வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்

-க. அம்சப்பிரியா

இந்த உலகிற்கு வருகிறபோது மனிதனுக்கு தேவைப்படுகிற உடல் உறுப்புகளோடுதான் அவதரிக்கிறான். பற்றாக்குறை உறுப்புகளோடு வரலாமே தவிர, கூடுதலாக யாரும் வருவதில்லை. அப்படி வருகிறபோது பொருத்தமில்லையென மருத்துவ உலகம் அப்புறப்படுத்திவிடுகிறது.

இரண்டு வாய், நான்கு உதடுகள், நான்கு கால்கள் என்று யாருடைய வாழ்க்கையும் அமையவில்லை. ஆனால் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருப்பது அவர்களுக்கு இருக்க வேண்டியதைவிட மிகையாக இருப்பதுதான்!

மிகைப்படுத்துதல்:

ஒருமுறை தோட்டக்காரன் ஒருவன் தோட்டத்திலிருந்து வரப்பு வழியே வந்து கொண்டிருந்தபோது ஒரு அடி நீளமுள்ள பாம்பைக் கண்டான். மறுபடியும் தன் பாதையில் அது எதிர்படக்கூடுமென்று உடனே அதை அடித்துக் கொன்றுவிட்டான். வீடு வர சற்று தாமதமாகிவிட்டது.

மனைவியிடம் நடந்ததைக் கூறினான். மனைவி சற்று நேரத்தில் ஓடோடிச் சென்று தன் கணவன் இரண்டடி பாம்பை தனியே ஒரு ஆளாக அடித்துக் கொன்றதாக பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.

பக்கத்து வீட்டுப் பெண் அன்று மாலை பக்கத்துத் தெருவிற்கு சென்று தங்கள் தெருவில் உள்ள ஒருவர் பத்தடி நீளமுள்ள பாம்பை, ஒற்றை ஆளாக இருந்து அடித்துக் கொன்றுவிட்டதாக செய்தி பரப்பினாள்.

இப்படியே பரவிய செய்தி பக்கத்து ஊருக்கும் பரவியது. அப்போது நூறு அடி பாம்பாக அது மாறியிருந்தது.

இதைக் கேள்விப்பட்ட ஞானி ஒருவர் நூறு அடி பாம்பைப் பார்க்கும் ஆவலோடு அந்த விவசாயியின் வீட்டிற்கு வந்திருந்தார்.

விவசாயி அப்போது அங்கு இல்லை. விவசாயியின் மகன் சிறுவன் மட்டும் இருந்தான். ஞானி , “நூறு அடி பாம்பை அடித்தவரைப் பார்க்க முடியுமா …? என்றார்.

“பார்க்கலாம். ஆனால் செத்த பாம்பு எப்போதாவது வளர்வதைப் பார்த்திருக்கிறீர்களா…” என்றான்.

ஞானி புரிந்து கொண்டார்.

மிகைப்படுத்துதல் என்பது எல்லோர்க்குள்ளுமே ஊறிக் கிடக்கிறது. அது உண்மை நிலையை காட்ட மறுக்கிறது. அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக இருக்கிறது.

இருப்பதை இருப்பது போல பார்த்துப் பழகுவதே முன்னேற்றத்தின் முதல் படியாகிறது. கொஞ்சமே கொஞ்சம் ஆற்றலை வைத்துக் கொண்டு எல்லாமே நம்மால்தான் நடக்கிறது என்று நினைக்கிறோம்! இதனால் அடுத்த கட்டத்திற்கு நகர மறுக்கிறோம்!

சாதாரண கல்வித் தகுதியை மிகைப்படுத்திக் காட்டுகிறோம்! இளைஞர்களில் ஒரு பகுதியினரே தங்கள் இன்றைய நிலையைவிட அடுத்த கட்டத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள விரும்புகின்றனர். இன்னொரு பகுதியினர் இருந்த இடத்தைவிட்டு நகர பெரும் தடையாய் இருப்பதும் தங்களை மிகைப்படுத்திக் கொள்வதே!

மிகைப்படுத்திக் கொள்வதின் மூலம் வீண் பெருமை உருவாகிறது. முகமூடி மாட்டப்பட்ட நம் முகம் பிறருக்கு வேண்டுமானால் வேறு விதமாக தெரியலாம்! ஆனால் முகமூடிக்கும் நமக்கும் தெரியும்… நம் உண்மையான முகம் எதுவென்று!

புதிய நண்பர்களிடம் அறிமுகமாகிற போது மிகவும் அதிக ஆர்ப்பாட்டத்துடனும் பொய்யாக தங்கள் தகுதியை உயர்த்தியும் அடையாளப்படுத்திவிட்டு பிறகு உண்மை வெளிப் படுகிறபோது கூடுதல் அவமானத்தை சந்தித்தவர்கள் நம்மில் ஏராளம்!

நம் மனம் ஒரு வெற்று நிலம்! ஒன்றிரண்டு செடிகளையோ மரங்களையோ நட்டிவிட்டு, அதில் கிடைக்கிற மகசூலை மட்டுமே அறுவடை செய்து கொண்டிருப்பது ஒரு வகை!

இருக்கிற எல்லா இடத்திலும் விதவிதமான பூச்செடிகளை, கனி மரங்களை, விளைச்சல் பயிர்களை விதைத்து, அதன் மூலம் கூடுதல் பயனடைவது இன்னொரு வகை.

அளப்பரிய விளைச்சலை தரக்கூடியது நம் மனம். அதில் மறு சுழற்சியில் விதவிதமாக பயிர் செய்யலாம். வருவோர் போவோருக்கெல்லாம் நம் விளைச்சலை அள்ளி அள்ளி தரலாம்.

நம் மன மரத்தின் செழித்த கிளைகளில் ஆயிரமாயிரம் பறவைகள் சிறகசைக்கட்டும்! விளைந்த கனிகளை கொத்தித் தின்று பசியாறட்டும்! ஆயிரக்கணக்கான ஆச்சரியம் பொங்கும் பூச்செடிகளில் வண்ணத்துப் பூச்சிகள் அமர்ந்து சிறிது வைக்கட்டும்.

வெறும் நிலத்தை வைத்துக் கொண்டு மிகைப்படுத்துதல் என்னும் மதிற்சுவரை எழுப்பி தனிமைப்பட்டும் போவதைவிட இப்படி பரந்து விரிந்து பயன் தருவது வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றும்!

நம்மை உணர்ந்து நம்மை மேம்படுத்துகிறபோது வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *