திரை கடலோடு திரவியம் தேடு

– இயகோகா சுப்பிரமணியம்

நிச்சயம் நீங்கள் சாதனை புரிவீர்கள்

‘பைனான்ஸியல் சர்வீஸ்’ – என்ற பெயரில் பங்குச் சந்தைகளில் கூட்டாகச் சேர்ந்த முதலீடு செய்வது, ‘ம்யூச்சுவல் ஃபண்ட்’ எனப் பல பேரிடம் முதலீட்டை வாங்கிப் பங்குகளில் போடுவது – என்ற வகையில், அந்தத் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் சில மாதங்களுக்கு முன் வந்தார். ‘எந்தெந்த நிறுவனங்களில் நீங்கள் பணமுதலீடு செய்திருக்கின்றீர்கள்?’ என்று மிகவும் ஆவலோடு வினவினார்.

நான் – “பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் எனக்கு ஆர்வமில்லை” – என்று சொன்னேன். “வேறு என்ன செய்வீர்கள்?” – எனக் கேட்டார்.

அரசாங்கம் சார்ந்த வங்கிகளில் இருப்பு வைத்துள்ளேன். வட்டி கிடைக்கின்றது என்றேன்.

“ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிகமாகப் பணம் கிடைக்குமே” என்றார். “எனக்குச் சூதாட்டத்தில் விருப்பமில்லை” – என்று சொன்னேன்.

“அப்படியானால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் சூதாடிகளா?”

“ஆமாம். என்னைப் பொறுத்தவரை அப்படித்தான் நினைக்கிறேன். உலகளாவிய அளவில் அரசாங்கங்களே இதை முன்னின்று – மிகப்பெரிய தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும், நாட்டின் முதலீட்டுக்கு அடிப்படையாகவும் கருதி நடத்திக் கொண்டிருப்பதால், இது பொதுவாக ஒரு மிகப் புத்திசாத்தனமாகப் படித்தவர்கள் செய்கின்ற, சட்ட நுணுக்கங்களுடன் கூடிய, அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு முறையென்று சொன்னாலும், இது ஒருவிதமான சூதாட்டம்தான். தொழில் முதலீட்டுக்கும் அதைத் திறம்பட நடத்துவதற்கும் எத்தனையோ பல நல்ல வழிகள் நிச்சயம் இல்லாமல் இருக்காது. ஆனால், “ஸ்பெகுலேஷன்” என்று சொல்த் தொழிலே செய்யத் தெரியாதவர்கள், தொழில் நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்குகளை வைத்து, ‘அப்பாவி’ மக்களின் பணத்தை சட்டத்தின் துணையோடு ‘சுவாஹா’ செய்வதுதான், இந்த விளையாட்டு” என்பது என்னுடைய அபிப்ராயம்” – என்று சொன்னேன்.

“உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகின்றது. அங்குள்ள பொருளாதார மேதைகள் எல்லாம் ஒப்புக்கொண்டு, அரசாங்கமே அங்கீகரித்துள்ள ஒரு அற்புதமான சந்தையை ‘சூதாட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு நீங்களென்ன பெரிய பொருளாதாரம் படித்தவரா? – என்று உடனே கோபப்பட்டார்.

“ஐயா, எனக்கு அந்த அளவுக்குப் பொருளாதாரம், பங்குச் சந்தைகள் பற்றிய பேரறிவு கிடையாது. ஆனால், எந்த விதமான உடலுழைப்பும் இல்லாமல் வியர்வை சிந்தாமல், வட்டிக்குக் கடன் கொடுப்பது போலும் இல்லாமல், உன்னுடைய பணத்தை முதலீடு செய்து அளவுக்கும் அதிகமாக நீ பொருள் ஈட்ட முடியுமானால் – அது சூதாட்டத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது. அதன் பெயரும், அமைப்பும், வழிமுறைகளும் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அது சூதாட்டம் தான். படித்தவன் சூதும் வாதும் செய்தால் ‘அய்யோ’ என்று போவான் எனப் பாரதியார் பாடியுள்ளார். ஆனால் இந்தச் சூதாட்டத்தில் அப்பாவி முதலீட்டாளர்கள் பலர் ‘அய்யோ’ என்று போக, இதைத் திறம்பட நடத்துபவர்கள், மீண்டும் கொஞ்சநாள் கழித்து ‘சென்செக்ஸை’ உயர்த்தி மீண்டும் பல அப்பாவிகளை அய்யோ என்று போக வைப்பார்கள். தவிரவும், இந்தப் பங்குச் சந்தை சூதாட்டத்தால், தொழிலை நடத்துபவர்களுக்கும் தொழிற்சாலைக்கும் உள்ள உறவு, வளர்ச்சி தொழில் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும், தரத்துக்கும், லாபத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றது. தொழில் முனைந்து தன்முதலீட்டைக் குறைத்துத் தன்னையும், தன் குடும்பத்தாரையும் முதலீடு பெற்று, அதைத் தனதாக்கிக் கொள்ளும்படி வகை செய்து, அவர்களையும் சூதாட்டத்தில் மறைமுகமாக ஈடுபடுத்திவிடுவதால் – இது ஒரு கூட்டுக் கொள்ளைக்கான செயலாக எனக்குப் படுகின்றது.

ஒருவேளை என்னுடைய பட்டறிவு – முட்டாள்தனமாக இருக்கலாம். தயவு செய்து என்னை இதில் பங்கெடுக்கச் சொல்லவேண்டாம்” – எனக் கேட்டுக் கொண்டேன். என்னை ஏதோ தீண்டத்தகாத ஒரு ஜந்துவுக்குக் கொடுக்கும் பார்வைக் கணையை வீசிவிட்டு இடம் பெயர்ந்தார். இடையில் இது சம்பந்தமாக எங்களது ஆடிட்டர் திரு. ரகுநாதன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஸ்டாக் மார்க்கெட்’ என்ற பங்குச் சந்தை, மிகப் பெரிய முதலீடுகளைப் பொதுமக்களிடம் பெற்று, அதன்மூலம் பெரிய தொழிற்சாலைகளை நிறுவி, நன்றாக லாபம் வரும்போது, முதலீடு செய்தவர்கள் பங்குகளை விற்று நல்ல லாபம் பெற்றால், மக்களது வளம் பெருகுவதோடு, தொழில் வளமும் பெருகும் என்ற அடிப்படையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான பல நல்ல சட்ட திட்டங்களும் உள்ளன என்றார்.

ஆனால், பிற்காலங்களில், இன்ஸ்ட்ருமென்ட்ஸ், டெரிவேட்டிவ்ஸ், ஃப்யூச்சர் ட்ரேடிங் என்று பல பெயர்களில் இது கிட்டத்தட்ட ‘கைமீறிப்போன’ ஒரு விஷயமாக ஆகிவிட்டது. எனவே, இதைப்பற்றிய தங்கள் கூற்றை முழுதும் சரி என்று சொல்ல முடியாதபோது, முழுதும் தவறு என்று சொல்ல முடியாது என்றார். அவர் சொன்னதும் சரிதான்.

பங்குச் சந்தைகள் ஆரம்பிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய முதலீடு என்று வரும்போது மக்களிடம் பங்கு பெறுவதற்கு. அத்தோடு, நன்றாக லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும் நிறுவனங்களில் விரிவாக்கத்துக்காக முதலீடு செய்யும்போது, அவர்களது லாபமும் இவர்களது பங்கிற்குச் சேரும் என்பதால் ‘ப்ரீமியம்’ என்ற பெயரில் நிறுவனம் ஒரு தொகையைப் பெற்று முதலீடு செய்கின்றது. நிறுவனம் நன்றாக நடைபெறும்போது, எல்லாப் பங்குதாரர்களும் ‘டிவிடெண்ட்’ பெறுகின்றார்கள்.

பொதுமக்கள் தங்களுக்குப் பணம் தேவைப்படும்போது, தங்கள் பங்கை சந்தையில் விற்றுவிடலாம். நீண்ட நாட்களுக்கான முதலீடு, நல்ல நிறுவனங்களில் முதலீடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட முதலீடு என்று வரும்போது இது நல்லதுதான் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

ஆனால், இதன் விரிவாக்கம் கிட்டத்தட்ட குதிரைப் பந்தயம் போல ஆகிவிட்டது. அதன் விளைவு, ஏதோ பண இரட்டிப்பு மாதிரி வங்கிகள் எல்லாம் சேர்ந்து, பேராசை பிடித்த மக்களின் பலவீனத்தையும் நடைமுறைச் சட்டங்களையும் சாதகமாக்கி இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளார்கள். செய்தித்தாள்களில் படிக்கின்றோம். எம்.பி.ஏ. படித்தவர்கள், ஐ.ஐ.எம்.மில் படித்தவர்கள், வருடத்துக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று, உலகில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் வேலைக்கு உடனே அமர்த்தப்படுகின்றார்கள் என. எனக்குக் கூட மிகப் பெரிய சந்தேகம் வந்ததுண்டு.

கல்லூரியை விட்டு வெளியே வரும் இந்த மாணவர்களுக்கு, எடுத்த உடனேயே இவ்வளவு சம்பளமா? ஒரு விஞ்ஞானிக்கோ, பொறியியல் வல்லுனருக்கோ, மருத்துவருக்கோ இல்லாத அளவுக்கு என்றால், வங்கிகளில் இவர்கள் அப்படி என்ன கிழிக்கிறார்கள் எனப் பெரிய சந்தேகம். குறைந்தபட்சம் கம்ப்யூட்டர், ஐ.டி. போன்ற துறைகள் என்றால் புரிந்து கொள்ளமுடியும். வங்கிகளில் அப்படி என்னய்யா உற்பத்தி செய்துவிடமுடியும்?

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியையும், லேமென் பிரதர்ஸ், மெரில்ஞ்ச் மூடப்பட்டதையும் பார்த்தபோதுதான் புரிந்தது. மனிதனின் தேவைகளையும், அவனுக்கு ஆடம்பரப் பொருள்களின் மீதுள்ள மோகத்தையும், கடன் கிடைத்தால் வாங்கித் திருப்பிக் கட்டிவிடலாம் என்ற பலவீனத்தையும் பயன்படுத்தி, தங்கள் படிப்பறிவைப் பலவிதமான சூத்திரங்களில் புகுத்தி – மக்களையும், தொழில் முனைவோரையும் ஒரு மாயவலைக்குள் சிக்கவைத்துக் கொஞ்சநாள் சொக்கட்டான் ஆடியிருக்கிறார்கள். பரமபதம் அடைய ஏணியின் முதல்படியைக் காட்டிவிட்டு, பாம்பின் வாயில் விழுகின்றபோது, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டார்கள். பலன் – அதைத்தான் உலகெங்கும் கண்கூடாகப் பார்க்கின்றோமே.

திரைகடலோடித் திரவியம் தேட முனைகின்ற அத்துணை பேர்களும் நெஞ்சில் நிறுத்திவைக்க வேண்டிய முக்கியமான செய்தி ஒன்றே ஒன்றுதான். குறுக்கு வழியிலும், சரியான பொருளாதார, வங்கிகளின் சட்டதிட்ட நுணுக்கங்களையும் அறியாமலும், சீக்கிரத்தில் பணம் சம்பாதித்துவிடலாம் – என்ற எண்ணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, உற்பத்தி, தரம், வணிகம், அதில் கட்டுப்பாடுகள், அதில் கிடைக்கக்கூடிய லாபம், அதை வைத்து விரிவுபடுத்துவது என்று மட்டுமே செயல் படவேண்டும்.

உள்ளுவதெல்லாம், உயர்வாக இருக்கவேண்டும் – என திருவள்ளுவர் அவர்கள் எழுதி வைத்தது – எண்ணத்தின் உயர்வையும், வழிவகைகளின் உயர்வையும் தானே தவிர, குறுக்குவழியில் உயர்கின்ற வழிகளைப் பற்றி அல்ல. நீண்டகால முதலீடு என்று வரும்போது, உலகமயமாக்கலுக்கு முன்னால் டாடா, பிர்லா, டி.வி.எஸ், போன்ற பல நிறுவனங்களில் பொதுமக்கள் நிறைய முதலீடு செய்தார்கள். அந்த நிறுவனங்களை நிறுவியவர்களும், அதைத் தொடர்ந்து நடத்திவந்த அவர்களது வாரிசுகளும், பங்குதாரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும், கம்பெனி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். குடும்பத்தின் பெயருக்கோ, நிறுவனத்தின் பெயருக்கோ எந்த விதத்திலும் களங்கம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தொழில் நடத்தினார்கள். திரைகடல் தாண்டியும் பெயர், புகழ் பெற்றார்கள். உலகமயமாக்கலுக்குப் பின்னால், மேற்கத்திய – தேவையற்ற – சில கலாச்சாரம் நுகர்வோரையும், முனைவோரையும், நமது அடிப்படை எளிமை, நாணயம், நேர்மை, சமுதாய சிந்தனை, குடும்பப் பொறுப்பு போன்ற குணங்களிருந்து திசைதிருப்பி, ஆடம்பரம், சுயநலம், சிற்றின்ப உணர்வுகள், தனிமனித ஒழுங்கீனம், தவறுகளை நியாயப்படுத்தும் போக்கு, யாரையும் கண்டு பயப்படாத தன்மை போன்றவையே மிகப்பெரிய குணநலன்களாக போற்றப்படும் வாழ்க்கை முறையில் நுழைந்துவிட்டன. சிலபேரிடமும், இளைஞர்களிடமும் திணித்துவிட்டன.

இது தற்காகமாக நன்றாக இருந்தாலும், எதிர்காலத்துக்கு ஏற்றதாக நிச்சயம் அமையாது. இதை கடைப்பிடித்து வருகின்ற நல்ல கொள்கைகளையும், பொருளாதாரத் தெளிவையும், நமது நாட்டின் தருமத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படுங்கள். நிச்சயம் நீங்கள் சாதனை புரிவீர்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் என்பதில் புகழ் இல்லை. அதை எப்படிச் சம்பாதித்தீர்கள் என்பதில்தான் பெருமை அடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *