சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் பொதுக்கூட்டம் 19.04.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு வடகோவை குஜராத் சமாஜம் கே.கே. மேத்தா ஹாலில் நடைபெற்றது. பயிலரங்கின் சிறப்பு பயிற்சியாளராக திருச்சி ஆஏஉக நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் திரு. திருவள்ளுவர் கலந்து கொண்டார். சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார். இணைச்
செயலர் திரு.சஜீத் விருந்தினரை அறிமுகம் செய்தார். செயற்குழு உறுப்பினர் திரு.கிரிபாபு நன்றி கூறினார். நமது நம்பிக்கையுடன் இணைந்து மேட்டூர் ஸ்ட்ரக்சுரல்ஸ் நிறுவனத்தினர் பொதுக்கூட்டத்தை நிகழ்த்தினர். மேட்டூர் ஸ்ட்ரக்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பாக திரு. பெரியசாமி அவர்களும், திரு. தண்டபாணி அவர்களும் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர் திரு. திருவள்ளுவர் உன்னதத்தை நோக்கி (உறவு – உணர்வு – உயர்வு) என்ற தலைப்பிலே உரையாற்றினார். அவர் தம் உரையிலிருந்து……..
நம்பிக்கை கொடுப்பவர்கள் வல்லவர்கள், நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையை தருகின்ற சிகரம் உங்கள் உயரம் இயக்கம் வலிமையான இயக்கம். நல்லதொரு இயக்கத்தை உருவாக்கிய திரு. மரபின் மைந்தன் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உன்னதத்தை நோக்கி நமது வாழ்வு செல்ல வேண்டும் என்றால். உறவுகள் மேம்பட வேண்டும். உறவுகள் மேம்பட அற்புதமான சொல் ஒன்று சிகரம் இயக்கத்தின் ‘பேனரில்’ உண்டு. அந்த சொல் ‘நமது’ கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேலே செல்லலாம் முழுமையை நோக்கி. உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டதுதான் உறவு. இதிகாசங்களான இராமாயணம், மஹாபாரதம் உறவுகளை செழுமைப்படுத்திச் சொல்லி இருக்கின்றன. சிலப்பதிகாரம் போன்றவை உறவுகளை மேம்படுத்திச் சொல்லி இருக்கின்றன. ஆசிரியர் மாணவர் உறவு, நிறுவனர் வாடிக்கையாளர் உறவு சுமூகமாக இருத்தல் வேண்டும். மனிதன், சகமனிதனை புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையையும் புரிந்து கொள்வது சற்று சிரமமே. கண்ணதாசனின் வரிகள் இதனை உணர்த்தும்:
“குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதும் இல்லை
தன்னந் தனியே பிறந்தவனின் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா.”
நிறைகுறைகள் நிறைந்தவன் மனிதன். பின்னமாக இருக்கின்ற மனிதனுக்கு தேடல்கள் இருக்கின்றன. நமது தேவைகள் வேறு, விருப்பங்கள் வேறு. பசிக்கு உணவு சாப்பிடுவது தேவை. வகை வகையாகச் சாப்பிட வேண்டும் என்றால் அது விருப்பம்.
மதிப்பீடுகள்தான் இலக்குகளையும் நிர்ணயிக்கின்றன. அனுபவம் வேறு திறமைகள் வேறு. பல இடங்களில் பலரிடம் நாம் பெற்ற அனுபவம் நம்மால் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடிகிறது. வாழக் கற்றுக் கொடுக்கிறது. சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கம், உங்களில் பலருக்கு மிகப் பெரிய மாற்றம் தந்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
சுயத்திற்கும் சூழலுக்கும் இடையில் நடைபெறுகின்ற ஊடாட்டம் வாழ்க்கை. சுயம் என்பது பலம். பலவீனமாக பிரிகிறது. சூழல் ‘ வாய்ப்புகள் ‘ தடைகள் என பிரிகிறது. நம்பிக்கையும் பொறுமையும்தான் பலம். பலவீனங்கள் குறையும்போது பலமுள்ள மனிதனாக மாறுகிறோம்.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
என்ற வள்ளுவரின் குறள் நமக்கு சுயத்தை தெளிவாக உணர்த்துகிறது.
நமது நம்பிக்கைதான் ஓடுமின் ஓட உறுமின் வரும் வரை வாய்ப்புக்காக காத்திருக்க வைக்கும்.
நம் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது மதிப்பீடுகளும் அதிகரிக்கும். மதிப்பீடுகள் உயரும்போது மனம் பக்குவம் அடைகிறது. அன்னை தெரசா ஏழைகளுக்காக தன்னை பயன்படுத்திக் கொண்டார். அவரின் மதிப்பீடு உயர்ந்தது. பக்குவப்பட்டார்.
உறவுகளை நாம் உணர்வுகளால் அங்கீகரிக்க வேண்டும். பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்காள், உறவுகள் மேம்பட வேண்டும். நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கிராமங்களில் கூட உறவுகள் கலைந்து விட்டனவோ?
ஒரு கவிதை……..
பெரியப்பனும் சித்தப்பனும்
ஒன்றாய் இருந்த காலத்தில்
ஒன்றாகவே இருந்தது எங்கள் வீடும்.
முரண்பட்டு நெஞ்சம் பிளவுற்றதும் இரண்டானது
எளிதில் தென்படா வண்ணம்?!
இடையிடப்பட்டது சுவர்.
முன்பெல்லாம் இன்பமோ துன்பமோ வீடு முழுக்க
ஒன்றாகத்தான்.
இங்கிருக்கும் துன்பம் அங்கு இன்பமாகவும்
இடம் பெயரவும், விரிசல் கண்டு கிடக்கிறது இன்று
உடைந்த வீடு என்று ஊர்க்காரர்கள்
எளிதில் காட்டும்படி.
ஒரே கல்லால் கண்ணாடியும்; ஒரு சொல்லால் உள்ளமும் உடைந்துவிடும். ஆகவே உட்கார்ந்திருக்கட்டும் கவனம் உங்கள் சொல்மீது. நம் குழந்தைகள் மீதும் கூட நம் அதிகாரச் சொற்களை பிரயோகப்படுத்தக்கூடாது. கலீல் ஜிப்ரான் மிக அழகாகச் சொல்வார், உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல!
உறவுகளை மேம்படுத்துவதற்கும் உணர்வதற்கும் 18 படிகள் தேவை. அவை:
1. கருத்து முரண்பாடுகள் தவிர்த்தல்
2. ஆணவம் தவிர்த்தல்
3. ஏற்றத்தாழ்வு
4. முன் முடிவுகளும் , முன் பதிவுகளும் பரிசீலித்தல்
5. புரிந்து கொள்ளுதல்
6. தவறான யூகங்களை தவிர்த்தல்
7. மனோபாவ வேறுபாடுகளை தவிர்த்தல்
8. வெளிப்பட பேசுதல்
9. பாரபட்சமின்மை
10. ஏமாற்றாதிருத்தல்
11. குறைகாணுதல் தவிர்த்தல்
12. வாழ்நிலை
13. நேர்மறை எண்ணங்கள்
14. நல்ல உரையாடல்
15. தொடர்பு கொள்ளுதல்
16. நம்பகம்
17. தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல்
18. புறம் கூறுதல் தவிர்த்தல்
நாம் பெருந்தன்மையுடன் இருக்கப் பழகினால் நம் சூழலும் அப்படியே. நன்று கூறப் பழக வேண்டும். மன்னிக்கத் தெரிய வேண்டும். பாராட்டும் எண்ணம் வளரவேண்டும். நேர்மை, நேயம், அன்பு, அக்கறை வளர வேண்டும்.
உயிர்ப்பு, உணர்வு, உயர்வு இவை உன்னதத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. உணர்வு பற்றிய ஆய்வை அமெரிக்காவின் தொழிலக உளவியல் ஆய்வு நிபுணர் எரிக் பெர்ன் மேற்கொண்டார். 4 எலிகளாக, மூன்று அறைகளில் விட்டார். முதல் அறையில் எலிகளுக்கு உணவு வைக்கும்போது எலிகளை வருடிக் கொடுத்தும் விளையாட்டு காண்பித்தும் தட்டுகளில் உணவு வைத்தனர். இரண்டாவது அறையில் சிகரெட் துண்டுகளால் சூடுவைக்கப்பட்ட பின்னர் உணவு வைக்கப்பட்டது. மூன்றாவது அறைகளில் எலிகளுக்கு உணவுத் தட்டுகள் வைக்கப்பட்டன. அவ்வளவே! 45 நாட்களுக்குப் பிறகு ஆய்வறைகளைத் திறந்த போது முதல் அறையில் இருந்த அக்கறையுடன் கவனிப்பட்ட எலிகள் மனிதர்களுடன் சகஜமாய் பழகியது. விளையாடின அன்புடன். இரண்டாம் அறையில் வெறுப்புடன் கவனிக்கப்பட்ட எலிகள் மனிதர்கள் மீது பாய்ந்தன. வெறுமனே உணவு மட்டும் ஏனோ தானோவென்று வைக்கப்பட்ட மூன்றாம் அறை எலிகள் குற்றுயிராகக் கிடந்தன. நண்பர்களே! அக்கறையுடன் கவனிக்கப்படுகின்ற உயிர்கள்தான் உன்னத நிலையை அடையும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
எனவே அக்கறையுடன், அன்புடன் பழகுவோம். காரியங்களைச் சலனமின்றிச் செய்வோம். வெற்றி பெறுவோம்!
Leave a Reply