நம்பிக்கை வைப்போம்

– உமாசங்கர்

நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.

“நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ, அவ்வாறே மாற்றம் பெறுகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவனாக எண்ணினால் வலிமை பெற்றவனாக மாறுகிறாய். நீ உன்னை நோயாளியாக எண்ணினால் நோயாளியாக மாற்றம் பெறுவாய்” என்கிறார் விவேகானந்தர்.

நாம் அனைவரும் வெற்றிகளையும் தோல்விகளையும் மாற்றி மாற்றி சந்தித்துள்ளோம். நாம் ஆழ உட்சென்று பார்த்தோமேயானால் நாம் நம் முடிவுகளின் மீது ஏற்கனவே அந்த நம்பிக்கையை வைத்திருந்து இருப்போம்.

வகுப்பறையில் ஆசிரியர் உலக வரைபடத்தில் ஜெர்மனியைக் குறிக்க சொன்னார். அனைத்து மாணவர்களும் ஜெர்மனியை வட்டமிட்டுக் காண்பித்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் உலக வரைபடத்தின் நான்கு மூலைகளிலும் ஜெர்மனியைக் குறித்து வைத்தான். ஆம் ஒரு நாள் உலகையே ஜெர்மனியாக மாற்றி வைத்த ஹிட்லர் தான் அந்த மாணவன்.

வகுப்பறையில் இருந்த அதே நம்பிக்கை பின்னாளில் ஜெர்மானிய ராணுவத்தில் சிப்பாயாக இணைந்த போதும் சரி, சர்வாதிகாரியாக ஆன போதும் சரி ஒரு துளி அளவிலும் குறையவில்லை. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களே வெற்றிப் படைப்பாளராக இருக்கிறார்கள். இன்று வெற்றியாளராக நம் கண் முன் இருக்கும் அனைவரும் நம்மால் முடியும் என்றநம்பிக்கை கொண்டவர்களே.

பாரதி உயிருடன் உள்ளபோது அவரது உறவினர்களே கூட அவரை பெரிதென மதிக்கவில்லை. சமுதாயம் அவரை சற்று எட்ட நின்றே பார்த்தது. அவருடைய எழுத்துக்கள் அப்பொழுது பெரிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும்

“புவியனைத்தும் போற்றிட வான்புகழ்
படைக்கும் கவியரசர்
தமிழ்நாட்டிற்கு இல்லை எனும் வசை
தம்மால் கழிந்தது”

என்று தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டவன் பாரதி. அவ்வார்த்தைகள் பின்னாளில் மெய்யாக்கப்பட்டது.

நாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவில் ஏதேனும் ஒன்றைப் பதிவு செய்தால் பதிவாகின்றது. பழையது முற்றிலும் அழிந்து போகின்றது. முடியாது – கடினம் – வேண்டாம் என்று எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்த நம் மனதில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டோம் என்றால், நமது பழைய எதிர்மறைசிந்தனைகள் அழிக்கப்பட்டு நம்பிக்கை எனும் மாபெரும் சக்தி மட்டுமே பதிவாகும்.

நம் மீதும் நமது ஆற்றலின் மிதும் நம்மைச் சார்ந்திருப்பவர்கள் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். காந்தியடிகளைப் போல் ஒரு உடல் வலிமையற்றவரை நாம் காண முடியாது. காந்தியவர்களைப் போல் ஒரு உள்ள வலிமை கொண்டவரையும் நாம் காண முடியாது. காந்தியடிகள் வெயிலின் கொடுமையை தணிக்க ஈரத்துணியில் களிமண் வைத்து தலையில் கட்டிக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்த பொழுது பலரும் அவரை திட்டினார்கள். “எட்டு அணா செலவு செய்து நாலு அணா உப்பை பெறுவதா? கிழவருக்கு தலையின் வெளியில் இருப்பது மட்டுமல்ல, உள்ளிருப்பதும் களிமண் தான்” என்று எள்ளி நகையாடினர்.

ஆனால், உப்பு சத்தியாகிரகம் போல நாடு முழுதும் வெற்றி பெற்றமாபெரும் இயக்கம் வேறொன்றும் இருக்க முடியாது. காரணம் தன்மீதும் மக்கள் மீதும் தான் கொண்டிருந்த நம்பிக்கையின்பாற் அவருக்கு கிடைத்த வெற்றியே அது.

நாம் வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சந்தித்துள்ளோம். அப்படியானால் சில சமயங்களில் வெற்றியாளராகவும் சில சமயங்களில் தோல்வியாளராகவும் வாழ்ந்துள்ளோம். இருவித அனுபவசாலிகள் நம்முள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பொழுது நாம் வெற்றியாளரிடம் நம் பணிகளை ஒப்படைத்தால் அவர் தன் அனுபவத்தின் மூலம் தம் பணிகளை வெற்றியடையச் செய்வார். நம்முள் வாழும் தோல்வியாளரிடம் தம் பணிகளை ஒப்படைத்தால் அவரும் தம் அனுபவத்தின் மூலம் தம் பணிகளை செவ்வனே முடிப்பார். இப்பொழுது யாரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுப்பது மட்டுமே.

நாம் கண்ட உலகப் புரட்சிகள் அனைத்துமே நேற்று தொடங்கி இன்று முடிந்தவை அல்ல. ஜார் மன்னர்களை எதிர்த்த ருஷ்யப் புரட்சி ஆகட்டும், பிரெஞ்சுப் புரட்சி ஆகட்டும், இந்திய விடுதலைப் புரட்சி ஆகட்டும் என்றோ ஒரு நாளில் யாரோ ஒருவரிடம் தோன்றி பல ஆண்டுகளாக புரட்சி தலைமை கைமாறி பலரையும் கடந்து பெற்றது தான் புரட்சி விடுதலைகள். நூற்றாண்டுகளாய் தலைமைகளை இணைத்து வழி நடத்திச் செல்ல வைத்தது “நம்பிக்கை சூத்திரங்கள்” மட்டுமே.

ஒரு சம்பவம். மீனவர் ஒருவரின் இறப்பை அறிந்த நண்பர் ஒருவர் அவரின் மகனுக்கு ஆறுதல் கூறச் சென்றார். அந்த இளைஞனோ வலையுடன் கடல் நோக்கி நடந்து கொண்டிருந்தார். அந்நபர் இளைஞனிடம் “தம்பி! உன் தாத்தாவும் கடற்புயலில் பலியானார். உன் தகப்பனாரும் கடலுக்கு இரையானார். இருப்பினும் நீ ஏன் கடலுக்கு செல்கிறாய்? என்று விஷமக் கேள்வி எழுப்பினார். இளைஞர் எதிர் கேள்வி கேட்டான். “உங்கள் அப்பா எவ்வாறு இறந்து போனார்?” – அவருக்கு இயற்கை மரணம்! உங்கள் தாத்தா? – அவரும் அவ்வாறே- இளைஞன் கேட்டான், “எப்படி ஐயா? உங்கள் தகப்பனும் படுக்கையில் இறந்து போனார். உம் தாத்தாவும் படுக்கையில் மாண்டு போனார். நீர் மட்டும் எப்படி தினமும் இரவு உறங்கச் செல்கிறீர்?” என்றான். வாயடைத்துப் போனார் அந்த எதிர்மறை சிந்தனையாளர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்”.

என்றார் வள்ளுவர். தான் எண்ணியதை எண்ணியவாறே பெறுபவர் யாரென்றால், தான் எண்ணிய செயலை உறுதியுடன் திண்ணமாக நடத்திச் செல்பவர்களே. வாழ்வெனும் ஊர்தியின் அச்சாணி நம்பிக்கை. வாயுவினால் நிரப்பப்படாத பலூன்கள் வியாபாரியிடமேதான் இருக்கும். விண்ணிலே பறக்க இயலாது. நம் மீது நம்பிக்கை வைப்போம். எச்செயலிலும் நம்பி – கை – வைப்போம்.

 1. K. JANARDHANAN, FChFP

  DEAT MR. UMASHANKAR,

  IT IS INTERESTING THAT THE MESSAGE YOU HAVE GIVEN ON YOUR ARTICLE “NAMBIKKAI VAIPPOM” IS HIGHLY MOTIVATING. YOU HAVE TOUCHED WORLD HISTORY AND INDIAN HISTORY TO MOTIVATE THE READERS.

  I RECALL MY MEMORY TOWARDS THE LINES OF A TAMIL POET :

  ORU SIRU THULIYIL ULAGAM URUVAGUM,
  ORU SIRU ULIYIL SILAIGAL URUVAAGUM,

  ORU SIRU VIZHIYIL KAADAL URUVAAGUM,
  ORU SIRU MUNAIYIL KAVIYAM URUVAAGUM,

  ORU SIRU YENNATTHAAL ULAGAME UNATHAAGUM.

  WRITE CONTINUOUSLY SUCH ARTICLES WITH MORE QUOTES.

  K. JANARDHANAN, FChFP
  Chief Life Insurance Adviser

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *