சிகரத்தின் படிக்கட்டுகள்

– ருக்மணி பன்னீர்செல்வம்

நிர்வாக மேலாண்மை

நமக்குத் தேவைப்படும் அனைத்தும் சிறந்ததாய்க் கிடைக்கவேண்டுமென நாம் நினைக்கின்றோம். சில நேரங்களில் சிறந்ததை அடைய வேண்டுமென்பதற்காக

காத்திருக்கின்றோம். ஒன்றை நமக்காக தேர்ந்தெடுக்கும்போதும், நமக்காக வாங்கும்போதும் மிகச் சிறந்தது எதுவோ அதை நாம்தான் அடைய வேண்டும் என்றும் அதனைப் பெற நமக்குத்தான் உரிமையுள்ளது என்றும் கருதுகின்றோம். விடியலில் பற்பசையில் தொடங்கி விழிமூடும் வேளை பயன்படும் கொசுவிரட்டி வரை பொருட் களானாலும் சரி, சேவைகள் ஆனாலும் சரி, இல்லத்தில் இருப்பவர்கள் தொடங்கி வெளியில் இருப்பவர்கள்வரை சிறந்த முறையில் சிறந்ததையே நமக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். நம்முடைய எதிர்பார்ப்பிலும், விருப்பத்திலும், தவறொன்றுமில்லை. ஆனால், அதே அளவிற்கு நம்மிடமிருந்து தருகின்றபோது எதுவாயிருப்பினும் சரி, சிறந்தவற்றை சிறந்த முறையில்தான் நாமும் தருகின்றோமா என்று சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். “நம்முடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் நாம் பெறுவதிலிருந்து மட்டுமில்லை நாம் தருவதிலிருந்துதான் தொடங்குகின்றது” என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் இது அனைத்திற்கும், அனைவருக்கும் பொருந்தும்.

வேகமாய் உருண்டோடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையில் மிகச் சிறந்த தடத்தை பதியவைக்க வேண்டும் என்கின்ற ஊக்கத்தை எப்போதும் நம்மிடத்தில் சூடாகவே வைத்திருப்பதும் நம் பயணத் திட்டத்தை சாதனைகளைப் படைக்கும் பயணத் திட்டமாகவே அமைத்துக் கொள்வதுமே பொருள் பொதிந்த வாழ்க்கையாகும். நாம் வாழ்கின்றவரை நம் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புக்களை பிறரிடத்தில் விட்டுவிடாமல் நாமே சவாலாக இருந்து விஞ்சுகின்ற வாழ்க்கைதான் நம்மை வரலாற்றில் பதியவைக்கும்.

நம் கனவு நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களை முந்தைய இதழ்களில் பார்த்த நாம் அடுத்தபடியாய் நிர்வாக மேலாண்மையைப் பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணமாகவும், முழுமுதல் காரணமாகவும் அமைவது நிர்வாகம்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

நிர்வாகம் என்பது எப்போது தொடங்குகிறது? நிறுவனம் முழுமையாய் அமைக்கப்பட்டப் பிறகுதான் என்று கருதினால், மேலோட்டமாய் பார்த்தால் சரியெனத் தோன்றினாலும் அது தவறான கருத்தாகும்.

நேரடியாய் தெரியாவிட்டாலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க திட்டமிடும்போதே நிர்வாக மேலாண்மையும் தொடங்கிவிடுகின்றது. தொடங்கப்படும் நிறுவனம் தனியுரிமை நிறுவனமாய் இருந்தாலும் சரி, பங்குதாரர்களைக் கொண்டு தொடங்கப்படும் நிறுவனமாய் இருந்தாலும் சரி அந்நிறுவனத்தின் தொடர் இயக்கமும், செழுமையும், வெற்றியும் நிர்வாகம் செய்யப்போகும் குழுவினரின் கைகளில்தான் மகரந்தமாய்ப் படிந்துள்ளன.

நிறுவனத்தின் இயக்குநரோ அல்லது இயக்குநர்கள் குழுவோ நிர்வாகக் குழுவினரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனத்துடன் செயல்படுதல் வேண்டும்.

பல நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாய் இருந்தாலும் நட்போடும், அனுசரிப்போடும் செயல்படுபவர்களாய் இருந்தாலும் அவரவர் பணிகளைக்கூட மற்றவர்கள் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பவர்களாகவும், பொறுப்புக்களை சுமக்கும்போதும் தவறுகளை சரிபார்க்கும்போதும் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுபவர்களாகவும், குறைகூறுபவர்களாகவும் மாறிவிடுவதைப் பார்க்கின்றோம். எனவே நிர்வாகம் செய்யப்போகும் குழுவின் தலைவரில் தொடங்கி நிறுவனத்தின் கடைசி அலுவலர் வரை நேர்காணல் செய்து தேர்ந்தெடுக்கும்போது அவ்வப் பணிகளுக்கான தகுதியும் திறமையும் பெற்றிருப்பதோடு மட்டுமின்றி நுட்பமாகச் செயல்படக் கூடியவர்களா என்பதையும் பார்த்து தேர்ந்தெடுப்பது இயக்குநர்கள் குழுவின் அதிமுக்கியப் பணியாகும். (நேர்காணல் செய்வது (Interview) தனி மேலாண்மையாகும். அதனை பின்பொரு நேரத்தில் பேசுவோம்).

நிர்வாகக் குழுவினர் அவரவர் பொறுப்பு கடமை மட்டுமின்றி நிறுவனத்தின் மேன்மை கருதி இதர பணிச்சுமைகளையும் பகிர்ந்து கொள்கின்ற மனப்பக்குவம் உடையவர்களாகவும் இருப்பது அவசியமாகும். நிர்வாகக் குழுவினரை தேர்ந்தெடுக்கும்போதே அவர்களிடத்தில் பதியவைக்க வேண்டிய இன்றியமையாத கருத்து, “ஒரு கப்பலில் மாலுமிக்குரிய கடமை ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது” என்பதாகும்.

நிர்வாகக் குழுவில் இடம்பெறக் கூடியவர்கள்:
ஈ தலைவர் (President / Chairperson )
ஈ துணைத் தலைவர்
ஈ செயலாளர்
ஈ பொருளாளர் (Treasurer)
ஈ மேலாளர்கள்
ஈ நிறுவனம் சார்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள்
மேற்கண்ட நிர்வாகக் குழு பொதுவானதாகும். அவரவர் துறைசார்ந்து இக்குழுவில் இடம் பெறுவோரின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் அமைத்துக் கொள்ளலாம்.

தலைவர் (President / Chairperson )
தலைமைப் பொறுப்பு என்பது மிகவும் கௌரவமும், மதிப்பும் வாய்ந்தது. அதே நேரத்தில் கூடுதல் பொறுப்புக்களையும், கடமைகளையும் உடையது. நிறுவனத்தின் முழு செயல்பாடுகளும் தலைமைக்குக் கட்டுப்பட்டு, தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றாக வேண்டும். நிறுவனத்தின் தலைவர் என்பவர் “முன் ஏர்” போன்றவர். எனவே “முன் ஏர்” மிகச் சரியாக பாதை அமைத்துச் சென்றால்தான் “பின் ஏர்”கள் வரும் என்பதை உணர்ந்தவராக தலைவர் இருத்தல் வேண்டும்.
தனியுரிமை நிறுவனமாய் இருந்தாலும், பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனமாய் இருந்தாலும் தலைவர் ஆனவர் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டியது அவசியமானதாகும். தலைவர் என்பதற்காக தன்னிச்சையான முடிவுகளை எடுப்பவராகவோ, தன் சொந்த விருப்புவெறுப்புகளை நிறுவனத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படுத்துபவராகவோ இருத்தலாகாது.
நிறுவனத்தின் மற்ற அலுவலர்களையும் பணியாளர்களையும் ஒரு தாயின் அரவணைப்போடும், தந்தையின் கண்டிப்போடும் வழிநடத்துபவராக தலைவரானவர் விளங்க வேண்டும்.
தலைவரின் செயல்பாடுகள்:
1. நிறுவனத்தின் கூட்டங்களை (Meetings) நடத்துவதற்கான விதிமுறைகளை (Parliamentary laws) மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருத்தல், கூட்டங்களுக்கு தலைமை வகித்தல், கூட்டத்தை கட்டுப்பாடு, ஒழுங்குமுறையோடு நடத்திச் செல்லுதல்.
2. நிகழ்ச்சி நிரல் (Agenda) தயாரித்தல், நிகழ்ச்சி நிரலினைச் சரியாகக் கடைப்பிடித்தல், நிகழ்ச்சி நிரலில் உள்ள செய்திகளைப்பற்றி மட்டுமே விவாதங்களை அனுமதித்தல்.
3. சரியான நேரத்திற்கு கூட்டத்தைத் தொடங்கி சரியான நேரத்தோடு முடித்தல், ஒத்திவைத்தல்.
4. நிறுவனத்தின் வருவாய் சார்ந்த இனத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் விழிப்புணர்வோடு இருத்தல், விவாதப் பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் பிரித்தல்.
5. தலைமையேற்று கூட்டத்தை நடத்தும்போது தன்னுடைய சொந்தக் கருத்துக்ககளை வெளியிடுவதைக் காட்டிலும், கூட்டப் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து விவாதத்திற்கு விடுத்த பின்னரே தன் கருத்துக்களைக் கூறுதல்.
6. பொறுப்புக்களையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிப்பதில் அவரவர் ஆற்றல் மற்றும் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு செயல்படுதல்.
மேற்கண்டவை தலைவர் கூட்டம் நடத்தும்போது கடைபிடிக்க வேண்டியவை. இனி அவரைத் தொடர்ந்து வரும் நிர்வாகக் குழுவினரின் வரையறைகளை அடுத்த இதழில் பேசுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *