சென்னை ஐடியா ப்ளஸ் சேர்மன்

நேர்காணல்
1. உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன்.

கல்லூரி படிப்பிற்கு பிறகு, புதிராக இருந்த வாழ்க்கையை எனக்கு புரிய வைத்தது புத்தகங்கள்தான்.
புத்தகங்கள் எனக்குள் நம்பிக்கையையும், எழுச்சியையும் ஏற்படுத்திய அந்த தருணத்தில்தான் என் வாழ்வின் அர்த்தத்தையும் குறிக்கோளையும் உணர்ந்தேன்.
தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையோடும் எதிர்காலம் பற்றிய

குழப்பங்களோடும் இருப்பவர்களுக்கு உற்சாகமூட்ட போதி தர்மா தனிமனித மேம்பாட்டு பயிற்சி மையத்தை துவக்கினேன். போதி என்றால் கற்றுக்கொடு, தர்மா என்றால் கடமை. ஒரு விஷயத்தை கற்று வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய கடமை இருக்கிறது. இந்த உணர்வோடுதான் இன்றுவரை பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன்.

இளம் வயதில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும் தெளிவற்ற மனநிலையும் ஒரு மாணவனை எவ்வளவு பாதிக்கும் என்பதை உணர்ந்து இத்தகைய பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கே அவசியம் என்று கருதி 2002 முதல் மாணவர்களுக்காக, ‘ஜாலியாகப் படிக்கலாம், ஈஸியாக ஜெயிக்கலாம்’ என்ற பெயரில் நினைவாற்றல் மற்றும் ஊக்குவித்தல் பயிற்சி வகுப்புகளை நடத்தத் துவங்கினேன். இந்நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான மாணவர்களை சென்றடைய தினமலர் நாளிதழ் எங்களுக்கு உதவியது.

மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த அவர்களுடனேயே இருக்கும் பெற்றோர்களால் மட்டுமே முடியும் என்பதால் பெற்றோர்களுக்கென்று தனியாக, ‘சாதனையாளர்களை உருவாக்குவோம்’ என்கிற கருத்தரங்கங்கள் நடத்தத் துவங்கினோம். இந்நிகழ்ச்சிகளுக்காக எங்களுக்கு உதவிய பெரும் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு பயிற்சி வகுப்புகள் நடத்த எங்களை அழைத்தனர்.

2004ல் ஐடியா ப்ளஸ் என்கிற பெயரில் நிறுவனம் துவங்கி அதன் மூலம் பல முன்னணி நிறுவனங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தத் துவங்கினோம். 2006ல் மனித வள மேம்பாட்டு ஆலோசகர்களாக செயல்படத் துவங்கினோம். 2008ல் இருந்து வணிக மேம்பாட்டு ஆலோசகர்களாகவும் செயல்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கான பிரம்மாண்டமான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம்.

இந்த தேசத்தில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டுமென்றால், முன்னேற்றம் வரவேண்டுமென்றால் முதலில் நம் கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். இந்த நோக்கத்துடன் சுதந்திரா என்ற பெயரில் ஹாலிடே ஸ்கூல் ஒன்றை இந்த ஆண்டு முதல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

2. மாணவனின் அறிவுக்கு மதிப்பெண் மட்டும்தான் அளவுகோலா?

மதிப்பெண் என்பது ஒரு மாணவனின் நினைவாற்றல் திறனை சோதிக்கும் அளவுகோல்தானே தவிர அறிவின் அளவுகோல் இல்லை.

எல்லோரும் மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை அளப்பதால்தான், கல்வியின் போக்கே மாறிவிட்டது. இன்று அறிவை வளர்த்துக்கொள்ள யாரும் படிப்பதில்லை. மதிப்பெண் பெறுவதற்காகத்தான் படிக்கிறார்கள். மதிப்பெண்தான் முக்கியம் என்றான பிறகு தேர்வுக்கு வரும் கேள்விகள், தேர்வுக்கு வராத கேள்விகள் என்று புத்தகத்தை இரண்டாக பிரித்துக் கொண்டுதான் படிக்கின்றனர்.

தேர்வுக்கு டைனோசரின் வாலைப்பற்றி மட்டும்தான் கேள்வி வரும் என்றால், அதைப்பற்றி மட்டும்தான் படிப்பார்கள். டைனோசரின் வாலைப்பற்றி மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு டைனோசரைப் பற்றிய முழு அறிவை எப்படி வளர்த்துக் கொள்ளமுடியும்.

என் பார்வையில் மதிப்பெண் ஒரு வகையில் மாணவர்களின் திறனை குறைப்பதாகத்தான் இருக்கிறது. ஒரு மாணவன் தொடர்ந்து இரண்டு முறை தேர்வில் நாற்பது மதிப்பெண் மட்டும் பெற்றால் சராசரி மாணவன் (Average Student) என்று மற்றவர்களால் மதிக்கப் படுகிறான். விரைவில் அவனும் அதை நம்ப ஆரம்பித்து விடுகிறான். தன்னை சராசரி என்று முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு அவன் முயற்சிகூட குறைந்துவிடும் இல்லையா?

மதிப்பெண்ணை வைத்து மாணவர்களை மதிப்பது நிச்சயமாக தவறுதான். ஒட்டு மொத்த பாடத்தினையும் ஒரு வரிகூட புரிந்து கொள்ளாமல் வெறும் மனப்பாடம் மட்டும் செய்து எழுதி கூட நீங்கள் மதிப்பெண் பெற்றுவிட முடியும் போது வெறும் மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒருவரின் அறிவை எப்படி அளவிட முடியும்.

மதிப்பெண்தான் அறிவின் அளவுகோல் என்றால், ஒரு மாணவன் தேர்வில் ஒருமுறை தொண்ணூறும் மறுமுறை அறுபதும் எடுத்தால் அவன் அறிவு ஒரே மாதத்தில் குறைந்துவிட்டது என்றல்லவா அர்த்தமாகிவிடும். எனவே மதிப்பெண் நிச்சயம் அறிவின் அளவுகோல் இல்லை.

3. மதிப்பெண் என்றால் இன்று மன அழுத்தம் என்றே ஆகிவிட்டது. மன அழுத்தமின்றி மதிப்பெண்கள் பெற என்ன வழி?

கற்றல் என்பது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியது. ஆனால் அதை மதிப்பெண் என்கிற குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கத் துவங்குகிற போதுதான் மன அழுத்தம் தரக்கூடியதாக மாறிவிடுகிறது. உண்மையான கற்றல் நிகழும் போது மாணவர்கள் உற்சாகத்தில் மிதப்பார்கள். அப்போது ஒவ்வொரு வகுப்பாக உயர உயர…. மகிழ்ச்சியின் அளவும் அதிகரிக்கும்.

மாணவர்களின் மன அழுத்தம் குறைய வேண்டுமென்றால் பெற்றோர்கள் தங்கள் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களால், ரேஸில் ஓடுகிற குதிரைகள் போல்தான் இன்றைக்கு, குழந்தைகள் பார்க்கப் படுகிறார்கள். எனவே போட்டியில் மற்றகு திரைகளைவிட நம் குதிரை வேகமாக ஓட வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம், படபடப்பு இயல்பாக வந்துவிடுகிறது. சினிமாக்களில் ஒரு காட்சியை பார்த்திருப்பீர்கள். ஜெயிக்காத குதிரையை, கடைசியில் அதன் உரிமையாளர் சுட்டுக்கொல்வார். அதெல்லாம் கூட சில வீடுகளில் நடக்கிறது. என்ன துப்பாக்கிக்கு பதிலாக வார்த்தைகளால் சுடுவார்கள். உடனடியாக உயிர் போவதற்கு பதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிஞ்சு மனம் வெந்து போகும்.

முதலில் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும் குணம் மாற வேண்டும். தன்னோடு மட்டுமே தன்னை ஒப்பிட வேண்டும் என்ற மனோபாவம் குழந்தைகள் மத்தியிலும் வளர்க்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ‘சென்ற தேர்வைவிட, நாம் எத்தனை சதவீதம் நம்மையே முந்தியிருக்கிறோம்’ என்று பார்ப்பதுதான் சரியான ஒப்பீட்டு முறை. மேலும் இந்த ஒப்பிடுதல் மாணவர்களாலேயே ஏற்படுத்திக் கொள்ளப்படும்போது மன அழுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை.

4. ஒரு மாணவனை நம்பிக்கைமிக்கவனாய் உருவாக்குவதில் பெற்றோருடைய பங்கு என்ன?

மாணவர்களின் மனதில் நம்பிக்கையை மிளிரச் செய்வதில் மொத்த பொறுப்புமே பெற்றோர்களுடையது என்பதுதான் என் பார்வை.

ஒரு மாணவன் தேர்வில் தோல்வியடைந்து, வீட்டிற்கு வந்து துவண்டு நின்றால், அவனை திட்டாமல், மட்டம் தட்டாமல், “மதிப்பெண் குறைந்தால் நீ அறிவில் குறைந்தவன் என்று அர்த்தமில்லை. மதிப்பெண் குறைவு உன் முயற்சியின் குறைவைத்தான் காட்டுகிறது. எனவே உன் முயற்சியை கூட்டு. உன்னால் முடியும்”, என்று பேசவேண்டும். அருகில் அழைத்து அரவணைத்து நம்பிக்கையுடன் உள்ளார்ந்த அன்போடு புன்னகையோடு ஆதரவாக பேச வேண்டும். குழந்தையின் திறமை மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

ஒரு குழந்தைக்கு, முதலில் உலகமாக இருப்பது பெற்றோர்கள்தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை வைக்கும்போது குழந்தைகளும் அதை நம்பத் துவங்குகிறார்கள். பின்னாளில் தன்னைப்பற்றிய சுயமதிப்பை வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்படத் துவங்குகிறார்கள். எனவே பெற்றோர்கள், குழந்தைகள் மேல் வைக்கிற நம்பிக்கை, அன்பைவிட சிறந்த பரிசாகும்.

5. மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையிலான உறவு மேம்பட நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பொருள் வாங்க வந்தவரிடம் அந்த பொருள் பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிற ஒரு வியாபாரியின் உறவை போல் இல்லாமல் பாடங்கள் தாண்டியும் மாணவர்களோடு பேசுகிற பழக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் குடும்பச் சூழலையும் அறிந்து கொள்ளாமல், ஆசிரியரால் அந்த மாணவனை மேம்படுத்திவிட முடியாது. எனவே ஆசிரிய-மாணவர் உறவு பள்ளிக்கூடத்தில், வகுப்பறைக்குள் முடிந்து விடக்கூடாது. அது அவர்கள் வீடுகள் வரை நீள வேண்டும்.

அதே போல் மாணவர்கள் பற்றிய குறைகளை, பெற்றோர்களிடம் புகாராக தெரிவிக்காமல் தகவலாக தெரிவித்து மாணவனை திருத்துவதை கூட்டு முயற்சியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

வகுப்பு நேரமான 45 நிமிடத்தில் ஐந்து முதல் பத்து நிமிடமாவது தன்வகுப்பு மாணவர்களோடு கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் அவர்களின் தேவைகளையும் புரிதல் நிலையையும் அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியரை பிடித்துவிட்டால் அவர்கள் நடத்தும் பாடங்களும் பிடிக்கும் என்ற உளவியல் உண்மையை ஆசிரியர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

6. செல்போன் – இன்டர்நெட் போன்றவற்றை மாணவர்கள் கருவியாக மட்டும் பார்ப்பதில்லை. அவற்றுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதை சரி செய்வது எப்படி?

அடிமையாகிவிட்டார்கள் என்று நீங்கள் சொன்னது சரியான பதம்.
சமீபத்தில் என்னிடம் கவுன்சிலிங் வந்த மாணவி, பள்ளிக்கு செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டதால், தன் புத்தகத்தின் நடுப்பகுதியை செல்போன் பதித்து வைக்கும் அளவிற்கு கத்தரித்து, அதில் வைத்து மறைத்து எடுத்து வந்து பிடிபட்டதால் அழைத்து வரப்பட்டார். செல்போனுக்கு எந்த அளவுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதற்கு இது சிறு உதாரணம்.

செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் அதிகம் ஒன்றிப் போகும் குழந்தைகள் தங்கள் மூளையின் செயல் வேகத்தினை தாங்களே குறைத்துக் கொள்கிறார்கள். தன்னை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதே தெரியாத அளவிற்கு அவர்களின் மூளையின் multi tasking அளவை தங்களையும் அறியாமல் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர்கள் வீட்டில் தங்கள் செல்போன் பயன்படுத்துதலை குறைத்துக் கொண்டாலே அல்லது நெறிப்படுத்திக் கொண்டாலே இந்த பழக்கம் குழந்தைகளுக்கும் குறைந்துவிடும்.

பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சிக்காகத்தானே நண்பர்களிடம் அதிகம் செல்லில் பேசுகிறார்கள். அன்றாட நிகழ்வுகளை குழந்தைகளிடம் ஆர்வமாக கேட்டறியும்போது பகிர்தல் மகிழ்ச்சி வீட்டிலேயே ஏற்படும்.

செல்போனை எப்படி, எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என்று உணர்த்திய பிறகே குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டும். பேசுவதற்குத் தான் போனே ஒழிய புகைப் படம் எடுக்கவோ பாட்டு கேட்பதற் காகவோ அல்ல.. எனவே ஆடம்பரம் இல்லாத அதிக விலை இல்லாத செல்போன்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வளவுதான் பேச வேண்டும் என்று மாத கட்டணத்திற்கான உச்ச வரம்பை நிர்ணயுங்கள்.

செல் பயன்படுத்தும் நேரத்தை முறைப் படுத்துங்கள். வீட்டில் இருக்கும் நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி அவர்களாகவே அதற்கான நேரத்தை தீர்மானித்து கடைப்பிடிக்க ஊக்குவியுங்கள். இது சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும்.

7. புத்திசாலி மாணவன் – புத்தி குறைந்த மாணவன் என்ற பாகுபாடுகள் உண்மையிலேயே உண்டா?

நிச்சயமாகக் கிடையாது. மதிப்பெண்ணை வைத்து புத்திசாலித்தனத்தை அடையாளப் படுத்துவதால்தான் இப்படி ஒரு கேள்விக்கே இடம் ஏற்படுகிறது.

எட்டு விதமான இன்டலிஜென்ஸ் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இன்டலிஜென்ஸ் இருக்கும். ஆனால் கல்வியோடு சம்பந்தப்பட்ட அரித்மடிக் இன்டலிஜென்ஸ் தவிர மற்றவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால் யாரும் வெளிப்படுத்துவதே இல்லை.

இத்தகைய எண்ணங்கள் மாறுகிற போதுதான் நம் தேசத்திற்கு இன்னும் நிறைய ஜீனியஸ்கள் கிடைப்பார்கள்.

8. பாடப்புத்தகங்கள் தவிர பொதுவாக புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தும் பொறுப்பு யாருக்குள்ளது?

தங்கள் குழந்தைகள் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று ஓய்வில்லாமல் அவர்களை வேகமாக ஓட வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குத்தான் இதில் அதிகமான பங்கு இருக்கிறது.

நூலகமில்லாத வீடு என்பது சன்னல் இல்லாத வீடு என்பது நூறு சதவிகிதம் உண்மை. எனவே தங்கள் வீட்டை காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு ஜன்னல் வைப்பது போல அறிவோட்டம் இருக்க வேண்டும் என்று நூலகம் அமைக்க வேண்டும்.

ஏனெனில் டி.வி.யை விடவும் அவசியமானது நூலகம். டி.வி.யை வாங்கி வைத்து அதை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் நூலகம் அமைத்தால் குழந்தைகளுக்கு அறிவுத்தேடல் இயல்பாகிவிடும்.

மேலும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் பரிசாக ஆடைகளுக்கு பதிலாக புத்தகங்கள் மட்டுமே வாங்கித்தரப்பட வேண்டும். புது ஆடையில் அன்று மட்டுமே புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் ஒரு புத்தகத்தின் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுக்க புத்துணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

கற்பது என்பது மாணவப்பருவத்தில் மட்டும் நிகழ வேண்டிய செயல் அல்ல. நம் வாழ்நாள் இறுதி வரை நடக்க வேண்டிய ஒன்று. எனவே மாணவர்கள் பாடங்கள் படிக்கிற நேரத்தில் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் துறை சார்ந்த அல்லது பொது தலைப்புகளில் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் படித்த புத்தகத்தில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை குழந்தைகளிடம் அவ்வப்போது பரிமாறிக்கொள்ள வேண்டும். பிறகு யாரும் சொல்லாமலே அவர்கள் பாடம் தாண்டி பொதுவான புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

9. பள்ளி விட்டால் டியூசன் – டியூசன் விட்டால் இன்னொரு டியூசன் என்று மாணவர்கள் எந்திரன்களாகிவிட்டார்கள் – இது ஆரோக்கியமான போக்குதானா? டியூசன் நடத்து பவர்களுக்கு கண்டிப்பாக இது ஆரோக்கியமான போக்குதான். தனிப்பயிற்சி என்பது, பள்ளியில் கற்பதில் சற்றே பின்தங்கி இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி என்ற அர்த்தத்தில் துவங்கப் பட்டது. ஆனால் இன்றோ அது கூடுதல் பயிற்சி என்றாகிவிட்டது. நன்றாக படிக்கும் மாணவன்கூட மந்தை ஆடாகி டியூசன் செல்கிறார்கள். பள்ளி வகுப்பறைகளைவிட, அதிகம் பேர் நிரம்பி வழியும் இடமாக டியூசன் மாறிவிட்டது வேதனை அளிக்கிறது. இது கண்டிப்பாக ஆரோக்கியமான போக்கே அல்ல.

பள்ளியில் படித்து மட்டுமே நல்ல மதிப்பெண் பெறமுடியாது என்கிறபோது பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

டியூசனில் ஒரு பாடம் நடக்கும், பள்ளியில் வேறொரு பாடம் நடக்கும். மறுநாள் இரண்டிலும் டெஸ்ட். இதனால் மாணவர்கள் அளவுக்கு மீறி உழைக்க நேர்கிறது. படிப்பதில் சோர்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம். பள்ளியில் கற்றதை படிக்கக்கூட நேரமில்லாமல், என்ன கற்றுத் தந்தார்கள் என்று அசைபோட விடாமல் செய்யும் இந்த டியூசன் கலாச்சாரம் செய்யும் விஷயம் என்ன தெரியுமா? ஜீரணிக்கவே விடாமல் சாப்பாடு போடுவதைத்தான்.

டியூசன் ஆசிரியருக்கும் பள்ளி ஆசிரியருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னிடம் டியூசன் வராத மாணவர்களுக்கு வகுப்பில் கிடைக்கும் வார்த்தை வசைவுகள் என கிளைப் பிரச்சனைகளும் இதில் உண்டு.

மதிப்பெண் உயர்விற்கு மட்டும் உரிமை கொண்டாடாமல் மாணவனின் மதிப்பெண் குறைவிற்கும் பள்ளிகள் பொறுப்பேற்றுக் கொள்வதாலும், ஒவ்வொரு மாணவர் மேலும் சிறப்பு கவனத்தை பள்ளிகளில் ஆசிரியர்கள் எடுப்பதாலும், மேலும் கரும்பிலிருந்து சாற்றை எடுத்த பின் சக்கையை மட்டும் வெளித்தள்ளும் இயந்திரங்களாக இல்லாமல் ஒரு மாணவனின் தனித்திறன் அவனது சூழல் என அனைத்திலும் கவனம் செலுத்தத் துவங்கினாலே போதும். டியூசன் என்னும் விஷயமே தேவையற்றதாகி விடும்.

10. தேர்வு அறைக்குள் நுழைவதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாணவர்கள் செய்ய வேண்டியதென்ன?

சரியான நேரத்திற்கு எழுந்துவிட வேண்டும். ஐந்து நிமிடம் தாமதமாக எழுந்தாலும் பதட்டம் ஏற்பட்டு அது நாள் முழுவதும் நீடிக்கும்.

தேர்வுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே படிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. ஏனெனில் படிக்காத பாடம் அல்லது பகுதி கண்ணில் படும்போது பதட்டம் அதிகரிக்கும்.

இந்த கேள்வி கட்டாயம் வரும் என்று சொல்லி கடைசி நேரத்தில் குழப்பும் நண்பர்களிடம் தேர்வு முடியும் வரை பேசாமலிருப்பதும் நல்லது.

தேர்வுக்கு தேவையான பொருட்களை, (பேனா, பென்சில், புது ரப்பர்) என அனைத்தையும் இரண்டு இரண்டாக வைத்துக் கொள்வது நல்லது.

புத்தகங்களை புரட்டுவதை விட ந்ங்ஹ் ய்ர்ற்ங்ள்-ஐ புரட்டுவதும் கடைசி நேர விரயத்தால் ஏற்படும் பதட்டத்தையும் தவிர்க்கும்.

பதட்டத்தை உணரும்போது மூச்சை நன்கு ஆழமாக மூன்று முறை இழுத்து விடுங்கள். பதட்டம் குறையும்.

11. நீங்கள் பழகிப் பார்த்தவரை இன்றைய மாணவர் தலைமுறை எப்படி இருக்கிறது?

பிரமிக்க வைக்கிறார்கள். துரிதமாகக் கற்றுக் கொள்கிறார்கள். துடிப்பாக இருக்கிறார்கள். மிகச்சரியான முறையில் வழிகாட்டினால் மிகச் சிறந்தவர்களாக வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அலுப்பூட்டும் அளவிற்கு வழிநடத்தும் எண்ணத்தை விடுத்து அவர்களாகவே வழிதேடி அறிய கற்றுத் தந்தால் இன்னும் நிறைய சாதிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *