நிலையான வெற்றிக்கு நேரான அணுகுமுறை

-நம்பியூர் ராதாகிருஷ்ணன்


எந்தச் சூழலிலும் நேர்மறை எண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். தொடக்க காலத்தில் எச்சரிக்கை என்ற பெயரால் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தவர்கள் கூட, நேர்மறை எண்ணங்கள் செயல்படும் அதிசயத்தை சரியாக உணர்ந்து, நேர்மறை எண்ணங்களையே வளர்த்தெடுக்கிறார்கள்.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது நேர்மறை எண்ணங்களை வளர்த்தால் போதாது. ஆரோக்கியத்திற்குப் பின்னடைவு நேர்கிறபோதும் உங்கள் நலவாழ்வு குறித்த நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டால் எல்லோரும் எதிர்பார்த்ததைவிட வெகு விரைவாகக் குணமடைவீர்கள்.

நேர்மறை எண்ணங்கள் எழவிடாமல் தடுப்பவை எத்தனையோ. அவற்றில் முக்கியமானது ஒவ்வாமை. ஏதோ ஒன்றின் மீதோ, யாரோ ஒருவரின் மீதோ நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வாமை, உங்களின் நேர்மறை எண்ணங்களைத் தடுக்கும் தீய சக்தி.

சிலர், சாதாரண விஷயங்கள் குறித்துக்கூட அதீத ஒவ்வாமையை வெளிப்படுத்துவார்கள். “சார்! டீ சாப்பிடலாமா?” என்று கேட்டால்கூட, “அய்யய்யோ! டீயா? உவ்வே…. எனக்கு டீன்னு சொன்னாலே குமட்டும் சார்” என்பார்கள். “நான் டீ சாப்பிடறதில்லை” என்று ஒரு வரியில் முடிய வேண்டிய விஷயம் இது.

தனிமனிதர் தொடங்கி, டீ போன்ற சின்ன விஷயம் வரை நீங்கள் வெளிப்படுத்தும் அதீத ஒவ்வாமை, உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களையும் தீய அதிர்வுகளையும் பலப்படுத்தும். பிடிக்கும், பிடிக்காது என்பதோடு நிறுத்தி, எண்ணங்களை சமநிலையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

நல்லவற்றையே தேடுகிறபோது உங்களுக்குள் ஒரு புதிய சக்தி பிறக்கிறது. நல்ல அம்சங்களை உங்கள் வாழ்க்கை நோக்கி ஈர்க்கிற சக்தி உங்களை வந்தடைகிறது. நண்பர் வீட்டுக்குப் போகிறீர்கள். அவருடைய குழந்தையின் ஓவிய நோட்டு என்று ஒன்றை நீட்டுகிறார்கள். குழந்தையின் கிறுக்கல்தானே என்று அலட்சியத்தோடு புரட்டுகிறபோதே, “இதில் என்ன இருக்கு” என்ற எண்ணம் உங்களுக்கும், “போயும் போயும் இந்த ஆளிடம் காட்டினோமே” என்ற சப்பு அவர்களுக்கும் ஏற்பட்டுவிடும். அப்புறம் அவர்கள் தரும் காப்பியில் மட்டுமின்றி உங்கள் உறவிலும் சூடு குறைந்துவிடும். மாறாக, இசை, ஓவியம், கவிதை, சிற்பம் போன்றவை கடவுளின் ரகசிய பாஷை என்கிற ஈடுபாட்டோடு பார்த்தால், உங்கள் மனதிருக்கும் ஏதோவொரு கேள்விக்கான பதில், அந்தப் பிஞ்சு விரல் வரைந்த ஓவியத்தில் இருக்கும். உங்கள் உண்மையான அக்கறை அவர்கள் மனதிலும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உள்மனதிற்கு நீங்கள் பிறப்பிக்கும் கட்டளைகளில், தொடர்ந்து நல்லெண்ணங்களையே விதைப்பதும் நேரான அணுகுமுறையைத் தக்க வைத்துக்கொள்ள வழி. ஒன்று தோல்வியில் முடியுமோ என்கிற தயக்கம் ஏற்படும்போதெல்லாம், “எல்லாம் செயல்கூடும்” என்று உறுதியை திரும்பத் திரும்ப மனதிற்கு வழங்குங்கள். இதன்மூலம் நேர்மறை எண்ணங்கள் வலுப்படுவதோடு, வெளிச்சூழல் பதட்டமாக இருக்கும்போதுகூட, நீங்கள் பதறாமல் நிதானமாகக் காரியமாற்ற முடியும்.

இவையெல்லாவற்றையும்விட முக்கியம், நிஜமாகவே நடுநிலையுடன் இருப்பது. சிலர் மீது முன்முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், அவர் இப்போது மாறியிருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புடன் யாரையும் அணுகுங்கள்.

கடந்து போகிறபோது யாரோ காலை மிதித்துவிட்டதற்காக, காவல்துறையில் புகார் கொடுக்கும் அளவு சிலருக்குக் கோபம் வரும். இந்தக் கோபம், சக மனிதர்களிடமிருந்து உங்களை அந்நியப்படுத்தும். அத்தகைய கோபம் ஆகாது.

மனம் விரிந்தவராய், மகிழ்ச்சியானவராய், மற்றவர்களைப் பாராட்டுகிறவராய் உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் நிலைக்கும். உங்கள் கனவுகள் பலிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *