அறிய வேண்டிய ஆளுமைகள்

– நைனாலால் கித்வாய்

காப்பீட்டுத் துறையில், உயர் பதவியிலிருந்த தந்தையின் அலுவலக அறையை எட்டிப்பார்த்த அந்தச் சிறுமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பிரம்மாண்டமான அறை. பெரிய பெரிய சோபாக்கள். அழகான மேசைக்குப் பின் சிம்மாசனம் போலிருந்த சுழற்நாற்காலியைப் பார்த்ததும் அந்தச் சிறுமியின் கண்கள்

விரிந்தன. ஓடிப்போய் அதில் ஏறினாள். தன்முன் விரிந்து கிடந்த மேசையை ஆசையுடன் தடவினாள். அங்குமிங்கும் சுழன்றாள்.

உள்ளே வந்த தந்தைக்குத் தாங்கவில்லை. “இது விளையாடும் இடமல்ல. வெளியே போ” என்றார். சிணுங்கிக் கொண்டே வெளியேறிய சிறுமிக்கு, வளர்ந்து பெரியவளானதும் இப்படியொரு பொறுப்பில் அமர வேண்டுமென்ற ஆசை துளிர்த்தது. இது எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படுகிற உணர்வுதான். என்றாலும், பொம்மைகளை உடைப்பதுபோல் தன் கனவுகளை உடைத்துப் போட நைனாலால் தயாராக இல்லை. பள்ளி மாணவியாக இருந்த போதே எல்லாவற்றிலும் முதல் மாணவியாய், பேச்சுக்கலையில் பெரும் திறமையுடன் திகழ்ந்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் பயில்கிறபோதே கல்லூரி மாணவியர் தலைவியாக இருந்தார். 1977ல் ஆடிட்டர் கல்வி படித்துவிட்டு பிரைஸ் வாட்டர் ஹவுஸ் என்ற நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அந்த நிறுவனத்தில் பயின்ற ஒரே பெண் அவர்.

1982ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் நைனாலால் பெற்றார். இந்தியா திரும்பியதும் ஏஎன்எஸ் கிரீன்பேஸ் வங்கியில் சேர்ந்தார். மூன்றே ஆண்டுகளில் உயர் பதவிக்கு வந்த நைனாலால், அடுக்கடுக்காக பெரிய பெரிய பொறுப்புகளை ஏற்றார். அவரின் சின்ன வயதுக்கனவாகிய சுழல் நாற்காலிகள் வெவ்வேறு வண்ணங்களில், வடிவங்களில், அளவுகளில் அவரைத் தேடி வந்தது.

1994ல், புகழ்பெற்ற மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் தன் அலுவலகங்களை இந்தியாவில் தொடங்கியதுடன், தங்கள் முதலீட்டு வங்கிகளுக்கு தலைமைப் பொறுப்பில் நைனாலால் அமர்த்தப்பட்டார். முதலீட்டாளர்களையும், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் உத்தியில் நைனாலால் மாபெரும் வெற்றி கண்டார். விப்ரோ, இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலையில் இது மிகவும் ஆதரவாய் இருந்தது.

2002 ம் ஆண்டு, ஹெச்என்பிசி வங்கி, தன் இந்திய செயல்பாடுகளுக்கு துணைத்தலைவராய் – நிர்வாக இயக்குநராய் செயல்பட அழைத்தது. பல அமெரிக்க வங்கிகள் அவரை உயர்பதவிகளில் அமர்த்த விரும்பியபோதும், இந்தியாவைத் தவிர வேறெங்கும் பணிபுரிய மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார் நைனாலால்.

“அமெரிக்காவில் பெரிய அளவில் வணிகம் நடத்த முடியும். ஆனால் என் சொந்த நாட்டில் வணிகம் மூலமாக நான் செய்யவிரும்புவது சீர்திருத்தங்களையும் மறு சீரமைப்புகளையும்” என்று ஒருமுறை குறிப்பிட்டார் அவர்.

2002ல், இந்தியாவின் நம்பிக்கை தரும் இளம் அலுவலர்கள் 15 பேர்களில் ஒருவராக நைனாலால் டைம் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அயல்நாட்டு வங்கி ஒன்றிற்கு இந்தியாவில் தலைமையேற்கும் முதல் பெண்மணியாகிய நைனாலால் கித்வாய், உலகத்தின் சிறந்த 50 பெண் நிர்வாகிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957ல் பிறந்த நைனாலால் கித்வாய் இன்று எட்டியிருக்கிற உயரங்கள் அசாதாரணமானவை. தன் சின்னவயதுக் கனவை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்த இவரை பாரதம், ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

சர்வதேச வணிக உலகில், பெண்களுக்கு எதிரான பார்வை இருந்த போதுகூட நைனாலால் கித்வாய் மிக உறுதியாய் மிக நிதானமாய் முன்னேறிக் கொண்டேயிருந்தார்.

அவரது நிர்வாகக் கூர்மை, நிதியுலகம் குறித்த அறிவு, நீர்த்துப் போகாத கனவு ஆகியவையே அவரை உயரங்கள் நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தில் தான் உட்கார விரும்பிய நாற்காலிகளை விட உன்னதமான நாற்காலிகளைக் கைப்பற்றிய நைனாலால் கித்வாய் பெண்களுக்கு மட்டுமல்ல. மனிதகுலம் முழுமையும் வியந்து பார்க்க வேண்டிய வித்தியாசமான ஆளுமை என்பதில் சந்தேகமென்ன!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *