வாழ்க்கை ஒரு திருவிழா

உழைத்துக் களைக்கிற எல்லோர்க்குமே பிடித்தமானது விடுமுறைதான். விடுமுறையை ஒரு திருவிழாவினைப் போல் கொண்டாடி மகிழ்கின்றவர்கள் பலர் உண்டு. சாதாரண ஒருநாள் விடுமுறையே இப்படியெனில் ஒரு திருவிழா விடுமுறைக்கு கூடுதல் சிறப்புண்டு.

திருவிழா என்றால் நம் கண்முன் புத்தாடை, உறவினர்கள் கூட்டம், சிறப்பு உணவு, சிறப்பு நிகழ்வுகள் என்று மனம் குதூகலம்தான். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளைவிட உள்ளூர் பண்டிகைகளுக்குத்தான் எப்போதும் சிறப்பு. அன்றுதான் உறவுக் கூட்டங்கள் யாவும் அழைக்கப்படும். பழைய விரோதங்கள் மறந்து கூடிக் களித்து மகிழும் நாளாய் இருக்கும். உள்ளூர் பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பான நிகழ்வுகள் வசீகரிக்கும். தேரோட்டம், கும்பம் தாளித்தல், தீர்த்தமெடுத்தல், கிடா வெட்டுதல் இப்படியாய் நிகழ்வுகளில் புதுமையும் களிப்பும்  பொங்கும்.

எல்லா நாளும் இப்படியான மகிழ்ச்சித் திருநாளாக மாறுமா என்று பலருக்கும் ஏக்கமிருக்கும்! புதிய ஆடைகள், புதிய மனிதர்கள், புதிய மகிழ்ச்சி இவைகள், ஏதோ சில நாள் கொண்டாடும் திருவிழாக்களின் போதுதான் அமையுமா? மற்ற நாட்கள் கவலைகளின் கொடிகள் கழுத்திறுக்கி மகிழ்ச்சி தொலையும் நாட்களாகவும், பதற்றமும், கவலையும் கொண்டிருக்கும் நாளாகத்தான் இருக்க வேண்டுமா?

வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடாதா? மாறும் என்பதற்கு நாமன்றி வேறு யார் சாட்சியாக முடியும்? எல்லா நாட்களையும் திருவிழா நாட்களாக மாற்றும் மாய மந்திரம் நம்மிடம் தான் இருக்கிறது.

தன்னலம் மறத்தல்:

ஞானி ஒருவருக்கு மிக முக்கியமான தகவலொன்று வந்தது. குறிப்பிட்ட ஓர் ஊரில் பல சிறப்புகளை உடைய சுவையான பழம் கிடைக்குமென்றும், அதில் ஒரு பழம் சாப்பிட்டால் குறிப்பிட்ட காலம் வரை பசிக்காது என்றும் கேள்விப்பட்டார். அந்த ஊரைத் தேடி வந்தார் ஞானி. ஏமாற்றமே மிஞ்சியது. மரமிருந்தது. அப்படியொரு பழம் ஒன்றுகூட மரத்தில் இல்லை.

ஊரையெல்லாம் சுற்றி வந்த ஞானியின் முகம் வாட்டமடைந்தது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் ஓடோடி வந்தான். தான் எந்த வகையிலாவது உதவ முடியுமா? என்று கேட்டான். விபரம் அனைத்தையும் கூறினார் ஞானி.

இளைஞன் ஓடோடிச் சென்று ஒரு பழத்தைக் கொண்டு வந்தான். அப்படியொரு பழம் இந்த ஊரில் இருந்தும் மக்கள் வேறு யாருக்கும் பயன்படக்கூடாது என்று அனைத்துப் பழங்களையும் தாங்களே பறித்துக் கொண்டதாக கூறினான்.

பிறருக்குப் பயன்படும் என்பதால் தன் பழத்தை ஞானியிடம் கொடுப்பதாக கூறினான் இளைஞன். பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் பேராற்றல் எல்லோரிடமும் இருக்கிறது. அந்த ஆற்றலை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் எல்லோர்க்குள்ளும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அப்போது வாழ்க்கை ஒரு திருவிழாவாக ஜொலிக்கும்.

ஊருக்கு ஓர் இளைஞன் அப்படி இருப்பதால்தான் எல்லோரின் பசியும் தீர்ந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

கதைகளில் மட்டுமே இப்படியான இளைஞர்களை காண முடியுமென்றே நானும் நினைத்திருந்தேன். நிஜத்திலும் காண நேர்ந்தது. அண்மையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தங்கி சில தினங்கள் சிகிச்சை பெறவேண்டியிருந்தது.

பொதுப்பிரிவு உள்நோயாளிகள் பிரிவில் 10 படுக்கைகள், பத்துப் பேரும் பத்து விதமான நோய்கள். சிலருக்கு உடன் இருக்க ஆட்கள் இல்லை.

தன் அப்பாவிற்கென தங்கியிருந்த இளைஞர் எல்லோருக்கும் மகனாகவே காட்சியளித்தார். ஏதேனும் ஒரு நோயாளிக்கு உணவுத் தேவையா…?  அவரே ஓடிச் சென்று கவனித்துக் கொண்டார். யாரேனும் கழிப்பிடம் செல்ல தடுமாறுகிறார்களா…? அவரே அதற்கும் உதவ ஓடோடிச் சென்றார். இப்படி குளூக்கோஸ் பாட்டில் மாற்றுவதில் துவங்கி, செவிலியர்களை அழைத்து வந்து மருந்து கொடுப்பது வரை உதவிக் கொண்டே இருந்தார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவர் அப்படிச் செய்து கொண்டிருந்தது, மனிதாபிமானம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கும் சான்றாகவே இருந்தது.

இப்படியான சுயநலமற்றவர்களின் செய்கைகளே வாழ்க்கையை வாணவேடிக்கைகள் நிறைந்த, கலகலப்பான திருவிழாவாக மாற்றுகிறது.

நாமும் ஒரு திருவிழாவினை உருவாக்குவோம்! திருவிழாவில் கலந்து ஜோதியாவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *