆன்மீகத்தை வெளிக்கொண்டுவந்தவர் அவர்.

ஒரே மாதிரியான இரு நிகழ்வுகளில் இராமகிருஷ்ணர் நடந்து கொண்ட முறை வெவ்வேறானதாக இருந்ததை, அவரது வாழ்க்கை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

அவரது சீடர்களில் ஒருவர் நிரஞ்ஜன். ஒருமுறை அவர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். உடன் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் தமக்குள் பேசிக் கொண்டிருந்த செய்தி, அவர் காதுகளில் விழுந்தது. அவர்கள் இராமகிருஷ்ணரை குறை கூறி பேசிக் கொண்டிருந்தார்கள். “அவரெல்லாம் ஒரு துறவியா…….? கல்கத்தா ரசகுல்லாவை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்……..!” என்றெல்லாம் பலவாறு அவரைக் கிண்டல் செய்து தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பேச்சு காதில் விழுந்த கணத்தில் சகிக்க முடியாத கோபத்துக்கு ஆளானார் நிரஞ்ஜன். அப்படி பேசிக் கொண்டிருந்தவர்களை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே பாய்ந்து அடிக்கப் போய்விட்டார். படகு குலுங்கியது. தண்ணீரில் கவிழ்ந்து விடுமோ என்று அச்சம் ஏற்பட்ட நிலையில் படகில் இருந்த மற்றவர்கள் சீடரை சமாதானப்படுத்தி அமர வைத்தார்கள்.

இந்தச் செய்தி இராமகிருஷ்ணரின் காதுகளுக்குப் போனது. நிரஞ்ஜனை அழைத்தார். “நீ எப்படி அவ்வளவு கோபப்படலாம்? சந்நியாசி வாழ்க்கைக்கு வர விரும்புபவன், கோபத்தை விட்டு விட வேண்டுமென்று உனக்கு தெரியாதா?” என்று கடிந்து கொண்டார்.

வேறொரு முறை அவரது மற்றொரு சீடரான யோகின் தொடர்பாக இதற்கு மாறுபட்ட செய்தி இராமகிருஷ்ணரின் செவிகளுக்குச் சென்றது. மக்கள் கூடும் ஒரு பொது இடத்தில், சிலர் இராமகிருஷ்ணரைப் பற்றித் தவறாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த யோகின் காதுகளில் அந்தப் பேச்சு விழுந்திருக்கிறது. ஆனால் எதுவும் கேளாதவர்போல் இருந்த யோகின் ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டார்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இராமகிருஷ்ணர் அவரை அழைத்துக் கடிந்து கொண்டார். “அவர்கள் உனது குருவைக் கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். நீ எப்படி அவர்களைத் தட்டிக் கேட்காமல் திரும்பி வந்தாய்?” என்றார்.

இந்த இரு நிகழ்வுகளைப் படிக்கிறவர்களுக்கு, இராமகிருஷ்ணரை முரண்பாடுகள் நிறைந்த குழப்பவாதி என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையான குருவுக்கு இதுதான் அடையாளம். நிரஞ்சனுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. அதனால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. யோகினுக்கு அச்சம் காரணமாகவோ அல்லது அடக்கம் காரணமாவோ தேவையான கோபம் கூட வரவில்லை. அதைத் தூண்ட வேண்டியிருந்தது. அவருக்கு அது சரி, இவருக்கு இது சரி. உண்மையான உயர்ந்த தலைவனின் இலக்கணம் இது.

“அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப் படுபவன் அரசியல்வாதி, அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுபவன் தலைவன்” என்னும் சொற்றொடரை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் தொடர்ச்சியாக சொல்வதென்றால், தலைவன் யார் உயர்ந்த தலைவன் யார் என்று அடையாளம் கொள்வதற்கும், ஒரு விதி உண்டு. தன்னைப் பின்பற்றுபவர் ஒவ்வொருவரும் தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறு நடப்பவன் தலைவன். தன்னைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் தங்கள் மீதே நம்பிக்கை கொள்ளுமாறு நடந்து கொள்பவன் உயர்ந்த தலைவன்!

நம் நாட்டில் வறட்சி நிலவுவது, இரண்டாவதாகக் குறிப்பிட்ட உயர்ந்த தலைமைக்குத்தான். தன்னம்பிக்கையூட்டும் தலைமையும் பஞ்சம், நாட்டுப்பற்றூட்டும் நடப்புகளுக்கும் பஞ்சம் என்றாகிவிட்டது.

இவையெல்லாம் நாட்டுக்கு விடுதலை கிடைத்த பின் ஏற்பட்ட பஞ்சங்கள்தான். ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைப் போரில் ஈடுபட்ட நாட்டுத் தலைவர்களை எண்ணும் போதெல்லாம் நெஞ்சம் சிலிர்க்கிறது. ‘இப்படி ஒரு வரலாறு நமக்கு இருந்திருக்கிறதா’ என்று வியப்பாக இருக்கிறது. ‘நாமா இப்போது இப்படி ஆகிப்போனோம்’, என்று வெட்கமாவும் இருக்கிறது.

திருநெல்வேலி, மணியாச்சி இரயில் நிலையத்தில், அப்போதைய ஆங்கிலேய மாவட்ட ஆட்சியராக இருந்த “ஆஷ்” என்னும் வெள்ளை அதிகாரியை, வாஞ்சிநாதன் என்னும் இளைஞர் சுட்டுக் கொன்றார் என்பது நாம் படித்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கும் செய்திதான். அவரது வரலாற்றின் உள்ளே பார்த்தால், ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது. “ஆஷ்” என்னும் அதிகாரியைக் கொல்வதற்கு முதல்நாள் மாலை வாஞ்சிநாதன் ஒரு தாசி வீட்டுக்குச் சென்றிருந்தார் என்பதை நம்புவீர்களா நீங்கள்? ‘அப்படியா?’ என்று வியப்பாகவும், ‘ஐயோ’ என்று அதிர்ச்சியாகவும் கேட்கத் தோன்றும். ஆஷ் எங்கு, எப்படி, எத்தனை மணிக்குச் செல்கிறான் என்பதெல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அதை எப்படியும் தெரிந்து கொண்டால்தான், தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்று எண்ணினார் வாஞ்சிநாதன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவனுக்கு ‘ஆஷ்’ செல்லும் பயணத் திட்டங்கள் தெரிந்திருந்தன. அவன் ‘தாயி’ என்னும் பெயருடைய ஒரு தாசி வீட்டுக்கு அடிக்கடி வருபவன். தாயி மூலமாக அவனிடம் மாவட்ட ஆட்சியரின் பயண விபரங்களை அறிந்து கொள்ள விரும்பினார் வாஞ்சி. தனது நோக்கில் தெளிவாக இருந்ததனால், எவ்விதத் தயக்கமுமின்றி, நண்பர் ஒருவருடன் தாயி என்னும் பெயர் கொண்ட அந்த தாசியின் வீட்டுக்குச் சென்று, அவளிடம் பேசினார். அவளும் உதவினாள். கொலை வியூகத்தை வகுப்பதற்குத் தேவையான அனைத்து விபரங்களும் வாஞ்சிக்குக் கிடைத்தன. இளமை முறுக்குக் குறையாத இளைஞன், தாசி வீட்டுக்குச் சென்ற நோக்கத்தைக் கண்டீர்களா?

ஆஷைக் கொன்ற பின்னர், மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஓடினார் வாஞ்சி. ஊழியர்களும், பொது மக்களும் துரத்தினர். அவர்களை தூரத்தில் நிறுத்த, வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடினார். தானும் தற்கொலை செய்வது என்ற முடிவுடன் வந்திருந்த அவர், அங்கிருந்த கழிப்பறை ஒன்றுக்குள் ஓடி நுழைந்தார். அடுத்த கணம் அங்கிருந்து வெளியே ஓடி வந்தார். காரணம் என்ன தெரியுமா? அது பெண்கள் கழிப்பறை! வெளியே ஓடி வந்த வாஞ்சி, அருகிலிருந்த ஆண்கள் கழிப்பறையில் நுழைந்து, தன் வாய்க்குள் துப்பாக்கி வைத்து சுட்டுக் கொண்டு மாய்ந்தார்.

இறந்து கிடந்த உடலைத்தான் காவலர் கைப்பற்றினர். வாஞ்சி போட்டிருந்த ‘கோட்டு’ பைக்குள், நெல்லை இரயில் நிலையத்திலிருந்து மணியாச்சி வரை பயணம் செய்வதற்காக, அவருக்கும், நண்பர் ஒருவருக்குமான பயணச் சீட்டுக்கள் இருந்தன.

அந்த பரபரப்பான இறுதி நேரத்திலும், தவறியும் பெண்கள் கழிப்பறைக்குள் ஆண்கள் நுழைந்துவிடக் கூடாது என்று செயல்பட்டது வாஞ்சியின் பண்பு நலன், சாவதற்குப் போகும் நேரத்திலும், பையில் ரயில் பயணச் சீட்டு இருந்தது, அவரது கடமை உணர்வு. எப்படிப்பட்ட இளைஞர்களை இந்த நாடு கண்டது!

ஓர் ஐம்பதாண்டு காலம் பண்பாட்டிலும் கடமை உணர்ச்சியிலும் நமக்கு சரிவைத் தந்துவிட்டது வியப்புக்குரியதுதான். சுயநலமும், ஏமாற்றுத்தனமும் நமக்குள் குடிபுகுந்து விட்டன என்பது வேதனையுடன் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது. யாரோ ஒரு பெண்ணை, கூச்சமில்லாமல் ‘என் மனைவி’ என்று சொல்லி வெளிநாட்டுக்கு அழைத்துப் போக லட்சக் கணக்கில் பணம் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர், தேர்தலில் வெற்றிபெற மக்களுக்கு பணத்தையும் பொருளையும் வாரி வழங்கும் வேட்பாளர்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, எவருக்கு வேண்டுமானாலும் பணத்தை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், சாதிப் பின்னணி அல்லது குற்றப் பின்னணி அல்லது பணப் பின்னணியோடு அரசியல்வாதியாக வர விரும்பும் அடுத்த தலைமுறை, “அரசியல்வாதிகள் கருங்காலிகள்” என்று சொல்லிக்கொண்டே, அவர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்களாக நடந்து கொள்ளும் அதிகாரிகள், இதைப் போன்ற பல சூழ்நிலைகளில், கொஞ்சம் கொஞ்சமாக பலமிழந்து நீர்த்துப் போய்க் கொண்டிருக்கும் நீதித்துறை, வணிகத்துக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட ஊடகங்கள், எதைப்பற்றி, எவரைப்பற்றி பேசினாலும் சலிப்புடன் பேசும் மக்கள்! என்ன சுடும் உண்மைகள்!

ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைக்குத் தாய் அன்பு தருவாள், தந்தை அறிவு தருவான் என்பார்கள். தாயால் குழந்தையைக் கடிந்து கொள்ள முடியாது. அவள் கடிந்தாலும் அது பிள்ளைக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். காரணம், தாய்மை என்பது அப்படி! தந்தை கண்டிப்பானவன். அது அன்பு கலந்த கண்டிப்பாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். சோர்ந்திருக்கும் பிள்ளைக்கு ஊக்கம் கொடுத்து, தறிகெட்டுத் திரியும் பிள்ளையைத் தட்டிக்கேட்டு, அறிவையும், ஆற்றலையும், ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தர வேண்டியவன் தந்தை.

விதிவிலக்குகளாகத் தாய் நடத்திச் செல்லும் குடும்பங்களும் உண்டுதான். ஆனால், பொதுவாக தந்தையில்லாக் குடும்பம் தடுமாறும், அந்தத் தடுமாற்றம் பொருளாதாரம் தொடர்பானது மட்டுமல்ல, உலக ஞானத்துடன் வழிகாட்ட ஆளில்லை என்பதும்தான். தந்தை நெறி பிறழ்ந்து நடந்தால் அந்தக் குடும்பமே தவிக்கும், ஒவ்வொரு பிள்ளையும் தான்தோன்றித் தனமாக நடக்கும்.

இது நாட்டுக்கும் முழுக்கப் பொருந்தும். ஒருங்கிணைத்தும், அணைத்தும் வழிநடத்தும் தலைவரில்லா நாடு எப்படி இருக்கும் என்பதற்கு நாம் உதாரணமாகிப் போனோம்.

இராமாயணக் காவிய நாயகன் இராமன் வாழ்வில் நடந்ததாக ஒரு கதை உண்டு. ஆற்றில் குளிக்கச் சென்றான் இராமன். அம்பறாத் தூளியில் ஓர் அம்பு மட்டுமே இருந்தது. “ஒற்றை அம்பை நட்டு வை” என்ற முதுமொழிக்கேற்ப, அந்த அம்பை ஆற்றங்கரையில் குத்தி நிறுத்திவிட்டுக் குளிக்கச் சென்றான். திரும்பி வந்து அம்பை உருவிய போது அதன் நுனியில் தேரை ஒன்று குத்தப் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து பதறிப் போன இராமன், “ஐயோ தேரையே! நான் அறியாமல் பிழை செய்து விட்டேன். அம்பு உன்னைக் குத்தும் போதே நீ குரல் கொடுத்திருக்கக் கூடாதா?” என்றான். “இராமா! எனக்கு எந்தத் துன்பம் வந்தாலும், நான் உடனே உன் பெயரைத் தான் உச்சரிப்பேன். துன்பம் உன்னாலேயே வருகிற போது நான் என்னவென்று குரல் கொடுப்பேன்?” என்று சொல்லி செத்துப் போனது. நமக்கும் அந்தத் தேரைக்கு பெரிதாக வேறுபாடு இல்லை.

பாவேந்தர் பாரதிதாசன் வரிகளில் சொல்வதென்றால், “தலைவனை எண்ணித் தவங்கிடக்கலாயிற்று” நம் நிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *