திரைகடலோடு திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியன்

ஒருமுறை நண்பர் கரும்புநாதன் அவர்கள், சுவிஸ் நாட்டில் ‘வின்டர்தூர்’ அருகில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்களாக அந்தக் கோவில் அங்கே உள்ளது. தொடர்ந்து ‘ஹோமம்’ மாதிரி வளர்த்து, அது அணையாமல், தினமும் மந்திரம் ஜெபித்து பூஜை செய்கிறார்கள். இதைச் செய்பவர்கள் அனைவருமே சுவிஸ் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள். அங்கு எல்லா

முக்கிய இந்துக் கடவுள்களின் சிலைகள், பெரிய படங்கள் உள்ளன. நமது தமிழ்க் கடவுள் முருகன் படம் உட்பட.

இது ஒரு தனியான கட்டிடத்தின் மூன்றோ, அல்லது நான்காம் தளத்தில் அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போது ‘கோபுரம்’ மாதிரி அமைப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நண்பர் கரும்புநாதனிடம் அதைப்பற்றிக் கேட்டபோது, “அந்தக் கோபுரம் கட்டிடத்தின் நுழை வாயிலில் வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசாங்கம் அதை வெளியே வைக்க அனுமதிக்காததால், உள்ளே வைத்துள்ளோம்” – என்ற பதில் கிடைத்தது. “அதற்கு என்ன காரணம்?” – என்று வினவினேன்.

“இங்குள்ள பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் அவர்களது கடவுள்களை வழிபடுவதென்றால் அரசாங்கம் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், பல மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர். அனைவரும் தங்கள் கோயில்கள், சடங்குகள் என்று ஆரம்பித்தால், தேவையற்ற பிரச்சினைகள் கிளம்பி, வசிப்பவர்களுக்கு இடையூறாக இருப்பதோடு, நாட்டுக்கும் அனாவசியமான பிரச்சினை. சட்டம் ஒழுங்கு கெடும். அதனால் நீங்கள் உங்கள் வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட உரிமையை மதிக்கிறோம். ஆனால் வெளியில் அல்ல. பெரும்பான்மையினரை மதித்துச் சிறுபான்மையினரையும் மதித்து – இப்படிப்பட்ட கட்டுப்பாடு, இது நல்லதுதானே” – என்றார்.

துபாய் நகரம். ஒருமுறை ‘ரம்ஜான்’ சமயத்தில் சில நாட்கள் அங்கே இருக்க நேரிட்டது. உடனிருந்த நண்பர் சொன்னார். இங்கே ரம்ஜான் நோன்பு முடியும் வரை பொது இடங்களில் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மாலை ஆறுமணிக்குமேல் உணவு விடுதிகள் திறக்கும். அப்போது உணவு உண்ணலாம். வெளிநாட்டவர்கள், வேற்று மதத்தவர்கள் எல்லார்க்கும் இது பொருந்தும். அவர்கள் காலை உணவு, மதிய உணவு சாப்பிடுவது என்றால், தங்களது அறைக்குள் வைத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை மீறுபவர்களுக்குத் தண்டனை உண்டு. அடிப்படையாகப் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் நம்பிக்கையையும், சம்பிரதாயங்களையும் மதித்து, அதே சமயம் மற்றவர்களுக்கு வசதியும் கொடுத்து, அந்த நாட்டு சட்டத்தை அவர்கள் சரியாகக் கடைபிடிக்கின்றார்கள்.

எல்லா நாடுகளிலும் அவரவர் மதங்களை, அவரவர் நம்பிக்கைகளைப் பெரும்பான்மை மக்களின் மதத்திற்கேற்ப, சிறுபான்மையினருக்கும் வழிவகுத்து எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல், மதக்கலவரங்கள் இல்லாமல் வாழுகின்றார்கள். தொழிலுக்கு எந்தவகையிலும் இடையூறு ஏற்படுவதில்லை.

எங்களது நிறுவனத்தில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதால், நாங்கள் ஆயுத பூஜை, விசேஷ நாட்களில் பூஜை, திறப்பு விழாக்களில் கணபதி ஹோமம் என்றெல்லாம் செய்வோம். அப்போது தீபம் காட்டி அனைவருக்கும் தீர்த்தம் கொடுத்து, பிரசாதம் வழங்குவோம். எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் கிறிஸ்த்துவர்கள் தீபத்தை வணங்கவோ, தீர்த்தம் வாங்கவோ, பிரசாதம் பெற்றுக்கொள்ளவோ மாட்டார்கள். விசாரித்தால் நாங்கள் எங்கள் மதச் சடங்குப்படி இதை வாங்க மாட்டோம் என்பார்கள். நாங்களும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிர்ப்பந்திக்க மாட்டோம்.

அதே சமயத்தில், இத்தாலி, சுவிஸ் நாட்டிலிருந்து எங்களது கூட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள், வரும்போது, அவர்கள் வரும் சமயம் பூஜைகள் இருந்தால் அவர்கள் அதில் உற்சாகமாகவும், முழு ஈடுபாட்டோடும் கலந்து கொள்வார்கள். தீபத்தை வணங்குவார்கள். தீர்த்தம் வாங்குவார்கள். பிரசாதம் பெற்று உண்டு மகிழ்வார்கள். சிலரிடம் முன்கூட்டியே, எங்களது பூஜையில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்டபோது, நிச்சயம் கலந்து கொள்வோம். மகிழ்வோடு கலந்து கொள்வோம் – எனக் கூறினார்கள். அவர்கள் எதையும் வேண்டாமென்றோ, அல்லது தடை செய்யப்பட்டது என்றோ, கூறவில்லை. அதைப்பற்றிப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, ஒவ்வொரு கடவுளின் படத்தைக் காட்டி, பூஜைக்கு விளக்கம்கேட்டு ஆச்சரியப்பட்டதோடு, அவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கிறது என்று மகிழ்ந்தார்கள்.

ஒருமுறை எங்கள் ஆதிநாராயணபுரத்தில், பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டலபூஜை நாற்பத்தெட்டு நாள் நடந்தபோது ஒருநாள், எங்களது அமெரிக்க நிறுவனத்திலிருந்து அதிகாரி ஒருவர் வீட்டுக்கு விருந்துண்ண வந்திருந்தார். உடன் வந்திருந்த இன்னொரு இந்தியரிடம் கோவில் பற்றியும், மாலை பூஜைக்குச் செல்வது பற்றியும் எனது தம்பி ஜெகநாதன் பேசிக்கொண்டிருந்தார். எங்களது மும்பைக் கிளையின் மேலாளர் சுரேஷ் நம்பியார், ‘நாங்கள் அனைவரும் கோவிலுக்குச் செல்கின்றோம். வருகின்றீர்களா?’ என்று அமெரிக்க நண்பரைக் கேட்க, அவரும் சம்மதிக்க அவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். சுமார் நூறுபேர் பெண்கள், உள்ளூரிலுள்ள பெரியவர்கள், குழந்தைகள் என நல்ல கூட்டம். அமெரிக்கர் ஒருவர் கோவிலுக்கு வந்திருக்கின்றார் என்றவுடனேயே தலைமைப் பூசாரியே வந்து அவரை அழைத்துச் சென்றார். காலணி, சாக்ஸ் எல்லாம் கழற்றி வைத்துப் பாதம் கழுவி உள்ளே சென்ற அந்த அமெரிக்கருக்கு துளசிமாலை அணிவித்து, பெருமாள் கோவிலாதலால் திருநாமம் நெற்றியில் அணிவித்து, கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பூஜைகளை முடித்துப், பொங்கல் சுண்டல் பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

கோயிலில் நிறையப் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அந்த நண்பர் அமெரிக்கா சென்று மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி.

“ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியில் திளைத்தேன். மறக்கமுடியாத அனுபவம். இந்துக் கடவுள்களைப் பற்றியும், கோயில் பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்டேன். மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியா வர விரும்புகின்றேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும், உங்கள் கிராம மக்களுக்கும் நன்றி”.

கற்றவர்கள், தொழில் புரிவோர், பலநாடுகளுக்குச் செல்பவர்கள் – இவர்களுக்கு “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. உணவு, உடை, நடைமுறைப் பழக்க வழக்கங்கள் எப்படி மாறுபடுகின்றனவோ, அப்படி அவர்களது மதம், சடங்குகள் மாறுபடுகின்றன. ஒப்பிட்டு நோக்கி அவர்கள் குறைசொல்வதோ, பழிப்பதோ இல்லை.

ஆனால், நமது நாட்டில் நடப்பது என்ன?

மதமாற்றங்களின் பெயரால் கலவரங்கள், கொலைகள், மாற்று மதக்கடவுளைப் பற்றிய இழிவான கருத்துகள், நாத்திகவாதம் பேசுபவர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள், சரியான அரசியல் அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள், தேர்தலுக்கு உள்ள வாக்கு வங்கிகளில் எங்கே குறை வந்துவிடுமோ என இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள், தங்களது சொந்தக் கருத்துகளை மட்டுமே நியாயப்படுத்தி உண்மையை உதாசீனம் செய்யும் பத்திரிகைகள், ஊடகங்கள் – எல்லாம் சேர்ந்து எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சத்தை தினமும் ஏற்படுத்தித் தொழில் அமைதியையும், நம்பிக்கையையும் குறைத்துவிட்டன.

‘திரைகடலோடித் திரவியம் தேட’ வேண்டுமெனில், இந்த வேறுபாடுகளை நாம் மனதில் கொண்டுதான் ஆக வேண்டும். ஒவ்வொரு நாட்டின் அடிப்படை மத உணர்வுகளைப் புரிந்துகொண்டு, எந்தக் காரணத்தைக் கொண்டும் யார் மனதும் புண்படா வண்ணம் உரையாடல்களை, செய்திகளைக் கையாள வேண்டும்.

மதங்களுக்கும் உணவுப் பழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதால் சில சமயங்களில் நகைச்சுவையாகச் சிலர் கிண்டல் செய்தாலும், அதை தனிப்பட்ட முறையில் உணர்வுபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து மறந்துவிட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரையுமே மதவிஷயங்களில் கேலியோ, கிண்டலோ நாம் செய்யக்கூடாது.

நிறைய பேர் வெளிநாடு சென்று வாழ்ந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். மேலோட்டமாக இந்தியா வரும்போது, இங்குள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி, ஏதோ மேலைநாட்டவர்தான் அற்புதமான வாழ்க்கை வாழ்வதாகக் கூறிக்கொள்வார்கள். அந்த நுனிப்புல் மேய்ந்த கருத்துக்களின் அடிப்படையில் இங்கிருப்பவர்களும், ஆன்மிகத்துக்கும், பகுத்தறிவு மற்றும் சிலரது நம்பிக்கைகளின் மேலுள்ள பற்றுக்கும் வேறுபாடு தெரியாமல் முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்று கூறி ஒருவிதமான அவநம்பிக்கையையும், தாழ்வு மனப்பான்மையையும் விதைத்துவிடுகின்றார்கள்.

ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நமது சடங்குகளும், சம்பிரதாயங்களும் நமது முன்னோர்கள் செய்துவந்ததைத் தொடர்ந்து செய்துவருவதால், உள்ளர்த்தம் தெரியாமல் மேல்போக்காகச் செய்யப்படுபவை. அதனாலேயே அவை மூடத்தனம் ஆகிவிடாது.

விருப்பமில்லாதவர்கள்மீது எதையும் யாரும் திணிப்பதுமில்லை. ஆனால், உலகிலுள்ள எல்லா விமானங்களிலும், குறிப்பிட்ட நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஓட்டல்களிலும் 13-ஆம் எண் இருக்கைகளோ, 13-ஆம் எண் மாடிகளோ கிடையாது. இது என்ன பெரிய பகுத்தறிவா? இது அவர்களது நம்பிக்கை. நாமும் சிரித்துக்கொண்டே அதை சீரணித்துவிடுகின்றோம். அவர்கள் அச்சடிக்கும் புத்தகங்களிலும், 13-ஆம் எண் இருக்கத்தான் செய்கின்றது. படிக்காமலோ அல்லது அந்தப் பக்கத்தைக் கிழித்துவிட்டோ யாருமே செல்வதில்லை.

திரைகடல் தாண்டும்போது, இப்படிப்பட்ட மதம் சம்பந்தப்பட்டவற்றில்கூட நீங்கள் உங்கள் பாரம்பரியத்தை, மதசடங்குகளை, அடையாளங்களை, பழக்க வழக்கங்களை – உயர்வாகவே மதித்துப் பேசுங்கள். மற்றவர்களது எந்தப் பழக்க வழக்கத்தையும் குறைத்துப் பேசாதீர்கள். எல்லாம் சமமே!

Leave a Reply

Your email address will not be published.