திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

-இயகோகா சுப்பிரமணியம்

மகுடத்தில் ஒரு வைரம்

உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் உடன் படிக்கும் மாணவிகளைப் பார்க்கும்போது, அவர்களில் யாராவது ஒருவரை மானசீகக் காதலியாக நினைத்துக் கொள்வதுண்டு. கல்லூரி நாட்களில் இது இன்னும் விரிவடைந்து திரையுலகில் அந்த சமயம் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கன்னிகளையும், பிரபலங்களையும் திருமணம் செய்து வாழ்க்கையமைப்பது போலவும் கனவுகளும் ஆசைகளும் வரலாம்.

நிஜமான வாழ்க்கையில் நுழையும் போதுதான், நிதர்சனமும், வாழ்வின் மாயை அகன்ற அமைப்பும் கனவுலகிலிருந்து மீட்டு, அம்மா, அப்பா பார்த்த பெண்ணையோ, அல்லது தானே பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம். மனதின் ஆழமான ஆசைகள், அபிலாஷைகள், மகிழ்வான தருணங்கள், சோகமான சூழ்நிலைகள், பிடிப்பு, வெறுப்பு – எல்லாம் கலந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து, சந்ததிகளை உருவாக்கி ‘வாழ்ந்தோம்’ என்ற நினைப்போடு முதுமை எய்துவோம்.

மகிழ்வோடு இருக்கும்போது அதன் பயன் குடும்பத்துக்கு. சோர்ந்து போன வேளையில் ஊக்கமளிப்பது மனைவியும், உறவும். இந்த அடிப்படையில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வாழும் நாடு, சூழ்நிலை, இடம் வேறுபட்ட போதும் அடிப்படையில் எல்லாருடைய வாழ்வும் இதை மீறி அமைந்துவிட முடியாது.

இதில் நான் மிகப்பெரிய குடும்பத் தலைவன், சாதனை படைத்த குடும்பத் தலைவன், தோற்றுப்போன குடும்பத்தலைவன் என்றெல்லாம் கிடையாது. கடலில் கலக்கும் நதிகள், கிளை நதிகள் போல, வாழ்க்கை என்பது எல்லாருக்கும், குடும்பம் என்பது எல்லாருக்கும் அமையும். அவவளவுதான்.

தொழிலும் அதுபோலத்தான்.

வெறும் கனவுகளும், முனைப்பும், உழைப்பும், தினசரி காலையில் எழுந்து நான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன், என்று நூறு முறைஉறுதி எடுத்துக் கொள்வேன் என்று உற்சாகமாக இருப்பதற்கு சொல்லிக் கொள்ளலாமே ஒழிய நிஜத்தில் என்ன அந்த நேரத்தில் அமைகிறதோ – அதை சிறப்பாக அமைத்துக் கொள்வதுதான் வெற்றி.

‘திரைகடலோடித் திரவியம் தேடு’ – என்பது அப்படிப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டால் அதை எப்படி உபயோகிக்கலாம், எது நல்லது, கெட்டது என்று என் அனுபவத்தில் நான் பார்த்ததை வைத்து எழுதியிருக்கின்றேன். அதற்காகத் திரைகடலோடி எதையும் செய்தால்தான் சிறப்பு என்பதெல்லாம் கிடையாது. இந்தியாவிலும் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். எது நமக்கு நல்லதாக அமைகிறதோ அதைச் செய்வதே சிறப்பு. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” – அவரவர் குடும்பமும், மனைவியும், மக்களும் அவரவர்க்குச் சிறப்பு – அவரவர் பணியிலும் தொழிலிலும் அவரவர் நேர்மையான முன்னேற்றமும், பொருள் ஈட்டுதலுமே இணையற்ற வெற்றி என்பதே உண்மை. உயர்வு.

என்னுடைய நண்பரும், மிகப்பிரபலமான தொழில் அதிபருமான வைகிங் திரு..ஈஸ்வரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரிடம் நான் வைத்த கேள்வி.

“அண்ணா, நீங்கள் ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை?” – என்பதே.

அதற்கு அவர் அளித்த பதில் –

“மணி! நான் தயாரிக்கும் பனியன்கள், ஜட்டிகள் தென்னகத்தில் மிகவும் அதிகமான விற்பனையில் உள்ளன. சொல்லப்போனால் முதலிடத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆடையும் எங்கள் நிறுவனத்தில், எங்கள் தர ஆய்வுக்குட்பட்டு, ‘வைகிங்’ முத்திரையோடு செல்கின்றன. இதில் தென்னிந்திய விற்பனைக்கே எங்கள் நிறுவனத்தில் சிலசமயம் உற்பத்தி போதவில்லை. ஓரளவிற்கு விரிவுபடுத்தி எங்கள் குடும்பம், எங்களது சகோதரர்கள் குடும்பமும் முழுநேரத் தொழிலாக இதைச் செய்து வருகின்றோம். இதில் இன்னும் எந்த அளவு சிறப்பாகத் தரம் தரமுடியுமோ அந்த அளவு முயற்சி எடுத்து முதலீடு செய்கின்றோம். இதனோடு டையிங், ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. வேஷ்டி, சட்டைகளும் தயார் செய்கின்றோம். உள்நாட்டுச் சந்தையே போதும்”.

தெளிவாகவும், அதே சமயம் திட்டமிட்டும் செய்துவரும் அவர் எந்தப் பல்கலைக்கழகத்திலும் படித்துப் பட்டம் பெற்றவரல்ல. ஆனால் ‘வைகிங்’ என்றால் உள்ளாடைகளில் முதல் என்று தென்னிந்தியாவில் அனைவருக்கும் தெரியும் படியான ஒரு சாதனையல்லவா ஆற்றியிருக்கின்றார்.

சேலம் செல்லும் போதெல்லாம் குமார பாளையம் என்ற ஊரில் இருக்கும் ‘அம்மன் மெஸ்’சுக்கு சாப்பிடச் செல்வோம்.

இரண்டு சகோதரர்கள், அவர் தம் மனைவியர், அம்மா, இரண்டு அல்லது மூன்று உதவியாளர்களை வைத்து உணவு விடுதியை அற்புதமாக நடத்துகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் கடை திறந்து மாலை 3 அல்லது 3.30 க்கு மூடி விடுவார்கள்.

எல்லாவிதமான நான்-வெஜ் அயிட்டங்களோடு மிக மிக இனிமையான உபசரிப்போடும் சுமார் நூறு அல்லது நூற்றி ஐம்பது பேர் வரை தினமும், மதிய உணவு வழங்கி வியாபாரம் செய்கின்றனர். விலையும் சாதாரணம்தான். பல ஆண்டுகளாகப் புகழோடு நடத்திவரும் இவர்களுக்கு மிகப் பெரிய வாடிக்கையாளர் கூட்டம் உண்டு. இவர்களது “அம்மன் மெஸ்” ஒரு “பிராண்ட்”.

எந்த ‘மெக்டொனால்டு, கெண்டுகி சிக்கன்’ – பெயரையும், வெற்றியையும்விட இவர்களது சாதனை குறைந்ததல்ல. வியாபார அளவு, விளம்பரம் வேண்டுமானால் மாறுபடலாமே ஒழிய, இவர்களது சாதனை என்ன குறைந்தா போய்விட்டது?

மிகப்பெரிய உலகம். மிகப் பெரிய சந்தை. அனைவருக்கும் அதில் பங்களிப்பும், பலனும் உண்டு. எனவே உங்கள் திறன், உங்கள் முயற்சி, உங்களது வீச்சு – இவற்றை உணர்ந்து செயல் பட்டால் திரைகடலோடியும், திரைகடல் தாண்டாமலும் நம்மால் வெற்றியாளர்களாகப் பரிணமிக்க முடியும்.

இந்தத் தொடரை முடிக்கும் இந்தத் தருணத்தில், நான் முத்தாய்ப்பாகச் சொல்ல விரும்புவது ஹெபாஸிட் இயகோகா என்ற எங்களது நிறுவனம், சுவிட்ஜர்லாந்திலுள்ள ஹெபாஸிட் நிறுவனத்துடன் கூட்டாக 1996-ல் இருந்து கோவையில் இயங்கி வருகின்றது. 1987-ல் ஆரம்பிக்கப்பட்ட எங்களது நிறுவனம் ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த நிறுவனத்துடன் கூட்டு வைத்தபோது, அப்போதுதான் உலகமயமாக்கல் ஆரம்பமாயிருந்தது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த ஹெபாஸிட் நிறுவனம் இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும், இந்தியா, சுவிட்ஜர்லாந்து நாடுகளையும் சேர்த்து சுமார் 12 தொழிற் சாலைகளையும், சுமார் எண்பது நாடுகளில் வியாபார, சேவை நிறுவனங்களையும், உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் விற்பனை முகவர்களையும் கொண்டுள்ளது. சுமார் நான்காயிரம் பேர் நேரடியாகப் பணிபுரியும் இந்த நிறுவனம் தயாரிக்கும் பவர் ட்ரான்ஸ்மிஸன் பெல்ட்டுகள், கன்வேயர் பெல்ட்டுகள், பிரிண்டிங் ப்ளாங்கட்டுகளில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்றது. நாங்கள் கோவையில் தயாரித்துக் கொண்டிருந்த ‘சிந்தடிக் ஸ்பிண்டில் டேப்’ பின் தரம், இந்தியச் சந்தையில் எங்களது பங்கு ஆகியவற்றை அறிந்து, எங்களுடன் கூட்டாகத் தொழில் செய்யத் தொடங்கினர். இன்று உலகிலேயே அதிக விற்பனையாகும் சிந்தடிக் ஸ்பிண்டில் டேப்புகள் – கோவையில் எங்கள் நிறுவனத்தில்தான் தயாராகின்றன. இதற்கான முழு பொறியியல், இரசாயன, இயந்திர அடிப்படைகள் யாவும் நாங்களே அமைத்துக் கொண்டவை. அவை ‘சுவிஸ்’ஸில் இருந்து பெறப்பட்டதல்ல. அதேசமயம் அவர்கள் தயாரிக்கும் அத்தனை பெல்ட்டுகளிலும், இந்தியா வங்காள தேசத்துக்கான சந்தைக்கு நாங்கள் வாங்கி வியாபாரம் செய்கின்றோம்.

1996-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், உலகம் முழுதும் இருந்து வரும் ‘ஹெபாஸிட்’ நிறுவன மேனேஜர்களின் மகாசபைக் கூட்டத்திற்கு சென்று வருவேன். கூட்டுத் தொழில் ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகள் எல்லாக் கூட்டங்களையும் அமைதியாகக் கவனிப்பதோடு முக்கியமான செய்திகளை முக்கியமான வியாபார விஷயங்களை மட்டும் பேசுவேன்.

வருடங்கள் செல்லச் செல்ல, இந்தியாவில் விற்பனை, உற்பத்தி, தொழிலாளர் நலன், வாடிக்கையாளர் தொடர்பு, முகவர்கள் தொடர்பு, அவர்கள் மனத்திருப்தி, நிறுவனத்தின் லாபம், புகார்களை எதிர்கொள்ளும் தன்மை, பயிற்சி அளித்தல் – போன்ற பலவற்றில் கணினி மயமாக்குதல் உட்பட – இந்தியாவுக்கு எது தேவையோ, நமது கலாச்சாரத்துக்கு எது ஏற்றதாக அமையுமோ அதைமட்டும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து தேவையானதை எடுத்துக் கொள்வோம்.

அதே சமயம், அவர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும், தேவையற்றதை, மிகவும் பொறுமையுடன் விளக்கிக்கூறி வேண்டாம் என்று நிறுத்திவிடுவோம். நட்புறவோடு எடுத்துச் சொல்லிவிடுவோம்.

ஒவ்வொரு முறையும் திருக்குறள், மஹாபாரதம், இராமாயணம், பாரதியார், விவேகானந்தர், வள்ளலார் போன்றவர்களின் எழுச்சியூட்டும், வழிகாட்டும் முறைகளைத் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து – இந்தியாவின் மதிப்பை விவரித்து – எங்கள் நிறுவனத்தின் வழிமுறை இதன் அடிப்படையில் அமைந்தது – என்பதை ஆணித்தரமாகச் சொல்லி விடுவேன்.

வயதான மாமனார், மாமியாரைத் தன்னுடன் வைத்துப் பாதுகாக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் வயதான அப்பா, அம்மாவைத் தன்னுடன் வைத்துப் பேணும் ஆண் தொழிலாளர்களுக்கும் – ஒவ்வொரு மாதமும் சிறப்பு ஊக்கத் தொகையாகப் பல வருடங்களாகக் கொடுத்து வருகின்றோம்.

அதைப் பற்றிய பேச்சு வந்தபோதுதான், நமது நாட்டின் குடும்ப அமைப்பு, அது சார்ந்த பொருளாதாரத்தின் வளம், விருந்தோம்பல், தொழில் பக்தி – போன்றவற்றை எடுத்துவைத்து, அவற்றையும் அவர்கள் உணரும் வண்ணம் உறுதியுடன் உழைத்தோம்.

பொருளாதார விற்பனையளவில், இந்திய நிறுவனத்தில் மொத்த வியாபாரம் அவர்களது உலகளாவிய வியாபாரத்தில் இரண்டு சதவீதம் இருந்தபோதும் – மற்ற நாடுகளை ஒப்பிடும்போது – இந்திய வியாபாரத்தின் வளர்ச்சி நிலையாக உயர்ந்திருக்கின்றது.

சென்ற அக்டோபர் மாதம் (2008) ஆயுத பூஜையன்று, இந்தியா வந்திருந்த திரு.ஜவானி வோல்ப்பி – தலைமை இயக்குநர் – ‘ஹெபாஸிட் பாராட்டு விருது’ – என்று ஒரு சிறப்பு விருது வழங்கினார். அந்த விருது இந்த நிறுவனம் ஆரம்பித்த அறுபது ஆண்டுகளில் எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கப்படவில்லை. மிகவும் சிறந்த நிர்வாகி என்ற அந்த விருதில் எழுதியிருந்ததன் தமிழாக்கத்தைக் கீழே எழுதியிருக்கின்றேன்.

“இந்த விருது திரு. என். சுப்பிரமணியம் அவர்களின் தளர்வில்லாத முயற்சிக்கும், தொலை நோக்குப் பார்வையோடு நிறுவனத்தை வழிநடத்தும் திறமைக்கும் அர்ப்பணிக்கப் படுகின்றது.

ஜனவரி 1996-ல் நமது நட்புறவு தொடங்கிய நாள் முதல்கொண்டு, தங்களது உயர்ந்த நம்பகத்தன்மை, உண்மையான நட்புரிமை, இருவருக்கும் உரித்தான வெற்றியின் பயன் தொடர்வதற்காக உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.

தங்களது ஒப்புயர்வற்ற தலைமைப் பண்பும், ஓர் அணியாய்ச் செயல்படும் திறனும், வாடிக்கையாளரை மையப்படுத்தி ஆற்றும் சேவையும், ஹெபாஸிட் இயகோகா நிறுவனத்தை, ஹெபாஸிட் மகுடத்தில் வைரமாக ஒளிர வைக்கின்றது.

இந்த விருது எங்கள் மனமார்ந்த நன்றியின் வெளிப்பாடு”

இந்த வாசகத்தை திரு.ஜவானி வோல்ப்பி அவர்கள் ஆங்கிலத்தில் படிக்க, அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நண்பர் முகவர் திரு.ராமலிங்கம் அவர்கள் எடுத்துக்கூற, எங்கள் தொழிலகத்தைச் சேர்ந்த அத்தனை பேரின் முன்னிலையிலும் இந்த விருது வழங்கப்பட்ட போது என் விழிகள் பனித்தன.

இந்த விருது எனக்கு வழங்கப்பட்ட போதும், இது எனது நிறுவனத்தின் இதர இயக்குனர்களான தம்பி தங்கவேலு, நண்பர் அம்மாசைக்குட்டி மற்றும் அனைத்து நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்கள் அனைவருக்கும் சேர்ந்து கிடைத்தது என்பதே உண்மை.

ஹெபாஸிட் நிறுவனத்தின் லாபத்தைக் கணக்கிட்டால், எங்களது இந்திய நிறுவனத்தின் வியாபாரமும், லாபமும் மிகவும் சொற்பமே. ஆனால், ஒரு தலைசிறந்த நிறுவனம், சிறந்த நிர்வாகி என்று மற்ற நாடுகளை விடவும், நமது நாட்டில் இயங்கும் நிறுவனத்தையும், என்னையும் தேர்வு செய்ததின் முழு பெருமையும் இந்தப் பாரத தேசத்தின் பண்பாட்டுக்கும், அடிப்படை பொருளாதார நேர்மைக்கும் கிடைத்த விருது, பரிசு, பெருமை எனலாம்.

அன்புள்ள வாசகர்களே,

என்னுடைய அனுபவத்தைக் கொண்டு, அதன் பயனாக எழுந்த எனது எண்ணங்களை உங்கள் முன் வடித்துள்ளேன். நிர்வாகம், கூட்டுப்பணி செயலாக்கம் – இவை ஏட்டுப் படிப்பால் மட்டும் வந்துவிடாது.

நல்ல பண்பையும், விருந்தோம்பலையும், பெரியோரிடம் பணிவையும், பொருள் மீது பேராசைப்படாத மனதையும் எல்லாரிடமும் சரிசமமாகப் பழகும் தன்மையையும், தேவைப்பட்ட இடத்தில் பிடிவாதத்தையும், ஊரோடு ஒத்து வாழும் மனதையும், எனக்களித்தது என் தாயும், தந்தையும், என் கிராமமும், சமுதாயமும், உறவும், நட்பும், இந்தத் தமிழ் மண்ணும், தேசமும், இதன் அற்புதமான இலக்கியங்களும், பாரம்பரியமும், வாழும் முறையும்தான். இந்த அனுபவம் எத்தனை பல்கலைக்கழகங்களிலும் படித்து வந்தாலும் கிடைக்கப்பெறாது. இதைவிட உயர்ந்த வாழ்க்கை நெறி, வெற்றிச் சூத்திரம் எங்கும் கிடையாது. திரை கடலோடித் திரவியம் தேடுங்கள். வெற்றியை உங்கள் குடும்பத்துக்கும் இந்த தேசத்துக்கும் அர்ப்பணியுங்கள். என்றும் ‘இந்தியன்’ என்ற பெருமையை, அடையாளத்தை, உயர்வை உலகெங்கும் பணிவோடு, வெளிப்படுத்துங்கள்.

வாழ்க தொழில்! வளர்க தலைமுறை! வெல்க பாரதம்!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published.