வெற்றியை விதைதிடுவோம்

கே.ஆர் . நல்லுசாமி

படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று.

நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதா என்பதை எப்படி பரிசீலிக்கும் அனுபவம் முக்கியமோ அதுபோல கிடைக்கின்ற வாய்ப்புகளை சரிதானா என்பதை பரிசீலித்து விட்டு விதையை சரியாக உழவு செய்யப்பட்ட நிலத்தில் பயிரிடுவது போல நமது உள்ளத்தில்

விதைத்துவிடவேண்டும். நிலத்திற்குள் உள்ள விதைக்கு எப்படி நல்ல தண்ணீரும், அதை பராமரிக்கும் ஒரு தோட்டக்காரனும் முக்கியமோ, அதேபோல் நமது உள்ளத்தை நல்ல அனுபவமிக்கவர்களின் புத்தகத்தின் மூலமாகவும், நல்ல நண்பர்கள் மூலமாகவும், மனதில் உள்ள விதைக்கு உரமூட்ட வேண்டும். வளர்ந்து வருகிற மரம் நிச்சயம் காய் கொடுக்கும் என்ற நம்பிக்கை எப்படி வெற்றி பெறுகிறதோ, அதே போல் நமக்குள் இருக்கும் இந்த தாக்கத்திற்கு வெற்றி கிடைத்தே தீரும்.

ஏழ்மையாக உள்ளவர்கள்கூட எளிதாக வெற்றி பெறவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படுகிற தடைகளை கண்டு தயங்காமல் தனது பயணத்தை துவங்க வேண்டும். அந்த பயணத்தில் வரக்கூடிய இடையூறுகள், எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்பு ஆகிய மூன்றும்தான். ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்றையும் கடந்துதான் வெற்றி பெறமுடியும்.

இதை வெல்வது சுலபமா, சிரமமா?

நிலத்தில் விதைத்த விதை காய்க்குமா? காய்க்காதா? என்ற சந்தேகம் இல்லாமல் நிச்சயம் காய்க்கும் என்ற நம்பிக்கை எப்படி சாத்தியமோ அதே போல் நமது இலக்கை நோக்கி செல்லக்கூடிய இடத்திற்கு இதுபோன்ற தடங்கல்களை தகர்ப்பது என்பது மிக சாதாரணமாகிவிடும்.

பிரச்சினைகளை கண்டு நாம் ஓடத் துவங்கினால் அது நம்மை துரத்த ஆரம்பிக்கும். அதே பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுலபமாக தீர்வு காண முடியும்.

ஏழ்மையாக இருந்த ஒரு இளைஞன் ஒரு ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற நினைத்து தன்னை தயார்படுத்துவதற்காக தினமும் அதற்கு தேவையான பயிற்சியை மிக நேர்த்தியாக செய்து வருகிறான். தனக்குள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழமாக பதிய வைத்துக்கொண்டு பயிற்சியை தொடர்கிறான்.

போட்டியின் தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த போட்டியில் கலந்து கொள்ள தனது பெயரை பதிவு செய்யும்போது அனைவரும் அவரின் தோற்றத்தைப் பார்த்து உனக்கெல்லாம் இந்த போட்டி தேவைதானா, வேண்டாம் என்று எதிர்த்தவர்கள் பலர். அதையும் மீறி பெயர் பதிவு செய்தாகிவிட்ட பிறகு “இவனுக்கு எல்லாம் ஆசையை பார், எவ்வளவு நாள் விளையாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஓடும்போது இவன் போய் அவர்களோடு சேர்ந்து ஓட நினைக்கிறான் பாரு” என்று ஏளனமாக பேசுபவர்களையும் தாண்டி, போட்டியின் நாளை எதிர்நோக்கி இருந்தவனுக்கு போட்டியில் ஓட வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதுகூட இவனுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. அதையும் மீறி வெற்றி பெறுவது மட்டுமே தனது இலக்கு என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவனுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் இவன் ஓடுகிறான் வெற்றி பெறுவானா என்றே இருந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்தவுடன் “மடை திறந்த வெள்ளம்” போல் ஓடுகிறான். மிகப்பெரிய வெற்றியை அடைகிறான்.

வெற்றிக்குப் பிறகு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள், மாலை போடுகிறார்கள், வெற்றி பெறுவாய் என்பது எங்களுக்குத் தெரியும் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் கூட்டம். இவைகள் எப்படி சாத்தியம் ஆகியதோ, அதே போல்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும்.

நமது இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர நம்மை நோக்கி வீசப்படுகிற எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்புகள் முக்கியம் அல்ல.

விதையை விதைத்திடுவோம்
விழிப்புடனே இருந்திடுவோம்!
மரமாய் வளரும் வரை
மகிழ்ச்சியாய் இருந்திடுவோம்!
பூக்கள் பூக்கும் வரை
பூரிப்பாய் இருந்திடுவோம்!
காய்களாய் மாறும் வரை
கவனமாய் இருந்திடுவோம்!
காத்திருந்த காலமெல்லாம்
கனவாக போகாமல்
கனிகளை நாம் பெறுவோம்
நலமாய் நாம் வாழ்வோம்!

Leave a Reply

Your email address will not be published.