காலம் உங்கள் காலடியில்

– சோம. வள்ளியப்பன்

லைன் பேலசிங்முறை

தை ஒன்றாம் தேதி. பொங்கல் திருநாள். திருப்பள்ளி எழுச்சி பார்ப்பதற்காக, மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தேன்.

திருப்பள்ளி எழுச்சி எப்படி நடக்கும் என்பது பற்றி தெரிந்திருக்கலாம். விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் என்று மொத்தம் நான்கு சந்நிதிகளில் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். பின் அலங்காரம் செய்து தீப ஆராதனை செய்வார்கள்.

அபிஷேகம் என்றால், நீர், பால், சந்தனம், மஞ்சள் திரவியத் தூள்கள் என்று பல பொருட்களையும் ஒவ்வொன்றாக செய்வார்கள். அதன்பின் ஆடைகள், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்வார்கள். அதுவும் நேரமெடுக்கும் (திருப்)பணிதான். தவிர, தீபஆராதனை என்றால் ஒருமுறை மட்டுமே கற்பூரம் காட்டுவதல்ல. அதிலும் பல வகைகள் உண்டு. பெரிய தீபம் உட்பட எல்லாவற்றையும் செய்வார்கள்.

நான்கு சந்நிதிகளிலும் இவ்வளவையும் செய்ய வேண்டுமே! நிறைய நேரமாகும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் ஆச்சரியமாக, நான் எதிர்பார்த்ததில் பாதியளவு நேரத்தில் எல்லாம் நன்றாகவே முடிந்தது.

எப்படி எல்லாவற்றையும் குறுகிய நேரத்தில் செய்துவிட்டார்கள் என்று யோசித்தேன். அவர்கள் செய்த விதம்தான் அதற்குக் காரணம் என்று புரிந்தது. அவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளையும் உற்பத்திக்கூடங்களில் வேலை செய்யும் “லைன் பேலன்சிங்” முறையை அங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

“லைன் பேலன்சிங்” என்பது உற்பத்திக்கூடங்களில் அதிலும் குறிப்பாக, அசெம்பிளி லைன் உற்பத்திகூடங்களில் செய்யப்படுகிற ஒரு முக்கிய ஏற்பாடு. ஒரு இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் டெக்னிக்.

லைன் பேலன்சிங் பற்றி புரிந்துகொள்ள, ஒரு வாஷிங் மிஷின் உற்பத்தி செய்யும் தொழிற்கூடத்தில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை உதாரணமாகப் பார்க்கலாம்.

அங்கே நடைபெறுவது அசெம்பிளி லைன் உற்பத்தி. அசெம்பிளி லைன் என்றால் பலரும் வரிசையில் நிற்க, அவர்கள் முன்பாக வேலை செய்யவேண்டிய பொருள் வரும். ஆயத்தமாக நிற்கும் ஊழியர்கள் அதில் அவரவர் செய்ய வேண்டிய வேலையை செய்வார்கள்.

ஆமாம். வேலை செய்யவேண்டியவர் நகரவே தேவையில்லை. பொருட்கள்தான் நகர்ந்து அவர்கள் முன் வந்து நிற்கும். பொருட்களை நகர்த்துவது கன்வேயர் பெல்ட்.

முதலில், வாஷிங் மெஷினில் உள்ளே இருக்கும் சில்வர் பாத்திரம் (Tub), கன்வேயர் பெல்ட்டில் ஏற்றப்படும். அதை அங்கே ஏற்றுவதற்காக ஒரு ஊழியர் நிற்பார். குறிப்பிட்ட நேரம் மட்டுமே நகராமல் நிற்கும் கன்வேயர் பெல்ட் மீது, சரியான இடத்தில் அவர் அந்த பாத்திரத்தினை வைப்பார். உடன் பெல்ட் நகரும் (அப்படி ஏற்பாடு செய்திருப்பார்கள்).

கன்வேயர் பெல்ட் நகர்வதால், அவர் ஏற்றிவிட்ட அந்த பாத்திரம், அடுத்து நிற்கும் ஒரு ஊழியர் முன் போய் நிற்கும்.

ஆயத்தமாக நிற்கும் அந்த இரண்டாவது ஊழியர், உடனே, அந்த பாத்திரத்தில் மாட்ட வேண்டிய ஒரு ரப்பர் பைப்பினை மாட்டிவிடுவார். பெல்ட் நகராமல் நிற்கும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள், அவர் அதனை செய்துவிட, (செய்யாவிட்டாலும் கூட), பெல்ட் சில அடிகள் நகர்ந்து போகும். இதனால் முதல் ஊழியர் மாட்டிய பாத்திரம் இப்போது மூன்றாவது ஊழியர் முன்பாக ரப்பர் பைப்பும் மாட்டப்பட்டு நிற்கும். மூன்றாவது ஊழியர் அவர் பொருத்த வேண்டியதை அதில் பொருத்த, பெல்ட் மீண்டும் நகரும், நகர்ந்து நாலாவது நபர் முன் போய் நிற்கும்.

இப்படியே முழு வடிவம் பெறும் வரை பெல்ட் மற்றும் அந்த பாத்திரத்தின் “பயணம்” தொடரும்.

தொழிற்சாலையில் ஒரே ஒரு வாஷிங் மெஷினா செய்வார்கள்? பெல்ட்டின் ஒவ்வொரு நிறுத்தத்தின் போதும் அந்த வரிசையில் நிற்கும் அத்தனை ஊழியர்களும், அவர்களின் (அதே) வேலையை செய்துகொண்டேஇருப்பார்கள். அதாவது முதல் நபர்,பெல்ட் நகர நகர, ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து, பெல்ட்டின் மீது வைத்துக்கொண்டே இருப்பார். இரண்டாமவர், தொடர்ந்து, தன் முன் வரிசையாக வரும் பாத்திரங்களில் பைப்புகளை மாட்டிக்கொண்டே இருப்பார்.

அதுதான் அசெம்பிளி (பொருத்தம்) லைன் (வரிசை) புரொடெக்ஷன். வரிசையாக பொருத்தி செய்யும் உற்பத்தி என்று தமிழில் சொல்லலாம்.

இதற்கும் கோவிலில் நடந்த திருப்பள்ளி எழுச்சிக்கும், நேரமேலாண்மைக்கும் என்ன தொடர்பு?

லைன் பேலன்சிங் தான் தொடர்பு.

அசெம்பிளி லைன் சரி. அதென்ன லைன்பேலன்சிங்?

முதல் நபர் பாத்திரத்தினை எடுத்து வைக்கிறார். இரண்டாமவர் பைப்பினைப் பொருத்துகிறார். இரண்டு வேலைகளுக்கும் ஒரே அளவு நேரமா ஆகும்? ஒன்றினை செய்ய (உதாரணமாக) ஒரு நிமிடமாகலாம். மற்றொன்றுக்கு இரண்டு நிமிடமாகலாம். இப்படியே அடுத்தடுத்து வரிசையில் நிற்கும் ஊழியர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளுக்கு வெவ்வேறு அளவு நேரம் தேவைப்படலாம். உதாரணத்திற்கு, அந்த அசெம்பிளி லைனில் மொத்தம் 30 விதமான வேலைகள் (டாஸ்க்குகள்) இருக்கின்றன. 30 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அந்த முப்பது வேலைகளில் மிகவும் குறைவான அளவு நேரம் தேவைப்படும் வேலைக்கு 1நிமிடம் ஆகிறது. மிக அதிக நேரம் தேவைப்படும் வேலையை முடிக்க 3 நிமிடங்கள் ஆகிறது.

கன்வேயர் பெல்ட் ஒரே அளவு நேரம் தான் நின்று நின்று போக முடியும். அப்படியென்றால், அந்த கன்வேயர் குறைந்தபட்சம் எவ்வளவு நேரம் நின்று நின்று போக வேண்டியிருக்கும்?

மூன்று நிமிடம்தான். காரணம் அதற்கு குறைவாக நின்றால் மற்றவர்கள் அவர்கள் வேலையை செய்து முடிக்கலாம். ஆனால் 3 நிமிடம் தேவைப்படும் வேலை ஆகாது. அதனால் எந்த வேலை அதிகபட்ச நேரம் எடுத்துக் கொள்கிறதோ அதுவே, மொத்த கன்வேயரின் வேகமாகிறது. நாம் உதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கன்வேயர் மூன்று நிமிடங்கள் நின்று நின்று நகரவேண்டும்.

அப்படியென்றால், ஒரே நிமிடத்தில் வேலையை முடித்துவிடுபவர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் தேவையில்லாமல் 2 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி வருமே. எல்லாம் வீண் தானே!

ஆமாம்.

இதனை தவிர்க்க வேண்டுமே.

ஆமாம். அதை செய்வதுதான் லைன் பேலன்சிங். எவரும் எவருக்கும் வீணாகத் காத்திருக்காமல் வேலை செய்துகொண்டே இருப்பது போல ஏற்பாடு செய்வார்கள்.

என்ன செய்வார்கள் என்றால், ஒரு நிமிடம் மட்டுமே செய்யவேண்டிய வேலைகளில் ஒரே நபரை வைத்துவிட்டு, மூன்று நிமிடங்கள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு 3 நபர்களை வைப்பார்கள். அதற்கேற்றபடி அசெம்பிளி லைனை வடிவமைப்பார்கள். ஒரே நபர் மூன்று வாஷிங் மிஷின் “டப்”பில் வேலையை முடிக்க, அதே நேரத்தில் வேறு ஒருவர் ஒரே “டப்”பில் வேலை முடித்தால் போதும். அந்த வேலைக்கு கூடுதல் ஆட்கள் உண்டு. ஒரு அகலமான சாலை மூன்று சிறு சாலைகளாக பிரிந்து சிறிது தூரத்திற்குப்பிறகு ஒன்றாக சேருவதுபோல அந்த அசெம்பிளி லைன் அமைக்கப்பட்டிருக்கும்.

திருப்பள்ளி எழுச்சியிலும் அதேதான் செய்திருக்கிறார்கள். முதல் சந்நிதியில் அபிஷேகம் முடித்து வேகமாக அடுத்து சந்நிதிக்கு வர, அங்கே அபிஷேகம். அதை முடித்து மூன்றாவது. உடனே நாலாவது. சற்றும் தாமதிக்காமல் முதல் சந்நிதிக்கு ஓட வேண்டி யிருந்தது. காரணம் அங்கே அலங்காரம் ஆயத்தம் (தயார்) அங்கு தீபாராதனை முடிக்க, இரண்டாவதில் தீபாராதனை. அப்படியே மூன்று மற்றும் நான்கு. எங்குமே காத்திருக்க வில்லை. மட மடவென நடந்தது எல்லாம் நல்லபடியாகவே. ஒவ்வொரு சந்நிதானத்திற்கும் தனித்தனி குருக்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு சந்நிதானத்திலும் செய்ய வேண்டிய வேளையினை பொறுத்து, அங்கே குருக்கள் எண்ணிக்கையும் அதிகப் படுத்தப் பட்டிருக்கிறது.

தினசரி நாம் வீட்டிலோ அலுவலகத்திலோ செய்யும் வேலைகளில் சில அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அவற்றின் தன்மை அப்படி. வேறு சிலவற்றுக்கு குறைவான நேரமே தேவைப்படும். இப்படிப்பட்ட பலவும் சேர்ந்ததுதான் ஒரு பெரிய வேலை முழுமை பெறும் என்றால், அதனை லைன் பேலன்சிங் முறையில் திட்டமிடலாம்.

சிலவற்றினை செய்ய கூடுதல் எண்ணிக்கையிலான யந்திரங்கள் அல்லது ஆட்களை வைக்கலாம். வேறு சிலவற்றுக்கு குறைவான எண்ணிக்கையில் வைக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தினை கணக்கிட்டு இதனை செய்யலாம். செய்து வீண் காத்திருப்புகளைக் குறைக்கலாம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *