நினைவு நல்லது வேண்டும்

சுய நலமும் பொது நலமும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் மிகச் சிறந்த தத்துவ ஞானி. அறிவும், ஆற்றலும், மக்கள் நலன் பற்றிய எண்ணமும், எளிமையும் கொண்ட தலைவர்கள் ஒரு விபத்துபோல நம் நாட்டுக்கு அவ்வப்போது அமைந்துவிடுவதுண்டு. அப்துல் கலாம் நமக்குப் பெருமை சேர்த்தாரே அப்படி! தேசப்பற்று பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒரு முறை சொன்னார், “Patriotism is the collective form of selfishness”.

தேசப்பற்றுக்கு இதைவிடப் பொருத்தமான, உண்மையான விளக்கம் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனிதனே ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு, அந்த எல்லைக்கு அப்பால் இருப்பவன் வேற்று நாட்டுக்காரன் என்று சொல்லிக்கொண்டு, ‘எங்கள் விவகாரத்தில் நீ தலையிடாதே. இது எங்கள் உள் விவகாரம்’ என்று சொல்லிக்கொண்டு, தனக்குப் பாதகம் வருகிறபோது எல்லை தாண்டி அடுத்தவனை அடிப்பது என்பதெல்லாம் ஒரு வகையில் சுயநலம்தானே! என்ன, இது ஒரு கூட்டுச்சுயநலம். அதுதான் ‘Collective form of selfishness’.

இந்தக் கூட்டுச் சுயநல எல்லைக்குள் இருக்கிற மக்களின் நலத்திற்காக உழைப்பவர்களும், இவர்களின் பாதுகாப்பிற்காக, எல்லைமீறி வருவோரைக் கொல்பவர்களும், ‘பொது நலத்தில் நாட்டம் உடையவர்கள்’ என அடையாளம் காட்டப்படுகிறார்கள். அந்த நாட்டு மக்களுக்குத் ‘தியாகிகள்’ ஆகிறார்கள். உலக அளவில் பார்த்தால், தியாகிகளும் பொதுநல நாட்டமுடையவர்களும் கொள்கை அளவில் முரண்பட்டவர்தாம்! ஏனெனில், பொதுநலம் என்பதே கூட்டுச் சுயநலம்தானே! சரி! இந்தக் கூட்டுச் சுயநலம் என்று சொல்லப்படும் பொதுநலம், இன்றைக்கு நம்மிடம் எப்படி ‘வாழ்கிறது’ என்பதுதான் அடுத்த கேள்வி.

பொதுநலம் என்பதை, அரசியல் மாற்றத்திற்காகப் போராடிய தலைவர்களிடமிருந்தும், சமூக மாற்றத்திற்காகப் போராடிய தலைவர்களிடமிருந்தும்தான் நமது மக்கள் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேயரை வெளியேற்றி, நம்மை நாமே ஆண்டுகொள்ள வேண்டும் என்பது அரசியல் மாற்றத்திற்காகப் போராடியவர்களின் லட்சியம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அனைவரும் சம நிலையில் வாழவேண்டும் என்பது சமூக நீதிக்காகப் போராடியவர்களின் நோக்கம். சுயநலம் என்பது கொஞ்சமும் இல்லாமல், பொதுநலம் ஒன்றையே சிந்தித்து வாழ்ந்தவர்கள் அன்றைய தலைவர்கள். தன்னிடம் இருந்த, தான் சம்பாதித்த பொருள்களையெல்லாம் இழப்பதற்குத் தயாராகவே அவர்கள் பொது வாழ்வுக்கு வந்தார்கள். வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவா போன்றவர்களையும் நம்மால் மறக்க முடியுமா?

நாடு விடுதலை பெற்று ஆட்சியில் அமர்ந்த பின்னரும், தூய தலைவர்கள் தூய தலைவர்களாகவே இருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் எளிமைக்கும், பொது வாழ்வின் தூய்மைக்கும் எடுத்துக் காட்டாய் வாழ்ந்தவர்கள் இல்லையா? தள்ளாத வயதிலும், நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டிய வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு இணையாக யாரைச் சொல்லிவிட முடியும்?

இப்படி, தனது உழைப்பையெல்லாம் மக்களுக்காகவே தந்து, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து, தூய்மை மாறாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்ட எத்தனையோ பேர் நாடு முழுவதும் இருக்கிறார்கள்.

பொது வாழ்வுக்கு அல்லது பொதுச் சேவைக்கு இன்று வருபவர்களின் நிலையே வேறு. தனித்தனியாக சிறு அமைப்புகள் வைத்து, ஏழைகளுக்குக் கல்வி, அனாதைகளுக்கு உணவு, உறைவிடம், மருத்துவ வசதி என்று பல உதவிகளைச் செய்யும் தனிநபர்கள் இன்னும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், ‘அதிகாரம் கலந்த பொதுவாழ்வு’ வாழ வருபவர்கள் தங்களிடம் உள்ளதை இழப்பதற்கா வருகிறார்கள்? “பையன் படிக்கமாட்டேன்றான்; ஊரைச் சுத்தறான்; யாரையும் மதிக்க மாட்டேன்றான். பேசாம உங்க கட்சியில் சொல்லி இவனுக்கு அடுத்து வரும் தேர்தலில் நிக்க சீட் வாங்கி கொடுத்துடுங்க” என்று தனது அரசியல்வாதி கணவரிடம் மனைவி சொல்வதாக, ‘தினமணி’ நாளிதழ் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அதுதான் நிலை. இதிலே எங்கே பொதுநலமும், கூட்டுச் சுயநலமும்? எல்லாம் “வெறும் சுயநலம்” தான்.

பதவிக்கு வருபவர்களை விடுங்கள்! அவர்களின் நோக்கமே வேறு; வாழ்க்கையே வேறு! சாதாரண குடிமகன் ஒவ்வொருவரும் கூட எப்படி ஆகிவிட்டோம்? பொதுவாழ்வில் ஈடுபட வேண்டாம்; சுயநலமில்லாமல் இருந்தாலே போதுமே. பணம் வாங்கிவிட்ட கடமையை அல்லது சம்பளம் வாங்கும் அலுவலை செய்வதற்கே கூட சோம்பலும் பொறுப்பற்ற தன்மையும் அழுத்துகின்றன. அதிலும் ‘தேதி பிறந்தால் மாதச் சம்பளம் வந்துவிடும்’ என்ற நிலை இருந்தால் அவ்வளவுதான்.

விபத்தில் தன் மகனை இழந்த ஒரு தாய், மருத்துவமனையில் தன் மகன் இறந்தபோது அடைந்த அதிர்ச்சியைவிட, விபத்து நடந்த இடத்தில் இருந்த காவலர் சொன்ன வார்த்தைகள் தனக்கு அதிக அதிர்ச்சி அளித்ததாக செய்தித் தாளில் கூறியிருந்தார். அடிபட்டு சிறுவன் கீழே விழுந்த அடுத்த கணம், சாலையின் ஓரமாக சலனமில்லாமல் நின்று கொண்டிருந்த காவலர் குரல் கொடுத்தாராம், “இன்னா…..? இருக்கா…… இல்ல போயிருச்சா…..?’ அந்த தாயின் வேதனை நம்மை தாக்கவில்லை?

இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று நம்மை வியக்க வைக்கும். இது நடந்தது அமெரிக்காவில். அங்குள்ள வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் மனஅழுத்தத்துக்கு காரணமான ஒரு மாணவன் இரு கைகளிலும் துப்பாக்கிகள் ஏந்தி கண் மூடித்தனமாகச் சுட்டு, பலரைக் கொன்றானே, நினைவிருக்கிறதா? அந்தப் பல்கலைக்கழகத்தில் பணியில் இருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியரும், துப்பாக்கிக்கு பலியானார். அந்தக் கொடூர சம்பவம் நடந்த சில நாட்களில் 19.04.2007 வெளிவந்த தினத்தந்தி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் இந்தச் செய்தி வந்திருந்தது.

அந்தக் கொடூர நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 76 வயதுடைய ‘லிவியூ லிப் ரெஸ்கு’ ((Liviu Librescu) என்ற பேராசிரியர், இரண்டாம் தளத்தில் இருந்த ஒரு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற பின்னரும், அவரது திறமை கருதியும், மாணவர்களிடம் காட்டும் கரிசனம் கருதியும், அவருக்கு வேலை நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. பக்கத்து அறைகளில் துப்பாக்கிக் குண்டுகள் வெடிப்பதையும் பலர் அலறுவதையும் அவர் அதிர்ச்சியுடன் கவனித்தார். அடுத்து அவர் செய்ததுதான் நம்பவே முடியாதது. ‘எல்லோரும் ஜன்னல் வழியாக கீழே குதியுங்கள்; தப்பித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிக் கொண்டே, இரு கைகளையும் அகல விரித்தவாறு, வகுப்பின் வாயிலில் அரணாக நின்று கொண்டார். பல மாணவர்கள், இரண்டாம் தளத்திலிருந்து குதித்தார்கள், கை, கால்கள் முறிந்தன. சிலர் பாதுகாப்பாக மேசைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர். அந்த வகுப்பில் ஒரு மாணவரும் இறக்கவில்லை. ஆனால், 76 வயது பேராசிரியர் அறையை நோக்கி சுடப்பட்ட அத்தனை குண்டுகளையும் தன் உடலில் தாங்கி மரணமானார்.

‘நேசத்தால் நிறைந்த நெஞ்சள்’ என்று கம்பன் குறிப்பிடுவதைப் போல, மனம் முழுக்க அடுத்தவர் நலன் பற்றிய எண்ணம் இயல்பிலேயே நிறைந்திருந்தாலன்றி, இது நடக்க வாய்ப்பில்லை.

பொதுநலத் தியாகங்களோடு எல்லோரும் வாழ வேண்டும் என்பது அவசியமில்லைதான். ஆனால், சுயநலத்தின் எல்லையில் நிற்காமல் இருந்தால் போதும். எந்த ஒரு தவறுக்கும் அல்லது சிக்கலுக்கும், யாரோ ஒருவருடைய சுயநலமே காரணமாக இருக்கிறது. ‘நான் மட்டுமல்ல. அடுத்தவர்களும் வாழப் பிறந்தவர்கள்தான். நமக்குரிய உரிமைகளும், எண்ணங்களும், ஏக்கங்களும், அனைவருக்கும் இருக்கும். அதை மறுக்கிற அல்லது அவமதிக்கிற உரிமை நமக்கில்லை’ என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் வேரூன்றிவிட்டால் போதும். வாழ்க்கையே இனிமையானதாகி விடும்.

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஆற்றாது ஓம்புமின்!

என்று நமது புறநானூறு இதைத்தான் குறித்தது. சுயநலம் இல்லாமல் இருப்பதைவிட பெரிய பொது நலம் இருக்கிறதா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *