நினைவு நல்லது வேண்டும்

நான் என்பதா நாம் என்பதா?

செல்போன் என்று பரவலாக குறிப்பிடப்படும் கைபேசி இல்லாத நபர்களே இல்லை. கை இல்லாமல்கூட இருந்துவிடலாம்; கைபேசி இல்லாமல் இருக்கமுடியாது போலிருக்கிறது.

எங்கிருப்பவருடனும் பேசமுடிகிறது என்பது மட்டுமல்ல பேசாமல்கூட குறுஞ்செய்திகளை “SMS” மூலம் பரிமாறிக் கொள்ள முடிகிறது. தெரிந்தவர்களிடம் இருந்துதான் என்றில்லை. தேவையான செய்திகள்தான் என்று இல்லை. ஏதாவது குறுஞ்செய்தி வந்து கொண்டே இருக்கும். வந்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அப்படியே அதனை அனுப்புவார்கள்!

அப்படி வந்த செய்தி ஒன்று உங்களுக்குக்கூட வந்திருக்கும். எல்லோருக்கும் “எனக்கு அமைதி வேண்டும் – (I want Peace)” என்று இறைவனிடம் கேட்கிறோம். இதிலே உள்ள ஐ என்றஎழுத்து, “நான்”, எனக்கு” என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. எனவே ஐ-யை நீக்குங்கள். ’’Want’’ என்றசொல் “தேவை” என்ற ஆசையைக் குறிக்கிறது. ஆசையே துன்பங்களுக்குக் காரணம். எனவே ’’Want’’ -ஐ நீக்குங்கள்.‘I’ ‘want” என்ற இரண்டும் நீங்கிவிட்டால் Peace மட்டுமே உங்களுக்கு தங்கியிருக்கிறது!

மிகச் சிறிய, ஆனால் ஆழமான பொருள் இதிலே அடங்கி இருக்கிறதல்லவா? ஆனால் இந்தக் கருத்து நமக்குப் புதியதல்லதான். இந்நாட்டில் தோன்றிய எல்லா ஞானிகளும், “நான், எனது என்ற சிந்தனைகளை விட்டால்தான் அமைதி மனத்தில் தங்கும்” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் செய்தி புதியதல்ல என்றாலும், வேறு ஒரு கோணத்தில் சிந்தனையை அது இழுத்துச் சென்றது.

“நான்” “எனது” என்ற சிந்தனைகள் தனிமனிதனின் அமைதியை மட்டுமல்ல; சமுதாயத்தின் அமைதியைக் கூடக் கெடுக்கும். “தலைவர்கள்” என்றபோர்வையில், “நான், எனது” என்று செயல்பட்டு சமுதாயத்தின் அமைதியைக் கெடுப்பவர்களைப் பற்றி அல்ல இங்கு சொல்லவருவது பொதுவாக நாம் எல்லோரையும் பற்றியதுதான்.

ஓர் அடிப்படைச் செய்தி எல்லோருக்குமே தெரியும். கூட்டம் சேர்கிறஎந்த இடத்திற்கும் விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும்; இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கூட்டமாக இருக்காது. கலவர கும்பலாக மாறிவிடும்.

கூட்டமாக வாழும் மிருகங்கள் கூட தங்களுக்குள் விதிமுறைகள் வைத்துக் கொண்டுள்ளன. அந்த விதிகளை மீறாமலும் இருக்கின்றன. கூட்டமாக வாழ்ந்து கொண்டு, விதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு அதை மதிக்காமல் மீறி, மீறுவதில் பெருமை கொண்டு வாழ்வது மனிதன்தான்.

விதிகளை மீறுதல் என்பது தனிமனிதன் செயல்களாகவும் நடக்கின்றன. ஒரு கூட்டத்தின் செயல்களாகவும் நடக்கின்றன. தனிமனிதனின் மீறல் சூழலைக் கெடுக்கின்றது. இரண்டுக்குமே காரணம் “நான்” “எனது” என்பதுதான்.

நம் நாட்டின் சாலைகளைப் பாருங்கள். விதி மீறல்களின் முதல் முகவரி சாலைகள்தான். போக்குவரத்து விதி என்கிறஒன்றைஎவரும் மதிப்பதில்லை. காவலர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டார்கள். இவர்களுடன் எப்படி “வாழ்வது” என்பது அவர்களுக்கும் பழகிவிட்டது! இப்போதெல்லாம் விதிமீறாமல் வண்டி ஓட்டுபவரைப் பார்த்தால்தான் காவலர்களுக்கு கோபம் வருகிறது!

நான் சீக்கிரம் போனால் போதும், என்ன பெரியவிதி……? என்றநினைப்பும், “எந்த விதிக்கும் நான் அடிபணிய வேண்டியதில்லை”, என்று மனத்தில் ஊறிவிட்ட நினைப்பும்தான் இதற்குக் காரணம்.

இந்த நிலை ஏன் வந்தது என்பதும் நமக்குத் தெரிந்ததுதான். தலைமை நிலையில் இருப்பவர்களும், பெரும் பொறுப்பில் இருப்பவர்களும் காட்டிய வழிதான் இது! கார்களில் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்தப்பட்டிருந்தால், உள்ளே அதிகாரத்தில் இருக்கும் யாரோ இருக்கிறார் என்பதுதானே பொருள்? விதிகளுக்கு கட்டுப்பட்டு, சிவப்பு விளக்குகளுக்கு மதிப்பு தந்து, மஞ்சள் கோட்டைத் தாண்டி விலகாமல், தேவையின்றி முந்திச் செல்லாமல், உரிய வேகத்தில் ஓட்டப்படும் “சுழல் விளக்கு” வண்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் அதிர்ஷ்டசாலிதான்? அதனால்தான் விதிகளை மீறநினைக்கிறஎல்லோருக்கும் “கொண்டைவண்டி”யில் பயணம் செய்யும் ஆசை ஏற்பட்டுவிட்டது.

சாலை விதிகள் என்பது உதாரணத்திற்குத்தான். எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் அவரவர் “ஆற்றலைப் பொறுத்து” விதிமீறல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. விதி மீறலைக் கண்டிக்க வேண்டியவர்களும் தண்டிக்க வேண்டியவர்களும் அவரவர் நிலையில் விதிகளை மீறுவதால், இதற்கு இடம் காலம் எல்லை என்பதெல்லாம் இல்லாமல் போயிற்று.

அடுத்தவர் இந்த தவறைச் செய்யும்போது, “செய்பவர் யார்?” என்பதைப் பொறுத்துதான் நம்முடைய பேச்சும் செயலும் இருக்கும், தவறு செய்தவர் நம்மைவிட சாதாரணமானவர் என்றால், ஆயிரம் அறிவுரை கொடுப்போம், சமமானவர் என்றால் பக்கத்தில் இருப்பவர்களிடம் அதைப்பற்றிப் புலம்பிப் பேசுவோம். நம்மைவிட மேலான நிலையில் உள்ளவர் என்றால், உள்ளுக்குள்ளேயே சத்தம் வராமல் உளறிக் கொள்வோம். ஆனால் நாமே இப்படித் தவறுகளைச் செய்யும்போது “இதெல்லாம் பெரிய விஷயமா?” என்று சொல்லிக் கொள்வோம்.

“அடங்கத் தெரிந்தவனே ஆள்வதற்குத் தகுதியுள்ளவர்” என்பார் விவேகானந்தர். ஆனால், அத்துமீறுபவனே தலைவனாக உயர்வான் என்று ஆயிற்று சூழ்நிலை. இது நம்மை எங்கு கொண்டுவந்து விட்டுள்ளது தெரியுமா? தனித்தனியாக அத்துமீறிக் கொண்டிருந்தவர்கள், இன்று குழுக்களாக அத்துமீறுகிறோம்.

முன்பெல்லாம் மாணவர்களிடம்தான் அந்த நிலை இருந்தது. இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் தங்களுக்குள் தகராறு என்றால், இரு குழுக்களாக மோதிக் கொள்வார்கள். “நம்ம காலேஜ் பையனை அடிச்சிட்டாங்களாம்”, என்றவுடன் எல்லோருக்கும் இரத்தத்தில் தீப்பற்றிக் கொள்ளும். “இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் அந்தக் கல்லூரியில்தான் சேர்ந்திருப்போம்”, என்றெல்லாம் அந்த வயதிலே தோன்றாது! ஒரு மாணவன் தவறு செய்தான் என்று காவலர்கள் அவனைப் பிடித்தால், அந்தக் கல்லூரியே திரண்டு போராடும்.

இதுபோன்று தொடங்கியபோதே உரியவர்கள் தடுத்திருக்க வேண்டும். “தனிநபர்கள் முக்கியமல்ல. சட்டமே மேலானது. சட்டத்தின்படிதான் எதுவும் நடைபெறும். விதிகளுக்குக் கட்டுப்படுங்கள்”, என்றெல்லாம் கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டும். தங்களுக்கே உரிய சுயகாரணங்களால் பொறுப்பில் இருந்தவர்கள் இதைக் கண்டு கொள்ளவேயில்லை: அல்லது இந்தப் பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இந்தக் குழு உணர்வு இன்று மிக வளர்ந்துவிட்டது. குழுக்களாக பிரிந்து நின்று கொண்டு “நான்” என்றகுரல் கேட்கிறது விதிமுறைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பது மறுக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட அலுவலில் அல்லது நிலையில் அல்லது பிரிவில் உள்ள ஒருவர் மீது ஒரு குற்றம் சாட்டப்பட்டால், அது உண்மையா இல்லையா என்பது எண்ணி பார்க்கப்படுவதில்லை. அதே அலுவலில் அல்லது நிலையில் அல்லது பிரிவில் உள்ள அனைவரும் உடனே ஒரு குழுவாக திரண்டு “எங்களையா”? என்று கேட்கிறார்கள். இது “நான்” என்றஉணர்வில்லாமல் வேறென்ன? உடனே குழுக்களாகத் தெருவில் இறங்கிப் போக்குவரத்தைத் தடை செய்வதற்கும், “உரிமை” கேட்டுப் போராடுவதற்கும், குழுக்களாகவே, அத்துமீறுவதற்கும் என்ன காரணம்? “நாங்கள் யார் தெரியுமா? எங்களிடம் உள்ள அதிகாரம் என்ன தெரியுமா? நாங்கள் நினைத்தால் நீங்கள் எல்லோரும் அதோகதிதான் தெரியுமா? என்றமிரட்டல் இல்லாமல் இது வேறென்ன?

“சட்டத்தின் முன் எல்லோரும் சமம்” என்றுதான் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் சொல்கிறது. சட்டத்திற்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு அவரவர் வேலையை அவரவர் அத்துமீறாமல் செய்தால், சிக்கல்கள் ஏன் தோன்றப் போகின்றன? சட்டத்தை வளைத்துத் தனக்குக் கீழே போட்டுக் கொள்வது என்று பெரிய மனிதர்களும், சாதியாக, மதமாக, இனமாக, ஒரே தொழில் செய்பவர்களாக, ஒரே அலுவலில் உள்ளவர்களாக குழுக்களாகப் பிரிந்து சாமானியர்களும் நடந்துகொண்டால் இதற்கு முடிவென்ன?

“நான்” “எனது” என்னும் எண்ணங்கள் தவறு என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல. குழுக்களாகப் பிரிந்து நின்று கொண்டு குரல் கொடுக்கும் சமூகத்துக்கும்தான். முன்னது தனிமனித அமைதியைக் கெடுக்கும். பின்னது நாட்டின் அமைதியைக் கெடக்கும். முதல் குடிமகனில் தொடங்கி கடைசி குடிமகன்வரை சமமாகச் சட்டத்திற்குக் கட்டுப்படும்போதுதானே “நாம்” என்ற அமைதி கிடைக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *