வல்லமை தாராயோ!

-பேரா. எம். ராமச்சந்திரன்


மனசப்பார்த்துக்க நல்லபடி

எதைக்கண்டும் அஞ்சுகிற மனிதனுக்கு, எதையும் அறிந்துகொள்ள முடியாத மனிதனுக்கு வல்லமை வராது. ஆன்மநேயம் இல்லாதவனுக்கும் வல்லமை வராது.

மன வலிமை, அறிவு வலிமை, ஆன்ம வலிமை இம்மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்தால் கிடைப்பதுதான் ஆக்கப்பூர்வமான வல்லமை.

கல்வியினுடைய நோக்கம் வெற்று அறிவல்ல. சுடர் மிகும் அறிவு தருவதுதான். கல்விக்கூடத்தில் வழங்கப்படுகிற அறிவு அனுபவமாக வேண்டும். இந்த அனுபவம் உலகத்தின் நன்மைக்காக, இந்த மண் பயனுற பயன்படவேண்டும்.

அறிவு ஒரு மனிதனுக்கு அகங்காரம் கொடுக்கக்கூடாது. கம்பீரத்தைக் கொடுக்க வேண்டும்.

தன்னைவிட வயதில் சிறியவரான ஞான சம்பந்தரை பல்லக்கில் வைத்து தோளில் சுமக்கிறார், வயதில், பக்தியில் மூத்தவரான திருநாவுக்கரசர். ஆனால் அதே திருநாவுக்கரசர் மகேந்திர பல்லவன் முன், ‘நாமார்க்கும் குடியல்லோம். நமனை யஞ்சோம்’ என்று நிமிர்ந்து நிற்கிறார். பக்தி கொடுத்த கம்பீரம் அது.

மனிதனுக்கு பிரச்சனை என்பது வெளியில் இருந்து வருவதில்லை. உள்ளிருந்துதான் வருகிறது. பிரச்சனை என்று நினைத்தால் பிரச்சனைதான்.

சூறாவளி வீசும், சுறாமீன் வாழும், கடலில்தான் முத்து இருக்கிறது. சுறாமீனையும், சூறாவளியையும் பிரச்சனையாக கருதுபவனுக்கு முத்து கிடைக்காது. அதை சவாலாக ஏற்றுக் கொள்பவனுக்கு முத்து கிடைக்கும்.

கடலைப் பார்த்து பயந்து கரையில் நிற்பவர்களும் இருக்கிறார்கள். சாவுக்கு அஞ்சுபவர்கள் அவர்கள். சாவுக்கு அஞ்சுகிறவனால் சாதிக்க முடியாது.

சிலபேரை பார்த்திருக்கிறோம். பாலைவனத்தில் கொண்டுவிட்டால், ‘தண்ணீர் இல்லையே! தண்ணீர் இல்லையே’ என்று புலம்புவார்கள். அவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

பாலைவனத்தில் தண்ணீரை வைக்காத பகவான்தான், பெட்ரோலை வைத்து இருக்கிறான். ஆற்றல் உள்ளவன், வல்லமை உள்ளவன், ஞானம் உள்ளவன் அதைத் தோண்டி எடுக்கிறான். பெட்ரோலை விற்று அந்தப் பாலைவனத்தையே சோலைவனமாக்கிக் காட்டுகிறான்.

அரபு நாடுகளுக்குச் சென்று பார்த்தால் நம் நாட்டைவிட அதிக மரங்கள் இருக்கின்றன.

“பாலைவனம் சோலைவனமாக வேண்டும்” என்று கவிமணி பாடிய பாட்டை நாம் பாடிக் கொண்டிருக்கிறோம். அரபு தேசங்கள் அதை செய்து காட்டியிருக்கின்றன.

பாலைவனத்தில் தண்ணீர் இல்லையென்று அழாதீர்கள். பெட்ரோல் இருக்கிறதென்று மகிழுங்கள்.

‘நான் நல்லதோர் வீணை’, ‘என்னுடைய அறிவு சுடர்மிகும் அறிவு’ இது பாரதியினுடைய சுயம். அடுத்தவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆளாக இருக்கிறவர்கள் அனைவரும் ஆளுமை உடையவர்களாக மாறவேண்டும். அதுதான் வல்லமை.

முப்பத்தி நான்கு ஆண்டுகளாக நான் ஆசிரியப் பணியில் இருந்தாலும், அப்துல்கலாம் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது எனக்குத் தெரியாது.

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ‘பொக்ரானில்’ அணுகுண்டு வெடித்து காண்பித்தபோது அப்துல்கலாம் அவர்களைப் பற்றி தெரிய ஆரம்பித்தது. பிறகு ஜனாதிபதி ஆனார்.

அப்துல்கலாம் அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது எனக்குத் தெரியாது. ஆனால், வெற்றி பெற்ற மனிதராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டபோது தெரிகிறது.

உங்களுக்கு, சூத்திரம் ஒன்றை கற்றுத் தருகிறேன். ‘நீங்கள் வெற்றி பெற்ற பிறகுதான் உலகம் உங்களை கவனிக்கும். நீங்கள் வெற்றி பெறுகிறவரை, ‘நான் வெற்றி பெறப்போகிறேன்’ என்று உங்களுக்கு நீங்களே ஊக்கம் கொடுத்துக்கொள்ள வேண்டிய வல்லமை உங்களிடத்திலே இருக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில், ‘ஆட்டோ சஜஷன்’ என்று சொல்கிறார்கள். எனக்கு நானே சொல்லிக் கொள்வது. எனக்கு நானே போதித்துக்கொள்வது.

இதைத்தான் பாரதி செய்தான்.

அறிவு என்பதும். உங்களிடத்திருக்கிற அனுபவம் என்பதும் வல்லமையாக மாறவேண்டும். அந்த வல்லமை, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்காக வேண்டும்.

மனிதநேயம்தான் அறிவினுடைய நோக்கம்.

பெனிசிலினும் அறிவினுடைய கண்டுபிடிப்புதான். ஏ.கே. 47 -னும் அறிவினுடைய கண்டுபிடிப்புதான். ஆனால், பெனிசின் மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ஏ.கே. 47 – மாநிலத்தை அழித்துக் குவிப்பதற்கு. அறிவினுடைய நோக்கம் ஆக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, அழிவாக இருக்கக்கூடாது.

‘மனிதனாக வாழ்ந்திட வேண்டும்….. மனதில் வையடா’ என்பது பட்டுக்கோட்டையின் பாடல் வரி.

மனிதனாக வாழ்ந்திட வேண்டுமென்கிற வல்லமை வேண்டினால், நீங்கள் இன்னொரு வல்லமையைத் தேட வேண்டும்.

‘மனசைப் பார்த்துக்க நல்லபடி’ என்கிறது கண்ணதாசன் பாடல் வரி.

மனதை நல்லபடியாக பார்த்துக் கொள்கிற வல்லமைதான் நமக்கு ரொம்ப முக்கியம்.

நிறைய பேருக்கு பிரச்சனை வருவதற்கு முக்கியக்காரணம் – மனதை நன்றாகப் பார்க்கத் தெரியாததுதான்.

‘பிரார்த்தனை என்பது மனு கொடுத்தல் அல்ல’ என்பார் காந்தியடிகள்.

‘உள்ளம் உடைமை உடைமை’ என்றார் வள்ளுவர் நம்முடைய உண்மையான உடைமை நம் உள்ளம்தான்.

மணமக்களை வாழ்த்தும்போதும் மனதார வாழ்த்துகிறோம் என்றுதான் சொல்கிறோம்.

‘உண்மைக்குப் புறம்பானதல்ல பொய்.

உள்ளத்துக்குப் புறம்பானதுதான் பொய்’ என்பார் ஜெயகாந்தன்.

எவனிடத்தில் உண்மையான, திண்மையான மனம் இருக்கிறதோ, அவன்தான் சொத்து உடையவன். ஏனென்றால், அவன் நினைத்தது நினைத்துபோல் சாதிக்க முடியும்.

எண்ணங்கள் உருவாகிற இடம், உணர்வுகள் உருவாகிற இடம் மனதுதான்.

மனதை நன்றாகப் பார்த்துக் கொண்டால், நம் எண்ணங்கள் நன்றாக இருக்கும். உணர்வுகளும், நன்றாக இருக்கும். அதனால் வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *