– ரகு
உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக வாகை சூடிய
கிரிக்கெட் அணிக்கும், இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் என்ன வித்தியாசம்?” இந்தக் கேள்விக்கு பதில், “எல்லாவற்றிலுமே வித்தியாசம்” என்பதாகத்தான் இருக்கும். பள்ளி அளவிலான கிரிக்கெட் அணி என்று வரும்போது, அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் அசகாய சூரர்கள் என்று சொல்ல முடியாது.
எழுத்தாளர் சுஜாதா, பள்ளி மாணவராக இருந்தபோது, ஸ்ரீரங்கம் சிறுவர் கிரிக்கெட் அணியில் ஒரு குழந்தையும் இருந்ததாக எழுதுகிறார். “இவனை சேத்துண்டே ஆகணும்! இவங்க வீட்டிலேதான் கிரிக்கெட் பாட் இருக்கு” என்று அந்த அணியின் கேப்டன் சொல்லி விட்டதுதான் காரணம்.
சமரசத்திற்காகவோ வேறு வழியில்லாமலோ, படுசுமார் – ஏதோ தேவலை ரகத்தில் இருப்பவர்களையும் அணியில் சேர்க்க வேண்டிவரும்.
அதுவே படிப்படியாக மாவட்ட அணி – மாநில அணி – தேசிய அணி என்று வளரும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகள் மட்டுமே அந்த அணியில் இடம் பெறமுடியும். இது, விளையாட்டில் மட்டுமல்ல. சிறிய நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகூட இதுதான்….. இதுவேதான்…..
உங்கள் நிறுவனம் சிறியதாய் இருக்கிற பட்சத்தில், எல்லோருமே பெரும் திறமைசாலிகளாக வந்து சேர்ந்துவிட்டால், இது அதிர்ஷ்டம். ஆனால் அபூர்வம். வருபவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலைத் தந்து, போதிய அளவு பயிற்சிகள் கொடுத்து, உரியமுறையில் உத்வேகம் ஊட்டி அவர்களைத் திறமையாளர்கள் ஆக்குவது, சிறிய நிறுவனம் விரைவில் வளர ஒரு வழியாக இருக்கும்.
ஒரு நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும், அதன் முதல் பத்து அலுவலர்களின் செயல்திறனில் இருக்கிறது என்றார் ஸ்டீல் ஜாப்ஸ். உங்கள் நிறுவனத்தின் சிக்கல் ஒன்றைத் தீர்க்க பிரத்யேகமாய் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்குகிற வசதி உங்களிடம் இல்லையென்றால் பரவாயில்லை. உங்கள் முதல் பத்து அலுவலர்களில் யாரேனும் ஒருவருடைய மூளையில்கூட ஒரு மகத்தான யோசனை பளிச்சிடலாம். பொதுவாகவே, சிறிய அளவிலான நிறுவனங்களைப் பொறுத்தவரை, பெரிய பெரிய பிரச்சினைகளைத் தீர்க்கும் பலமும் ஒற்றுமையும் பெரிதாக இருக்கும். தொழில்நுட்பங்கள்கூட ஒரு கால எல்லைக்குப் பிறகு தோற்றுப் போகக் கூடியது. ‘பேஜர்’ என்ற பெயரில் இருந்த கருவி இன்று காலாவதியாகிவிட்டது. ஆனால், “சொல்லியனுப்பதல்” என்ற விஷயம் அதற்கு முன்னும் பின்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
எனவே, உங்கள் நிறுவனம் அளவில் சிறியதாக இருந்தாலும் அதற்காக கவலைப்பட அவசியமில்லை.
சின்ன நிறுவனத்தை போட்டிபோடும் ஒரு பெரிய நிறுவனமோ, அல்லது எதிர்பாராத சந்தை மாற்றமோ கொசு அடிப்பதுபோல் அடித்துவிடும் என்கிற அச்சம் நியாயமானதுதான்.
ஆனால் கொசுவிடம் சிறிய நிறுவனங்கள் கற்றுக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது என்பதை நிர்வாகவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். கொசுவின் கொள்கை ஒன்றுதான். செய்துமுடி. அல்லது செத்துமடி. எதிர்ப்பு நிலையைக் காட்டுவதற்குக் கொசு எதுவும் செய்வதில்லை. ஆனால், தன் வேலையை முடித்துக்கொண்டு பறந்துவிடுகிறது. கொசுவிடம் இருக்கும் ஒரு குறைபாடு சிறிய நிறுவனங்களிடம் இல்லாமல் இருந்தால் போதும்.
இரத்தத்தை உறிஞ்சும்போது, சம்பந்தப்பட்டவருக்கு ‘சுள்’ என்று வருகிற வலிதான் கொசுவின் எமன். கடிபட்டவரிடம் அடிபட்டுச் சாகிறது கொசு. ஆனால் சிறிய நிறுவனங்கள் மற்றவர்களைப் பகைத்துக்கொண்டு வளர்ந்தால்தான் அடிவிழும். வளரும் சுவடே தெரியாமல் வளர்ந்துவந்தால் சிக்கலில்லை.
சிறிய நிறுவனத்தை நீங்கள் நடத்துகிறீர்கள் என்றால், ஒரு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நிறுவனத்தை நடத்துவதும் வளர்ப்பதும் வேறு வேறு விஷயங்கள். நிறுவனத்தை நடத்த ஒருவரும் வளர்த்துவிட ஒருவரும் பாடுபட்டால்தான் சரியான – விரைவான வளர்ச்சி சாத்தியம்.
இதற்கான ஏற்பாட்டை மட்டும் செய்துவிட்டால், உங்கள் நிறுவனம் சிறிய நிறுவனம் என்று சொல்லி முடிக்கும் முன்னரே பெரிய நிறுவனமாய் வளர்ந்துவிடும். முயன்றுதான் பாருங்களேன்!!
Leave a Reply