வைரமுத்துவுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

சந்திராயன் திட்டி இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை விளக்கிய வெற்றிச் சூத்திரம்

அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் அவர்களை மதிப்பிடல் தலைவராகக் கொண்ட சக்தி குழு நிறுவனங்களின் அங்கமாகிய என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனர் அமரர் ப. நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்களின் 55வது ஆண்டு நினைவு நாள், நிறுவனர் தின விழாவாக பிப்ரவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் சந்திராயன் 1 திட்ட இயக்குநர் திரு. மயில்சாமி அண்ணாத்துரை, “கொங்குநாட்டு சாதனையாளர்” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

விருது பெற்று ஏற்புரை வழங்கிய மயில்சாமி அண்ணாத்துரை, “சந்திராயன் ஐ திட்டத்திற்கு முன்பு பன்னிரண்டு பணிகளில் இயங்கியிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை, சந்திராயனுக்குமுன் சந்திராயனுக்குப் பின் என்று மாறியுள்ளது. நானும் என் இளமைப் பருவத்தில் கவிதைகள் எழுதுவேன். தமிழரசு இதழில் நடைபெற்ற வெண்பாப் போட்டிக்கு நானும் வெண்பா அனுப்பினேன். கவிஞர் வைரமுத்துவின் வெண்பாவுக்கு பரிசு கிடைத்தது. என்னுடைய வெண்பாவுக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆனால் தமிழரசு இதழில் வெளியானது.

கவிஞர் வைரமுத்துவைப் பொறுத்தவரை அவருக்குப் பிடித்த துறையே கிடைத்தது. அதில் வெற்றி பெற்றார். என்னைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்த துறை எனக்குப் பிடித்தது. அதில் வெற்றி பெற்றேன். பிடித்தது கிடைத்தாலும் ஜெயிக்கலாம். கிடைத்தது பிடித்தாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு நாங்கள் இரண்டு பேரும் உதாரணம். கலாம்கூட விமானி ஆக விரும்பினார். விண்வெளி கிடைத்தது. அதிலும் ஜெயித்தார்.

என் கிராமத்து இளைஞர்களுக்கும் என் தேசத்தின் இளைஞர்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் என் வாழ்வை திறந்த புத்தகமாக உங்கள் முன் வைக்கிறேன். ஒரு கிராமத்தில் எளிய மாணவனாகத் தொடங்கிய என்னால் உயர முடிந்தது என்றால், அதுபோல் உங்கள் ஒவ்வொருவராலும் முடியும். கிராமத்தில் இருந்து வருகிற மாணவர்களுக்கு, “நம்மால் முடியுமா” என்ற பதட்டம் இருக்கிறது. பதட்டமே தேவையில்லை. உங்களால் கண்டிப்பாக முடியும்.

நாளைய இந்தியா நாற்பதுகோடி இளைஞர்களால் உருவாகப் போகிறது. அந்த இளைஞர்களுக்கு நாம் இன்று தருகிற நம்பிக்கையும் சொல்லித்தருகிற சூத்திரங்களுமே இந்தியாவை வளமுடையதாக ஆக்கும்.

கயிற்றின்மேல் நடப்பது கடினம் என்று பலர் கருதுகிறார்கள். அது கடினமே இல்லை. கயிறு மட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியும் அளவு கவனம் குவிய வேண்டும். கவனமில்லாமல் நடந்தால் சாலையில்கூட சறுக்கிவிழ வாய்ப்புண்டு.

அமெரிக்கா துருவப் பாதையில் சுற்ற நாற்பது ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. நாம் நான்கே ஆண்டுகளில் அதைச் சாதித்துள்ளோம். 2010 – 2012ல் சந்திராயான் ஐஐ இறங்க வேண்டிய இடத்தில் இறங்கும்.

நம்முடைய இலக்கு நிலவில் மனிதவளாகம் அமைப்பது. அங்கே இந்தியனின் தலைமையில் உலக மானுடத்தை குடியேற்றுவது. எல்லாத் துறைகளிலும் வல்லமை வளர்வது முக்கியம். கலை – அரசியல் – அறிவியல் – கல்வி என்று எந்தத் துறையிலும் வெற்றியாளராக மலருங்கள். சாதிப்பது என்று வந்துவிட்டால் எதிலும் சாதிக்கலாம்” என்றார் மயில்சாமி அண்ணாத்துரை.

விழாப் பேருரை ஆற்றிய கவிப்பேரரசு வைரமுத்து தமிழகத்தின் பகுதிகளைக் குறித்த முதுமொழிகளைப் பட்டியலிட்டு புதுமொழி ஒன்றைச் சேர்த்தார். “சோழநாடு சோறுடைத்து, சேரநாடு வேழமுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து என்றெல்லாம் முதுமொழிகள் உண்டு. அந்த முதுமொழிகளின் வரிசையில் ஒரு புதுமொழியாக “கொங்கு நாடு கல்வியுடைத்து” என்று சேர்த்துக் கொள்ளலாம். கொங்கு மண்ணில் அருட்செல்வரின் கல்வி நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியைப் படைத்து வருகின்றன.

இங்கு மயில்சாமி அண்ணாத்துரை பேசிய போது, வெண்பாப் போட்டியில் நான் வென்றதையும் அவர் வெற்றி வாய்ப்பை இழந்ததையும் குறிப்பிட்டார். வெற்றி பெற்ற நான் கோடம்பாக்கத்துக்குப் போய்விட்டேன். அவரோ நிலாவுக்கே போய் விட்டார்.

நான் கோடம்பாக்கத்தில் அமர்ந்து கொண்டு, “வெண்ணிலவே வெண்ணிலவே, விண்ணைத் தாண்டி வருவாயா? விளையாட ஜோடி தேவை” என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரோ, “வெண்ணிலவே! வெண்ணிலவே! நீ அங்கேயே இரு! நான் விளையாட ஜோடியோடு வருகிறேன்!” என்று நிலவுக்கு மனிதனை அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நாம் நிலவில் இந்தியாவின் தேசியக் கொடியை ஒரு தமிழனின் தலைமையில் ஏற்றியிருக்கிறோம். மயில்சாமி அண்ணாத்துரை, அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் போன்றோர் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்த சமூகத்தில் கொண்டாடப்படுவதற்கும் ஆள்வேண்டும். கொண்டாடவும் ஆள் வேண்டும்.

கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது. மிகப்பெரிய வளர்ச்சிகளை தேசம் கண்டுகொண்டிருக்கிறது.

மாணவர்களிடம் உங்கள் இலட்சியம் என்ன என்று கேட்டால் பலரும் மருத்துவர் ஆவது, பொறியாளர் ஆவது என்று பட்டியல் போடுகிறார்கள். அவையெல்லாம் நீங்கள் ஈடுபட விரும்புகிற துறைகள். அவற்றை உங்கள் இலட்சியம் என்று சொல்ல முடியாது.

மருத்துவர் ஆவேன். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பேன்” என்று சொன்னால் அது இலட்சியம். “பொறியாளர் ஆவேன். இன்றைய கட்டுமானப் பொருட்களை முற்றாக அழித்துவிட்டு கண்ணாடி இழைகளால் ஆன வீடுகள் கட்டுவேன்” என்று சொன்னால் அது இலட்சியம்.

எதிர்காலத்தில் நேனோ தொழில்நுட்பம் உருவாகிறபோது அத்தகைய கண்ணாடி இழைக் கட்டிடங்கள் உருவாகும். ஐந்து யானைகள் ஒன்று சேர்ந்து முட்டினாலும் உடையாத உறுதியுடன் அவை திகழும் என்று சொல்கிறார்கள்.

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் உங்கள் தாய்மொழிதான் உங்கள் அடையாளம்” என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. சங்கர் வாணவராயர் வரவேற்புரை நிகழ்த்தினார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் முனைவர். இராமசாமி செயலறிக்கையினை வாசித்தார். திரு.விஜயரங்கன் நன்றி நவின்றார். விழாவில், குமரகுரு பொறியியற் கல்லூரி தாளாளர் திரு. ம. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *