சேகரித்துக் கொள்

– சென்னிமலை தண்டபாணி

சேகரித்துக் கொள்…
சின்னச் சின்ன
மகிழ்ச்சிகளை…
உன் பாதையில்
அவை…

பரிணமிக்கும்
மலர்களாக…

சேகரித்துக் கொள்…
சின்னச் சின்னத்
தோல்விகளை…
அவை…
அனுபவக் கிண்ணங்களாய்
அமுதூட்டும் உனக்கு..
உற்சாகத்தோடு
பயணம் தொடர…

சேகரித்துக் கொள்…
திசைகளெங்கும்
விரிந்து கிடக்கும்
உறவுகளை
உன்
வெற்றி நாளில்
அவை
பூங்காத்துகளோடு
புறப்பட்டுவரும்…

சேகரித்துக் கொள்..
சின்னச் சின்னப்
படிப்பினைகளை
அவை… நீ
எட்டிப் பறிக்கும்.. பெரும்
வெற்றிக் கனிகளுக்கான
விதைகள்…

அமரா முயற்சிகளால்
அளக்கப்படுகிறது
உன் உயரம்…
நீ…
முயன்று… முயன்று
உயர்த்திக் கொண்டே போ…
உன்
உயரத்தை…
சிகரங்கள்.. உன்
பாதத்தைத் தொடப்
பரபரக்கட்டும்…

கண்ணாமூச்சி
காட்டும்
புகழ்குறித்து
எதற்குப் படவேண்டும்
ஏக்கம்..?
விதைகளைத்
தூவிக் கொண்டே நட…
ஒருநாள்..
நீ…
நடந்த பாதையெங்கும்
பூத்துக் குலுங்கும்
நந்தவனங்கள்…

முயற்சிப்பவனின்
மூச்சுக் காற்றில்..
தன்
அநிசயங்களையெல்லாம்
அள்ளிக் கொண்டு
மூடிய கதவு திறந்து
முகங்காட்டுகிறது
இயற்கை..
அதன்…
அதரத்தில்..
நீ இரு
ஆயிரம் முத்தங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *