இது ஒரு புது முயற்சி
பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொர மொரவென
மரங்கள் எங்கோ சரிய
– கல்யாண்ஜி
இயற்கைக்கு எதிராக தன்னால் நேரும் தவிர்க்கவியலாத இன்னல் குறித்து ஒரு கவிஞனின் மனப்பதிவு இந்தக் கவிதை.
கல்யாண்ஜி ஒரு பென்சிலை சீவிக் கொண்டிருக்கிறார். நான் மற்றும் என் குழந்தைகளும் பென்சில் சீவிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளும் பென்சில் சீவிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி இன்னும் கோடிக்கணக்கானவர் பென்சில் சீவிக் கொண்டிருக்கிறார்கள். மீன்களின் சின்னச் செதில்களென பல ஆயிரம் மரங்களை வெட்டி வீழ்த்தி நாம் சத்தமில்லாமல் செதுக்கி எறிந்து கொண்டிருக்கிறோம் – என்ற ஆழ்ந்த வருத்தமும், மன வலியும்தான் இந்த மூன்று வரிக் கவிதை.
கட்டுமானப் பொருட்களுக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையைவிட எழுது பொருட்கள் தயாரிப்பதற்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒரு டன் காகிதம் தயாரிக்க 7 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் 17 பெரிய மரங்களும் தேவைப்படுகிறது என்று சூழலியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இன்றியமையாத பொருட்களின் உற்பத்தி என்ற அடிப்படையில் இவை தவிர்க்க முடியாது என்றாலும், நாம் பயன்படுத்தும் முறைகளில் இவைகளை கட்டுப்படுத்தலாம் என்கிறார், “மனம் மலரட்டும்” பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி சேவாலயம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவரும் திரு. சரவணன்.
வாடகைக்கு பாட நூல்கள்:
திருப்பத்தூர் ஆலங்காயம் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மிட்டூர் கிராமம். இங்கு 7 இளைஞர்கள் சேர்ந்து 2000-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, தொடர்ந்து ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தற்பொழுது “பங்காரு இன்ஜினியரிங் புக் பேங்க்” என்ற நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த புத்தக வங்கி மூலம் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை இந்த நூலகத்தின் மூலம் லெண்டிங் முறையில் கொடுத்து உதவுகிறது. ஓர் ஆண்டு முழுவதும் மாணவர்கள் தங்கள் வசம் வைத்து இந்தப் புத்தகங்களை படித்துக் கொள்ளலாம். செமஸ்டர் தேர்வுகள் முடிந்தவுடன் வாங்கிய புத்தகங்களை புத்தக வங்கியிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். இதற்கென குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 4 லட்சம் மாணவர்களுக்குமேல் இன்ஜினியரிங் தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளை படித்து வருகிறார்கள். இதில் குறைந்த பட்சம் 3 லட்சம் மாணவர்கள் புதிய பாடப் புத்தங்கங்களை வாங்குகிறார்கள். இதனால் ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் வாங்கும் செலவு ஆகிறது. இந்த புத்தக வங்கி முறையை பயன்படுத்தினால் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம். அது மட்டுமல்லாமல் புத்தகங்கள் தயாரிக்கப் பயன்படும் காகித உற்பத்தியையும் குறைக்கலாம்.
இவைகளுக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறையும். பயன் படுத்தும் தண்ணீர் அளவு குறையும். இதன் மூலம் சுற்றுச் சூழலை ஓரளவுக்கு பாதுகாக்க முடியும். கல்லூரிகள் நிர்வாகம் இதை ஊக்கப்படுத்த முன் வரவேண்டும் என்கிறார்சரவணன்.
புதிய முயற்சி:
மேலும் இந்த அமைப்பு மூலம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சியாகவும் பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் பெறுவதற்காகவும் கிழக்கு நூலகம் என்று ஒன்று உருவாக்கப்பட்டு இயங்கிவருகிறது. மாணவர்கள், படித்து முடித்த இளைஞர்கள் வாழ்வியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையோடு வாழ்வில் முன்னேறவும் தேவையான பயிலரங்குகளை தொடர்ந்து இந்த அமைப்பு நடத்தி வருகிறார்கள். தற்பொழுது வாணியம்பாடி பிரியதர்சினி பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்தப் புத்தக வங்கியைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் பல கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் சரவணன்.
Leave a Reply