-ருக்மணி பன்னீர்செல்வம்
இருந்த இடத்தில் மலர்ந்தபடியே “இருட்டிலும் தன்னை அடையாளப்படுத்தும்” வெண்மை நிறத்தாலும், நறுமணத்தாலும் எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு ஈர்த்துவிடுகிறது மல்லிகை.
ஒரு நாள் வாழ்க்கைக்கே தன் நிறத்தாலும், மணத்தாலும் பிறர் மனதில் பதிவை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது மல்லிகைப் பூ.
சராசரியாய் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் வாழ்நாட்களைக் கொண்ட நாம் இந்த மண்ணில் நம் திறத்தாலும் செயலாலும் ஒரு நிலைத்த பதிவை ஏற்படுத்த வேண்டுமல்லவா?
இந்த உறுதிப்பாடு நமக்குள் வந்துவிட்டாலே போதும். சராசரியாய் போகும் நம் வாழ்க்கைப் பாதையை திசைமாற்றி இலட்சியப் பாதையில் நடக்கத் தொடங்கி விடுவோம்.
நம் இலட்சியம் எது என்று எப்போது அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ உடனடியாய் அதை உருவகப்படுத்த வேண்டும்.
செயல்பாட்டில் இறங்குவதற்கு முன், நாம் வெற்றியை பெற்றது போலவும், வெற்றிக்குப் பின் நம் மீதான சமூகத்தின் பார்வை மிக உயர்ந்து நாம் தனித்து தெரிவது போலவும், நம் சாதனையால் பல்வேறு நற்பயன்களை நாமும் நம்மைச் சார்ந்தோரும் அனுபவிப்பது போலவும் வரிசைப்படுத்தி கற்பனைக்கு கொண்டு வரவேண்டும்.
ஒன்றை கருத்தில் கொண்டு செயலில் இறங்குவதற்கு முன்பேவா இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்? எனும் கேள்வி ஒரு மூலையில் எழும். அப்படி கற்பனை செய்துதான் பாருங்களேன். எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகின்றதென்பதை உணர்வீர்கள்.
அதுமட்டுமல்ல நண்பர்களே! யாரொருவர் தன் வாழ்வின் உயரங்களை அடைவதற்கு முன்பே தன் மனத் திரையில் படம் போட்டுப் பார்க்கிறாரோ அவர்மட்டுமே அவற்றை அடைவதற்கான வழிவகைகளைக் கண்டடைவார்.
யாராயிருந்தாலும் தம் ஆற்றல் இவ்வளவுதான் என்று ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்களென்றால் அவர்கள் தங்களைப் பற்றி தவறாக எடைபோட்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆம். ஒவ்வொருவருமே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை விடவும் பலமடங்கு ஆற்றல் பெற்றவர்கள்தான் என்பது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.
பிறகேன் அவ்வளவு ஆற்றலையும் பொருளீட்டும், புகழீட்டும் செயல்களாக, தனக்கும் பிறருக்கும் பயன்படும் சாதனைகளாக, புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாற்றாமல் விதிக்கப்பட்டதாய் நினைத்து கடிகார முட்களைப்போல் ஒரு எல்லைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?
நீங்கள் நினைத்தது சரிதான். ஏதோ ஒரு தயக்கம்.
இனம் புரியாத பயம் அல்லது இனம் புரிந்த பயம்.
வென்றவர்களைப் பற்றிய ஏக்கம் இருந்தாலும் தோற்றவர்களைப் பற்றி காதுகளில் விழும் விமர்சனம்.
தனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாதென்று அடித்தளமற்ற எச்சரிக்கை உணர்வு.
‘பொருளாதாரமில்லை’என்று முயற்சிக்காத முன் முடிவு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் கோளாறு ஏற்படும்போது அதிலிருந்து பாதுகாப்பாகக் குதித்துத் தப்பிக்க பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில்தான் ‘பாராசூட்’ எனும் பொருள் வடிவமைக்கப்பட்டது. உருவாக்கப் பட்டது ஒரு நோக்கத்திற்காக என்றாலும் அவசர காலங்களில் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விமானத்திலிருந்து தரைப்பகுதிக்கு கொண்டு சேர்க்கவும் விண்ணிலிருந்து திரும்பும் விண்வெளிக்கலங்கள் பாதுகாப்பாக தரையிறங்கவும் பாராசூட் பயன்படுத்தப் படுகின்றது.
14-ம் நூற்றாண்டில் கருத்துவடிவமாக வெளிப்படுத்தப்பட்டு, 1780-களில் பிரான்சில் நடைமுறைப் பயன்பாட்டிற்கு வந்த பாராசூட்டில், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேலிருந்து குதிக்க முடியாது என்ற கருத்து நிலவியது. ஆன்ட்ரெ ஜாக்வெல் கார்னர் என்பவர் 1797-ல் 1000 மீட்டர் (3200 அடி) உயரத்திலிருந்து பொதுமக்கள் முன்னிலையில் குதித்தார்.
தன்னால் இன்னும் உயரத்திலிருந்து குதிக்க முடியும் என்பதை கற்பனைசெய்து பார்த்த ஆன்ட்ரெ முயற்சியாலும் பயிற்சியாலும் 1902-ல் 2400 மீட்டர் (8000 அடி) உயரத்திலிருந்து குதித்துக் காண்பித்தார்.
“எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை
எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை”
என்பது கவிஞாயிறு தாராபாரதியின் வரிகள்.
நம் ஆற்றல்களுக்கு அளவுகோல்களை நிர்ணயிப்பதை விட்டுவிட்டு நாம் கற்பனை செய்து பார்த்த நம் சாதனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கும்போதுதான் சிகரத்தை அடைவதற்கான இரண்டாவது படிக்கட்டில் நாம் காலெடுத்து வைக்கிறோம்.
Leave a Reply