வெற்றி மாலை

சிறியவிதை நிலம்கீறிப் புரட்சி செய்யும்!
சிற்றெறும்பு கருங்கல்லை ஊர்ந்து தேய்க்கும்!
சிறுகணினித் திரைக்குள்ளே உலகிருக்கும்!
சிறுவேர்தான் மலைப்பாறை தனைப்பிளக்கும்!

சிறிய உளி கல்லுடைத்துச் சிலைசெதுக்கும்!
சிறுசாவி மாளிகையைத் திறந்து காட்டும்!
அறிவார்ந்த இளையவனே! சிறுதீக் குச்சி
அடிவயிற்றில் பற்றவைக்க நாள்குறிப்பாய்!

காளான்கள் மழைதடுக்கப் போவதில்லை!
கடல்நீரில் நெற்பயிர்கள் விளைவதில்லை!
வேளாளன் உழவுசெய மறப்பதில்லை!
வெறுங்கையில் முழம்போட்டுப் பார்ப்பதில்லை!
வாளாகக் கூர்மை பெற்றால் தோல்வி இல்லை!
வடிகட்டிக் காய்ச்சிவிட்டால் கிருமி இல்லை!
ஆளான இளையவனே! காற்றழுத்த
அடைமழையாய் நீபொழிந்தால் பஞ்சம் இல்லை!

உறுதிமிகு நெஞ்சந்தான் வைரக் கல்லாம்!
ஓட்டைவிழும் இதயந்தான் உப்புக் கல்லாம்!
இறுதிவரை நிமிர்ந்தால்நீ ஒளிநெருப்பு!
இடைமுறிந்தால் விழியிரண்டும் இருளின் வார்ப்பு!
பொறுமையுடன் போர் செய்தால் புதையல் வாழ்க்கை!
புறமுதுகு காட்டிவிட்டால் வறிய வாழ்க்கை!
அறிவார்ந்த இளையவனே! நம்பிக்கையை
அதிகாலை அருந்திவிடு! வெற்றி கொள்வாய்!

Leave a Reply

Your email address will not be published.