திரு. பி. சுரேஷ்குமார் நேர்காணல்

அதிகாரிகளை உருவாக்கும் அதிசய மனிதர்

‘தன்னார்வப் பயிலும் வட்டம்” அமைத்த திருச்சி மண்டல வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் திரு. பி. சுரேஷ் குமார்

நம் நாட்டில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து முடித்து தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு முதலில் அவர்கள்

செல்லுமிடம் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களை நோக்கித்தான். பதிவு செய்யும் எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுத்து விட முடியுமா? ஆனால் அரசு வேலை தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் அவர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்களை நோக்கி உந்தித் தள்ளுகிறது.

ஆனாலும் கூட தமிழகம் முழுக்க உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இன்று வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் பயிற்சி மையங்களாக, கோயில்களாக காட்சி தருகின்றன. ஆம்! “தன்னார்வப் பயிலும் வட்டம்” என்ற அமைப்பு இன்று ஓர் இயக்கமாக உருவெடுத்து பல்லாயிரம் இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துள்ளது.

தன்னார்வப் பயிலும் வட்டம் என்றால் என்ன? இதற்கு அடித்தளமிட்டவர் யார்? என்று வினா எழுப்பிய போது அனைவரும் சுட்டிக் காட்டியது, திருச்சி மண்டல வேலை வாய்ப்புத் துறை இயக்குநர் திரு. ட.சுரேஷ் குமார் அவர்களைத்தான்….

சுரேஷ் குமார்… ஒரு நம்பிக்கை மனிதர். அரசு அதிகாரி என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு தனது கடமையாற்றி ஒரு மனிதாபிமானி என்ற அடிப்படையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருபவர். இவரது தனிப்பட்ட முயற்சியில் இதுவரை இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள், நான்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள், குரூப் ஐ சர்வீஸ் மூலம் பல டெபுடி கலெக்டர்கள், பல முதன்மை கல்வி அதிகாரிகள், வங்கிப்பணி தேர்வாணையம் மூலம் வங்கிப்பணிக்கு சென்றோர் பல நூறு பேர், ரயில்வே தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அந்தந்த துறைகளில் பணிக்கமர்ந்தோர் ஆயிரங்களைத் தொடும். இது எப்படி சாத்தியம்? இந்த வெற்றிப் படிக்கட்டுகள் கட்டப்பட்ட விதம் யாது?

திரு. சுரேஷ் குமார் அவர்களை நமது நம்பிக்கைக்காக சந்தித்தோம்…

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்!

என் சொந்த ஊர் மதுரைக்கு 9 கி.மீ தூரத்தில் உள்ள காயாம்பட்டி கிராமம். மிகச் சாதாரண விவசாயக் குடும்பம். தொடக்கக் கல்வி காயாம்பட்டி தொடக்கப்பள்ளியில், பள்ளிக்கல்வி மதுரை செயின்ட் மேரிஸ் பள்ளி, கல்லூரி மதுரைக் கல்லூரியில் பி.எஸ்ஸி. விலங்கியல், படித்து முடித்தவுடன் கொஞ்சகாலம் மதுரை பாண்டியன் போக்குவரத்து கழகத்தில் எழுத்தர் பணி, பிறகு தேர்வு எழுதி வெற்றி பெற்று மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினேன். இந்தக்காலத்தில் என்னுடைய அறிவுத்தேடல் அதிகமானது. வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே எம்.ஏ ஆங்கில இலக்கியம், எம்.பி.ஏ, பி.எல், இதழியல் டிப்ளமா, எம்.எஸ்ஸி சைக்காலஜி போன்ற பட்டங்களை அஞ்சல் வழிக் கல்வி மற்றும் மாலை நேரக் கல்லூரிகளில் படித்து முடித்தேன். தொடர்ச்சியான முயற்சியின் பலனாக குரூப் 1 தேர்வு எழுதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலராக, புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் 1992ல் பணிக்கமர்ந்தேன்.

தன்னார்வப் பயிலும் வட்டம் பற்றி!

நான் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலராக பணியமர்ந்த போது, அங்கு தங்கள் கல்வித் தகுதிகளை ஆர்வமாகப் பதிவு செய்ய வரும் மாணவர்களைப் பார்ப்பேன். பலரும் ஆர்வமாக வந்து என்னிடத்தில், “சார். எனக்கு அரசாங்க வேலை ஏதாவது கிடைக்குமா?” என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். நானும் அவர்களிடத்தில், “சீனியாரிட்டிபடி நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்” என்று கூறி அனுப்புவேன். அப்படி ஒரு நாள் எனக்கு ஒரு யோசனை தோன்றியது! பதிவு செய்துவிட்டு செல்லும் இளைஞர்களை போட்டிக்கு தயார் செய்தால் என்ன? பல துறைகளுக்கும் போட்டித் தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட காலம் அது!

ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்த மாணவர்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி, “நீங்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, உங்களை தகுதிப்படுத்திக் கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னை பயன்படுத்திக் கொள்கிறீர்களா? ‘நான் ரெடி! நீங்க ரெடியா?” என்று கேட்டேன். எல்லா இளைஞர்களும் “நாங்களும் ரெடி” என்று ஆர்வத்துடன் என்னுடன் கரம் கோர்த்தனர். அன்று உருவெடுத்ததுதான் தன்னார்வப் பயிலும் வட்டம். அருகில் இருந்த ஒரு நர்ஸரிப்பள்ளி பயிற்சிக் களமாக மாறியது! புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் மூலம் பல புத்தகங்கள், புத்தகங்களைப் பாதுகாக்க பீரோ இப்படி கிடைக்கப் பெற்றோம். கல்லூரிப் பேராசியர்கள், ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியிலிருப்போர் போன்றவர்களை அழைத்து வகுப்பு எடுக்கச் செய்தோம். அந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மற்றும் ரயில்வேதுறைத் தேர்வுகளில் புதுக்கோட்டை பகுதியில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 11 பேர். இதில் தன்னார்வப் பயிலும் வட்ட மாணவர்கள் 9 பேர்! இந்த வெற்றி அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிறகு விருதுநகர் மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். அந்த ஊரில் உள்ள நல்ல உதவும் உள்ளங்கள் மூலம் அங்கேயும் தன்னார்வப் பயிலும் வட்டம் துவக்கினோம். புதுக்கோட்டையின் வெற்றியாளர்களை அழைத்து தன்னார்வப் பயிலும் வட்டத்தின் பயன் குறித்து பேசச் செய்தோம். விருதுநகர் இளைஞர்களும் இவ்வமைப்பால் ஈர்க்கப்பட்டு வெற்றிக் கனிகளைப் பறித்தார்கள்.

நம் தமிழக அரசாங்கம் உங்களுக்கு அளித்த ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருந்தது? இருக்கின்றது?

இது நல்ல கேள்வி. ஆரம்பத்தில் புதுக்கோட்டையில் இந்த அமைப்பு துவக்கப் பட்ட போது மாதம் நான் 20 ரூபாய் தருவேன். பயிலும் வட்ட மாணவர்கள் தலைக்கு ரூ. 10 அளிப்பார்கள். போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிவிடுவோம். விருதுநகரிலும் இம்மையம் சிறப்பாக நடைபெறுவதை அறிந்த அரசு, இம்மையத்தை பார்வையிட சென்னையிலிருந்து வேலை வாய்ப்புத்துறை ஆணையர், தொழிலாளர் நலத்துறைச் செயலாளர், வேலை வாய்ப்புத்துறை இணை இயக்குனர், மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை அனுப்பியது. அவர்கள் விருது நகர் தன்னார்வப் பயிலும் வட்டம் நடைபெறும் விதத்தை ஆய்வு செய்தனர். அங்கிருந்த மாணவர்களிடையே உரையாடினர். சிறப்பான திட்டமாக இருந்ததை அறிந்து மேலும் என்ன தேவை? என்று கேட்டார்கள்.

மேலும் நிதி கிடைத்தால் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கலாம் என்று ஒருமித்த குரலில் சொன்னோம். அரசிடம் அனுமதி பெற்று உதவுவதாக அறிவித்த அவர்களின் உறுதியின்படி மாதம் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம் உதவித் தொகை அளிக்க ஏற்பாடு செய்தது அரசு. அதுமட்டுமல்ல தமிழகம் முழுக்க உள்ள (மாநகராட்சிகள் நீங்கலாக) 24 மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இம்மையங்கள் அரசாங்க நிதி உதவியுடன் துவக்கப்பட்டன. 2001ம் ஆண்டு முதல் எல்லா மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் இம்மையம் துவங்கி நடைபெற ஆரம்பித்தது. தற்போது ஒவ்வொரு தன்னார்வப் பயிலும் வட்டத்திற்கும் தலா ரூ 5 ஆயிரம் அரசு உதவி அளிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் தமிழ்நாட்டிலுள்ள 385 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் தன்னார்வப் பயிலும் வட்டம் துவக்கப்பட்டது. இதற்கு நிதி உதவியாக தலா ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

பிறகு நான் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பகத்தின் உதவி இயக்குனராக 1999ம் ஆண்டு முதல் பணியமர்ந்தேன். இங்குதான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் என்று எங்கள் இலக்கு நோக்கிய பயணம் வெற்றிக் கோட்டையை கம்பீரமாக அடைந்தது!

இது தவிர தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன?

அங்கீகாரம் என்று சொல்வதைவிட ஆசீர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும். எனது யோசனையை, தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற அமைப்பை அங்கீகரித்து, மாநிலம் தழுவிய அமைப்பாக மாற்றிய அரசுக்கும், என்னோடு இணைந்து செயலாற்றும் என் அலுவலகத்தின் இதர அலுவலர்களுக்கும் கோடி நன்றி.

நம் மாநில தன்னார்வப் பயிலும் வட்டங்களின் செயல்பாடுகளை அறிந்த கர்நாடக அரசு, கர்நாடகத்திலும் இத்திட்டம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு, கர்நாடக மாநில அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களுக்கும் பெங்களூரில் ஒருநாள் பயிலரங்கம் நடத்தியது. அதில் நான் சிறப்பு அமைப்பாளராகக் கலந்து கொண்டு அவர்களுக் கெல்லாம் பயிற்சி அளித்தேன். இது எனது பணிக்கான அடுத்த கட்டம் என்று சொல்வேன்.

சனி, ஞாயிறு கூட அலுவலகமா? ஓய்வு உங்களுக்கு தேவை இல்லையா?

“இதை எனக்கு இப்பிறவியில் கிடைத்த வரமாக கருதுகிறேன். ஒருவித எதிர்பார்ப்பு களுடன், ஏக்கங்களுடனும் வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் இளைய சமுதாயத்துக்கும், ஒரு வழிகாட்டியாக, நண்பனாக, அவர்களுக்கு அடித்தளம் அமைத்துத் தரும் ஆசிரியனாக இருந்து செயல்படுவதால் எனக்கு சோர்வு என்பதே இல்லை. எப்போதும் உற்சாகம்தான் (அது சரி… சோர்வு ஏற்பட்டால்தானே ஓய்வு எடுக்க வேண்டும்)

போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வது தவிர்த்து வேறு என்ன செயல்பாடுகள் உள்ளன?

” இது போட்டிகள் நிறைந்த உலகம். டார்வின் தியரிபடி ‘தகுதி உள்ளவை மட்டுமே பிழைக்கின்றன’ (Survival of the fittest) என்ற சூழ்நிலை உள்ள இக்கட்டத்தில் எல்லோரையுமே அத்தகுதி பெறுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க விரும்புகின்றோம். மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான மனரீதியிலான கவுன்சிலிங், தொழில் தொடங்க விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, தகுதியான அமைப்புகள்மூலம் ஆலோசனை வழங்குதல், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருதல், மாற்றுத்திறன் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழிலில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருதல், இவர்களின் ஆளுமைத்திறன் மேம்படுவதற்கு உரிய பயிற்சிகள் இப்படியாக பயணிக்கிறோம்.

இதுமட்டுமல்லாது தன்னார்வப் பயிலும் வட்டம் பற்றியும், வேலை வாய்ப்புகள் குறித்தும் பேருந்துகள், தொடர்வண்டிகள், கல்லூரிகள், விடுதிகள் எங்கெங்கு இளைஞர்கள் தென்படுகிறார்களோ அங்கெல்லாம் பிரசாரம் செய்கின்றோம். வாரம் ஏழு நாட்களும் எங்கள் அலுவலகம் திறந்திருக்கும். சனி, ஞாயிறு கல்லூரி வகுப்புகள் போல எங்கள் அலுவலகம் மாறிவிடும். பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் வகுப்பெடுக்கும் போது நானும் கூடவே இருப்பேன். எப்போதும் அணுகலாம். இப்போது இந்தியாவில் மக்கள் தொகையில் 60% இளைஞர்கள்தான். இவர்களை நெறிப்படுத்தி ஒரு நேர்கோட்டில் ஒருங்கிணைத்தால் அனைவரும் வெற்றியாளராக மாறுவர்.

இன்றைய இளைய சமுதாயத்துக்கு உங்களின் வேண்டுகோள்?

முதலில் உங்களை நம்புங்கள்… நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்ற உரத்த சிந்தனை எப்போதும் உங்களுள் ஓடிக் கொண்டு இருக்கட்டும். இலக்கு நோக்கிய பயணம் தெளிவாக இருக்கட்டும். முடியும் வரை முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும் வரை அல்ல! நீங்கள் நினைத்த காரியம் முடியும்வரை முயலுங்கள். வெற்றி நிச்சயம்!

இவர் சிறந்த ஊக்குவிப்பாளர் மட்டுமல்லாது நல்ல எழுத்தாளரும் கூட.

  • L.K.G. முதல் I.A.S.வரை
  • வருங்காலத்தில் வாய்ப்புள்ள துறைகள்
  • பொறியியல் – மருத்துவம் – இதர படிப்புகள்
  • போட்டித்தேர்வுக்கு தயாராவது எப்படி?
  • வெற்றிப்பாதை

ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

நேர்காணல் – திருச்சி. ஜி.சிவகுருநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *