– தே. சௌந்தர்ராஜன்
“நல்லதோர் வீணை செய்தே- அதை
நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ?”
– பாரதி
நாம் நம் உடலை சரியான முறையில் பராமரித்தால் (அசம்பாவிதங்கள் ஏதும் நடவா விட்டால்) நமது வாழ்நாட்களை சுமாராக நூறு ஆண்டுகள் வரை கூட்ட முடியும்.
ஆனால் இந்த நூறாண்டுகள் வாழ்வை எப்படி ஆயிரம் ஆண்டுகளாக மாற்றமுடியும்?
பழைய (VCR) வீடியோ கேசட் ரெக்கார்டர் மூலமாக வீடியோ கேசட்டில் (VHS) மூன்று மணிநேரம் படங்களை பதிவு செய்ய முடியும். ஆனால் அதே ஒளி நாடாவை Long play முறையில் சில வீடியோ கேசட் ரெக்கார்டரில் 12 மணி நேரம் பதிவு செய்யவும், படம் பார்க்கவும் (play) செய்யவும் முடியும்.
இது எப்படி முடிகிறது? அந்த Long play ரெக்கார்டர் மற்ற ரெக்கார்டுகளைவிட நான்கு மடங்கு மெதுவாக சுழலுகிறது. அப்போது அந்த கேசட்டின் பதிவுத் திறன் நான்கு மடங்கு கூடுகிறது.
அதுபோல வாழ்வின் வேகத்தை குறைத்து வாழ்நாளை நீட்ட முடியுமா? முடியாது, ஆனால் வாழ்வின் ஆழத்தை அதிகப்படுத்தி வாழ்வை நீட்ட முடியும்!
ஓர் உழவன் நிலத்தை உழுகிறான், அவன் கலப்பையை மெதுவாக பிடித்து நிலத்தை உழும்போது நான்கு முறை உழவேண்டிய அந்த இடத்தில் கலப்பையை நான்கு மடங்கு பலத்தோடு அழுத்திப் பிடித்தால் ஒரே தடவையில் நான்கு முறை உழுத ஆழத்தை பெறமுடியுமல்லவா? இப்படி வாழ்வையும் ஆழ்ந்து வாழ வேண்டும்.
1. ஆழமாக வாழ்வது எப்படி?
நான் ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி. இது பாட்ஷாவின் பஞ்ச் டயலாக்காக இருந்தாலும் இது ஒரு தொன்மை வாய்ந்த பழம் தமிழ் சொற்றொடர். நூறு தரம் மேலோட்டமாக சொல்வதைவிட, தெளிவாக, உறுதியாக அழுத்தமாக ஒரே ஒரு தரம் சொன்னால் ஆயிரம் தடவை சொல்வதைவிட அழுத்தமாக மனதில் பதியும்.
புரூஸ்லி ஒரு முறை குத்தினால் நாம் நூறு முறை குத்துவதை விட பலம் வாய்ந்ததாக இருக்குமல்லவா?
நாம் எந்த ஒரு சிறிய செயலைச் செய்தாலும் அதை இதற்கு முன் ஆயிரம் தரம் செய்திருந்தாலும் இப்போதுதான் முதல் முறையாக செய்வது போல அந்தச் செயலை நமது முழுமனதையும், முழு அறிவையும், முழுபலத்தையும், முழுஉணர்வையும், முழு இதயத்தையும் ஈடுபடுத்தி செய்ய வேண்டும். அப்போது அதில் புதிய புதிய யுக்திகள் புலப்படும்.
நாம் எந்த சுவையைச் சுவைத்தாலும் இதுதான் கடைசி என்ற உணர்வோடு ஆழமாக ரசிக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு சுவையும் நன்கு ரசிக்கப்படும்.
விவேகானந்தர் புத்தகங்களை படிக்கும்போது இதுபோன்ற ஈடுபாட்டுடன் படிப்பார். எனவேதான் அவரது நினைவுத் திறன் ஆச்சரியப்படும்படி இருந்தது.
நண்பர் ஒருவரை நாம் சந்திக்கிறோம். அவர் பழையவராகவோ, புதியவராகவோ இருக்கலாம் (இவரை சந்திப்பது நமக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என்று எண்ணி) அவரிடம் ஆழ்ந்த புன்னகையுடன் முழு ஈடுபாட்டுடன் தன் முழு அன்பையும் அவர் மீது கொட்டி உற்சாகமாக உரையாட வேண்டும்.
ஒரு நாள் பழகிய அந்த நட்பு, ஒரு மணி நேரம் பேசிய அந்தப் பேச்சு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி நினைவில் நிற்பதாக இருக்க வேண்டும்.
இப்படி ஆழ்ந்து செயலாற்றும்போது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த வாழ்வு நமக்கு கிடைக்கிறது.
நாம் ஏன் ஆழ்ந்து வாழ்வதில்லை?
அநேகர், வாழ்வு எத்தனை பெரிய வாய்ப்பு என்பதை காலத்தே உணராதவர்களாக இருக்கிறார்கள். வாழ்வின் அருமை அவர்களுக்குப் புரிவதில்லை.அநேகருக்கு வாழ்க்கை சலிப்பு தட்டுவதாக இருக்கிறது.
அவர்கள் இருக்கும் நாட்களை ஓடவிட்டுக்கொண்டு, ஓடிய நாட்களை எண்ணிக்கொண்டு, வரவேண்டிய நாட்களை எண்ணி, இருக்கும் நாட்களை தள்ளி வாழ்ந்தால், வாழும் வாழ்க்கை நூற்றாண்டுகளாக இருந்தாலும், அது பத்து ஆண்டுகள் கூட வாழ்ந்த ஒரு திருப்தி இருக்காது.
நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் அந்நியராக பார்க்கிறோம். ஆனால் தூரதேசம் போய்விட்டால் அங்கு நம் மொழி பேசும் யாவரும் நமது உறவினர்கள் போல் தோன்றுகிறார்கள். அதுபோலவே வாழ்க்கையின் ஓரத்திற்கு நாம் போகும்போது, அந்த வேளையில் அந்த நாட்களில் வாழ்வின் அருமை நமக்கு புரிய வருகிறது.
2. அடர்த்தி அதிகப்படட்டும்
நம்மில் அநேகர் வாழும் நாட்களில் அடர்த்தி இல்லை. அநேக நாட்கள் வெற்று நாட்களாக கழிகின்றன. வாழ்வில் மாமூலமான வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சிறந்த, திட்டமிட்ட செயல்பாடுகளும், சாதனைகளும், கொண்டாட்டங்களும், மகிழ்வான நாட்களும் அதிகமாக வரும்போது வாழ்க்கை கனப்படுகிறது. வாழ்க்கை ஆழமாக வாழப்படுகிறது.
சிலருக்கு வருடத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் சுபதினங்களாகவும், இன்னும் சிலருக்கு மாதத்தில் ஒரு நாள் சுபதினமாகவும். இன்னும் சிலருக்கு வாழ்க்கையிலேயே சில நாட்கள்தான் சுபதினங்களாகவும் காணப்படுகிறது.
ஆனால், அறிஞர்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் திருநாளே. அவர்கள் தங்கள் நாட்களை மகிழ்ச்சி
மிக்கதாக மாற்ற, எதற்காகவும், யாருக்காகவும் காத்து இருப்பதில்லை. தங்கள் ஆர்வம் மிக்க உழைப்பால் மகிழ்வு நிறைந்த வாழ்வு வாழ்கிறார்கள்.
3. உயிர் துடிப்புடன்
நாயின் சராசரி வாழ்வு 12 ஆண்டுகள். மாடுகளின் சராசரி ஆயுள் 20 ஆண்டுகள் யானையின் சராசரி ஆயுள் நூறு ஆண்டுக்கு மேல். ஆமையின் ஆயுள் 300 ஆண்டுகள். மனிதன் வாழ்வு எண்பது அல்லது தொண்ணூறு ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் நம்மில் அநேகர் இருபத்தைந்து அல்லது முப்பது வயதில் மரித்து போகிறார்கள். அதாவது அதன்பின் அவர்கள் Zombia என்று சொல்லக்கூடிய பாதி மரித்த நிலையில் நடைபிணமாக அலைகிறார்கள். மனிதர்களில் அநேகர் ஏதோ பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு சந்திப்பில் நின்றுகொண்டு நாம் மனிதர்களை கவனித்துப் பார்த்தால் புரியும். முப்பதை தாண்டிய முகங்களை, அவர்கள் நடைகளை பார்த்தால் தெரியும். துள்ளல் நடையில்லை, உயிர் துடிப்பான செயல் இல்லை. தொங்கிப் போன முகங்களுடன் தளர்ந்து போன நடையுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கை ஒரு தண்டனை. அதை வாழ்ந்து தீர்க்க வேண்டுமென்றார் ஆதி சங்கரர். அதுபோலவே முப்பதை கடந்தவர்களில் அநேகருக்கு வாழ்க்கை ஒரு தண்டனைபோல காணப்படுகிறது. வெளிவர முடியாத ஒரு நீர் சுழலில் சிக்கி தவிக்கும் தோணியைப் போல அவர்கள் வாழ்வை பார்க்கிறார்கள்.
கடக்க முடியாத நீண்ட பாலைவனத்தில் சுமக்க முடியாத சுமைகளை சுமந்து கொண்டு நடக்க முடியாமல் தளர்ந்து நடக்கிறார்கள்.
அவர்கள் வசந்த வாழ்வு செத்துப் போய் விட்டது. அவர்கள் ஆசைக்கனவுகள் வாடிய மலர்களை
போல கருகிவிட்டன. எல்லாம் முடிந்து போனது. இருக்கும் நாட்கள் சுமைகள். தண்டனைக் காலங்கள். அவைகளை கடந்து சென்றால் போதும், காலம் தள்ளினாலே போதும், என்ற உணர்வோடு வாழ்கிறார்கள்.
சிந்தித்து மிகத் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகள் என்ற அந்த சுழலில் இருந்து வெளிவருவோம். நாம் சுமக்கும் அந்த சுமையை நம்மை படைத்தவனிடம் ஒப்படைத்து விட்டு நம்பிக்கையோடு, உற்சாகத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்வோம்.
4. மிச்சமில்லாமல்
தாய்மார்கள் வடை சட்டியில் எண்ணெய் ஊற்றி வடை சுடுகிறார்கள். வெந்துவிட்ட வடையை கரண்டி கொண்டு எடுக்கும்போது சில துணுக்குகள் எண்ணெயில் சிதறிவிடுகின்றன. அந்த பிசிறுகளை முழுவதுமாக எடுத்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்த பிசிறுகள் எண்ணெயில் கிடந்து கரிந்து பின்னால் வரும் வடைகள் மீது ஒட்டிக் கொள்ளும், எண்ணெயும் கருகிப்போகும்.
நாம் சரியாக வாழாமல் கடந்துபோன வாழ்க்கை அந்த பிசிறுகள், அதன் நினைவுகள் அந்த மிச்ச சொச்சங்கள் ஆவியைப் போல இப்போதும் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுக்கின்றன.
நாம் சாப்பிட்டுவிட்டு போட்ட எச்சில் இலையை நாம் எட்டிப் பார்ப்போமா? நமது கடந்த காலம்
அந்த எச்சில் இலையைப் போன்றது. நாம் ஒரு ஆற்றாமையுடன் ஒரு ஏக்கத்துடன் இப்போதும் அதை
எட்டிப் பார்க்கிறோமே ஏன்?
நம் தாய் தந்தையர் இன்று இல்லை. இப்போது நாம், “அவர்களை கடைசி காலத்தில் நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டோமே” என வருந்துகிறோம்.
விருந்தினர் வந்து சென்றபின், “அய்யோ! அவர்களை சரியாக கவனிக்காமல் வேறு ஏதோ நினைப்பில் இருந்து விட்டோமே” என அங்கலாய்க்கிறோம்.
அறுசுவை உணவை உண்ணும்போது ஏதேதோ எண்ணங்கள் மனதில், உண்டு முடித்த பின் ஆகா! சரியாக ருசித்து உண்ணவில்லையே என நினைக்கிறோம்.
வீட்டை பூட்டி விட்டு திருமண விழாவுக்குப் புறப்படுகிறோம். புறப்படும் வேளையில் நேரமாகிவிட்டது என்று பதட்டத்துடன் புறப்படுகிறோம். திருமண விழாவுக்கு வந்த பின் வீட்டை நினைக்கிறோம். “ஆகா! வீட்டை சரியாக பூட்டினோமா, விளக்கை மின்விசிறியை அணைத்தோமா, கேஸ் சிலிண்டரை சரியாக மூடினோமா” என்ற எண்ணங்களால் பதட்டமாகிறோம். இதனால் அந்த விழா நிகழ்வுகளில் மனம் சரியாக ஈடுபட முடியவில்லை.
இந்த ஏக்கங்களும் அதன் தாக்கங்களும் இல்லாமல் முழுமையான திருப்தியான வாழ்வு வாழ வேண்டும்.
கடந்து போன காலங்கள் எத்தனைதான் சிறப்பானதாக இருந்தாலும் அவைகள் செத்துப் போனவை. அவைகளுக்கு விளைவுகளால் உயிர் கொடுக்க முயலக் கூடாது. இன்று நம் ஒவ்வொருவர் வீட்டின் முன்னும் ஒரு புதிய ரோஜா நமக்காக மலர்ந்திருக்கிறது.
அதைக் கண்டு களிப்போம் வாருங்கள்.
“இன்று புதிதாய் பிறந்தோம்”
– பாரதி
Leave a Reply