புது வாசல்

மாணவர்பகுதி

உங்களுக்கு எதற்காக பெயர் வைத்தார்கள் ?

எல்லா விலங்குகளுக்கும் பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் பெயர் இருக்கிறது. இப்படி பெயர் வைப்பதன் காரணம் என்ன? சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் எல்லா நிகழ்ச்சிகளின் நிறைவிலும் இந்தக் கேள்வியை நாங்கள் கேட்பதுண்டு.

மனிதர்களுக்கு இரண்டு காரணங்களுக்காக பெயர் வைக்கிறார்கள் என்பது என் கருத்து.

‘கூப்பிடுவதற்காக.. அடையாளம் காண்பதற்காக..’ என ஒரு காரணத்தை பல்வேறு வார்த்தைகளில் அனைவரும் சொல்லிவிடுவார்கள்.

பெயர் வைப்பதற்காக இரண்டாவது காரணம் ?

அதை ஓர் உதாரணம் மூலமாக சொல்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்கிற பாதையில் பன்னிருபடி ஐயன் திருவடி .. என்று தொடங்குகிற அரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பெரிய பெயர் உள்ள ஒரு கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியில் வாட்ச்மேனாக வேலை பார்த்தவரின் மகன் பெயர் மகேஷ்.

சாதிக்கத் துடித்த மகேஷ் படிக்கும்போது கம்ப்யூட்டர் ஹேங்க் ஆவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் சாப்ட்வேர் ஒன்றைக் கண்டுபிடித்தான்.

மைக்ரோ சாப்ட், ஐபிஎம் என எல்லாக் கம்பெனிகளும் பாராட்டின . பரிசளித்தன. வேலைக்கு வரச் சொல்லி கடிதம் அனுப்பின. இதெல்லாம் நமக்கு செய்தியல்ல. இப்போது யாரும் அந்தக்கல்லூரியை அதன் பெயர் சொல்லி அழைப்பதில்லை. மகேஷ் காலேஜ் என்றுதான் அடையாளம் காட்டுகிறார்கள்.

மனிதர்களுக்கு பெயர் வைப்பதன் இரண்டாவது காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

மனிதர்களுக்கு பெயர் வைப்பதற்கு ஒரு காரணம் கூப்பிடுவதற்காக. இரண்டாவது காரணம் உதாரணம் காட்டுவதற்காக.

டாக்டர் அப்துல்கலாம் பெயரை யாரும் கூப்பிடுவதற்காக இன்று பயன்படுத்துவதில்லை. ஆனாலும் உலகெங்கிலும் அவர் பெயர் உதாரணம் காட்டுவதற்காக உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

உங்களுக்கு பெயர் வைத்ததற்கான இரண்டாவது காரணத்தை எப்போது நீங்கள் நிறைவேற்றப்போகிறீர்கள் ?

உங்கள் பெயரும் உதாரணப் பெயராக வரவேண்டும். நிச்சயம் வரும்.

என்றும் நம்பிக்கையுடன்..

கிருஷ்ண.வரதராஜன்

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
நூற்றுக்கு நூறு இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *