யாரோ போட்ட பாதை

– தி.க. சந்திரசேகரன்

வேண்டும் செயலாக்கம்

வாழ்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்போம் என்று எண்ணியபடி படித்துக்கொண்டே இருங்கள்.
– அண்ணல் காந்தியடிகள்

இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடப் போகிறது; எனவே எவ்வளவு முடியுமோ அந்த அளவு உழைத்துக் கடமைகளை செய்து முடியுங்கள்!

வாழ்க்கை முடிவில்லாதது. நீண்ட காலம் வாழப் போகிறீர்கள். எனவே காலம் முழுக்கப் படித்துக்கொண்டே இருங்கள்! கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன.

காந்தியடிகளுடைய இந்த வழிகாட்டு வரிகள் நம் சிந்தனைகளைக் கிளறி விடுகின்றன.

விரைந்து செயல்படவேண்டியதின் அவசியத்தையும், தொடர்ந்து அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார்!

அறிவும் – செயலும் (Knowledge and Action) எந்த அளவு பின்னிக் கிடக்கின்றன.!

சில மாதங்களுக்கு முன் ஒரு வணிகர் என்னை சந்தித்தார். நமது நம்பிக்கையில் நான் எழுதிய கட்டுரைகள் அவரை, என்னை சந்திக்கத் தூண்டியது என்றும் குறிப்பிட்டார். சரிந்து விழுந்து கொண்டிருந்த அவருடைய வணிகத்தை, உயர்ந்து நிமிர்த்த வழிகேட்க வந்திருந்தார்.

எங்களுடைய உரையாடல் தொடங்கியது. பேச்சுக்குப் பேச்சு பல எழுத்தாளர்களை ஒட்டிச் சென்றது.

‘காப்மேயர் ஒரு நூலிலே என்ன கூறுகிறார் தெரியுமா?’

‘எண்ணங்கள் – நூலில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி கூறியுள்ள ஒரு கருத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.’

‘ஜேம்ஸ் ஆலன் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர். அவர் ஒரு இடத்திலே…..’

‘ நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில்’

ஒரு நூலகத்தோடு பேசுவது போல இருந்தது அவருடன் உரையாடிய அனுபவம்.

அவருடைய வணிகம் சரிந்து போனதற்கான காரணம் தெளிவாக விளங்கிவிட்டது.

படிப்பதிலே இருக்கிற சுகம் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணத்திலே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘டானிக்’ மட்டும்தான் எல்லாம் என்று நம்பியபடி ‘பாட்டில்’ பாட்டில்களாக டானிக்கை மட்டுமே குடித்துக்கொண்டிருக்கிறார்; ஆனால் சாப்பாட்டை விட்டு விட்டார். உடல் நிலை என்னவாக இருக்கும்?

‘ஒரு சதவீத உற்சாகம்; 99% உழைப்பு’ என்ற தத்துவத்தை மாற்றி, 99% உற்சாகம், 1% உழைப்பு என்ற நிலைக்குப் போய்விட்ட பிறகு வணிகம் சரிந்து விழாமல் என்ன ஆகும்?

நீண்ட நேரம் அவரோடு கலந்துரையாடி, வணிகத்தை எப்படி வளர்க்க வேண்டும்; அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து, அவரையே பட்டியல் போட வைத்து அனுப்பினேன்.

இப்படி அவர் ஒருவர் மட்டுமல்ல; நம்மில் ஏராளமான மனிதர்கள் இதைத்தான் செய்கிறோம்.

ஒஅரந திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆராய்ந்த மனவியல் நிபுணர்கள் கூறினார்கள், “நம்மில் பலருக்கு அடிக்க வேண்டும்; குத்த வேண்டும்; வெட்ட வேண்டும் என்ற வெறி அடிப்படையில் ஆழ்மனத்தில் பதிந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் நிறைய வன்முறைகள் வருகின்றன. ரசிகர்களுடைய அடிப்படை உணர்வுகளுக்கு அப்படம் ஒரு வெளிப்பாடாக அமைந்ததால் வெற்றி கண்டது”.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் தங்களையே கதாநாயகனாகவும், நாயகியாகவும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ‘காதல் புரிகிறார்கள்; பாய்ந்து பாய்ந்து உதைக்கிறார்கள்; ஏழைகளுக்கு உதவுகிறார்கள்; வெளிநாட்டில் நடனமாடுகிறார்கள்; ஒரே நேரத்தில் 100 பேரை உதைக்கிறார்கள்….. அடடா! 3 மணி நேரத்தில் ஒரு சாதனை வாழ்க்கையையே கற்பனையில் நடத்தி முடித்துவிட்டு வெளியே வரும்போது……. அவர்களுடைய வீடும் வாசலும், அதே மனைவியும் / கணவனும் மாமனாரும், மாமியாரும் வீட்டு வாடகை, பால் பாக்கியும், வேலையும் வருமானமும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே நிற்கின்றன!

திரைப்படம் நம் வாழ்க்கையல்ல; அது ஒரு பொழுது போக்கு.

ஒருவேளை ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, நம் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் மாற்றிக் கொண்டால், அத்திரைப்படம் நிச்சயமாக நமக்கு வழிகாட்டிதான்.

நூல்களைப் படிப்பது நிச்சயமாக ஒரு பொழுதுபோக்குதான். அது வேலையில்லை; நமக்கு வேறு வேலைகளிருக்கின்றன. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிக்கிறோம்.

ஒருவேளை மிகச்சிறந்த ஒரு நூலைப் படித்துவிட்டு நம்மை மாற்றிக்கொண்டு, வாழ்க்கையை மாற்றி முன்னேற்றப்பாதைக்குச் சென்றுவிட்டோமென்றால், அந்த நூல்தான் நமக்கு வழிகாட்டி, ஆசான்!

‘சொற்களைவிட செயல்களே உரக்கப் பேசுகின்றன’ என்று கூறுவார்கள்.

செயல்படாத வரையில் யாராக இருந்தாலும் பிணம்!

“நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்! அடுத்த மாதம், அடுத்த வருடம்’ என்று ஒத்திப் போடாமல் அன்றைய வேலைகளை அன்றே செய்துவிட்டு முடிந்தால் அடுத்த நாள் வேலையையும் இன்றேசெய்யுங்கள்” – என்ற நேர நிர்வாகக் கருத்தைத்தான் காந்தியடிகள் மிக அழகாகக் கூறியுள்ளார். ஆகவே இன்று ஒரு நாள் மட்டுமே வாழப் போகிறோம்’ என்ற எண்ணத்துடன் உழைக்கலாமே!

சிங்கப்பூர் செல்லுகிறீர்கள். ஒரே ஒரு நாள் மட்டும்தான் அங்கே இருப்பீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டா இருப்பீர்கள்? எங்கெல்லாம் செல்லலாம்; எதையெல்லாம் வாங்கலாம் என்று விமானத்தைப் பிடிக்கும் வரை பரபரப்பீர்கள்! விமான நிலையத்தில்கூட என்ன வாங்கலாம் என்று சுற்றுவீர்கள்!”

அந்த பரபரப்பான வாழ்க்கைதான் அற்புதமான வாழ்க்கை! நமக்குக் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம் வேண்டும்.

ஒரு சிறுவனிடம் ‘இப்போது உனக்கு ஒரே ஒரு பிஸ்கட் தருவேன். ஆனால் நீ பொறுமையாக இருந்தால் நாளை ஒரு பாக்கெட் பிஸ்கெட் தருவேன்! ஒரு பிஸ்கட்டா அல்லது ஒரு பாக்கெட் பிஸ்கட்டா? இன்றா? நாளையா? என்று கையில் ஒரு பிஸ்கட்டை வைத்துக்கொண்டு கேட்டுப்பாருங்கள்!

‘எனக்கு ஒரு பிஸ்கட் இப்போதே வேண்டும்’ என்று கூறி கையிலுள்ளதைப் பறித்துக் கொள்வான்.

நம்மில் பலர் நாளை ஒரு பாக்கெட் பிஸ்கட் வரும் என்று எண்ணிக்கொண்டு, இப்போது கையிலிருக்கும் ஒரு பிஸ்கட்டை உண்ணாமல் பட்டினி இருக்கிறோம்.

1. உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்னவென்று தெளிவாக இருக்கிறீர்களா?

2. பெற்றோருக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

3. மனைவி , கணவருக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

4. பிள்ளைகளைப் பற்றிய திட்டம் என்ன?

5. உங்கள் தொழிலை மேலும் சிறப்பாகச் செய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

6. உடல் நலனுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

7. வாழ்நாளில் நீங்கள் என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?

8. வருவாயைப் பெருக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

9. எந்த நாடு, நகரங்களைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்கள்?

10. தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உங்கள் திட்டமென்ன?

இவற்றுக்கான பதில்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைத்துக்கொண்டு, இன்று அவைகளுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று உழைக்க ஆரம்பியுங்கள்! வாழ்க்கையின் அருமையும், சுகமும் நிச்சயம் தெரியும்!

அன்றாடம் வாழலாம்; எதிர்காலத்தில் வாழ்வதைவிட இப்போது உழைத்து, இப்போதே வாழலாம்! காரணம் எதிர்காலம் என்பது இப்போது நாம் செய்யும் செய்யும் செயல்களால் தீர்மானிக்கப்படுவதே!

இன்றே வாழ்க்கை முடியப் போகிறது என்ற எண்ணத்தில் உழைக்கும்போது, அந்த நாளில் படிக்கவும் வேண்டும்.

ஏன் படிக்க வேண்டும்; இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்போம் என்ற எண்ணத்தில் ஏன் படிக்க வேண்டும்?

இதைக் கூறும் போதுதான் காந்தியடிகளுடைய அறிவுக் கூர்மை புலனாகின்றது.

அறிவுக்கு எல்லை இல்லை!

படித்தது போதும்; இனி கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற மனோபாவம் நம்மை நிச்சயம் உயர்த்தாது.

எண்ணங்கள்தான் செயல்களாக வெளிப்படுகின்றன. அந்த எண்ணங்கள் சில நேரங்களில் நம்மிடமிருந்து இயல்பாக வரும். நாமாக சிந்தித்து எண்ணங்களை உருவாக்கிக் கொள்வது ஒரு வழி. அதே நேரத்தில் பல வல்லுநர்களுடைய அறிவார்த்தமான, ஆழமான கருத்துக்கள் நூல்களிலே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை உள்வாங்கிக்கொண்டு எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளலாமே!

உடற்பசிக்கு உணவளிப்பதுபோல அறிவுப் பசிக்கு நூல்கள் வாசிப்பது அவசியமாகிறது! அன்றாடம் ஒரு அரைமணி நேரமாவது படிப்பதை வழக்கமாகக் கொண்டால் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.

‘யாரோ போட்ட பாதை’ தொடரில் பல அறிஞர்கள் காட்டிய வழிகளைப் பார்த்தோம். பல நூல்களைப் படிக்கும்போது நிறைய வழிகள், புதிய வழிகள் தோன்றும். வழிகளை அறிந்தபின் நமக்கு விருப்பமான வழிகளில் செல்லலாமே! பாதைகள் என்பன பார்த்து நிற்பதற்காக அல்ல; பயணம் செய்வதற்காக! சிறந்த பாதைகளில் செல்லும் வாழ்க்கை சாதனைகளும் மகிழ்ச்சியும் நிரம்பியவையாக இருக்கும்!

ஒரு நகரில் அம்புவிடுதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற வீரன் இருந்தான். ஆனால் அவன் அதிகம் பேசாதவன். உலகின் முதல் இடத்தைப் பெற்ற பின் அவனைப் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் அவனுடைய பேட்டிக்காகச் சூழ்ந்துகொண்டனர். ஆனால் அவனோ யாருக்கும் பேட்டி தரவில்லை! மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது.

அவனுடைய நகரில் அவன் படித்த கல்லூரியின் வெள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராக, கல்லூரி நிர்வாகம் அவனை அழைத்தது. கல்லூரித் தலைவர், முதல்வர், பேராசிரியர்கள் அவனை வீடுதேடி அழைத்த போது அவனால் மறுக்க முடியவில்லை.

‘விழாவில் பேசுவான்; அந்தப் பேச்சைப் பத்திரிகையில் போடலாம்; தொலைக்காட்சியில் காட்டலாம்’ என்று நிருபர்கள் கூட்டம் அரங்கில் குவிந்திருந்தது. மாணவர்கள் மட்டுமல்லாமல் நகரத்தின் பொதுமக்களும் அவன் உரையைக் கேட்கக் குவிந்திருந்தனர்.

சிறப்பு விருந்தினராக அமர்ந்திருந்த அவனை எப்படியாவது பேசவைப்பது என்ற முடிவிலிருந்த முதல்வர் மேடையில் அறிவித்தார்.

“ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்று நம் நாட்டிற்கும் நம் நகருக்கும், இந்தக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்த அருமை வில்லாளன் அவர்கள், தான் எப்படித் தங்கப் பதக்கம் பெற்றார் என்ற இரகசியத்தைக் கூறுவார்!”

பெரிய நிசப்தம் நிலவியது. விளையாட்டு வீரன் மைக்கின் முன் நின்றான். எல்லோரும் காதுகளைத் தீட்டிக்கொண்டார்கள். அவன் நான்கு சொற்களை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தான்.

“மைதானத்துக்குச் சென்று அம்பு விடுங்கள்!”

நம்மிடம் வில்லும் இருக்கிறது; அம்பும் இருக்கிறது. மைதானத்தில் நின்று கொண்டிருக்கிறோம்! அம்புவிடுகிறோமா?

நிறைய செய்திகளை மூளையிலும், கையிலுள்ள புத்தகத்திலும் வைத்துக்கொண்டு வாய்ப்புக்கள் நிறைந்த உலகத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் கற்றதை செயலில் காட்டுகின்றோமா?

வெற்றிப் பாதை உங்களுக்கே சொந்தம்!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *