யாரோ போட்ட பாதை

தி.க. சந்திரசேகரன்

விழுவது எழுவதற்கே!

காட்சி 1
நான் ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதில் தவறி விழுந்துவிட்டேன். மேலே வருவது கடினமாக இருக்கிறது. சிரமப்பட்டு மேலே வந்துவிட்டேன். ஆனால் தவறு எனதல்ல!

காட்சி 2
நான் மீண்டும் அதே சாலையில் செல்கிறேன். அதே பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டேன். மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்துவிட்டேன். தவறு என்னுடையது தான்.

காட்சி 3
நான் மீண்டும் அதே சாலையில் செல்கிறேன் அதே பள்ளத்தில் விழுந்துவிட்டேன். அந்த அளவு சிரமப்படாமல் வெளியே வந்துவிட்டேன். ஆனால் நிச்சயமாக தவறு என்னுடையது தான்.

காட்சி 4
நான் மீண்டும் அதே சாலையில்தான் செல்லுகிறேன். ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் சாலையின் மறுபக்கம் செல்லுகிறேன். பள்ளத்தில் விழவில்லை!

காட்சி 5
நான் வேறு சாலையில் செல்லுகிறேன்.

– சரினா. ஏ.பக்கர் என்ற மலேசிய பெண் எழுத்தாளர், தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருந்த குட்டி உருவகக் கதைதான் இது. இதுவும் அவர்கள் எழுதியது அல்ல! சிறுவயதில் அவர்கள் கேட்ட கதை!

இந்த கதை (?) அல்லது நிகழ்ச்சி நம்மைப் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதில் நாம் பல பாதைகளில் செல்லுகிறோம். ‘எந்தப் பாதைகள் எப்படி இருக்கின்றன?’ என்பதுதான் இக்கட்டுரைத் தொடர்களின் நோக்கம்.

நாம் செல்லுகின்ற பாதைகள் எல்லாம் சிறப்பான பாதைகள் என்று உறுதிகூற முடியாது. எல்லாமே, 4 வழிப் பாதைகளாக இருக்கவும் வாய்ப்பில்லை. சில பாதைகள் சரியில்லாமலிருக்கலாம்.

காட்சி 1 இல் இப்பாதையில் செல்லுகிற நான் ஓரத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தில் விழுகிறேன். அந்த இடத்தில் பள்ளம் இருப்பதே தெரியாமல் ஏதாவது மூடிக்கொண்டிருக்கலாம். அல்லது பள்ளம் இருக்கும் என்ற எண்ணம் கூட இல்லாமல் நேராகப் பார்த்தபடி நடந்து, கால் இடறி பள்ளத்தில் விழுந்திருக்கலாம், விழுந்ததற்குப் பெரியதாக என்னைக் குற்றம் சொல்ல முடியாது.

விழுந்துவிட்ட நான் பெரும்பாடுபட்டு வெளியே வந்துவிட்டேன்.

வாழ்க்கையில் பலரும் ஒரு தவறை செய்கிறார்கள்; ஏதோ ஒன்றில் வீழ்கிறார்கள் அல்லது சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு முழுக்காரணமும் அவர்கள் அல்ல. ஒரு நல்ல செய்தி, அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வந்துவிடுகிறார்கள்.

காட்சி 2-ல் நான் அதே பாதையில் இரண்டாம் முறையும் செல்லுகிறேன். அதே பள்ளத்தில் விழுகிறேன். ஆனால் சிரமப்பட்டு வெளியே வருகிறேன். தவறு என்னுடையதுதான்.

அதே பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலையில் நாமிருந்திருக்கலாம். அதே பள்ளம் வருகிறது. பள்ளம் இருப்பது தெரிந்தும் அதில் போய் விழுந்தது என்னுடைய தவறுதானே! என்னதான் நடந்துவிடும் என்ற அலட்சியம் காரணம்.

காட்சி 3ல் நான் செய்த தவறையே மீண்டும் செய்கிறேன். மூன்றாவது முறையாக விழுந்தது பெரிய தவறுதான். ஆனால் விரைவிலேயே வெளியேறியது ஓர் ஆறுதலான செய்தி. தவறு செய்வதில் ஒரு கவர்ச்சி இருக்கின்றது. அது மனிதனை மீண்டும் தவறு செய்ய இழுத்துக் கொண்டே இருக்கும். நல்ல செய்திகள் ஈர்ப்பதைவிட, கெட்ட செய்திகள் அதிகமாக ஈர்ப்பதால், கெட்டவைதான் அதிகமாக உலாவரும். அதனால்தான் திரையரங்குகள், மதுக்கடைகள், சூதாட்ட விடுதிகள், சிகரெட், பீடா போன்றவை விற்பனையாகும் கடைகள் – போன்ற இடங்களில் கூடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கின்றன. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோயில்களில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை, நூலகங்களில் உள்ளவர்கள், ஆன்மிக சொற்பொழிவுகளில் அமருவோர் இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை நாம் அறிவோம். ஏன் அன்றாடம் தொலைக்காட்சிப் பெட்டியின் முன், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளின் முன் அமருவோரின் எண்ணிக்கை எத்தனை கோடிகளைத் தாண்டும்?

தீய செய்திகள் கவர்ச்சிகரமாக மனிதர்களை இழுப்பதால், அதிலே ஈர்க்கப்பட்டு நான் மூன்றாவது முறையாக விழுந்துவிட்டேன்.

காட்சி 4ல் நான் அதே பாதையில்தான் செல்லுகிறேன். அந்தப் பள்ளம் வருகின்றது. ஆனால் மிகுந்த எச்சரிக்கையோடு நான் அடுத்த ஓரத்தில் சென்று தப்பிவிட்டேன். தவறு நடக்க வாய்ப்பிருக்கும் சூழ்நிலையிலும், தப்பித்துச் சென்றது மகிழ்ச்சி அளிப்பதுதான்.

பல தொழிற்சாலைகளில் ஊதியம் வழங்கும் நாளின்போது, தொழிற்சாலைக்கு வெளியே, சில தொழிலாளர்களின் துணைவியர், கணவன் வெளியே வரட்டும் என்று காத்திருப்பதைக் காணலாம். ‘சம்பளப் பணத்தோடு, நேராக மதுபானக் கடைக்கு சென்றுவிடப் போகிறாரோ’ என்ற அச்சத்தில் அவர்கள் காத்திருக்கிறார்கள். பல நேரங்களில் கடன் கொடுத்தவர்கள் காத்திருப்பதையும் காணலாம்.

காட்சி 5ல் நான் வேறு பாதையில் செல்லுகிறேன். எந்த வகையிலும் பள்ளத்தில் விழ வாய்ப்பில்லை.

புதிய பாதையில் என் பயணம் வசதியாக சென்று கொண்டிருக்கிறது.

வடமொழியில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்லுவார்கள்.

‘புத்திசாலிகள் தாங்கள் செல்லும் வழியில் சேறு சகதியிருந்தால் அதில் காலை வைக்காமல், சேற்றைச்சுற்றி வேறு பாதையில் சென்று விடுவார்கள்’.

வாழ்க்கைப் பாதையில் இப்படிப்பட்ட பள்ளங்கள் வருவது இயற்கை; அதில் விழுவதும் இயற்கை. ஆனால்,

  • விழுந்தவுடன் எழுகிறோமா?
  • எழுந்தபிறகு பாடம் கற்றுக்கொள்கிறோமா?
  • பாடம் கற்றுக் கொண்ட பிறகு பாதையை மாற்றிக் கொள்கிறோமா?

– மனிதர்களின் வெற்றி இந்த 3 கேள்விகளிலும் அடங்கியிருக்கின்றது என்றால் மிகையாகாது.

ஒரு சராசரி மனிதன் அன்றாடம் எந்தப் பள்ளங்களில் விழலாம் என்று பார்க்கலாம்.

• அதிகமான தூக்கம்

• அதிக நேர தொலைக்காட்சிப் பார்வை

• தேவையில்லாத பத்திரிகைகள் – நூல்கள்

• அரட்டை

• ஊர் சுற்றல்

• மற்றவர்களைப் பற்றி விவாதம் – கேலி – கிண்டல்

• அதிகமாக உண்ணுதல்

• ஆபத்தான உணவு

• புகை

• மது

• சூதாட்டம்

• தவறான உறவுகள்

• தவறான நண்பர்கள்

• குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சிகள்

• இலஞ்சம்

• கடன் வாங்குதல்

• ஆடம்பரச் செலவுகள்

• அதிகநேரம் உழைப்பது

• பொருளாதாரக் கட்டுப்பாடின்மை

• அதிக பக்தி

• அரசியல் ஈடுபாடு

• திரைப்படங்கள்

– இப்படி ஒரு பட்டியல் போடலாம். நீங்களே உட்கார்ந்து உங்களுக்கான, நீங்கள் இடறி விழும் பள்ளங்களைப் பற்றிய பட்டியலைப் போடலாம். சில நேரங்களில் நாம் செய்கின்ற தவறு நமக்குத் தெரியாது. உங்களுடைய மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் அக்குறைகளைச் சரியாகச் சுட்டிக் காட்டுவார்கள்.

இந்தப் பட்டியலிலிருந்து உங்கள் குறைகள், பலவீனங்கள், இடறி விழும் பள்ளங்கள் உங்களுக்குப் புலனாகும்.

இதற்குமேல் அந்தப் பள்ளங்களைச் சுற்றிச் செல்லுங்கள்; அதைவிட மிகவும் சிறந்தது, வேறு வழியில் சென்று விடுவதே!

இதே போன்று குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஏதாவது ஒரு அமைதியான இடத்திற்குச் சென்று உட்கார்ந்து தனித்தனியாக அவரவர்கள் இடறி விழும் பள்ளங்களை அவர்களே அடையாளம் காட்டி பட்டியல் தயாரிக்கலாம். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் முன்னால், துணிச்சலாக அந்தப் பட்டியலை படித்து விட்டு, எதையெல்லாம் தவிர்ப்போம் – எவற்றையெல்லாம் விட்டுவிடுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி கூறலாம்.

அத்துடன் குடும்பமாக, எவற்றையெல்லாம் தவிர்ப்போம் என்றும் முடிவெடுக்கலாம்.

இதையே நீங்கள் ஒரு தொழிலதிபராக, அல்லது வணிகராக அல்லது ஓர் அலுவலக அதிகாரியாக இருந்தால் உங்களுக்கென்று, தனியாக இடறிவிழும் பட்டியலைத் தயாரிக்கலாம். அத்துடன் பணியாற்றுபவர்களை அமரவைத்து பல்வேறு தலைப்புகளில் தொடர் விவாதங்களை நடத்தி எங்கெல்லாம் தவறிழைக்கிறோம், தடுக்கி விழுகிறோம் என்று கண்டறியலாம். பிறகு, அவற்றிலிருந்து எப்படி, எவ்வளவு விரைவில் வெளியேறலாம் என்பதைத் தீர்மானிக்கலாம் எடுத்துக்காட்டாக, தவறி விழக்கூடிய இடங்கள்…..

தரம்

விலை

வாடிக்கையாளர் சேவை

பொருள்களை அடுக்கிவைத்தல்

நெறிமுறைகள்

பொருளாதார நடவடிக்கைகள்

உற்பத்தி

விளைவுகள்

போட்டியாளர்கள்

புதிய பொருட்கள், வழிமுறைகள்

விபத்துக்கள்

பணியாற்றுபவர்களின் மன இறுக்கம்

தொழிலாளர்கள் – வேலையை விட்டு விலகுதல்

ஊக்கமூட்டுதல்

இப்படிப்பட்ட பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டு ஆராயும்போது, நிறைய குறைபாடுகளைக் கண்டறியலாம், வெளியே வரலாம்!

பில்கேட்ஸ் அவர்கள் தன் அலுவலகத்திற்குள் நுழையும்போது, “இன்றைய கெட்ட செய்தி என்ன?”. ‘ரட்ஹற் ண்ள் ற்ட்ங் க்ஷஹக் ய்ங்ஜ்ள் ற்ர்க்ஹஹ்?’ என்ற கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பாராம்!

அவருடைய வெற்றிக்குக் காரணம், ‘கெட்ட செய்தியைக் கேட்டறிந்த பிறகு அதை நல்ல செய்தியாக மாற்றுவதே!’

பட்டுக்கோட்டையார் பாடல்களில் ஒன்றை நினைவு கூர்வது சிறப்புடையது.

“தவறு என்பது தவறிச்செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது;
தவறு செய்தவன் திருந்தியாகணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்”

ஒரு சிந்தனையாளர் கூறுகிறார்,

” கீழே விழுவது தவறில்லை;
கீழேயே விழுந்துகிடப்பதுதான் தவறு!”
நாம் கூறலாம்,

கீழேயிருந்து எழுந்த பின் விழமுடியாத பாதையில் விரைந்து செல்லலாமே!
(வளரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *