வார்த்தை நலமானால் வாழ்க்கை நலமாகும்

பாரதியார் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம், கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டபோது அவருடைய கோவை நண்பர்கள் லாலா ஹாலில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். மண்டப நுழைவாயில் ஒரு பேனர்.

“உனக்குத்தானே கொடுக்க வேண்டும் டாக்டர் பட்டம்! டாக்டர் வாழ்க!” – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்த வரிகள் அவை.

அதைப்பார்த்து சிரித்துக் கொண்ட கவிஞர் சில விநாடிகளுக்குப் பிறகு ஒரு தகவல் சொன்னார். “கமலஹாசனுக்காக இந்த வரிகளை எழுதினேன். அதற்குப்பின் மூன்று பல்கலைக்கழகங்கள் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தன. ‘முதல் மரியாதை’ திரைப்படத்திற்குப் பாடல் எழுதும்போது எனக்கோர் ஆதங்கம் இருந்தது. உலக நடிகர்களால் தொடமுடியாத சிகரம், சிவாஜியின் உயரம். ஆனால் அவரது மகத்தான திறமைக்குப் பொருந்தாத சில படங்களில் அவரை நடிக்க வைத்தார்கள். அவருக்கு அந்தப் படங்கள் பெருமை சேர்ப்பதாக இல்லை. அதைத்தான் ‘பூங்காத்து திரும்புமா’ பாடல் “உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறணும்! எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்!” என்று எழுதினேன்.

அந்தப் பாடலுக்காக முதல் முறையாக எனக்கு தேசிய விருது கிடைத்தது. மற்றவர்களின் பெருமையறிந்து நாம் வாழ்த்தினால், அந்தப் பெருமைகள் தாமாகவே வந்து நம்மைச் சேரும் என்பதற்கு, தேசிய விருது, டாக்டர் பட்டம் இரண்டுமே உதாரணங்கள்” என்றார் கவிப்பேரரசு. உண்மைதானே!! நல்ல வார்த்தைகளே நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *