உள்ளே, வெளியே1
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம்
பல ஆண்டுகளுக்கு முன் யாரிடமோ கேட்ட ஒரு கருத்து அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டது. அதன்பின் பல மேடைகளில் அதைச் சொல்ல நேர்ந்திருக்கிறது எனக்கு. நீங்கள் கூட இதை படித்தோ அல்லது யாரிடமோ கேட்டோ இருக்க முடியும்.
சேறும் சகதியுமான ஒரு குழி. மனிதர்கள் நடந்து போக முடியாத சூழல். அருகில் போய் விடவும் முடியாது. எல்லாக் கழிவுகளும் வந்து நிறைந்து அப்படி ஒரு மணம்!
எங்கிருந்தோ ஒருவன் எறிந்த கல் ஒன்று, சேறும் கழிவுகளும் குழம்பி நிற்கும் அந்த குழிக்குள் வந்து விழுந்தது. கொஞ்சம் அழுகிப் போய் விட்டதால், சாப்பிடப் பிடிக்காமல் ஒருவன் வீசி எறிந்த வாழைப்பழம் ஒன்றும் அந்த குழிக்குள் வந்து விழுந்தது. சுவைத்து சாப்பிட்ட மாம்பழத்தின் விதையை மற்றொருவன் விளையாட்டாய் அந்தச் சேற்றை நோக்கி எறிய, அதுவும் அந்தக் குழிக்குள் வந்து சேர்ந்தது.
எவ்வித மனிதத்தீண்டலும் இல்லாமல். அவ்வப்போது வந்து சேரும் கழிவு நீரைத் தவிர வேறு அசைவு இன்றி அந்தக் குழி இருக்கிறது. சேற்றுக்குள் விழுந்த மூன்றும் என்னவாகும்? கல் ஒன்றுமே ஆகாது. சுற்றியிருக்கும் சேறும் அதை ஒன்றும் செய்யமுடியாது; கல்லும் சேற்றினை ஒன்றும் செய்யாது. வாழைப்பழம்? எத்தனை நாட்கள் தாங்கும்? தவறு; எத்தனை மணி நேரம் தாங்கும்? “இது சேறு; இது வாழைப்பழம்,” என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவு கரைந்து கலந்திருக்கும்.
மாம்பழ விதை, அந்த இரண்டு போலவும் இருக்காது. கல் போன்று இல்லாமல், சூழ்நிலையால் பாதிக்கப்படும். ஆனால் வாழைப்பழம் போல் சூழ்நிலையில் கரைந்து விடாது. அந்தச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தன்னுள்ளே பொதிந்து கிடக்கும் சக்திகளை வெளிக் கொண்டுவரும். தனது உள் ஆற்றலை மறைத்து மூடி வைத்திருக்கும் கடினமான மேல் தோலை, தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் சூழலைக் கொண்டே பிளக்கும். அந்தச் சூழலில் இருந்து தனக்குரிய சக்தியை மட்டும் பெற்றுக்கொண்டு; ஆனால் சூழலின் எந்த பாதிப்பும் இல்லாமல் முளைத்து வெளிக் கிளம்பும்.
இந்த உதாரணத்தை அப்படியே நமக்குப் பொருத்திக் கொள்ளலாம்! சூழலைக் குறை சொல்லிப் பயனில்லை. நாம் வெறும் கல்லா அல்லது அழுகிப் போன வாழைப்பழமா அல்லது வீரியமிக்க விதையா என்பதே நமது வெற்றியைத் தீர்மானிக்கிறது.
“எதுவுமே சரியில்லை” என்ற குற்றச்சாட்டு, நாம் அறிவில்லாமல் போவதற்குக் காரணமாகிவிடக் கூடாது.
எல்லாப் பக்கங்களிலும் சலிப்பு நிறைந்திருப்பது உண்மைதான். யாரிடம் பேசினாலும், ஏதோ ஒரு நிலையில் சலித்துக் கொள்கிறார்கள். நாமும் ஒன்றும் விதிவிலக்கல்ல. நம் மனத்திலும் இயல்பாகவே சலிப்பு வந்து இடம் பிடிக்கத் தான் செய்கிறது.
அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காகப் பார்த்தாலே இந்தச் சூழல் மாறி விடும். சிக்கலே அதுதான். என் வேலையை நான் செய்வதற்கே சோம்பல் படுகிறேன் என்றால்….? யாரையாவது எதிர்பார்க்கிறேன்…? அல்லது எதையாவது எதிர் பார்க்கிறேன் என்றால்….? நான் செய்யவேண்டிய வேலையையே அரைகுறையாக ஏதாவது செய்துவிட்டு “எல்லாம் இது போதும்” என்று எழுந்துவிடுகிற மனநிலை எனக்கு வந்துவிடுகிறது என்றால்…..? என்னைவிட பணத்தில் அல்லது அதிகாரத்தில் இருப்பவர் வந்து மிரட்டினால்தான் என் வேலையையே நான் செய்வேன் என்பதுதான் நிலை என்றால்…?
அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காகச் செய்வதைவிடச் சிறந்த தர்மம் உண்டா என்ன? “தப்பாக வேதம் சொல்பவனைவிட ஒழுங்காக சிரைப்பவன் மேற்குலத்தான்” என்கிறான் பாரதி.
பணம்தான் எல்லாம் என்று ஆகிவிட்டது இப்போது. நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை; கருவாடு விற்ற பணம் நாறப் போவதில்லை; மலர் விற்ற பணம் மணக்கப் போவதில்லை! பணம் இருக்கவேண்டும், அவ்வளவுதான். எப்படி வந்தது என்பதெல்லாம் கேள்வியே இல்லை. முதுகுக்குப் பின்னால் பேசிக் கொள்வார்கள். “எப்படி இவனுக்கு இவ்வளவு பணம் வந்தது தெரியுமா?” என்று. ஆனால் நேருக்கு நேர் பார்க்கும்போது வாயெல்லாம் பல்லாகத்தான் இருக்கும்.
பணம் இருந்தால் படை சேர்ந்து விடுகிறது. பதவி இயல்பாகக் கை கூடுகிறது. கண் பார்வையிலேயே அதிகாரம் செய்ய முடிகிறது. இந்த நிதர்சன உண்மை ஏறத்தாழ எல்லோரையும் புரட்டிப் போட்டுவிட்டது. ஆகையால் அவரவர் நிலையில் பணம் பண்ணும் சூழ்நிலையாகிவிட்டது.
மருத்துவமனையில் குழந்தையாக பிறக்கும்போதே தொடங்கிவிடுகிறது “இரண்டாம் பணம்”. குழந்தையையும் பெற்ற தாயையும் உடல் நலத்துடனும், மன நலத்துடனும் வீடு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றால் “இரண்டாம் பணம்” செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில்…..! “சம்பளம் வாங்குற இல்ல…..? ” என்று அவரிடம் உண்மையைப் பேசினால், நிலைமை பரிதாபம்தான். தனியார் மருத்துவமனையிலேயே இந்த நிலை வந்து விட்டது. மற்றதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
மருத்துவமனையில் தொடங்கும் இந்த “இரண்டாம் பணம்” மரணம் வரை விடுவதில்லை. “இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும். சொந்தக் காலில் நிற்க வேண்டும்”, என்று அவ்வப்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களின் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல! அவர்களது அனுபவங்களையும், படும் அல்லல்களையும் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
எங்கும் பணம் கேட்கும் நிலை. யாரையாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கடன் வாங்கப் போனாலும் சரி; காவல் நிலையத்திற்குப் போனாலும் சரி! அலுவலுக்குப் போகவும் சரி; அரசியலுக்குப் போகவும் சரி; பின்னணி ஏதாவது இருக்க வேண்டும். அது பணப் பின்னணியோ, அல்லது அரசியல் பின்னணியோ, அல்லது அடியாட்கள் பின்னணியோ, அல்லது ஏதோ ஒன்று. முன்னே இருந்து இழுக்கவும், பின்னே இருந்து தள்ளவும் ஆளில்லாதவர்களின் கதி அதோகதிதான்.
இதுதான் நிதர்சனமான சூழல். இந்தச் சூழலில் தான் வாழ வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழலிலும், நாம் அசைய மறுக்கும் கல்லா. அழுகிப்போகும் வாழைப்பழமா அல்லது வீரியமிக்க விதையா என்பதுதான் நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.
“வித்து முளைக்கும் தன்மை போல மெல்லச் செய்து பயனடைவார்” என்று எழுதுகிறான் பாரதி. வித்து மெதுவாகத்தான் முளைக்கும். உள்ளுக்குள்ளேயே பக்குவப்பட்ட விதை, முதலில் தன்னை மூடிவைத்திருக்கும் தடையைக் கிழிக்கும். பூமிக்கு வெளியே எட்டிப் பார்க்கும்போதே, பூமிக்குள் வேர்விட்டிருக்கும். செடியாக, மரமாக, எவ்வளவு வெளியே வளர்ந்து கொண்டே போகிறதோ அதே அளவுக்கு, தான் என்பது இல்லாமல் அழிந்து மண்ணுக்குள்ளே தன்னுடைய வேர்க்கரங்களால் அகழ்ந்து, அகழ்ந்து உள்ளே போய்க்கொண்டேயிருக்கும்.
நாம் வீரியம் நிறைந்த விதைகள் என்பது உண்மையானால், சூழல்களால் நம்மை வீழ்த்திவிட முடியாது. பாலைவனத்தில் வீழ்ந்தால்கூட, ஈச்ச மரமாக எழுந்து நிற்கலாம். குறைந்தது, ஒட்டகம் சாப்பிடும் சப்பாத்திக் கள்ளிச் செடியாக…..
இயலாத நிலையில், கல்லாகவே கிடந்தாலும் பரவாயில்லை. வாழைப்பழமாகிவிடாமல் இருந்தால் போதும்!
தொடரும்
sundararaj.r
super. best article
thanks
keep it up.
sundar